அமுதமொழி – விளம்பி – சித்திரை – 16 (2018)

பாடல்

தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

பூம்பாவாய்! பராக்கிரமும், கோபமும் தன் இயல்பாக உடைய இராவணனின் தோள்களை நெரித்து உகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலை எனும் கபாலீச்சரத்தில் அமர்ந்து உள்ளவனுக்கு, இடை வடிவமான பண்ணோடு பாடும் சப்தரிஷிகள் & வாலகில்யர்கள், தேவர்கள், அரம்பையர்கள், அசுரர்கள், தானவர்கள், தைத்தியர்கள், நாகர்கள், கருடர்கள், கிண்ணரர்கள், கிம்புருசர்கள், யட்சர்கள் / யட்சினிகள், வித்தியாதரர்கள், அரக்கர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், பூத கணங்கள், பிசாசர்கள் ஆகிய பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டு மகிழாமல் செல்வது முறையோ?

விளக்க உரை

  • தண்ணா – வெம்மையைச் செய்யும்; ‘தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானை’ – குளிர்ச்சி பொருந்திய, தமிழை வளர்க்கிற பாண்டி நாட்டையுடையவனும் எனும் வரிகளுடன் மாற்றுப் பொருள் கொண்டு சிந்திக்கத் தக்கது.
  • கண்ணார் – பகைவர்
  • தேவர்கள், சித்தர்கள், அசுரர், தைத்தியர்கள், கருடர்கள், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், இயக்கர்கள், விஞ்சையர், பூத கணங்கள், பிசாசர்கள், அந்தரர், முனிவர்கள், உரகர்கள், ஆகாய வாசியர், போக பூமியர் ஆகியோர் பதினெண் கணத்தினர் என்று மற்றொரு குறிப்பில் காணப்படுகின்றது.
  • முன் காலத்தது விழா – அட்டமிநாள் விழா; தற்காலத்தில் சித்திரைப் பௌர்ணமி; ‘கடம் மட்டமிநாள்’ – அடர் அட்டமி நாள் – அடர் எனும் சொல் பூவிதழ் எனும் பொருளோடு இணைந்து எனக் கொண்டால் முழுமை பெற்ற (இரண்டு) அட்டமி நாள்; ஆக மொத்தம் 16 எனவே சித்திரை பௌர்ணமி எனவும் கொள்ளலாம்; கடலாடுதல் சித்திரை நிலவில் நிகழும் என்பதாலும், அவ்விழா குறித்து எழுதப்பட்டதாகவும் இருக்கலாம்.

சமூக ஊடகங்கள்

Leave a Reply