அமுதமொழி – விளம்பி – சித்திரை – 1 (2018)
பாடல்
கூடுவது லகுவல்ல வாய்ப்பேச்சல்ல
கோடியிலே ஒருவனடா குறியைக் காண்பான்
ஆடுவது தில்லையிலே காலைத் தூக்கி
அம்பரமாமாம்பலத்தில் ஆட்டைப் பார்த்து
நாடுவது சதாகாலம் நாட்டம்பாரு
நமனேது நமனேது நாசமாகும்
பாடுவது அனுராக மனந்தங்கேட்கப்
பச்சை மயிலேறியுந்தான் பாய்ந்தேன் பாரே
சுப்ரமணியர் ஞானம்
பதவுரை
இறைவனுடன் ஒன்றாகி கலத்தல் என்பது எளிதான செயலல்ல; அது பேச்சால், வெறும் ஞானத்தால் வருவது அல்ல; கோடியிலே ஒருவன் மட்டுமே அதை குறிக்கோளாகக் கொண்டு அந்த நோக்கத்தை அடைவான்; ஆன்மாக்களின் ஆணவத்தை அழிப்பதை குறிக்கும், காலை தூக்கி ஆடும் தில்லை நடனம் எனும் தில்லைக் கூத்தினை ஆகாயம் எனும் வெட்ட வெளியில் பார்த்து அதை நாடு; எல்லா காலங்களிலும் அதை விரும்பிக் கொள்; அவ்வாறு கொண்டப்பின் எமன் ஏது? அனைத்து வினைகளும் நாசமாகும். மனதில், அனுராகம் என்றும் அன்பு என்றும் பொருள்தரும் மிக உயர்ந்த உச்ச நிலை ஆகிய அன்புநிலை கொள்ளும் போது, பச்சை மயில் ஏறி, வாசியின் மூலம் பரவினேன்.
விளக்க உரை
- சுப்ரமணியர் அகத்தியருக்கு உபதேசம் செய்தது
- இறைவனின் தில்லை நடனம் அவனது ஐந்தொழில்களை, படைப்பு, காப்பு, லயம், மறைப்பு, அருளல், என்ற ஐந்து செயல்களை சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொன் பதிக் கூத்து, பொன் தில்லைக் கூத்து, அற்புதக் கூத்து எனும் கூத்து வடிவில் குறிக்கிறது.
- இத் தில்லைக் கூத்தை குண்டலினி யோகத்தின் உச்சிநிலையில் காண்பதைக் குறிக்கும்.
- வாலை அல்லது குண்டலினியின் நிறம் பச்சை என்றும், குண்டலினி யோகத்தின்போது மூச்சு சுழுமுனையில் பயணிப்பதால் அவ்வாறு பச்சை நிறம் தோன்றும் என சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள். (மேல் விபரங்கள் குருமுகமாக அறிக)
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
போக வடிவம் என்பது என்ன?
கல்யாண சுந்தரர் போல் உயிர்களுக்கு இன்பத்தை வழங்கும் திருமேனி
(சித்தர்கள் பாடல் என்பதால் இப் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)