அமுதமொழி – விகாரி – சித்திரை – 20 (2019)


பாடல்

பெரியோர் எவரைப் பழித்தேனோ
      பிரம தவத்தை அழித்தேனோ
   பெற்ற தாயார் பசித்திருக்கப்
      பேணி வயிற்றை வளர்த்தேனோ

அரிய தவத்தோர்க் கிடைஞ்சல்செய்தே
      அற்ப ரிடத்தில் சேர்ந்தேனோ
   அறியாமையினால் என்ன குற்றம்
      ஆர்க்குச் செய்தேனோஅறியேன்

கரிய வினைதான் எனதறிவைக்
      கலங்க வடித்து முடிச்சதையுங்
   கரைக்க வுன்றன் கருணையினால்
      கடாக்ஷம் பொருந்த அருள்புரிவாய்

வரிவில் புருவ மடமானே
      வதனாம் புயவாலாம்பிகையே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம்பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்துமாயைக்கு உட்பட்டு அறியாமையால் செய்த தவறுகளை விலக்கி அருள் புரிய வேண்டி நின்ற பாடல்.

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, எண்ணங்களால் அறிவுள்ள பொருளாகிய புருட வடிவம் கொண்டும் மேனி வடிவில் வாலாம்பிகையாகவும் இருப்பவளே! பெரும் பாவங்களில் கூறப்படுவதான பெரியோர்களைப் பழித்து இருந்தேனோ? மிகக் கடுமையான தவம் செய்பவர்களை அழித்தேனோ? அன்னையைப் பசிக்க கண்டும் தான் மட்டும் உண்ணுதல் போன்ற மிகக் கொடுமையை செய்து இருந்தேனோ? அரிய தவம் உடையவர்களுக்கு இடைஞ்சல் செய்தேனோ? சிறுமை புத்தி உடைய்வர்களும், அற்பமாக நடந்து கொள்ளும் மனிதர்கள் இடத்தில் சேர்ந்து  இருந்தேனோ? வினைப்பயன் கூட்டுவித்து என் அறியாமையால் எவர்க்கு என்ன குற்றம் செய்தேனோ – இது பற்றி அறியவில்லை. ஆகையால் மாயைக்கு உட்பட்டு இருவினைகள் கொண்டு, பேரறிவை அறிய முடியாதபடி செய்து என்னைக் கலங்கும் படியான வாழ்வினை கரைக்க உன்னுடைய கருணையினால் கடைக்கண் காட்டி கிருபை செய்வாய்.

விளக்க உரை

  • நல்லோர் மனதை நடுங்கச் செய்தோனோ” எனும் மனு முறை கண்ட வாசகம் ஆன வள்ளலாரின் பாடல் வரிகளுடனும், “ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை” எனும் வள்ளுவர் குறளுடனும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • புருடன் எனும் இரு பொருள் கொண்டு இங்கு உரைக்கப்படுகிறது. சிவனைக் குறித்து கூறப்பட்டு சிவசக்தி ஐக்கியமாக காணுதலையும், மெய்யறவு கொண்டு சிவத்துடன் ஒன்றாகி தானும் சிவசக்தி ரூபமாக இருப்பவள் என்று உரை செய்யப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply