அமுதமொழி – விளம்பி – பங்குனி – 14 (2019)

பாடல்

மாடும் தண்தாமம் அணிந்திடும் மைந்தரும் மாதர்களும்
வீடும் தண் தாமம் என மகிழாமல் உன் மென்மலர்த்தாள்
பாடும் தண்டாத்தமிழ் ஈந்தருள் பூத பிசாசுகளைச்
சாடும் தண்டாயுதனே காழியாபதுத் தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துதிருவடிகளைப் பற்றி பாடும் படியான இனிய தமிழினை ஈந்து அருள வேண்டுதல் பற்றிய பாடல்.

பதவுரை

இறந்தவர்களின் பேயுருவம் கொண்டு திரியும் பூதம், தீமை தரத் தக்கதான  பிசாசங்கள் ஆகியவைகளை  தண்டாயுதத்தால் அடித்தும், துன்புறுத்தியும் செய்பவனாய் காழிப் பதியில் உறைந்து இருப்பவனான ஆபதுத்தாரணனே! செல்வமும், புகழ்ச்சியைத் தரும் மைந்தரும், பெண்டுகளும், தனது இருப்பிடமும், நிலையாக  தனக்கு உரித்தானவை என மகிழ்ந்து இருக்காமல் உன்னுடைய மெல்லியதான மலர் போன்ற திருவடிகளைப் பற்றி பாடும் படியான சிக்கல் இல்லாத இனிய தமிழினை ஈந்து அருள வேண்டும்.

விளக்க உரை

  • முதலடியில் வரும் தண்தாமம் என்பது புகழ்ச்சி எனும் பொருளிலும், இரண்டாம் அடியில் வரும் தண் தாமம் என்பது நிலையானது பொருளிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
  • சாடுதல் – அடித்தல், மோதுதல், துகைத்தல், குத்திக் கிழித்தல், வடுச்செய்தல், ஒடித்தல், கொல்லுதல், அசைதல், ஒரு கட்சிக்குச் சார்பாய் இருத்தல்
  • தாமம் – பூமாலை; கயிறு; வடம்; பரமபதம்; நகரம்; ஊர்; மலை; இடம்; உடல்; ஒழுங்கு; பூ; கொன்றைமரம்; சந்தனம்; ஒளி; போர்க்களம்; யானை; புகழ்; பிறப்பு; பதினெட்டுக்கோவையுள்ளமாதர்இடையணி; முடியுறுப்புஐந்தனுள்ஒன்று
  • தண்டா – தொந்தரை, சண்டை, சிக்கல், கதவையடைத்து இடும் இரும்புத் தடி, தண்டால்

சமூக ஊடகங்கள்

Leave a Reply