அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – தேசவிளக்கு
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – தேசவிளக்கு
பொருள்
- உலகில் உள்ள ஞாயிறு , திங்கள் , தீ போன்று ஒளிரும் பொருள்கள்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு
ஒருவனாய் நின்றாய், நீயே;
வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான்
மருகனாய் நின்றாய், நீயே;
பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி
என்மேல் வைத்தாய், நீயே;
தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு
அகலாத செம்பொன்சோதீ!.
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
திருவையாறு எனும் இத்தலம் விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையவனே! நீ, பொருள் தராத வெற்று ஓசையாகவும், பொருளைத் தரும் ஒலியாகவும் உள்ளாய்; இந்த உலகுக்குத் தன்னிகரில்லாத் தலைவனாக உள்ளாய்; வாசனை தரும் மலரில் எங்கும் பரவியுள்ளாய். மலைமான் எனும் இமவானுக்கு மருமகனாய் உள்ளாய்; உன் பெருமையைப் பேசுதற்கு இனியனாய் உள்ளாய்; எனக்குத் தலைவனாய் இருந்து உன் திருவடிகளை என் தலைமீது வைத்தாய்; உலகில் ஒளிர்தலைச் செய்யும் ஞாயிறு திங்கள், கோள்கள், விண்மீன்கள் முதலிய யாவுமாகி உள்ளாய்.
விளக்க உரை
- ‘ஒசை, ஒலி’ என்பன, ‘சத்தம், நாதம்’ என்னும் பொருளில் முறையே வெற்றோசையும் பொருளோசையும் குறிக்கும். ‘சொல்லை வாக்கு’ என்றும், அகத்தெழு வளி இசையை, ‘மத்திமை வாக்கு’ எனவும், புறத்திசைக்கும் வளி இசையை, ‘வைகரி வாக்கு’ எனவும் மெய் நூல் கூறும். அகத்தெழு வளியொடு உடன்படாது நினைவில் நிற்கும் நிலையை ‘பைசந்தி வாக்கு’ எனவும், சொல்லானது இவ்வாறெல்லாம் வெளிப்படாது தன்னியல்பில் நிற்கும் நிலை ‘சூக்கும வாக்கு’ எனவும் கூறப்படும். இவற்றுள் சூக்கும வாக்கே ‘நாதம்’ எனப்படுவது.
- ‘பிறரல்லர்; நீ ஒருவனே’ எனப் பிரிந்து நின்ற பிரிநிலை பற்றி அனைத்தும் நீயே என்னும் பெயர்கொண்டு முடிந்தன