அமுதமொழி – விளம்பி – பங்குனி – 23 (2019)


பாடல்

கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னைக்
கமலத்தோன் தலையரிந்த காபா லிய்யை
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை
உணர்வெலா மானானை ஓசை யாகி
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் தன்னை
மறைக்காடும் ஆவடுதண் டுறையும் மேய
திருவானைத் தென் பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துநெஞ்சத்தினை இடைவிடாது சிவபெருமானை குறித்து சிந்திக்க வேண்டும் பாடல்.

பதவுரை

நெஞ்சமே! தோற்ற ஒடுக்கம் உடைய உயிர்கள் மற்றும் அகிலங்கள் அனைத்திற்கும் முற்பட்டவனும், திருக்கண்ணை உடைய நெற்றியை உடையவனும், தாமரை மலரின் இருப்பவனாகிய பிரம்மனின் தலையை அறிந்து, அந்த தலையை ஓட்டை விரும்பி கபாலி ஆகியவனும், அழகிய வடிவம் கொண்ட மலைமகள் எனும் உமையம்மையை தன்  உடலின் ஒரு பாகமாக உடையவனும், உருவம், அருவம், அருவுருவம் கொண்ட அனைத்திற்கும் உணர்வுகள் எல்லாம் ஆனவனும், அந்த உணர்வுகளை உணர்த்தும் நாதம் எனும் ஓசைகளாகி வருபவனும், வலஞ்சுழி எனும் திருத்தலத்தில் உறையும் எம்பெருமானும், திருமறைக்காடு எனும் திருத்தலத்தில் உறைபவனும், ஆவடுதண்டுறையிலும் பொருந்திவாழும் மேன்மை உடையவனும் ஆன தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழில் சிவபெருமானை இடைவிடாது சிந்திப்பாயாக.

விளக்க உரை

• திருவாலம்பொழில் எனும் காவிரி தென்கரைத் திருத்தலம்
• கமலத்தோன் – பிரமன்
• உரு ஆர்ந்த – அழகு நிறைந்த
• வலஞ்சுழி, மறைக்காடு, ஆவடுதுறை இவை சோழநாட்டுத் தலங்கள்
• மேய ( மேவிய ) – விரும்பி எழுந்தருளிய.
• திருவான் – மேன்மையை உடையவன்.

சமூக ஊடகங்கள்

Leave a Reply