அமுதமொழி – விளம்பி – மார்கழி – 3 (2018)

பாடல்

மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

ஒற்றியூரை தலமாக உடைய சக்ரவர்த்தியே! மனம் என்னும் தோணியை, அறிவு எனப்படும் துடுப்பை பயன்படுத்தி, சினம் எனும் சரக்கை அந்தத் தோணியில் ஏற்றி, செறிவுடைய பாசக்கடலாகிய பரப்பில் செலுத்தும்போது, மன்மதன் என்ற பாறையில் தாக்கி, அந்தத் தோணி நிலைமாறி கவிழும்போது உன்னை அறிய இயலாதவனாக வருந்துவேன்;  அந்த நிலையில் என்னை மறந்து உன்னையே தியானிக்கும் அறிவை அடியேனுக்கு விரும்பி அளிப்பாயாக.

விளக்க உரை

  • மனன் ( மன்மதன் ) பாறை
  • மறியும்போது – கீழ்மேலாகும் பொழுது
  • ஒண்ணாது – ஒன்றாது; பொருந்தாது
  • மனனெனும் பாறை – சில பதிப்புகளில் ‘மதன்’ என்று காணப்படுவதாக தெரிகிறது. ‘மதன்’ என்பது பிழைபட்ட பாடம் என்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது.

 

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply