அமுதமொழி – விளம்பி – தை – 26 (2019)

பாடல்

முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க் கும்என்த னக்கும்
வழிமுத லேநின் பழவடி யார்தி ரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்திருக்க இரங்குங் கொல்லோ என்று
அழுமது வேயன்றி மற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

முழு முதல் ஆனவனே, பொற்சபையில் ஆடுகின்ற நாதனாகவும், தலைவனாகவும் இருப்பவனே! அயன், அரி அரன் ஆகிய மூவர்க்கும், மெய் வாய் கண் மூக்கு மற்றும் செவி ஆகிய ஐம்புலன்களுக்கும், நீ வகுத்து நின்ற பாதையில் செல்லும் எனக்கும் முதலானவே, உன்னுடைய பழைய அடியார் திருக்கூட்டத்தோடு சேர்ந்து, பெருமை மிக்க சிவலோகத்தில் சேர்ந்திருத்தலைத் திருவருளால் கொடுத்தருள இரங்குமோ என்று அழுவது அல்லாமல் வேறு என்ன செய்ய வல்லேன்?

விளக்க உரை

  • ‘மூவர்க்கும் ஐம்புலனுக்கும் முதல்’ – மூவர் தொழில் செய்பவர்கள், ஐம்புலன்கள்  செயப்படுபொருள். ஆகவே அவை எல்லாவற்றிற்கும் ஆன பெரும் தலைவன்.
  • ‘மற்றென் செய்கேன்’ –  உன்னை வற்புறுத்துதற்கு என்ன உரிமை உடையேன்’ என்று பொருள் உரைப்பார்களும் உளர். ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.
  • ‘முழு முதல் ஆனவனே’ என்பதை சிவனின் எண் குணங்களோடு ஒப்பிட்டு உய்க.
  • கெழுமுதல் – கூடுதல்

சமூக ஊடகங்கள்

Leave a Reply