அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – ஏய்ச்சல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஏய்ச்சல்

பொருள்

  • மூட நம்பிக்கை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மோட்சமது பெறுவ தற்குச் சூட்சஞ் சொன்னேன்
மோசமுடன் பொய்களவு கொலை செய்யாதே;
காய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப் போடு
காசினியிற் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு;
பாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே
பலவேத சாஸ்திரமும் பாரு பாரு;
ஏச்சலில்லா தவர்பிழைக்கச் செய்த மார்க்கம்
என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே.

அகத்தியர் ஞானம்

கருத்து உரை

மோட்சம் பெறுவதற்கான சூட்சமத்தினை சொல்கிறேன். ஏமாற்றுதல், பொய், திருட்டு, மற்றும் கொலை செய்யாதே; கோபம் அதன் காரணமான காய்ச்சல் ஆகியவற்றைப் போடு; உலகத்தில் புண்ணியத்திற்கான வழிமுறைகளை கருத்தில் கொள்ளு; (மனத்தால்) நிலை இல்லாமல் தாவிக் கொண்டே இருக்காதே; அவ்வாறு இருந்து பாழாக போகாதே; பல வேதங்களும், சாத்திரங்களும் அவற்றின் மெய்யான பொருள் உணர்ந்து பார்;  நம்பிக்கை உடையவர்கள் பிழைக்கச் செய்வதற்கான மார்க்கம் என இவைகளை எனது குடியாகவும், குழந்தைகளாகவும் உடைய நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

விளக்க உரை

கொலையே களவுகட் காமம்பொய் கூறல்
மலைவான பாதக மாம்அவை நீக்கித்
தலையாஞ் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்கு
இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே

எனும் திருமந்திரப்பாடல் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அருளளின் நோக்கம் என்ன?
உயிர்களுக்கு மல பரிபாகம் நீக்கி பேரின்பம் வழங்கல்

(இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

சமூக ஊடகங்கள்

Leave a Reply