வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 24

 

உமை

மனிதன் விரதத்தை எப்படி செய்தால் புண்ணியம் அடைவான்?

சிவன்

 • மனிதன் சாத்திரத்தில் உரைத்தவாறு நீராடிய பின்பு பஞ்ச பூதங்களையும், சூரிய சந்திரர்களை காலை மற்றும் மாலை ஆகிய இரு சந்தி வேளைகளிலும், தர்ம தேவதையையும், யமனையும், பித்ருக்களையும் நமஸ்கரித்து தன்னை அவர்களிடம் ஒப்பித்து மரணம் வரையிலுமோ அல்லது குறிப்பிட்ட காலம் வரையிலுமே விரதத்தை செய்யலாம்.
 • காய்கறி, கனி மற்று பூ இவற்றிலும் விலக்குவது குறித்து நிச்சயப்படுத்திக் கொண்டு விரதம் செய்யலாம்.
 • பிரம்மச்சாரிய விரத்தையும், உபவாச விரத்தையும் கொள்ளலாம்.
 • இவ்வாறு பலவகையிலும் கொள்ளப்படும் விரதத்திற்கு அது பற்றி தெரிந்தவர்கள் கெடுதல் வராமல் காக்க வேண்டும். இவ்வாறான விரதம் கெட்டால் பாவம் என்று அறிவாயாக.
 • மருந்து உண்பதற்காகவும், அறியாமையாலும், பெரியோர் கட்டளையாலும், சுற்றத்தாருக்கு உதவி செய்வதற்காகவும் விரதம் கெடுவதால் குற்றம் ஆகாது.
 • விரதம் முடிக்கும் போது சாத்திரத்தில் விதிக்கப்பட்டவாறு முடிக்க வேண்டும். அதனால் சித்தி அடைவான்.

உமை

சிலர், புலால் எனும் மாமிசம் உண்ணுகின்றனர், சிலர் விட்டு விடுகின்றனர். அதை உண்ணலாமா கூடாதா? இதைச் சொல்லக்கடவீர்.

சிவன்

 • அக்கினி பூசையும், தானமும், வேதம் ஓதுதலும், தட்சிணைகள் நிரம்பிய யாகங்கள் ஆகியவை புலால் உண்ணாமல் இருப்பதன் பதினாறின் ஒரு பங்கிற்கு ஈடாகாது. சுவையை விரும்பி தனக்காக வேறு உயிரைக் கொல்பவன் பாம்பு, நரி, கழுகு மற்றும் ராட்சர்களுக்கு சமமானவன். பிற மாமிசத்தில் தன்னை வளர்ப்பவன் பிறக்கும் பிறப்புகளில் எல்லாம் பயம் கொண்டவனாகவே இருப்பான். தன்னை அறுத்தல் தனக்கு எத்தனை துன்பம் தருமோ அது போலவே பிற உயிர்களுக்கும் துன்பம் தரும் என்று புத்திசாலி உணரவேண்டும்.
 • வாழ்நாள் முழுவதும் மாமிசம் உண்ணாதவன் சொர்கத்தில் நிலைபெறுவான். நூறு வருடம் தவம் செய்வதும் மாமிசம் விடுவதும் சமமாகவே இருக்கும் அல்லது அந்த தவ வலிமை குறைவாகவே இருக்கும். உயிரைக்காட்டிலும் மேலானது எதுவும் இல்லை என்பதால் தன் போல் பிற உயிர்களிடத்தில் இரக்கம் வைக்க வேண்டும்.
 • மாமிசத்தின் சுவை அறிந்து அதை விலக்குபவன் பெறும் நன்மையை யாகங்களும், தேவர்களாலும் செய்யமுடியாது.
 • மாமிசத்தை விட இயலாவிடின் ஏதாவது ஒரு மாதத்தில் விட வேண்டும்; அதுவும் இயலாது போனால் கார்திகை மாதம் சுக்ல பட்சத்தில் (அமாவாசை முதல் பௌர்ணமி வரை), தனது ஜன்ம நட்சத்திரதின் போதாவது, புண்ணிய திதிகளில் அல்லது அமாவாசை பௌர்ணமி திதிகளில் மட்டுமாவது விடவேண்டும்.
 • உடற் பிணிகள் வந்து அதன் பொருட்டு மாமிசம் உண்பவனையும் பித்ருக்களுக்கு படைக்கப்பட்ட மாமிசம் உண்பவனையும் பாவம் பற்றாது.

உமை

தர்மத்தை கடைபிடிப்பவர்களால் குரு பூசை எவ்வாறாக செய்யப்படுகிறது?

தொடரும்..

சமூக ஊடகங்கள்

Leave a Reply