அமுதமொழி – விளம்பி – தை – 25 (2019)
பாடல்
நாளோ வினையோ வீணாளோ
நானா தொழிலுக் கானதுவே
நலஞ்சேர் நிட்டைக் குதவிவரும்
நாழியொன்றாயினும் இலையோ
சூளைக் குயவன் விதிவசத்தால்
துக்க சுகமும் தொடர்ந்துவரத்
துன்மார்க்கத்தால் வந்ததென்றுஞ்
சொல்வார் பாரில் சூழ்மனிதர்
வேளைக் கிசைந்த மொழிபேசி
வினையிற் புகுந்த சுகம்போதும்
வினையை ஒழித்தே அமலசுக
வெளியைப் பொருத்தி வினைப்பிறவி
மாளும் படிநீ அருள்புரிவாய்
வாலாம்பிகையே வான்மணியே
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம்பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, திரிபுரை என்றும், வாலை என்றும், பத்து வயது ஆனவள் என்றும், பதினாறு வயது ஆனவள் என்றும், கன்னியென்றும், பச்சைநிறத்தவள் என்றும் ,சக்கரத்தாள் என்றும், வாமி என்றும், தேவி என்றும், மாயை என்றும், புவனை என்றும், அன்னை என்றும், ஆவுடையாள் என்றும், தாரை என்றும், அமுதக் கலசம் என்றும், தாய் என்றும், உண்ணாமுலை என்றும், கோவுடைள் என்றும், அண்ட பேரண்டங்களைக் கட்டிக் காக்கின்ற அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்றும், அறுபத்து நாலு கலைகளையும் அறிந்த சித்தர்களால் வணங்கப்படுபவளும், வாலை எனப்படும் வாலாம்பிகையே! வானின் கண் போன்ற சூரியன் போல் சுடர்விடுபவளே! உன்னை வணங்குதல் இல்லாமல், இந்த நாட்கள் வினைப் பற்றி நின்று பல் வேறு தொழிகள் செய்து, நன்மையைத் தருவதாகிய தியானம், நோன்புநோற்றல் போன்றவற்றிற்கு உதவி செய்யாமல் கழித்த நாட்களில் கழித்து, சூளைக்குயவனாகிய பிரமன் படைத்த விதி வசத்தால் ஆன உடலில் துக்கமும், சுகமும் மாறி மாறி தொடர்ந்து வர, ‘அது துன்மார்க்க வழில் வந்தது’ என உலக மக்கள் இயம்பும் படி வாழ்ந்தும், சமயத்திற்கு ஏற்றவாறு மொழி பேசி, அதனால் விளைந்த வினையில் சேர்த்த சுகம் போதும்; இவ்வாறான இந்த வினைகளை ஒழித்து நின்மலமாக்கி பரவெளியில் பொருந்தி வினைப்பிறவி மாளும்படி நீ அருள் செய்ய வேண்டும்.
விளக்க உரை
- வினைப் பிறவி மாளும்படி வேண்டியது
- சூளைக்குயவன் – பிரமன்
- நிட்டை – தியானம், நோன்புநோற்றல்