அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வயங்கும்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  வயங்கும்

பொருள்

  • விளங்கும்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில்
   கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை
   எழுப்புகின்ற உறுவ னேனும்
கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக்
   கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை
   ஞானிஎனக் கூறொ ணாதே.

திருவருட்பா – நான்காம் திருமுறை – வள்ளலார்

கருத்து உரை

ஆண் தன்மை பொருந்திய பனை மரத்தைப் பெண் பனையாக்கியும், ஒரு நொடியில் எலும்பைக் கண்ணால் நோக்கி, அழகு திகழும் பெண்ணாக உருவமாக்கியும் செய்த பெரியோனாகிய திருஞானசம்பந்தரைப் போன்றவர்கள் ஆயினும், பிறப்பிறப்புக்கு இரக்கமின்றி உயிர் தாங்கி நின்ற உடம்புகளைக் கொன்று தின்கின்ற கருத்துடையனாயின், அவனை ஞானி என்று சொல்லலாகாது; இது எமது குரு ஆணை; சிவத்தின் மேல் ஆணை என அறிக.

விளக்க உரை

  • திருஞானசம்பந்தர் செய்த அரும் பெரும் செயல்கள் சில
  1. திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கியது
  2. திருமயிலாப்பூரில் இறந்து போன பூம்பாவையின் என்புகளைக் கண்ணால் சிறிது நேரம் நோக்கிப் பெண்ணுரு திகழ எழுப்பியது
  3. திருமருகலில் பாம்பு கடித்து இறந்துபட்ட வணிகனை உயிர் பெற்று எழச் செய்த அற்புதத்தை செய்தது
  • கருவாணையுறுதல் – பிறப்பிறப்புக்கு உள்ளாதல்.
  • புலால் உண்பவன் எத்துணை ஞானமும் உடையனாயினும், ஞானி எனப்படல் பொருந்தாது என வற்புறுத்தவாறு.

சமூக ஊடகங்கள்

Leave a Reply