அமுதமொழி – விளம்பி – ஆனி – 23 (2018)

பாடல்

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியதோர் ஊன்இமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம்  – திருமூலர்

பதவுரை

புறப் பொருளைக் காணும் கண் இல்லாதவர்கள் இருளிலும், விடி காலை புலர்ந்தாலும், விடிந்தப் பின்னும்  அதை அறியாமல் இருப்பதோடு  விடிந்தபிறகும் ஒளியில் பொருள்களை கண்டு பயன்பாடு கொள்ளவும் மாட்டார்கள். அதுபோலத் திருவருளை உணரும் பக்குவம் இல்லாதவர்கள், தமக்குத் திருவருள் முன்னின்று அருளுதலை உணரமாட்டாமல் இருந்து, அவ்வாறு அருளிய பின்னும் அந்த அருள் நலத்தை நுகரவும் மாட்டார்கள். ஆதலினான் நீங்கள் ஊனக் கண்ணை விலக்கி, நுண்ணிதாகிய ஞானக் கண்ணைத் திறந்து திருவருளைக் காண்டால், அத்திருவருளே அறியாமையாகிய இருள் வாராதபடிக் காக்கின்ற ஒளியாகி முன் நிற்கும்.

விளக்க உரை

  • இருளில் அழுத்துவதாகிய அபக்குவம் நீங்குமாறு முயல வேண்டும் என்பது பற்றிய பாடல்.
  • ‘திருவருளே விளக்கு’ – நீங்கள் அவ்விளக்கையே உமக்குக் காட்டாகக் கொள்ளுதல் வேண்டும்` எனும் பொருளில்.

சமூக ஊடகங்கள்

Leave a Reply