அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வார்சடை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  வார்சடை

பொருள்

  • நீண்டசடை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

இறைவன், நீண்ட சடை உடையவனும், ‘மைபூசிய கண்களை உடைய உமையுடன்  தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும்  ஆவான்’ என்று கூறினால் அவன் அவ்வளவே அத்தன்மை மட்டும்  உடையவன் அல்லன்; (ஏனெனில் அஃது அவனது பொது இயல்பு ஆகும்).அவன் எந்தபொருளையும் தன்பொருட்டு ஏற்க விருப்பம் உடையான் அல்லன். உலகில்  இருக்கும் பொருள்களில் ஒருவன் அல்லன்;  ஓரு ஊருக்கு மட்டும்  உரியவன் அல்லன். எந்தப் பொருளாலும் தனக்கு இணையாக உவமை காட்ட இயலாதவன். அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும், அந்த நிறத்தையும், அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமே ஒழிய அவ்வாறு இல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லாகவோ எழுத்தாகவோ எழுதிக் காட்டல் இயலாது.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

உரை அளவையின் வேறு பெயர்கள் என்ன?
ஆகமப் பிரமாணம், சப்தப் பிரமாணம்

சமூக ஊடகங்கள்

Leave a Reply