அமுதமொழி – விளம்பி – மாசி – 6 (2019)

பாடல்

அங்கத்தை மண்ணுக் காக்கி யார்வத்தை யுனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்
சங்கொத்த மேனிச் செல்வா சாதனா ணாயே னுன்னை
எங்குற்றா யென்ற போதா விங்குற்றே னென்கண் டாயே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – மரணிக்கும் தருவாயில் ‘இங்கிருக்கிறேன்’ என்று இருப்பிடத்தைக் காட்டி அருள் புரிய வேண்டுதல்.

பதவுரை

முதற்கடவுளாகவும், அனைவருக்கும்  மேம்பட்டனும் ஆகிய இறைவனே, திருமேனி முழுதும் நீறு பூசப்பட்டதால் சங்கினை ஒத்த வெண்ணிறமான மேனியை உடைய செல்வனே, வெட்கத்தை கொடுப்பதும், குற்றத்தினையும், கேட்டினை உடையதும் ஆன இந்த உலகப் பொருட்கள் மீது கொண்டுள்ள பாசம் நீக்கி, அதன் மூலம் பிறவி என்ற சேற்றினை அடியோடு போக்கி, இந்த உடல் மண்ணுடன் பொருந்தி கலக்குமாறு செய்து, உன்னைப்பற்றி ஆர்வம் கொண்டு, விருப்பத்தை உன்னிடத்திலேயே வைத்து, மனதினில் உன்னை தியானித்து, என் உயிர் போய் இறக்கும் தருவாயில், இறைவனே, நாய் போன்றவனாகிய அடியேன் உன்னை ‘எங்கிருக்கின்றாய்’ என்று வினவினால், ‘இங்கிருக்கிறேன்’ என்று  உனது இருப்பிடத்தைக் காட்டி அருள் புரியவேண்டும்.

விளக்க உரை

  • அங்கம் – உடம்பு
  • மண்ணுக்கு ஆக்கி –  புதைக்கப்பட்டோ எரிக்கப்பட்டோ மண்ணொடு மண்ணாய்ப் போமாறு உடல் நீங்குதல்
  • விழுந்து தொழும்போது – உடம்பு மண்ணில் கழிக்கப்பட்ட பிறகு,  உயிர் அந்த உடம்பில் இருந்து நீங்கிச் சிவத்தில் கலத்ததாக  எண்ணுதல் சைவ மரபு .
  • பரமன் – முதற்கடவுள்
  • பங்கம் – தோல்வி, குற்றம், அவமானம், வெட்கம், விகாரம், கேடு, நல்லாடை, சிறுதுகில், இடர், துண்டு, பங்கு, பிரிவு, குளம், அலை, சேறு
  • பிறவியளறு –  பிறவிச் சேற்றினை; பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா  எனும்  கந்தரலங்கார பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்க.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply