அமுதமொழி – விளம்பி – பங்குனி – 18 (2019)பாடல்

ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து
வொள்ளெலும்பு தூணா வுரோமம் மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார்
தயக்கம் பலபடைத்தார் தாமரையினார்
கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்
கழிப்பாலை மேய கபாலப்பனார்
வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்
வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துஅவர் திருவடி சேர்தலை ஈசனாருக்கு நாம் பிறவி எடுத்ததற்கு செய்யும் கைமாறு எனும் பாடல்.

பதவுரை

ஊண் எனப்படுவதாகிய உடலாகிய சதைப்பகுதியை சுவராகச் வைத்து, ஒன்பது துவாரங்களையும் வாயிலாக அமைத்து, வெள்ளி போன்றதும், ஒளி உடையதும் ஆன எலும்புகளைத் தூணாக அமைத்து ரோமங்களை மேலே பரப்பி தாமே படைப்பித்த உடலாகிய குடில் நீங்கும்படி செய்து, தாவுகின்ற மானைக் கையில் ஏந்திய பெருமான் பல வடிவங்களை உடையவராய்,  கபாலம் ஆகிய மண்டை ஓட்டினை ஏந்திய தலைவராகி, எல்லாத் தத்துவங்ளையும் கடந்து, வானில் நிலை பெற்ற உலகங்களை எல்லாம் கடந்து விரைவாக வீடுபேறு ஆகிய அவரது திருவடியை அடைதலுக்கு  செல்லும் வழியை அமைத்துக் கொடுத்து, தோகைகளைப் விரித்து ஆடும் மயில்கள் உடையதும்,  சோலைகளை உடையதும் ஆன திருக்கழிப்பாலைத் தலத்தில் இருந்து தாமே வலியச் சென்று அருள் செய்கின்றார்; இந்த உடம்பு பெற்றதனால் ஆன பயன் என்னவெனில் அவர் வகுத்து வைத்த வழியிலே செல்வது மட்டுமே அவர்க்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகும்.

விளக்க உரை

• ஊன் – தசை
• உடுத்தி – வளைத்து

சமூக ஊடகங்கள்

Leave a Reply