வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 31


உமை

மனிதர்கள் தர்மத்திற்காகக் கொடுக்கத் தக்கவை எவை? அவற்றை நான் கேட்கவிரும்புகிறேன். அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்.

உமா மகேஸ்வரர்

தொடரும் தர்மங்கள் ..

பூமிதானம்

  • வீடுகள், நிலங்கள் சேர்ந்த பாகமாகிய பூமியை தானமாகக் கொடுக்க வேண்டும். எளிதில் பலனைக் கொடுக்கக் கூடியதும் விவாதமில்லாததுமான நிலத்தைக் குடியிருக்க இடத்தையும் அமைத்து வாங்குகிறவனுக்கு வஸ்திரத்தினாலும் புஷ்பத்தினாலும் சந்தனத்தினாலும் அலங்காரம் செய்து அவனுக்கும் அவன் வேலைக்காரருக்கும் அவன் சுற்றத்தாருக்கும் நல்ல போஜனமளித்து, ‘வாங்கிக்கொள்’ என்று மூன்றுமுறைசொல்லிப் புண்ணியகாலத்தில் தாரை வார்த்துத் பணமுடிப்போடு கொடுக்கவேண்டும்.
  • வெறுப்பில்லாமல் சிரத்தையோடு இவ்வாறு பூமிதானம் செய்தால் அந்தப்பூமி உள்ள வரையிலும் அந்தத் தானத்தின் பயன் இருக்கும் 
  • அசைவும் அழிவுமில்லாத பூமி விரும்பினவற்றை எல்லாம் தருவதால் பூமிதானம் செய்தவன் சுவர்க்கத்தில் நீண்டவருஷகாலம் மகிழ்ந்திருப்பான். 
  • ஜீவனத்திற்காகக் கஷ்டப்படும் மனிதன் ஏதாவது பாவம்செய்தால் பசுவின் காதளவாகிலும் பூமியைத்தானம் செய்தால் அந்தப் பாவத்தினின்று விடுபடுவான். பொன், வெள்ளி, வஸ்திரம், ரத்தினங்கள், முத்துக்கள், தனங்கள் இவையனைத்தும் பூமிதானத்தில் அடங்கினவை. 
  • தாய் தன் பாலினால் புத்திரனை எப்படி வளர்ப்பளோ அப்படியே பூமி எல்லாப் பலன்களினாலும் கொடுப்பவனை அபிவிருத்தி செய்யும்.

கன்னிகா தானம்

  • பரிசுத்தமான விரதமும் ஒழுக்கமுள்ளவளும், குலமும் உள்ள தன் பெண்ணை அவளிடத்தில் மிக்க விருப்பமுள்ளவனுக்கு அளிக்கவேண்டும்.  
  • வேலைக்காரிகள் வேலைக்காரர்கள் சிறப்புக்கள் வீட்டுப் பண்டங்கள் பசுக்கள் தானியங்கள் எல்லாவற்றுடனும் அவளுக்குத் தக்கவனும் அவளை விரும்புகிறவனுமானவனை, அக்னியின் முன்னிலையில் கொடுத்து விதிப்படி விவாகம் செய்விக்க வேண்டும். அவர்களுக்குரிய ஜீவனத்தை உண்டுபண்ணி அவர்களிருவரையும் நல்ல வீட்டில் வைக்கவேண்டும்.

வித்யாதானம்

  • யோக்கியனுக்கு வித்யாதானம் செய்யும் மனிதன் மறுஜன்மத்தில் புத்தி விருத்தியையும் தைரியத்தையும் ஞாபகசக்தியையும் அடைவான், தகுதியுள்ள சிஷ்யனுக்கு வித்யாதானம் செய்பவன் அந்தத் தானத்தின் பலனை அளவில்லாமல் அனுபவிப்பான்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply