அமுதமொழி – விளம்பி – மாசி – 3 (2019)

பாடல்

எந்தன் நினைப்பும் இனிக்கடந்தே
      ஏக வெளியின் நிலைதொடர்ந்தே
   இரவும் பகலும் அற்றஇடம்
      இனிதா கியபே ரொளிவிளக்கே

சந்திக் கரையின் முடிவேற்றித்
      தனையுந் தலைவன் அடிசேர்த்துச்
   சாட்சாத் கார பூரணமாய்ச்
      சர்வா னந்த மாயிருக்க

உந்தன் இருதாள் மலர்க்கருணை
      ஒளிசேர் கனக்க கிரிமுடிமேல்
   உதித்தாய் எனது வினையறவும்
      உமையே இமையோர்க் கரசான

மந்திரக் கலைச்சி நவகோணம்
      வாழும் யோக நாயகியே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

கருத்து – நிலைபெற்ற பேரின்பத்தில் என்றும் நிலைக்க வேண்டி விண்ணப்பம்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே,  சுடர் ஒளி போன்ற தங்க மலையின் மேல் உதித்தவள் ஆகிய உமையே, இமையாதவர் ஆகிய தேவர்களின் முதன்மையானது எனப் போற்றப்படுவதும், மந்திரத் தன்மை உடையதும், நவ கோணம் கொண்டதுமான இடத்தில் வாழும் யோக நாயகியானவளே, இரவு, பகல் ஆகிய கால மாறுதல் இல்லாமல், நினைவு எனும் நிலையைக் கடந்து, ஏக வெளி, பரவெளி, ஆகாசம் எனும் பெருவெளி ஆகிய நிலையில் இருக்கும் நிலையைத் தொடர்ந்து இனிமையாக இருக்குமாறு செய்த பேரொளி விளக்கினைப் போன்றவளே, மலர் போன்ற கருணை தரும் உன்னுடைய இரண்டு தாளினையும் தந்து, என்னுடைய இருவினைகளாகிய நல்வினை, தீவினை ஆகியவை அறுந்து விடும்படு செய்து, ஆறு போன்றதான வாழ்வின்  முடிவில் கரையேறுமாறு எனைச் செய்து, வெளிப்படையாகவும், முழுவதுமாகவும் தலைவன் ஆகிய இறைவன் திருவடி சேர்த்து முழு ஆனந்தமாக இருக்கும்படி செய்து அருள்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply