அமுதமொழி – விளம்பி – ஆடி 13 (2018)

பாடல்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து – ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு

தனிப்பாடல் திரட்டு – ஔவையார்

பதவுரை

தானம் கொடுத்தலே அறமாகும். தீவினைபற்றி தீயவழியில் பொருள் ஈட்டுதல் விடுத்து நல்வழியில் பொருள் ஈட்டுதலே பொருளாகும். எக்காலத்தும் காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஒன்றாக் கூடி முடிவு எடுப்பதே  இன்பமாகும். பரனை நினைந்து அவன் அருளால் இம்மூன்றையும் விட்டதே பேரின்ப வீட்டினை நல்கும்.

விளக்க உரை

  • சைவ சித்தாந்த கருத்துப்படி வீடு என்பது துன்ப நீக்கத்தினையும்,  பேறு என்பது இன்ப ஆக்கம் என்பதையும் குறிக்கும்.
  • செயல்கள் அனைத்தும் பரமன்  என்பதால் பரமனை நினைந்து செய்யப்படும் ஈதல் அறமாகி விடுகிறது;  தீவினைகள் விலகி நல்வினைப்பட்டு பொருளீட்டுதல் இயல்பாக நிகழும். காதலர் இருவர் கருத்து ஒருமித்தல் நிகழும்; அவன் நினைவாலே இம்மூன்றையும் விட்டு வீடுபேறடையவும் இயலும். அஃதாவது உலகியல் செயல்களும், ஆத்ம செயல்களும் பரமனாகிய ஈசனாலேயே நிகழ்கின்றன.
  • எல்லாப் பொருள்களும் பரமனது உடைமைகள் என்பதால் அவற்றை நமது உழைப்பிற்கு எற்ப அவன் அநுமதிக்கும் அளவிற்கு அநுபவிக்கலாமே தவிர, நாமாகப் பிறர்க்கு வழங்க நமக்கு உரிமை இல்லை. எனவே அவனுடைய பொருள் என்னும்போது அவனை நினைந்து ஈதலே முறையாகும். ஆகவேஅது அறமாகி விடுகிறது. ‘பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல் இறக்கும்பொழுது கொடுபோவதில்லை’ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

Leave a Reply