அமுதமொழி – விகாரி – ஆவணி – 4 (2019)


பாடல்

என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர் 

கருத்து –  ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

நெஞ்சே! குற்றமில்லாத மணிகளும் முத்துக்களும் நிறைந்ததும், அதனைக் கொண்டுவந்து சேர்க்கும் நிலையான  காவிரி ஆற்றினால் சூழப்பட்டதுமான திருவலஞ்சுழி இறைவனைப் போற்றி பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பதால் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் நாம் செய்த நல்வினைப் பயன்களில் நீ  எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய்.

விளக்க உரை

 • தரளம் – முத்து, உருட்சி, நடுக்கம்
 • வாயாரப் பன்னுதல் – பாடுதல் – வாக்கின் வினை
 • ஆதரித்தல் – மனத்தின் தொழில்
 • ஏத்துதல் – காயத்தின் செயல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 3 (2019)


பாடல்

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே

தேவாரம் – ஐந்தாம்  திருமுறை – திருநாவுக்கரசர் 

கருத்து –  சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

நூறுகோடி பிரமர்கள் அழிக்கப்பட்டார்கள்; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள்; நீர் பொங்கிப் பெருகும் கங்கையாற்றின் மணலைவிட எண்ணிக்கை அற்றதான  இந்திரர்கள் நிலையும் அவ் வண்ணமே; முடிவற்றவனாய்த் திகழ்பவன் இறைவனானவனும் ஈசன் எனப்படுபவனும் ஆன சிவபெருமான் மட்டுமே.

விளக்க உரை

 • எண்ணிக்கை அற்ற அளவில் உயிர்கள் படைக்கப்பட்டன; அதில் பிரம்ம முடிச்சினை கண்டு உணர்ந்து பிரம்ம தன்மை அடைந்த நூறு கோடி பேர்கள் அழிக்கப்பட்டார்கள். ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள். என்று மொழி பகர்வார்களும் உண்டு. யோக மரபினை முன்வைத்து பிரம்மனுக்கு உரித்தான சுவாதிட்டானம் வரை கண்டு உணர்ந்தவர்களும், திருமாலுக்கு உரித்தான் மணிபூரகம் வரை கண்டு உணர்ந்தவர்களும் அதற்கு மேல் செல்ல இயலாமல் அழிக்கப்பட்டார்கள் என்று கூறுவதும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • நொந்துதல் – அழிதல், தூண்டுதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 2 (2019)


பாடல்

பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய்
இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் 

கருத்து –  சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

ஊழிக் காலமாகிய சங்காரத்தில் இந்த உலகினை பெரிய கடல் சூழ்ந்து ஊழிவெள்ளம் ஏற்படப் பிரம்மன் இறப்பான்; அந்நிலையில் பிரமனுடைய இறந்த உடலையும்,  வினைகளை ஒப்பு நோக்கி உயிர்களுக்கு வினைப்பயன்களை தருபவன் ஆகியவனும், கரிய கடல்போன்ற நிறமுடையவனும் ஆகிய திருமாலுடைய உடலையும் சுமந்து கொண்டு, அவர்களுடைய தசைகழிந்த உடம்பின் எலும்புக் கூடுகளை அணிந்தவனான  எம் பெருமான சிவன் கங்காள வடிவம் கொண்டு ஒடுங்கிய உலகம் மீண்டும் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து கொண்டு இருந்து சிறந்த வீணையை வாசித்துக் கொண்டிருப்பான்.

விளக்க உரை

 • கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் (திருமந்திரம்) – எல்லாவற்றையும் ஒடுக்கியபின் அவை ஒடுங்கிய சாம்பலைப் பூசுகின்ற என்னும் குறிப்பு பற்றியது.
 • மீளவரும் கடன் நின்று – ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றும் முறைமையின் சங்கற்பம் செய்து;
 • எம் இறை – எம் இறைவன்
 • நல்வீணை வாசிக்கும் – அழகிய வீணையை இயம்பும் இசையின் சுருதியியல் கெடாதவாறு அமைந்தது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 1 (2019)


பாடல்

மூலம்

இருநில னதுபுன லிடைமடி தரவெரி புகவெரி யதுமிகு
பெருவெளி யினிலவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட
இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவ னினமலர்
மருவிய வறுபத மிசைமுரன் மறைவன மமர்தரு பரமனே

பதப்பிரிப்பு

இருநிலனது புனலிடை மடிதர எரிபுக எரியது மிகு
பெருவளியினில் அவிதர வளிகெட வியனிடை முழுவதும் கெட
இருவர்கள் உடல் பொறையொடு திரியெழில் உருவுடையவன் இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல் மறைவனம் அமர்தரு பரமனே

முதல் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர் 

கருத்து –  சிவனே சர்வ சங்காரத்திலும் இருப்பதை என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

சங்காரம் எனும் பேரூழிக்காலத்தில் பெரியதான இந்த நிலமாகிய மண் புனல் என்படும் நீரில் ஒடுங்க, நீரானது நெருப்பு எனும் எரியில் ஒடுங்க, நெருப்பு வளி எனும் காற்றில் ஒடுங்க, காற்று ஆகாயத்தில் ஒடுங்க பரந்துபட்டதான இந்த உலகமும் உலகப் பொருள்களும் அனைத்தும் அழிய, இறுதியில் மால் அயன் இவர்களுடைய உடலாகவும் இருந்து (அந்த தன்மைகள் எனவும் கொள்ளலாம்) திரிகின்ற இறைவன் முழு எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத் திரியும் அழகுடையவன்; வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசைக்கும் மறைவனம் எனும் தலத்தில் அமரும் பரமன் ஆவான்.

விளக்க உரை

 • பிரபஞ்ச உற்பத்தியில் முதலில் ஆகாயமும், பின் காற்றும், நெருப்பும், நீரும் கடைசியில் நிலமும் தோன்றுதல் என்பது சைவ சித்தாந்தத்திலும் இன்னும் பல சைவ ஆகமங்களிலும் விளக்கப்பட்டுள்ளது. சங்காரத்தில் இவை வரிசை மாறாமல் அதே வரிசையில் ஒடுங்கப்படுதல் நினைவு கூறத்தக்கது. பெரு வெடிப்பு கொள்கையினை (Big bang theory) முன்வைத்து பிரபஞ்சம் சுருங்கி விரிவடைவதை அறிவியல் கொண்டு ஒப்பு நோக்கி உணர்க.
 • இனமலர் – கூட்டமான மலர், அறுபதம் – வண்டு. ( மலரில் வண்டு ஒடுங்கும் ஒடுக்க முறை )
 • இருங்கடல் – இருமை = கருமை. இருள், இரவு/இரா, இருட்டு, இரும்பு, ஈரல் போன்ற கரியது இருங்கடல். காலாபாணி என்பர் வடமொழியில். காழ் = கருமை. காளபாணி/காலபாணி என்பது ‘மணிநீர்’. மணிநீர் = கரியநீர், பண்பாகுபெயராய் கடல். நல் வினை, தீவினை முன்வைத்து அந்தப் பதிவுகளே பிறப்பு எடுக்க வைக்கிறது; அதற்கு மண்ணில் தோன்ற வேண்டும் என்ற பொருளும் உரைக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 32 (2019)


பாடல்

மூலம்

எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன்
சிவாயநம வென்னுந் திருவெழுத்தஞ் சாலே
யவாயமற நின்றாடு வான்

பதப்பிரிப்பு

எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன்
சிவாயநம வென்னூந் திருவெழுத்தஞ் சாலே
அவாயமற நின்றாடு வான்

திருநெறி 4 – உண்மை விளக்கம்  – மனவாசகங்கடந்தார்

கருத்து –  திருவைந்தெழுத்தினை ஓத ஆன்மாக்களின் பிறவித் துன்பம் தீரும் எனக் கூறும் பாடல்.

பதவுரை

எட்டு எழுத்தாகிய அகரத்தினையும், இரண்டு    எழுத்தாகிய உகரத்தினையும் கொண்டு உருவானதும் பத்து எழுத்தால் ஆனதும் ‘ய’ எனும் எழுத்தால் குறிக்கப் பெறுவதும் ஆன லிங்கம் எனப்படுவதான இந்த உடலில் உறையும் ஆன்மாவில் சிவபெருமான் ஆடுகின்ற நடனத்தை யாம் சொல்லக் கேட்பாயாக;  அனைத்தையும் அறிந்தவனாகிய ஈசன் சிவாயநம  என்கின்ற திருவைந்தெழுத்துக்களையே தனது திருமேனியாகக் கொண்டு ஆன்மாக்களின் பிறவித் துன்பம் நீங்கும்படி ஆடல்புரிவான் என்பதை அறிவாயாக.

விளக்க உரை

எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்தபின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்

 • யோக மரபினை முன்வைத்து, எட்டு  ஆகிய வலது கண், இரண்டு ஆகிய இடது கண் இரண்டையும் கொண்டு சூரிய சந்திரன் எனவும், சிவசக்தியினை பத்தாகிய அக்னிஸ்தானம் என்றும் திருமந்திர விளக்கம் அருளப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 31 (2019)


பாடல்

ஆமென்ற துரைச்சியைத்தான் பூசை பண்ண
அநேக நாள் செய்த தவ பலத்தாற் கிட்டும்
வாமென்ற பிரமனொடு விஷ்ணு ருத்திரன்
மகேசனோடு சதாசிவனுங் கணேசன் கந்தன்
ஏமென்ற விந்திரனும் சந்திரா தித்தர்
எழிலான காமனொடு அங்கிநந்தி
கோமென்ற குபேரனொடு கும்பமுனியுங்
கூராகிய முனிரிஷிகள் பூசித்தாரே

போகர் கருக்கிடை நிகண்டு 500

கருத்து –  பல ஜென்மங்களில்  செய்த தவப் பயனால் அன்னையை பூசை செய்யும் பாக்கியம் கிட்டுகிறது என்பதையும், அவ்வாறு பூசை செய்தவர்களையும் கூறும் பாடல்.

பதவுரை

ஆம் (ஒம் எனும் ஒலியின் மூல நாதம்) எனும் நாதத்தால் அறியப்படுபவள் ஆன தாயானவளை பல ஜென்மங்களில்  செய்த தவப் பயனால் பூசை செய்யும் பாக்கியம் கிட்டுகிறது. அழகும் ஒளி  பொருந்தியவனும் ஆன பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், மகேசன்,சதாசிவன், கணேசன், கந்தன், பாதுகாப்பினைத் தருபவனாகிய இந்திரன், சூரியன், சந்திரன், அழகிய வடிவம் கொண்டவனாகிய காமன், அங்கி, நந்தி, குபேரன், கும்ப முனியாகிய அகத்தியர் மற்றும் சிறந்தவர்களான முனிவர்கள் ரிஷிகள் ஆகியோர்கள் அன்னையை பூசனை செய்தார்கள்

விளக்க உரை

 • 96 தத்துவங்கள் என்பதை ஸ்தூலத்தை முன்வைத்து 36 மற்றும் 60 ஆக பகுக்கப்படும் என்றும் சிவ தத்துவங்களோடு கூடும் போது ப்ரிதிவி சார்ந்து இருப்பதும், சக்தி தத்துவங்களோடு கூடி ஆகாசம் எங்கும் நிறைந்திருத்தலை குறிக்கும் என்பதையும் சக்தி உபாசனை செய்பவர் அருளினார்.
 • துரைச்சி – தலைவி, ஐரோப்பியப் பெண், உலோகநிமிளை
 • வாமம் – தொடை, அழகு, ஒளி, இடப்பக்கம், நேர்மையின்மை, எதிரிடை, தீமை, அகப்புறச்சமயம், பாம்பு வகை, முலை, செல்வம்
 • ஏமம் – பாதுகாப்பு
 • கூர் – மிகுதி, கூர்மை, கூர்நுனி, குயவன் சக்கரத்தைத் தாங்கும் ஓர் உறுப்பு, இலையின்நடுநரம்பு, கதிர்க்கூர், காரம், குத்துப் பாடானபேச்சு, மிக்க, சிறந்த

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 30 (2019)


பாடல்

அன்னத்தின் பெயர்தனையே யறையக்கேளு
அஞ்சமாம் அஞ்சம்பா பீதமாகும்
நன்னமா மரத்தபர தோயமாகும்
ராசவங் கசமான தாத்திராஷ்டிரஞ்
சின்னமாஞ் சிறையன்னஞ் சிவலோகத்தன்னஞ்
செழுமுளரிப் பொகுட்டி லன்னமாகும்
புன்னப்பூ வன்னம் புனலிவன்னம்
புலம்புகின்ற வன்னமாம் அன்னப்பேரே

போகர் கருக்கிடை நிகண்டு 500

கருத்து –  போகர் அன்னத்தின் வெவ்வேறு பெயர்களைக் கூறும் பாடல்.

பதவுரை

அன்னத்தின் பெயர்களை சொல்லுகிறேன் கேட்பாயாக. அஞ்சகம், அஞ்சம் பாபிதம், பல்லாற் கடித்தலை போன்ற மெல்லியதான மரத்த பரதோயம், தலையான மருந்தினைப் போன்றதுமான  தாத்திராஷ்டிரம், சிறையன்னம், சிவலோககற்றன்னம், செழுமுளரி, பொகுட்டிலன்னம், பூவன்னம், புனலிவன்னம் ஆகும். இவ்வாறாக அன்னத்தின் பெயர்களை சொன்னேன்.

விளக்க உரை

 • நன்னுதல் – பல்லாற் கடித்தல், நறுக்குதல்
 • வங்குசம் – கூகைநீறு, ஒரு மருந்து, காட்டெருமைப் பால்
 • அறைதல் – அடித்தல், பறைமுதலியன கொட்டுதல், கடாவுதல், சொல்லுதல், துண்டித்தல், மண்ணெறிந்து கட்டுதல், ஒலித்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 29 (2019)


பாடல்

அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும்
விட்டேறிப் போன வெளிதனிலே வியப் பொன்று கண்டேன்
வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந் திருக்க
எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றதே

பட்டினத்தார்

கருத்து – பட்டினத்தார் தான் பெற்ற அனுபவங்களை கூறும் பாடல்.

பதவுரை

சித்தத் தன்மை அடைந்தவர்களால் அடையப் பெறுவதும், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய படிநிலைகள் கொண்ட எட்டினை தருவதும் ஆன அட்டாங்க யோகம் அடைந்து, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி , ஆக்ஞை  ஆகிய ஆறு ஆதாரங்கள் கடந்து, உயிர் செயல்படும் நிலையைக் கூறுவதாகிய காரிய அவத்தையானது, புருவ மத்தியில் இருந்து செயல்படுவதாகிய நனவு, கண்டத்திலிருந்து செயல்படுவதாகிய கனவு, இருதயத்திலிருந்து செயல்படுவதாகிய உறக்கம், உந்தியிலிருந்து செயல்படுவதாகிய  பேருறக்கம், மூலாதாரத்திலிருந்து செயல்படுவதாகிய உயிர்ப்படக்கம் ஆகிய அவத்தைகள் ஐந்தும் கடந்து நிற்பதும் வெட்ட வெளி, சிற்றம்பலம், நடன சபை என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெறும் அண்ட உச்சிதனில் பெரிய வியத்தலுக்கு உரிய நிகழ்வினைக் கண்டேன்; வட்டமானதும் சந்திரனில் இருந்து விழும் துளியினை ஒத்ததாகிய பாலூறல் எனும் அமுதம் உண்டு மகிழ்ந்திருக்கும் போது உலகால் அறியப்படாது தன்னால் மட்டுமே அறியப்பட தக்கதான பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றது.

விளக்க உரை

 • யோக மரபில் கண்டத்தில் இருந்து மேலே சென்று புருவ மத்தியாகிய ஆக்கினையில் பூசித்தல் மனித நிலையில் இருந்து விலக்கி தேவர்கள், முனிவர்கள் போன்ற மேல் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதுவும் கருத்து. மேல் விபரங்களை குரு மூலமாக அறிக.
இன்று பட்டினத்தார் குருபூசை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 28 (2019)


பாடல்

மூலம்

அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே

சொற் பிரிப்பு

அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்துமுருகப் பெருமானின் பெருமைகளை எல்லாக் காலங்களிலும் ஓத வேண்டியது குறித்து அறிவுறுத்தும் பாடல்.

பதவுரை

உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினை, அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினை, பிராப்தம் ஆகிய நிகழ்கால வினை, ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினை ஆகிய எல்லா வினைகளையும் அழித்து, இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காமல் இருந்து பேரின்ப வீடாகிய முக்தியை தர வல்லதுமான கூர்மையான வேலினை ஏந்திய திருமுருகப் பெருமானின் புகழினைக் கூறும் பாடல்களை எழுத்துப் பிழைகள் சிறிதுமின்றி கற்றுக் கொள்ளாமலும், ஓதாமலும் இருக்கின்றீர்களே! நெருப்பு மூண்டு எரிவதைப் போல தன்னுடைய கண்களை உருட்டி, புகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் நம்மை நோக்கி வீசும் வீசுகின்ற பாசக் கயிறு கொண்டு நம் கழுத்தில் சுருக்கு விழும்படி செய்து நம் உயிரைப் பறிக்கும் நாளிலா முருகனின் புகழைக் கூறும் பாடல்களைக் கற்க(ஓத) இயலும்?

விளக்க உரை

 • எழுத்துப் பிழையறக் கற்கின்றி – பேசா எழுத்து – ‘ஓம்’ என்பதே பிரணவம். இதுவே அசபை என்னும் பேசா எழுத்தும், ஊமை எழுத்தும் ஆகும். இதுவே வாசி. முருகன் பிரணவ வடிவில் இருப்பதை குற்றம் இல்லாமல் உணரவேண்டும்.இதற்கு வேறு விளக்கங்களும் அருளப்பட்டு இருக்கின்றன. ஆன்றோர் அறிந்து உய்க

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 21 (2019)


பாடல்

கடுத்தவா ளரக்கன் கைலையன் றெடுத்த
     கரமுரஞ் சிரநெரிந் தலற
அடர்த்ததோர் விரலால் அஞ்செழுத் துரைக்க
     அருளினன் தடமிகு நெடுவாள்
படித்தநான் மறைகேட் டிருந்தபைங் கிளிகள்
     பதங்களை யோதப்பா டிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி
     மிழலையா னெனவினை கெடுமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துபாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதி இராவணன் தன்  துன்பத்தில் இருந்து நீங்கியது குறித்தப் பாடல்.

பதவுரை

கோபம் கொண்டவனும், வாளேந்தியவனும் அரக்கன் ஆனவனுமான இராவணன் முன்னொரு காலத்தில் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்டபோது அவன் கரமும், சிரமும் நெரிபட்டு அலறும்படி தம் திருப்பாதவிரலை ஊன்றியவரான சிவபெருமான் இராவணன் தன் தவறு உணர்ந்து அஞ்செழுத்தை உரைத்து யாழில் மீட்ட நீண்ட வாளை அவனுக்குக் கொடுத்தருளினார்; அவ்வாறான சிவபெருமான் நான்மறைகளைக் கற்றுணர்ந்த வேதியர்களும் அவர்களுடன் வேதம் பயிலும் சிறுவர் குழாமும் ஓதும் மறைகளை ஓதக்கேட்ட கிளிகள் அப்பதங்களை ஓதும் படியும் விரிந்த சோலைகளையுடையதும் ஆன திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகிறார். அந்த திருத்தலத்து இறைவனின் திருநாமத்தை ஓத, வினையாவும் கெடும்.

விளக்க உரை

 • விடைக்குலம் – வேதம் பயிலும் சிறுவர் குழாம்
 • கடுத்த – சினத்த

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 24 (2019)


பாடல்

வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே 

வராகி மாலை

கருத்து – வாலை புவனை திரிபுரை மாலயன் தேவர் ஆகியவர்களால் எக்காலத்திலும் வணங்கத்தக்கவள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

அணிமா, லகிமா, மகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எட்டு சித்திகளையும் அளிப்பவளும் பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்ணாக இருப்பவளும், சத்திபேதங்களுக்குள் ஒன்றான வாலையால் காலையில் வணங்கப்படுபவளாகவும், பார்வதி என்று அழைக்கப்படும் புவனையால் மாலையில் வணங்கப்படுபவளாகவும், திரிபுரசுந்தரி என்றும் அழைக்கபடுபவளும் உச்சி வேளையில் வணங்கப்படுபவளாகவும் இருக்கும் திரிபுரையால் வணங்கப்படுபவளுமாக இருக்கும் வராகியின் ஆலயத்திற்கு சென்று அவளது அன்பில் தோய்ந்து திருமால், பிரமன் உள்ளிட்ட தேவர்களும் பாடி துதிக்கின்றார்கள்.

விளக்க உரை

 • வாலை – பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண், சத்திபேதங்களுளொன்று, திராவகம் வடிக்கும் பாண்டம், சுத்தம், பாதரசம், சித்திராநதி
 • புவனை – பார்வதி
 • உன்னுதல் – நினைத்தல், பேச வாயெடுத்தல், எழும்புதல், முன்னங்கால் விரலையூன்றி நிமிர்தல்
 • வாலை புவனை திரிபுரை ஆகியவர்களால்  எக்காலத்திலும் (காலை, மாலை, உச்சி ஆகிய பொழுதுகளில்) வணங்கப்படுபவளாக இருப்பவள் என்றும் மற்றொரு பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. குருவருள் கொண்டு அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 23 (2019)


பாடல்

வங்கம் கலிங்கம் குலுங்கம் தெலுங்கம் மராடம்முதல்
எங்கெங்கும் போக இடர்வரும் போதும் இனிமையுடன்
அங்கங்கு நீ துணை யாய்வரு வாய்அந்தி வான்மதியம்
தங்கும் சடாடவி யாய்காழி யாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துதூர தேசம் செல்கையில் ஏற்படும் துயர் ஏற்படாமல் காக்க வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

அந்தி வானத்தைபோல் இருப்பதான ஒளிரும் பிறை சந்திரனை  தன்னுடைய சடைமுடியில் தாங்குபவனும் காழிப்பதியில் உறைபவனும் ஆன ஆபதுத் தாரணனே! வங்காளதேசம், கலிங்கம் (தற்கால ஒரிஸ்சா, குலுங்கம் (தற்கால  கோவாக இருக்கலாம்) ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகள்), தெலுங்கம்  (தற்கால  ஆந்திரா ), மராடம் (தற்கால  மகாராஷ்ட்ரா) ஆகிய தேசங்களில் எந்த திசை சென்ற போதும் அங்கு ஏற்படுவதாகிய இடர் எனும் துயர் நீங்க மிக்க மகிழ்வுடன் அனைத்து இடத்திலும் எனக்கு துணையாக நீ வருவாய்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 22 (2019)


பாடல்

நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த்
தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் – அற்புதம்போல்
ஆனா அறிவாய் அளவிறந்து தோன்றானோ
வானே முதல்களையின் வந்து

திருநெறி 1 – சிவஞானபோதம் – மெய்கண்டார்

கருத்துஅசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

குணம் என்பதாகிய எண் குணம் உடையவனும், அழுக்கு எனும் குற்றங்கள் அற்றவன் ஆனவனும், எக்காலத்திலும் துன்பமற்றவனும், மேம்பட்டதான பரம் பொருள் ஆனவனும் படைப்பில் முதல் முதலில் தோன்றிய ஆகாயமே அசத்து என்று சுட்டறிவினைக் கொண்டு அறியும் பொருளாய்  கொண்ட அறிவினைக் கடந்து சூன்யப் பொருள் போல் தோன்றி, (குருவருளால்) சுட்டறிவதால் உண்டாகும் தன்னறிவினால் நீங்காமல் நிலை பெறுவதாகிய சோதி வடிவாய் (அகத்தில்) விளங்கிக் தோன்றுவான்.

விளக்க உரை

 • தற்பரம் தனக்குப் பரமென விரியும்.
 • சூனியமாய்த் தோன்றினாலும் அது அற்புதம் போல் வந்தது
 • தனி முதல்வன் – உலகியல் விடுத்து அதைக் கடந்து அதற்கும் காரணாய் இருக்கும் ஞானத் தன்மைப் பற்றியது.
 • பிரபஞ்சம் நிலைப்பு தன்மை உடையது அல்ல எனும் பேருண்மையினையும், அசத்தாய் உள்ள உலகினைக் அறிய ஞான வடிவமாகியவனே அருளிச் செய்ய இயலும் என்றும், அசத்து நிலையுடைய பொருள்கள் தன் சொருபத்தை காட்டாது மறைத்து நிற்கும் இயல்பு உடையது; இது நிலைப்பு தன்மை உடையது என்று அறிய உணர்த்துவது ஞான சொருபமாகிய பதி ஞானம் என்று சுப்பிரமணிய தேசிகர் உரையில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 15 (2019)


பாடல்

மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும்
தோளும் ஆகமும் துவளு முன்னூல் முனி சொல்ல
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்

பன்னிரெண்டாம் திருமுறை – சேக்கிழார் – திருநாவுக்கரசு நாயனார் புராணம்

கருத்துதிருநாவுக்கரசரை திருக்கயிலாய மலையில் இருந்து திரும்பிச் செல்ல உரைத்தலும், திருநாவுக்கரசர் அதற்கு மறுதலித்ததையும் கூறும் பாடல்.

பதவுரை

‘இந்தக் கயிலாய மலையிலிருந்து திரும்பிச் செல்லுதலே  உன்னுடைய கடமை’  திகழும் தோள்களை உடையவரும்,  மார்பினினில்  துவள்கின்ற முப்புரி நூலையுடைய முனிவரான இறைவர் உரைத்தார்; என்னை ஆள்பவனாகவும், எனக்கு தலைவனாகவும் இருக்கும் சிவபெருமான்  வீற்றிருக்கும் திருக்கயிலையில் இருக்கும் காட்சி காணாமல், என்றேனும் மடியப்போகும் இந்த உடலால் தமக்கு எதுவும் நட்டம் எதுவும் இல்லை, ஆதலால் இவ்வுடலுடன் கயிலைக் காட்சி காணாமல் திரும்பிச் செல்லமாட்டேன் என்று திருநாவுக்கரசர் மறுத்தார்

விளக்க உரை

 • திருநாவுக்கரசர் திருவையாற்றில் கயிலை காட்சி கண்ட நாள் (ஆடிமாதம் அமாவாசை திருநாள்)
 • ஆகம் – உடல், மார்பு, மனம், சுரை
 • மாளுதல்  – சாதல், அழிதல், கழிதல், இயலுதல்
 • மீளும் – கயிலையில் இருந்து திரும்பிச் செல்லுதல்

சமூக ஊடகங்கள்

தேவதை சூழ் உலகு


நாளொன்றின்
நீண்ட பகல் பொழுதினை
களைப்பாக்கி
கதவைத் திறக்கையில்
கவனித்து இருங்கள்.
பூங்கொத்துகளுடன்
தேவதை
அப்பாபாபாபா
எனவும் ஓடிவரலாம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 14 (2019)


பாடல்

காரண னாகித் தானே கருணையால் எவையும் நல்கி
ஆருயிர் முழுது மேவி அனைத்தையும் இயற்றி நிற்கும்
பூரண முதல்வன் மைந்தன் போதகம் அளித்து மாற்றிச்
சூரனை மயக்கஞ் செய்யுஞ் சூழ்ச்சியோ அரிய தன்றே

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துசிவனின் எண் குணங்களில் சிலவற்றை எடுத்துக் கூறி அவனின் குமாரரான நீ மயக்கம் செய்தல் ஆகாது என பழிப்பது போல் புகழும் பாடல்.

பதவுரை

இந்த உலகம், உலகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் காரணமாக இருப்பவனும், பிறர் தூண்டுதல் இன்றி தன்னுடைய கருணையால் அனைத்தையும் கொடுத்து, மிகவும் நேசத்துக்கு உரிய அனைத்து உயிர்கள் இடத்திலும் பொருந்தி நின்று அனைத்தையும் சிருட்டித்தலை செய்பவன் ஆனவனும், முழுமையானதாகிய பூரணத்துவத்துடன் இருப்பவனுமான சிவபெருமானின் குமாரன் ஆகிய முருகப் பெருமான அறிவுரை கூறி அசுர குணங்களை மாற்றி, சூரனை மயக்கம் செய்யும் சூழ்ச்சி மிகவும் அரிதானது.

விளக்க உரை

 • போதகம் – யானையின் இளங்கன்று, அறிவுரை கூறுதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 13 (2019)


பாடல்

மாடில்லான் வாழ்வும் மதியில்லான் வாணிபம்நன்
னாடில்லான் செங்கோல் நடத்துவதும் – கூடும்
குருவில்லான் வித்தை குணமில்லாப் பெண்டு
விருந்தில்லான் வீடும் விழல்

ஔவையார் தனிப்பாடல்கள் – ஔவையார்

கருத்துகுரு இல்லாமல் வித்தைகளை கற்க இயலாது என்பதை கூறும் பாடல்.

பதவுரை

நடத்த இயலாதவைகள் என்று கூறத் தக்கதான செல்வம் இல்லாமல் வாழ்வினை நடத்துதல், மதி நுணுக்கங்கள் அறியாமல் வாணிபம் செய்யும் திறமை, செங்கோல் இல்லாமல் நல்ல நாட்டினை வழி நடத்துதல் போன்றவைகளை அவைகள் இல்லாமல் கூட செயல்படுத்த இயலும். ஆனால் குரு இல்லாமல் வித்தைகளை கற்பது, குணமில்லாத பெண்ணோடு வாழ்வது, விருந்து வராத வீட்டில் வாழ்வது ஆகியவைகள் விவசாயத்திற்கு உதவா நிலம் போன்றது ஆகும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 12 (2019)


பாடல்

தாண்டவ! தில்லைத் தமனிய மன்றுள் தரணியெலாம்
ஆண்டவ! அங்க மனைத்தும் தலையேன் பரவவனி
பூண்டவ! காண்டகு மாயூர நாத! புகழ்பரந்து
நீண்டவ! நீண்டவன் நேரயன் நேடொனா நீர்மையனே

மாயூர நாதர் அந்தாதி – முத்துஸ்வாமி ஐயர்

கருத்துமாயூரநாதரின் பெருமைகளைக் கூறி வணங்கும் பாடல்.

பதவுரை

பெருவடிவம் எடுத்து நீண்டவனான திருமாலும், அவர் சென்ற திசைக்கு எதிர் திசையில் சென்ற பிரம்மனும் கண்டறியா இயலா தன்மை கொண்டவனே, தில்லையில் பொற்சபையில் இருந்து கொண்டு தரணி எல்லாம் தாண்டவம் ஆடுபவனேஊன் எனப்படுவதும் அங்கம் அனைத்தும் தலைகளை மாலையாக அணிந்து கொண்டு ஆள்பவனே, காடு போன்றதான இடத்தில் இருக்கும் மாயூர நாத! உன்னுடைய புகழானது பரந்தும் நீண்டும் காணப்படுவதாக இருக்கிறது.

விளக்க உரை

 • தமனியம் – பொன்
 • என்பு – எலும்பு
 • நேர் அவன் – அவனை ஒத்த பிரமன்
 • நேடு – தேடு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 11 (2019)


பாடல்

தரணிதனில் அறுபத்து அறுகோடி தீர்த்தமும்
   சரவ ணத்துள் அடக்கம்
சாற்றுமோர் எழுகோடி மந்திரங் களுமுன்
   சடாக்ஷ ரத்துள் அடக்கம்
விரதமிகு நவகோடி சித்தர்களும் உனதுசுப
   வீக்ஷணத் தனில் அடக்கம்
மேலான தேவால யங்களும்உன் ஆறுபடை
   வீட்டி னிற்குள் அடக்கம்
இரவிமுதல் முப்பது முக்கோடி தேவருமுன்
   இதயக் கமலத் தடக்கம்
ஈரேழு புவனமுதல் அண்டங்கள் பலவும்உன்
   இடத்தினில் அடக்கம் ஐயா
வரிசைமிகு பக்தஜன பரிபால னாமோக
   வள்ளி குஞ்சரி மணாளா
வனசமலர் அயன்மதனை அருள்சரச கோபாலன்
   மருகச ரவண முருகனே

கருத்து – புவனங்களும், அண்டங்களும், புவனியில் இருக்கும் தீர்த்தங்களும், ஏழுகோடி மகா மந்திரங்களும், ஒன்பது கோடி சித்தர்களும், அனைத்து தேவாலயங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் முருகன் உள்ளே அடக்கம் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

பக்தர்களை பாதுகாக்கவும் அவர்களை ஆதிக்கம் செய்யவும் வள்ளி தெய்வானையுடன் வருபவனே, தாமரை மலர் மீது வீற்றிருக்கும் நான்முகன் ஆகிய பிரம்மாவிற்கு  அருளுபவனும், இனிய குணம் கொண்டவனும், உண்மையைப் பேசுபவனுமான கோபாலனின் மருமகனே, சரவண முருகனே!  இந்த தரணியில் இருப்பதாக கூறிப்படும் அறுபத்து அறுகோடி தீர்த்தங்களும் சரவணத்துள் பணிவுடன்  அடங்கி இருக்கின்றன; மெய்யறிவினைத் தரத்தக்கதும், பிறவா நிலையை ஏற்படுத்தும் ஆனதும், எண்ணிக்கையில் கூறும்போது ஏழுகோடி மகா மந்திரங்கள் ஆனவைகள் சடாசர மந்திரத்தில் பணிவுடன் அடங்கி இருக்கின்றன; மிகுந்த விரத்தினை உடையவர்கள் ஆன ஒன்பது கோடி சித்தர்களும் உன்னுடைய சுபப் பார்வை தனில் பணிவுடன்  அடங்கி இருக்கின்றனர்; மேலானவைகள் என்று எந்த எந்த கோயில்கள் குறிப்பிடப்படுகின்றனவோ அவைகள் எல்லாம் உன்னுடைய படை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய வீடுகளில் பணிவுடன் அடங்கி இருக்கின்றன; ஆதித்தியனை முதலாவதாக கொண்ட படைக்கப்பட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும்* உன்னுடைய இருதய கமலத்தில் பணிவுடன் அடங்கி இருக்கின்றனர்; பூமியை முன்வைத்து மேல் ஏழும், கீழ் ஏழும் இருக்கும் புவனம் முதல் அண்டங்கள் பலவும் உன்னிடத்தில் நிலைபெற்று இருக்கின்றன.

விளக்க உரை

 • சித்தர்களுக்கு தலைவனாகவும், ஆதி அந்தம் அற்றவனாகவும் இருப்பதால் உடலினை முன்வைத்து ஆறு ஆதாரங்களும் தலைவன் என்று யோக மரபின் உரைப்பது உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • சாற்றுதல் – சொல்லுதல், விளம்பரப்படுத்தல், விற்றல், நிறைத்தல், அடித்தல், உணர்த்துதல்
 • பரிபாலனம் – பாதுகாப்பு, மேற்பார்வை செய்தல், மேலாதிக்கம் செய்தல், ஆட்சி செய்தல்
 • குஞ்சரி – பெண் யானை, முருகக்கடவுளின் தேவியான தெய்வயானை
 • வனசமலர் – தாமரை
 • *
 1. ஆதித்ய நிலையில் 12 பிரிவுகள் – விஷ்ணு, தாதா, மித, ஆர்யமா, ஷக்ரா, வருண, அம்ஷ, பாக, விவாஸ்வான், பூஷ, ஸவிதா, தவாஸ்தா
 2. வசு நிலையில் 8 பிரிவுகள் – தர, த்ருவ, சோம, அனில,  அனல, ப்ரத்யுஷ, ப்ரபாஷ
 3. ருத்ரன் நிலையில் 11 பிரிவுகள் – ஹர, பஹூரூப, த்ரயம்பக, அபராஜிதா, ப்ருஷாகாபி, ஷம்பூ, கபார்தி, ரேவாத், ம்ருகவ்யாத, ஷர்வா, கபாலி
 4. மற்றும் அஷ்வினி குமாரர்கள் (2)
 5. ஆக மொத்தம் = 33 வகையான தெய்வங்கள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 10 (2019)


பாடல்

நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே

வராகி மாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்து – பலவிதமான துன்பங்களுக்கு எதிர்ப்புக் கட்டு (சத்ருசம்ஹாரம்) வராகி அம்மனே என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

புது மலரில் பெருகிய தேனைப் போல இனிமையான வாராகி தேவியை மனதில் இருத்தி, வாழ்த்தி வழிபாடு செய்யாததால் பலவகையிலும் அழிவு ஏற்பட்டு மரணத்திற்கு நிகரான அளவில் நாசம் அனுபவிப்பவித்தல், நாசத்தின் காரணமாக ஏற்படும் இழப்பு, பயம், துன்பம், கவலை, அவமானம் என்று நடுங்குதல், நமனாகிய எமன் தனது கயிற்றினை வீசும் போது அது பற்றி கவலைப்படுதல், இகழ்ந்து வையப்படுதல், களங்கம் ஏற்பட்டு தாழ்வு கொண்டு அவமானப்படுதல் போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றது.

விளக்க உரை

 • நாசம் – அழிவு, பாழ், மரணம்
 • இழுக்கு – அவமானம். நிந்தை, களங்கம்; வழு, தாழ்வு, பொல்லாங்கு, மறதி, வழுக்கு நிலம்
 • காலம் 16-ஆம் நூற்றாண்டு

சமூக ஊடகங்கள்
1 2 3 4 78