அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அண்டவுச்சி

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அண்டவுச்சி

பொருள்

  • கண்
  • புருவ மத்தி
  • துரியாதீதம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கேளப்பா கேசரமே அண்டவுச்சி
கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுனமாகும்
ஆளப்பா பரப்பிரம்ம யோகமேன்று
அடுக்கையிலே போதமுந்தான் உயரத்தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டுபோகும்
நாளப்பா அண்டமெல்லாஞ் சுத்தியோடும்
நடனமிடும் சிலம்பொலியும் காணலாமே

காகபுசுண்டர் ஞானம்

கருத்து உரை

நமது தலைக்கு மேல் உள்ள அண்டஉச்சி எனப்படும் துரியாதீதம் கண்டு அதை மௌவுனமாகவும் உறுதியாகவும் பார்ப்பவர்களுக்கு, முத்தி பெறுவதற்குரிய வழிகளில் ஒன்றான சமாதி கூடும். பரப்பிரம யோகம் எனும் இவ்வழியினால் அண்டங்களை எல்லாம் நம் மனத்தால் சுற்றி வராலாம், நம் காதுகளில் சிலம்பொலி கேட்கும், பாரபரையின் நடனம் காணலாம். இவ்வாறு குண்டலியை சுழிமுனை நாடிவழியாக செலுத்தி பரபிரமத்துடன் இணைக்கும் செயலால் ஞானம் அல்லது பேரறிவு ஆகிய போதமும் மேன்மை பெறும். 

விளக்க உரை

  • விந்து நாதம்  வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டுபோகும்  –  ‘சுக்கிலம் கெட்டிப்படும்’ என்று பல இடங்களில் பதிவு இடப்பட்டிருக்கிறது. சுக்கிலம் கெட்டிப்படுதல் என்பது இடை நிலை என்பதாலும்,  யோக மரபில் இறுதி நிலை சமாதி என்பதாலும், சமாதி கண்டவர்களுக்கே இந்த அனுபவங்கள் வாய்க்கும் என்பதாலும் இங்கு சமாதி நிலை என்ற பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • அண்டவுச்சி என்பதற்கான பொருள் விளக்கம் அவரவர் குரு மூலமாக அறிக.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவன் உயிரோடு கலந்த நிலைக்குப் பெயர் என்ன?
அபேதம் (பேதம் இல்லாதது)

 

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

சமூக ஊடகங்கள்

Leave a Reply