தொடரும் நினைவுகள்

என்னுள்ளே எட்டிப் பார்த்தத்
என்றொ கடந்த அனுபவ மேகங்கள்
வழிந்தொடும் ஆறு
அதனுள் குதித்தாடிய நினைவுகள்,
வாய்க்கால் தாண்டி வயல்,
பனியுடன் கூடிய பஜனைப் பாடல்கள்,
பாடல்களை தொடரும்
பட்டாம் பூச்சிகள்
அனைத்தும் தாண்டி….
ஒங்கி ஒலிக்கும்
என்றைக்குமான ஒரு குரல்
‘லீவு நாள்னா இதுதான் வேலை’

சமூக ஊடகங்கள்

இடமும் பொருளும்


பதில் தேடி புறப்பட்ட
தருணங்களில் எதிர்ப்பட்டார்
என்றைக்குமான கடவுள்.
என்ன வினாக்களோடு பயணம்
என்றார்.
வலிமையானது
காதலா, பசியா என்று
கண்டு உணரப்
புறப்பட்டிருக்கிறேன் என்றேன்.
நீண்ட நெடும் பயணத்திற்கு
பிறகான வழி திரும்புகையில்
ஒன்றில் இடம் பெற வேண்டிய
பெயர் மற்றொன்றில்.


சமூக ஊடகங்கள்

நரகம் எனில்


கடவுளை உணரத்துவங்கிய
தருணங்களில்
இருமைக்கான வினா எழந்தது.
நரகம் எனில் என்னவென்றென்.
மனைவியின் வார்த்தைகளை
மறுதலித்துப் பார்.
உணர்வாய் பொருள் அதனை
என்று உரைத்து
புன்னகைத்தார்.

சமூக ஊடகங்கள்

கடை வலி

ஒன்றிற்கும் உதவாது
என்று நினைத்து
பூட்டப்பட்ட
கடைசி தருணங்களில்
உணர்ந்திருப்பார்களா
கதவுகளின் கடைசி வலி

சமூக ஊடகங்கள்

சிருஷ்டி

ஒன்று
ஒன்று கூடி
ஒன்றானது.
ஒன்று
ஒன்றுமில்லாமல்
ஒன்றானது.

சமூக ஊடகங்கள்

உணர்வின் வாசனை

பல தேசம் சென்றும்
பல உணவினை ருசித்த பின்னும்
மாறாமல் இருக்கிறது
அம்மாவிடம் அடி வாங்கிய பின்
அழுத படியே
உண்ட உணர்வின் வாசனை.

சமூக ஊடகங்கள்

மண்ணின் பசி

பசி கொண்ட மனிதனொருவன்
பல்கி பெருகின மனிதர்களிடம்
யாசகம் பெற்றான்.
பொருள் குவிந்த வேளையில்
புலப்படவே இல்லை
வாழ்வுக்கான சூத்திரங்கள்.
பசி கொண்ட பல மனிதர்களை
உண்ட பின்னும்
மாறாமல் இருக்கிறது
மண்ணின் பசி.

சமூக ஊடகங்கள்

துறவு

எனக்கான குருவினை
சந்திக்கையில் எழுந்தது கேள்வி
எப்பொழுது துறவு வாய்க்கும்.
தன்னை இழத்தல் துறவு.
தகவல் தொழில்நுட்பதில் பணிபுரிவாய்.
தானாய் வாய்க்கும் துறவு
என கூறி இடம் அகன்றார்.

சமூக ஊடகங்கள்

பிரபஞ்சமும் இயக்கமும்

மலை அளவு
செய் உதவி மறந்து
உளுந்து அளவு
உதவியின்மைக்காக
உறவுகளை சிக்கலாக்கும்
உன்னதமான மனைவி உறவை
என்ன செய்வது என்று
கடவுளிடம் கேட்டேன்.
பிரபஞ்சமும் இயக்கமும்
யாவர்க்கும் பொது என்று
பொருள் உரைத்து கரைந்தார்.

சமூக ஊடகங்கள்

தருணம்

வீதி வழியினில்
வாகனதில் செல்கையில்
ஒற்றை செருப்பினை
தவற விட்ட தருணத்தில்
குழந்தை என்ன
நினைத்திருக்க கூடும்

சமூக ஊடகங்கள்

நிஜமும் நிழலும்


எதோ ஒரு கணத்தில்
எனது குரல்
கடவுளுக்கு கேட்டிருக்க கூடும்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
இனிய எண்ணப் பரிமாற்றம்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
வேதனையற்ற சந்தோஷ சிரிப்புகள்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
புன்னகைப் பூக்கள்.
அனைத்தும் தாண்டி
அடுத்த அறையினில்
என் மகளின் படிப்புக் குரல்
‘கிட்டாதாயின் வெட்டன மற’


சமூக ஊடகங்கள்

சொர்க்கம்


நாத்திகம் பேசி
இருமையை மறுத்து வந்த
காலங்களில்
எங்கிருந்தோ ஓடி வந்து
கழுத்தினைக் கட்டிக் கொண்டு
கன்னத்தில் முத்தமிட்டு
சொர்க்கம் என்றால் என்ன அப்பா
என்ற எனது மகளின் கேள்விக்கு
பதில் அறிந்து புன்னகைத்தேன்.


சமூக ஊடகங்கள்

வரம்

குழந்தை வரம் கேட்டு
கோட்டம் விட்டு வெளியேறுகையில்
கைகளில் குழந்தைகளுடன்
பிச்சைக்காரி

சமூக ஊடகங்கள்

கடவுளைக் காணல்

மீண்டும் ஒரு முறை
எனக்கும் கடவுளுக்குமான
எண்ண பரிமாற்றம்
உன் வலியை உள் வலியை
உணர்கையின் என்னைக் காண்பாய் என்றார்.
வலி உண்டாக்கி தருணத்தை
விவரிக்க சொன்னார்.
தெருவில் நடந்து செல்பவனை
அப்பா என்று எனது மகள்
முதல் முறையாய் அழைத்ததை
செவிலித் தாய் சொன்ன போது
என்றேன்.
பதில் அளித்த தருணதில்
உண்ர்ந்தேன் கடவுளை.

சமூக ஊடகங்கள்

கேள்வியும் பதிலும்


எனக்கும் கடவுளுக்குமான
எண்ண பரிமாற்றத்தில்
பதில் அளிக்க விரும்பா தருணங்களில்
புன்னகைப்பேன் என்று
உடன்பாடு உண்டானது.
நெஞ்சினில் கை வைத்து
வாலிபத்தின் சாயலில்
வாழ்ந்து காட்டுவேன் என்று
சபதமிட்ட மனிதர்கள்
மண்ணில் மறைந்து போனது
குறித்ததுவே என்ற எனது கேள்விக்கு
பதில் கிடைத்தது
மந்தஹாசப் புன்னகை.


சமூக ஊடகங்கள்

வர்த்தகம்

கட்டப்பட்ட கைப்பேசி கோபுரங்களின்
எண்ணிக்கை குறித்தும்
வர்த்தகம் குறித்தும்
விரிவடைகின்றன முதன்மை செய்திகள்
எவரும் அறியா இடத்தில் செய்திகள்
தேய்ந்து வரும் தேனீக்களின்
எண்ணிக்கை குறித்து


சமூக ஊடகங்கள்

இளித்த வாயன்


வழி தவறிய நாய் குட்டியாய்
எதோ ஒரு கணத்தில் வந்து சேர்ந்தது
கிழிந்த ரூபாய் நோட்டு
உலகின் நடனம் கண்டு வியக்கும்
பொழுதுகளில்
செவிகளில் செய்தி
‘நெத்தியில எழுதி ஒட்டியிருக்கும் போல
இளித்த வாயன் என்று’

சமூக ஊடகங்கள்

வலியறிதல்


பறவையின் சிறகுகள்
தரையினில்
வலியறிந்திருக்குமா
வழித் தடத்தில் தன் சிறகுகள் கண்டு

சமூக ஊடகங்கள்

கோபம்


கோபம் கொண்ட தருணங்களில்
கண்களை உருட்டி
கைகளை காட்டி
மிகப் பெரிய மிருகமொன்று
உன்னைக் கவ்விச்செல்லும்
எனும் தருணங்களில்
உங்களை விடவா அப்பா
எனும் மகளின் கேள்விக்கு
என்ன பதில் சொல்வது

சமூக ஊடகங்கள்

நிஜம்

மனம் விட்டு பேசிய நிமிடங்கள்
மனதில் நிழல் ஆடுகின்றன
கைகோர்த்து நடந்த நிமிடங்கள்
காலங்களோடு கரைகின்றன
உணர்வு கொண்டு
உணவு பரிமாறிய தருணங்கள்
உயிர் வரை ஊடுருவுகின்றன
காலம் கரையேற்றியதா என் மனைவியை
நினைவு உலகத்துள் கேள்வி
எங்கிருந்தோ வந்தது பதில்
எட்டு மணிக்கு தூக்கத்த பாரு உங்கப்பனுக்கு

சமூக ஊடகங்கள்
1 68 69 70 71 72 73