வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 29

புகைப்படம் : இணையம்

உமை

மனிதர்கள் தர்மத்திற்காகக் கொடுக்கத் தக்கவை எவை? அவற்றை நான் கேட்க விரும்புகிறேன். அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்.

மகேஸ்வரர்

தர்மகாரியங்கள் நித்தியமாகச் செய்யத்தக்கவை எனவும் காரணம் பற்றிச் செய்யத்தக்கவை என இரண்டு வகைப்படுகின்றன.

எந்தக்காலத்திலும் கொடுக்கப்படுவதினால் அது நித்தியம். இது எல்லா வர்ணங்களுக்கும் பொதுவானது.

நித்தியமான தர்மகாரியம்

அன்னம், இடம், தீபம், தண்ணீர், பசுக்களுக்குப்புல், விறகு, எண்ணெய், சந்தனம் முதலிய வாசனைகள் நிறைந்தவை, மருந்து, எள், உப்புமுதலிய திரவியங்களைக் கொடுப்பது  நித்ய தர்மம்.

அன்னதானம் 

  • மனிதர்களுக்கு அன்னமே பிராணன் ஆகையால் அன்னம் கொடுப்பவன் பிராணனைக் கொடுப்பவன் ஆகிறான். வித்வானான பிராம்மணனுக்குச் சுவையுள்ள அன்னத்தை கொடுக்க வேண்டும். வழி நடந்து களைத்து வீடு தேடி வந்த விருந்தினனை மனதில் மாறுபாடு இல்லாமல் வரவேற்க வேண்டும்.
  • மானிட ஜன்மமே அதிதிகளுக்காக உண்டாக்கப் பட்டிருப்பதால், மனைவியை வருத்தியாவது அதிதிகளை எப்போதும் காப்பாற்ற வேண்டும்.
  • அது வரமளிக்கும் யாகத்திற்கு ஒப்பானது. பாவத்தைச் செய்தாலும் பசித்தவருக்கு அன்னமிடுகிறவன் தன்பாவத்தைப் போக்கிக் கொண்டவனாகிறான்.
  • எவ்வகைப்பட்ட மனிதர்களுக்கும் அன்னதானம் மறுக்கப்படுவதில்லை என்பதால் கோபத்தை விட்டு முழு முயற்சியோடு அன்னதானம் செய்யவேண்டும்.
  • அன்னதானம் செய்யும் மகாத்மாக்களுக்குக் தேவலோகத்தில் அநேக நூற்றுக்கணக்கான பெரியதான மாளிகைகள், உள்ளே தடாகங்கள், வனங்கள், ஒளியுள்ள வைடுரியக் கற்கள், பொன் வெள்ளியும் நிரம்பினவையும், பலவகை ரத்தின மயமானவையும், பல உருவங்களாகக் கட்டப்பட்ட கட்டங்கள் ஆகியவை இருக்கின்றன; நினைத்த பழங்களை எல்லாம் தரும் மரங்களும் அநேகருடைய கிணறுகளும் ஆயிரக்கணக்கான குளங்களும் வீடுகளும் இருக்கின்றன; ஸ்வர்க்கத்தில் பிணி துன்பங்கள் அற்றவையும் அழியாதவையும் ஆச்சரியப்படத்தக்கதுமான அனேக கிரகங்கள் இருக்கின்றன. அவர்கள் பிரம்ம லோகம் செல்கின்றனர்.
  • அதன்பிறகு மானிட லோகத்தில் எல்லாச் சிறப்புக்களும் பொருந்தினவர்களாக நல்ல உடல் பலமும், கட்டு உடையவர்களாகவும், நோயற்று நீண்டகாலம் ஜீவித்திருப்பவர்களாகவும் சிறந்த புத்தியுள்ளவர்களாகவும் பிறக்கின்றனர்.  
  • ஆதலால், நன்மையை விரும்புகிறவன் எந்தக் காலத்திலும் எவ்விடத்திலும் யாவருக்கும் இடைவிடாமல் அன்னதானம் செய்வது முக்கியம்.

தொடரும்..

சமூக ஊடகங்கள்

Leave a Reply