அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 9 (2018)

பாடல்

அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்பும் கலப்பும்
அறிவான் இருந்து அங்கு அறிவிக்கின் அல்லால்
அறிவான் அறிந்த அறிவு அறியோமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

மெய் தத்துவங்களின் தோற்றமுறை ஆய்தலை உடைய மெய் உணர்ந்த மேலோர் அருளால் அறிவது நீர் என்றும் திருவருள் என்றும் குறிக்கப்பெறும் அப்புவும், தீ எனவும்  சிவபெருமான் எனவும் குறிக்கப் பெறும் அனலும்; அவ்வாறு அதன் பொருள் நுட்பம் உணர்பவர்கள் அவற்றின் பண்பும் கலப்பும் ஒடுக்கமும் ஆய்ந்து உணர்வார்கள்; இவ்வாறு அறிவது எல்லாம் ஒருங்கே உணரும் தன்மையும், எண் குணமும், முற்றுணர்வும் இயல்பாகவே அமைந்த சிவபெருமானாலே வாய்க்கப் பெறுகிறது. அஃதாவது அவன் உடனிருந்து இயங்கி  அவன் இடம் அறிவித்தாலன்றி ஆருயிர்கள் அறியாது; அவனையின்றி அறிவு வசப்பட்ட  ஆருயிர் அறிந்ததென்பதை எவரும் அறியார்.

விளக்க உரை

  • மெய்ப் பொருள் அறிவு ஆசிரியனை இல்லாமல் உண்டாகாது எனும் பொருள் உடைக்கும் பாடல்
  • அருள் ஆகிய சக்தியும் சிவமும் கலந்து அருளுபவன் எனும் நிலையில் நின்று,  அனைத்து உலகினையும் மற்றும் அவற்றின் தொழில் செய்வதைக்  குறிக்கும் குறிப்பாகும்.
  • தாமாக அறியும் பொருள் அனைத்தும் காட்சிப் பொருள்களே. அவை மட்டும் அல்லாமல்  கருத்துப் பொருள்களும் உள்ளன.  அவற்றை அறிவிப்பவன் ஒருவன் இருந்துகொண்டு அறிவித்தாலன்றி, அறிபவன் தானே அறிந்து பெற்ற அறிவாக நாம் எந்த அறிவையும் அறிய இயலாது.
  • ‘உலகாயதர்’ என்றும், ‘சாருவாகர்’ என்றும் ‘பூத வாதிகள்’ என்றும் கூறுபவர்களின் கருத்தாகிய ‘காட்சிப் பொருளன்றிக் கருத்துப் பொருள் இல்லை` எனும் விளக்கம் சைவ சித்தாந்த கருத்துப்படி மறுக்கப்பட்டுள்ளது
  • முதலில் வரும் ‘அறிவான்’ என்பது `முன்பே அறிந்துள்ளவன்` எனவும், பின்னது, `இனி அறிபவன்` எனவும் பொருள் தரும்.

சமூக ஊடகங்கள்

Leave a Reply