அமுதமொழி – விளம்பி – ஆனி – 30 (2018)

பாடல்

மிடைந்தெலும் பூத்தைமிக் கழுக்கூறல்
     வீறிலி நடைக்கூடந்
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன்
     சோத்தம்எம் பெருமானே
உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி
     உன்திரு மலர்ப்பாதம்
அடைந்துநின் றிடுவான் ஆசைப்பட்டேன்
     கண்டாய் அம்மானே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

போற்றுதலுக்கு உரிய தலைவனே! எலும்புகளால் நெருக்கமாகவும், புலால் மிகுந்து அழுக்கும் ஊறி நிற்பதாயுள்ள சிறப்பில்லாத நடை வீடாகிய இந்த உடம்பு என்னை விடாது பற்றி வருதலால் வருந்தி எனை நலியத் துன்பமடைகின்றேன்; மனம் உடைந்து, நெகிழ்ந்து உருகி, உன்னருள் ஒளியைக் கண்டு நோக்கி, உனது அழகிய மலர் போன்ற திருவடியை  பேரின்பம் பெறுவதன் பொருட்டு அடைந்து நிற்க விரும்பினேன்.

விளக்க உரை

  • மனம் இளகி உருகுதலே இறைவன் திருவடியை அடைதற்கு உரிய வழி என்பது பற்றிய பாடல்
  • வீறு இலி – பெருமை இலதாகிய (இழிவை உடைய கூடம்).
  • நடைக் கூடம் – இயங்குதலை உடைய மாளிகை;  வீடு, பெயர்ந்து செல்லாது; ஆனால் இவ்வுடம்பாகிய வீடு, செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து வருவதாதல் இப் பெயர்
  • சோத்தம் – வணக்கம்.
  • உள்ளம் உருகுதல், ஒளி நோக்குதல், – அருளைப் பெறுதற்கு உரிய வழி,
  • பாதம் அடைதல் – சாதனம்
  • பேரின்பம் பெறுதல் – பயன்

சமூக ஊடகங்கள்

Leave a Reply