அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அமர்தல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  அமர்தல்

பொருள்

  • விரும்புதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங்
கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும்
சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும்
அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

தேவாரம் – 6ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

சோலைகளால் சூழப்பட்டு  இருக்கும் பூவணத்தில் உறையும் எம் புனிதனார் அடியார்களுக்கு மனக்கண் முன்னர்,  கல்லாலின் நிழலில் அமர்ந்த காட்சியும் ,  பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மேம்பட்ட மறைகளை ஓதும் சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் அகிய நால்வரருக்கு  வேத நெறிகளைச் சொற்களால் விளக்காமல் மோனநிலையிலிருந்து சொல்லிய காட்சியும், உடலைச் சுற்றி  பாம்புகளை  அணிந்த காட்சியும்  கையினில் மான் ஏந்திய காட்சியும் , அறத்தின் உண்மையை உணராத  காலனை ஒறுத்த காட்சியும் , தம்மை நினையும் அடியவர்பால் ஐவகை நிறத்தோடு விரும்பி வழங்கும் காட்சியும் , யாவரும் வெறுக்கும் புலாலின் சுவட்டினை உடைய எலும்பினாலாகிய அணிகலன்களும் காட்சி வழங்கும்.

விளக்க உரை

ஐவகை – ஐந்து நிறம் . படைத்தல் , காத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் என்னும் ஐந்தொழிலை இயற்றும் ஆற்றல்கள்  இந்த  ஆற்றல்கள் ஒருங்கி நிற்குமிடத்து , ` ஈசானம் , தற்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம் ` என்னும் ஐந்து திருமுகங்களாய் நிற்கும் . தனித்தனி பிரிந்து நிற்குமிடத்து , ` மனோன்மனி , மகேசுவரி , உமை , இலக்குமி , வாணி ` என்னும் தேவியராய் நிற்கும்.  இறைவனும் அவர்களையுடைய , ` சதாசிவன் , மகேசுவரன் , உருத்திரன் , மால் , அயன் ` என்னும் தேவர் களாய் நிற்பன் .  –  ‘நிறங்கள் ஓர் ஐந்துடையாய்‘ எனும் மாணிக்கவாசகரின் திருவாசகம் யாண்டும் சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

Leave a Reply