அமுதமொழி – விளம்பி – ஆடி 27 (2018)

பாடல்

அருட்டிரட் செம்பொற் சோதி
   யம்பலத் தாடு கின்ற
இருட்டிரட் கண்டத் தெம்மான்
   இன்பருக் கன்பு செய்யா
அரட்டரை அரட்டுப் பேசும்
   அழுக்கரைக் கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்வாய்
   பேசாதப் பேய்க ளோடே

ஒன்பதாம் திருமுறை – திருமாளிகைத் தேவர்

பதவுரை

அருள் திரண்டு, செம்பொன் போன்ற நிறமுடைய ஒளியை கொண்ட சிற்றம்பலத்தில் ஆனந்தக் கூத்தாடும் நீலகண்டனாகிய எம்பெருமானுடைய அடியவர்கள் மீது அன்பு செலுத்தாமல் துடுக்கு உடையவர்களையும், துடுக்கான வார்த்தைகளைப் பேசும் குற்றம் உடையவர்களையும், கழுகுகள் போன்று பிறர் பொருளை நயவஞ்சமாகப் பறித்து உண்ணும் நெறி தவறியவர்களையும் என் கண்கள் காணது; என் வாய் அப்பேய்களோடு உரையாடாது.

விளக்க உரை

  • `அருளினது திரளாகிய அம்பலம்` எனவும், `இருளினது திரளாகிய கண்டம்` எனவும் மாற்றி உரைக்க.
  • அரட்டர் – துடுக்குடையவர்.
  • பிரட்டர் – புரட்டர் (வடமொழி பிரஷ்டர்) – நெறிதவறியவர். ஒதுக்கப்பட்டவர், வஞ்சகர்

 

சமூக ஊடகங்கள்

Leave a Reply