அமுதமொழி – விளம்பி – வைகாசி – 6 (2018)
பாடல்
ஆன வராக முகத்தி பதத்தினில்
ஈனவ ராகம் இடிக்கும் முசலத்தோ
டேனை எழுபடை ஏந்திய வெண்ணகை
ஊனம் அறஉணர்ந் தார்உளத் தோங்குமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
திரிபுரையானவள், தண்டனை தருவதற்கு ஏற்ற வராக முகத்தை உடையவள் (வராகி); இழிகுணம் படைத்த தீயவர்களது உடலங்களை அவர்களின் காலத்தில் அழிப்பதற்காக உலக்கையோடு சங்கு, சக்கரம், ஏர், அங்குசம், பாசம் ஆகிய ஏழு ஆயுதங்களை ஏந்தி அபயம், வரதம் ஆகியவையும் கொண்டு இருப்பாள்; தங்கள் இடர்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் சிரித்த முகத்தையுடையவளாக விளங்குவாள்.