அமுதமொழி – விளம்பி – வைகாசி – 12 (2018)

பாடல்

தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு தோள்கணெ ரியவே
செற்ற தேவனஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை யாய்வினை யாயின வோயவே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மனமே! தெளிந்த அறிவினை உடையவனும், தென்இலங்கைக்கு இறைவனாகவும்# விளங்கிய இராவணன், ஈசன் வீற்றிருந்து அருளும் கயிலைமலையைப் பெயர்க்க முற்படும் போது, பற்றிய அளவில் அவன் முடிகள் கொண்ட பத்து தலைகளையும், இருபது தோள்களும் நெரியுமாறு அவன் கர்வம் அழித்த தேவனாகிய நம்முடைய சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை, வினைகள்யாவும் தேய்ந்து ஒழிய நீ ஆராய்ந்து நினைவாயாக.

விளக்க உரை

  • தெற்றல் – அறிவில் தெளிந்தவன். இராவணன் ஒழுக்கத்தில் பிழை உடையவன் ஆயினும் பல நூல் கற்றதால் அறிவில் சிறந்தவன்.(இராவணம் கொடி வீணை என்பது கண்டு உணர்க).மாறுபாடுடையவன் என்பது இக்காலத்தார் கூறும் புதுப்பொருள் பொருந்தாமையால் விலக்கப்பட்டுள்ளது.
  • #இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பலபெயர்கள் இருபதாலும், ஈஸ்வர பட்டம் பெற்றமையாலும்  இறைவன் என்று அழைக்கப்பெற்று இருக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

Leave a Reply