அமுதமொழி – விளம்பி – பங்குனி – 24 (2019)


பாடல்

தன்னது சாயை தனக்குத வாதுகண்
டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசெல்வம் நில்லாது; நின்றபொழுதும் உதவுதல் இல்லை என்று கூறும் பாடல்

பதவுரை

தமது நிழல் ஆனது தம் வெயிலின் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டும்,  அறிவிலாதவர்களாகிய வறியவர்கள், தமது செல்வமானது தம் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்து இருக்கின்றனர். உணரப்படுவதாகிய உயிர், காணப்படுவதாகிய உடம்பு இரண்டும் ஒன்றாய்ப் பிறந்தாலும், உயிரானது உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டொழிகின்றது. அவ்வாறு இருக்க வினைகளுக்கு வேறாய் இடையே வந்த செல்வமோ நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்! ஆகவே நிலை பெறுவது செய்வதாகிய மெய்ப் பொருளைக் காணும் ஆற்றல் உங்கள் கண்ணில் உள்ளது கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டுகொள்ளுங்கள்.

விளக்க உரை

• முதல் தந்திரம் – செல்வம் நிலையாமை
• காணொளி – அகக் கண்ணால் காணக்கூடிய ஒளி. குரு முகமாக அறிக.
• ‘கண்ணது காணொளி’ – பிறர் அறிவிக்க வேண்டாது நீங்களே எளிதின் அறிதல் கூடும்` என்று பொருள் உரைப்பார்களும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
• ‘வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்
கையிற்பொருளும் உதவாது காணுங் கடைவழிக்கே
எனும் அருணகிரிநாதர் கந்தரலங்காரப் பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
• மாடு – செல்வம்

சமூக ஊடகங்கள்

Leave a Reply