அமுதமொழி – விளம்பி – ஆடி 9 (2018)

பாடல்

பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்
போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்
பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்
பாராய்ப் புனலாகி நிற்கை கண்டேன்
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன்
மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

உலகத்தார்க்கு பொருந்தாத செய்கைகளாகிய சாம்பல் பூசிக் கொள்ளுதல், எலும்பும் தலைமாலையும் அணிதல், தலை ஓட்டாகிய மண்டை ஓட்டில் இரத்தல், நஞ்சை உண்ணுதல், பாம்பினை அணிதல், சடைதரித்துப் பெண்ணொரு பாகன் ஆதல் போன்றனவும் கொண்டு பொலியக் கொண்டவராய், போற்றுதலாகிய சொற்களைச் சொல்லி விண்ணோர்கள் புகழுமாறு விளங்குபவராய், தம்மிடத்தில் அன்பு கொண்ட அன்பருக்கு அருளும் தன்மை உடையவராய், நிலனொடு நீராய் (ஏனைய பூதங்களாகவும் -அவையாகி நிற்றல் ) நிற்பவராய், புதுமையாகவும், வேறிடங்களில் காணப்படாது நிறைந்து நின்று மருட்கையை விளைத்த கூட்டம் எனப்படும் பூதவேதாளங்கள் முதலிய பதினெண் கணங்களுமாகவும். உமையும் விநாயகனும் கொண்டவராய், உடல் நோயும், உயிர் நோயும் ஆகிய பிணிதீர்க்கும் மருந்தின் தன்மை கொண்டவராய் வாய்மூர் அடிகளாகிய  சிவபெருமானை நான் கண்டேன்.

சமூக ஊடகங்கள்

Leave a Reply