அமுதமொழி – விளம்பி – வைகாசி – 11 (2018)

பாடல்

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை நாரணி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாம் திரிபுரை ஆங்கே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரை ஆனவள், மா மாயை என பெரியதாக குறிப்பிடப்படும் சுத்த மாயை, மாயை என குறிப்பிடப்படும் அசுத்த மாயை, சுத்த மாயை மற்றும் விந்து ஆகியவற்றால் குறிப்பிடப்படும் சுத்த தத்துவங்களின் காரியங்களாகிய வயிந்தவம், வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை  முதலிய நால்வகை வாக்குகள் ஆகிய நாத வடிவங்கள் #, அசுத்த மாயையிலிருந்து தோன்றிய ஆன்ம தத்துவங்கள் தோன்றுதற்கு முதலாகிய பிரகிருதி மாயை எனப்படும் ‘மூலப் பிரகிருதி’ ஓராறு கோடி மந்திரங்களின் முடிவாகிய ஏழனுள், `ஹும், பட்` என்று இரண்டுமாகவும்  சில இடங்களில்  ஒன்றாக எண்ணப்படுவதும் ஆன சத்தியின் வேறுபாடுகள், சிவன் நினைத்தவிடத்து சிவன் அசையா பொருளாகவும், ‘ஆம்’ அசை நிலை கொண்டு அசையும் பொருள், பிற பொருள்களில் கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் நிற்பாள்.

விளக்க உரை

  • சொல்லப்படும் பொருள்கள் அனைத்திலும் தானேயாயும், அல்லாதவாறும் சிவ சத்தி வடிவம் கொண்டு நிற்பாள் என்பது பற்றியது.
  • அசுத்த மாயையின் காரியங்கள் ‘மாயேயம்’ , பிரகிருதியின் காரியங்கள் ‘பிராகிருதம்’ ஆகியவற்றை இங்கு உணர்க
  • ஓவுதல் – நீங்குதல்
  • # ஞானசத்தி, இச்சாசத்தி, கிரியாசத்தி`, ஆரணி, ஜெனனி, உரோதயித்திரி, வாமை, ஜேஷ்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரமதனி, சருவபூததமணி, மனோன்மனி, சத்தி, விந்து, மனோன்மணி, மகேசுவரி, உமை, திரு, வாணி` எனவும் பல்வேறு வடிவங்கள்
  • ஆறுகோடியிற்றாமான மந்திரம் – ஆறு ஆதாரங்களுக்கு உரித்தான மந்திர எழுத்துக்கள்

சமூக ஊடகங்கள்

Leave a Reply