அமுதமொழி – விளம்பி – ஆடி 15 (2018)

பாடல்

கற்று அறியேன் கலை ஞானம்; கசிந்து உருகேன்; ஆயிடினும்,
மற்று அறியேன் பிற தெய்வம்; வாக்கு இயலால், வார் கழல் வந்து
உற்று, இறுமாந்து இருந்தேன்; எம்பெருமானே! அடியேற்குப்
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே, நின் பொன் அருளே!

திருவாசகம் – எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்

பதவுரை

எம்பெருமானே! ஞானத்தினை வழங்கும் நூல்களைப் படித்து அவற்றின் பொருள்களை அறியவில்லை; அதன் பொருள் பற்றி மனம் கசிந்து உருகவும் இல்லை; கற்று அறிந்தது கொண்டு, வாக்கின் தன்மையால் வேறு தெய்வங்களை துதித்தும் அறியவில்லை; ஆனாலும் ஆராய்ந்து, தங்களுடைய நீண்ட திருவடிகளை பெருமிதத்துடனும், செருக்குடனும் வந்து அடைந்து  இருந்தேன் என்பதைத் தவிர எதுவும் செய்யவில்லை. அதன் பொருட்டு அடியேனாகிய எனக்கு,  உன் பொன் போன்ற திருவருளைக் காட்டியது,  நாயினுக்கு,  பொன்னால் ஆகிய ஆசனத்தை  இடுவது போன்றது அல்லவா?

விளக்க உரை

  • இறைவன் தன்னையே நினைப்பவர்களுக்கு  பேரருள் செய்வான் என்பது குறித்து கூறப்பட்டப் பாடல்.
  • கற்றறியேன் கலைஞானம் – அறிவால் பெறப்படுவதுமான கலைஞானத்தினை கற்றலாலும் கேட்டலாலும் வளர்த்துக் கொண்டாலும் அது இறைவனடி சேர்க்க துணை செய்யும் என்பது உறுதியாக கூற இயலாது.  எல்லாக் கலைகளுக்கும் மூலமாக உள்ள பொருள் எது என்ற முறையில் சிந்தனையைச் செலுத்தி, உய்யும் கதிக்கு வழிகாட்டி, அதன் இறுதிப் பயனாகவுள்ள இறையருளைப் பெறக் கூடுமேயானால் அத்தகைய ஒரு கலைஞானம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே என்பது பற்றியது.
  • ஒரு தகுதியும் இல்லாத எனக்கு இத்துணை அருமையான கருணையைப் புரிந்தது என்பது நாய்க்குப் பொன்னாசனம் இட்டது போன்றது என்று உவமையைச் சொல்லி விளக்கியது.

சமூக ஊடகங்கள்

Leave a Reply