அமுதமொழி – விளம்பி – சித்திரை – 31 (2018)

பாடல்

பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் பெய்கழ னாடொறும் பேணியேத்த
மறையுடை யான்மழு வாளுடையான் வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடை யான்கன லாடுகண்ணாற் காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறையுடை யான்குறட் பூதச்செல்வன் குரைகழ லேகைகள் கூப்பினோமே.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

தலையில் சந்திரனை பிறையாக அணிந்தவனும், பெருமை மிக்க செயல்களைச் செய்கிறவர்களும், நல்ல பண்புடையவர்களாக விளங்குகின்றவர்களும், புகழ்ச்சியை விரும்பாதவர்களும், உலகியல் நோக்கத்தினை பிரதானமாக கொண்டு செயல்படுவர்களும் ஆன பெரியோர்களின் தலைவனும், வேத வடிவங்களாகி அதன் தலைவனாக இருப்பவனும், மழுவாகிய வாளை உடையவனும், மால் துயிலுகின்ற கடலாகிற பாற்கடலிலே தோன்றிய நஞ்சினை உண்டு அதனால் ஏற்பட்ட கண்டத்தை உடையவனும், கோபம் கொண்டு கனல் சேர்ந்த விழிகளால் காமனைக் எரித்தவனும், சிவபெருமான் தம் திருநடனத்தைப் புலப்படும்படிக் காட்டியருளும் செல்வனுமாகிய காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தை உறைவிடமாக கொண்டவனாகிய இறைவன் திருவடிகளை நாள்தோறும் விரும்பி ஏத்தி அத்திருவடிகளையே கை கூப்பினோம்.

விளக்க உரை

  • காட்டுப்பள்ளிக் குறையுடை யான் – அன்பர்களின் குறைகளைக் கேட்டறிபவனும் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. பொருள் பொருந்தாமையால் இவ்விளக்கம் விலக்கப்பட்டுளது. ஆன்றோர்கள் ஆய்ந்து அறிக.

சமூக ஊடகங்கள்

Leave a Reply