அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வந்தித்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வந்தித்தல்

பொருள்

  • வணங்குதல்
  • புகழ்தல்
  • கட்டுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

இடநாடியாகிய சந்திர கலை வழியாகவும், பின்பு வல நாடியாகிய சூரிய கலை வழியாகவும்,  பிராண வாயுவை அடக்கியும், வெளியே விட்டும் ஒப்பற்ற நிறைவு உடைய ஒருவனாகி, வானில் அரசாளும் தேவர்களின் தலைவனாக இருந்து வழிபாடு செய்யத்தக்கதாகவும் இருக்கும் சிவனது திருவடிகளை என்றும் வணங்கி  தியானிப்பேன். அவனை புறத்திலும் கண்டு வழிபடுவேன். இவை எல்லாமும் இங்குக் கூறிய தாசமார்க்கத்தில் சொல்லப்பட்டவை.

விளக்க உரை

  • ‘பின்பு அவனைப் புறத்திலும் சில இடங்களில் கண்டு வழிபடுவேன்’ எனு சில இடங்களில் விளக்கம் தரப்பட்டுள்ளன. ‘சில இடங்களில் கண்டு வழிபடுவேன்’ எனும் பொழுது பல இடங்களில் கண்டு வழிபட மாட்டேன் எனும் பொருள் விளக்கமுறும். சித்தர் என்பதாலும், அக மற்றும் புற வழிபாட்டு முறைகளை அறிந்து கூறுவதாலும் ‘அவனை புறத்திலும் கண்டு வழிபடுவேன்’ எனும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. (இறை அன்பர்கள் தகுந்த விளக்கம் அளித்தால் பொருள் உணர்ந்து மகிழ்வுறுவேன்)
  • ‘வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்’ எனும் அபிராமி அந்தாதி வரிகளும் ‘வந்திப்பன் வானவர் தேவனை’ எனும் இப்பாடல் வரிகளும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காரியத்தோடு தொடர்பு உடைய காரணம் எது?
முதற்காரணம்

சமூக ஊடகங்கள்

Leave a Reply