அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 30 (2019)


பாடல்

பாரப்பா உதயத்தில் எழுந்தி ருந்து
பதறாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதிமதி யிரண்டு மாறிக்
கருவான சுழுமுனையில் உதிக்கும் போது
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு
தியங்காமற் சுழுமுனைக்குள் ளடங்கும் பாரு;
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்
சிதறாமல் மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து போமே

அகத்தியர் ஞானம்

கருத்து – அண்ணாக்கு தனில் நின்று சிவ ரூபம் காணுதலைப் பற்றிக் கூறும் பாடல்.

பதவுரை

உதய காலத்தில் எழுந்திருந்து மனதில் பதற்றம் கொண்டு அலையவிடாமல் சூரிய சந்திர நாடிகள் சந்தித்து ஒன்று கூடும் இடமான சுழுமுனையில் மனதை வைத்து அண்ட உச்சி, ஜோதி தரிசனம் என்று அழைக்கப்படும் அண்ணாக்கு தனில் நின்று மனதின் இயக்கங்கள் அனைத்தையும் நிறுத்தினால் மனமானது சுழுமுனைக்குள் அடங்கும். எட்டு என்பதைக் குறிக்கக்கூடியதான சிவ நிலையான யோகாக்கினி நிலையில் நின்று கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களின் பின்னணியில் இருந்து கொண்டு அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, நமக்கு உள்ளே இருந்து அறிவை உண்டாக்குகின்ற, கண்களுக்கு தெரியாத புலனையே உண்டாக்கும் மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் எனும் நான்கு வகையாக மாறுபட்டு செயல்படுகிற அந்தக்கரணம் சிதறாமல் அருள்வெளிப்படுத்த காரணமாக இருக்கும் இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்க கூடிய சிவத்துடன் கூடி பதினாறு கலைகளையுடைய ஜோதிமயமானதும், ஆனந்தமயம் ஆனதும் ஆன சக்தி ரூபம் அடையலாம்.

விளக்க உரை

 • நான்கும் என்பதை வித்யா கலையான கர்மா, ஞானம், பக்தி, பிரபக்தி எனும் மகாவிஷ்ணு நிலையை என்று பொருள் கூறுபவர்களும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 29 (2019)


பாடல்

ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
அறுமூன்றும் நான்மூன்று மானார் போலும்
செய்வினைகள் நல்வினைக ளானார் போலும்
திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலும்
கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்
கூத்தாட வல்ல குழகர் போலும்
எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனை புற உலகங்களில் அனைத்திலும் நிறைந்து அதன் வடிவமாகவும் இருப்பவன் என்பதையும் அவன் வீரச் செயல்களையும் கூறிய பாடல்.

பதவுரை

இடைமருது எனும் திருத்தலத்தில் மேவிய ஈசனார், செய்யப்படுகின்றன தீவினைகளும் நல்வினைகளுக்கும் கர்ம சாட்சி ஆகி எண் திசைகளுடன் கூடியதான மேல், கீழ் சேர்த்து பத்துத் திசைகளாகவும் அதில்  உள்ள பொருள்கள் யாவுமாய் நிறைந்த செல்வராவார்; ஆறுடன் ஒன்று சேர்ந்ததான ஏழு இசையாகவும் இருப்பவர்;  ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களாகவும் அதன் அங்கம் ஆகிய  சிக்ஷை  சந்தசு  சோதிடம்  வியாகரணம் நிருத்தம்  கற்பம் எனும் ஆறாகவும், மீமாஞ்சை  நியாயம் புராணம் ஸ்மிருதி எனும் உபாங்கமாகவும், புராணம், நியாயம், மீமாஞ்சை, மிருதி என்னும் நான்காகவும், ஆயுள் வேதம், வில்வேதம், காந்தருவவேதம், அருத்தநூல்  எனும் உபாங்கமாகவும், பூருவமோமாஞ்சை உத்தரமீமாஞ்சை எனும் இரு மீமாஞ்சையாகவும், கெளதம சூத்திரம் காணத சூத்திரம் எனும் இரு நியாயமாகவும் (ஆக பதினெட்டு வித்தைகள்)  இருப்பவர்; ஒவ்வொரு மாதத்திற்கும்  வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படும் சூரியனான தாதா, அர்யமா, மித்ரா, வருணா, இந்திரா, விவஸ்வான், த்வஷ்டா, விஷ்ணு, அம்சுமான், பகா, பூஷா, பர்ஜனா என பன்னிரெண்டாகவும் இருப்பவர்; புதியதான கொன்றை மலரினை சூடிய சடையினை உடையவர்;  கூத்து நிகழ்த்துதலில் வல்லவரான அவர் என்றும் இளமைத் தோற்றம் கொண்டவர்; தம் மீது மலரம்புகளைச் செலுத்தவந்த மன்மதனைக் கோபித்து அவனை எரித்தவர்.

விளக்க உரை

 • ஐயிரண்டு – பத்துத் திசைகள்.
 • ஆறொன்று – ஏழு இசைகள்.
 • ஐயிரண்டும் ஆறொன்றும் என்பதை முன்வைத்து 10 + 6  எனக் கொண்டு 16 வகைப் பேறுகளை அருளுபவன் எனக் கொள்வாரும் உளர். புறவடிவங்களில் இருக்கும் பிரமாண்டத்தின் அனைத்து வடிவங்களாகவும் அவன் இருக்கிறான் என்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • அறுமூன்று – பதினெட்டு வித்தைகள். அறுமூன்று என்பதை முன்வைத்து பதினெட்டு புராணங்கள் என்று கூறுவோர்களும் உளர்.
 • நான்மூன்று – பன்னிரண்டு சூரியர்கள்
 • காய்தல் – உணங்குதல், உலர்தல், சுடுதல், மெலிதல், வருந்தல், விடாய்த்தல், எரித்தல், அழித்தல், விலக்குதல், வெறுத்தல், வெகுளுதல், கடிந்துகூறுதல், வெட்டுதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 28 (2019)


பாடல்

மூலம்

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே

பதப்பிரிப்பு

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவனே மறவேன் உனை நான்
ஐவர்க்கு இடம்பெற கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு
கை வைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்துமுருகப் பெருமானின் பெருமைகளைச் சொல்லி உடல் அழிவதற்கும் முன்னமே தன்னைக் காக்க வேண்டும் என வேண்டும் பாடல்.

பதவுரை

தெய்வீகம் பொருத்தியதும் அழகானதும் ஆன மலையாகிய திருச்செங்கோட்டில் வாழக்கூடியவரான செழுமையான சுடர் போன்றவரே,  கூர்மையான வேலை ஆயுதமாகக் கொண்டு வானில் வாழ்பவர்களுக்கு தலைவனாகவும் தெய்வமாகவும் இருப்பவனே! உன்னை மறவாமல் இருக்கும் பொருட்டு ஐவர் எனப்படுபவர்களாகிய பஞ்ச இந்திரியங்கள் கொண்டும் அதனுடன் இரண்டு காலகளையும், இரண்டு கைகளையும் ஒட்டியதான இந்த உடம்பு எனும் வீடு அழிவதற்கு முன்னரே தேவரீர் அடியேனுக்கு முன் தோன்றிக் காப்பாற்றியருள்வீராக.

விளக்க உரை

 • வை – கூர்மை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 26 (2019)


பாடல்

ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே
ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே
நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – ஈசனின் திருமேனி அமைப்பினையும் அவன் அருளும் திறத்தினையும் கூறும் பாடல்.

பதவுரை

பார்வதியினை தன்னில் ஒரு பாகமாக் கொண்டவனே, சோதி வடிவமாக இருப்பவனே, கூத்து நிகழும் காலத்தே அதில் வெளிப்படுத்த அசைகின்ற எட்டு வடிவமாக இருப்பவனே, ஆதியே, தேவர்களுக்குத் தலைவனே, அழகிய அண்ணாமலையில் இருப்பவனே! சிவார்ச்சனைக்கு விதித்த சிறந்த பூக்களான* கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ ஆகியவற்றை முறையாக உன் திருநாமங்களை ஓதி அர்ச்சித்து நின்னை அல்லால் நினையுமாறு செய்து வேறு ஒரு நினைவு இல்லாமல் உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்ற பொருள்களை ஊன்றி நினையேன்.

விளக்க உரை

 • ஓதிய நாமங்களுள் – உமையவள் பங்கா, மிக்க சோதியே, துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே , ஆதியே, அமரர்கோவே, அணி யணாமலையுளானே
 • பங்கன் – பாகமுடையவன், இவறலன், ஒன்றும் கொடாதவன்
 • கூத்து நிகழும் காலத்தே அதில் வெளிப்படுத்த அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே எனும் பொருளில் சில இடங்களிலும் எல்லாவுயிரும் உய்யும் பொருட்டு அங்கம் பிரத்தியங்கம் சாங்கம் உபாங்கம் உடைய திருவுருக் கொண்டு அருளினான் என்றும் சில இடங்களில்  விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.  கூத்து வகைகள்  முன் நிறுத்தில் 1) சிவன் – கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலம் 2) திருமகள் – பாவை 3) திருமால் – குடம், மல், அல்லியம் 4) குமரன்(முருகன்) – குடை, துடி. 5) எழுவகை மாதர்(சபத கன்னியர்) – துடி 6) அயிராணி (இந்திரன் மனைவி) – கடையம் 7) துர்க்கை – மரக்கால் 8) காமன் – பேடு என இருப்பதால் இப்பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • நீதி – சிவாகம முறையில் வகுக்கப்பட்ட முறைப்படி அல்லாமல் வேறு வகையில் ஓதித் தூவி நினையுமாறு மற்றொவரையும் நினைவு கொள்ளுதல்
 • நின்னையல்லால் நினையுமா நினைவிலேன் –  நினைதல் ( மனம் ) ஓதல் ( வாக்கு ) தூவுதல் ( காயம் ) என்னும் முப்பொறிக்குமுரிய வழிபாடு முன்நிறுத்தி உணர்த்தியது.
 • *புட்ப விதி – கமலை ஞானப்பிரகாசர். காலம் 6-ஆம் நூற்றாண்டு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 23 (2019)


பாடல்

குறியென்ற உலகத்தில் குருக்கள் தானும்
     கொடிய மறை வேதம் எலாம் கூர்ந்துபார்த்து
அறியாமல் பிரமத்தைப் பாராமல்தான்
     அகந்தையாய்ப் பெரியோரை அழும்புபேசி
விரிவான வேடம் இட்டுக் காவிபூண்டு
     வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே;
பரியாச மாகவும் தான் தண்டும் ஏந்திப்
     பார்தனிலே குறடு இட்டு நடப்பான் பாரே

சித்தர் பாடல்கள் – காகபுசுண்டர்

கருத்து – போலி குருவின் தோற்றத்தினையும் அவர்களின் குண நலன்களையும் கூறி அவ்வாறான குருவினை தேர்ந்தெடுப்பதில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை கூறும் பாடல்.

பதவுரை

போலி குருவாக இருப்பவர்கள் அறிய இயலாத மறை வேதம் எல்லாம் ஓதி அதன் உட்பொருளையும் மெய் ஞானத்தினையும் உணர்ந்த பின்னும் உண்மையான பிரமத்தை அறியாதவர்கள்; மேலும் தான் எனும் அகங்காரம் கொண்டு கற்றறிந்த பெரியோர்களை தாழ்மையாக பேசுபவர்களாக இருப்பார்கள்; குருவினை போன்று  காவி உடை, யோக தண்டம் மற்றும் பாத குறடு இவைகளைக் கொண்ட தோற்றம் உடையவர்களாகவும் பகட்டான தோற்றம் உடையவர்களாகவும்  நாயைப் போல் பொருளுக்கு அலைபவர்களாகவும் இருப்பார்கள்; இவர்கள் நோக்கம் யாவும் பணம் சம்பாதிப்பதிலே குறியாக இருக்கும்.

விளக்க உரை

 • பிலுக்குதல் – விமரிசை, பகட்டான தோற்றம்;பகட்டு, ஆடம்பரம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 22 (2019)


பாடல்

மூலம்

சேயுரு வமைந்த கள்வன் செருவினை இழைக்க லாற்றான்
மாயையி னொன்று காட்டி எனையிவண் மையல் செய்தான்
ஆயது துடைத்தேன் என்றால் ஆரெனக் கொப்புண் டென்றுங்
காயம தழிவி லாதேன் கருத்தழி கின்ற துண்டோ

பதப்பிரிப்பு

சேய் உரு அமைந்த கள்வன் செருவினை இழக்கல் ஆற்றான்
மாயையின் ஒன்று காட்டி எனை இவண் மையல் செய்தான்
ஆயது துடைத்தேன் என்றால் ஆர் எனக்கு ஒப்பு உண்டு என்றும்
காயம் அது அழிவு இலாதேன் கருத்து அழிகின்றது உண்டோ

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துமாயை நீக்கம் பெற்ற சூரபன்மன் ஈசனும்  முருகப்பெருமானும்  வேறு வேறு அல்ல ஒன்றே  என்பதை உணர்ந்தியும் தன்னிடத்தில் பற்றுக் கொள்ள வைத்ததையும் கூறும் பாடல்.

பதவுரை

சேய் ஆகிய முருகப் பெருமான் எனும் வடிவாக இருக்கக் கூடிய கள்வன் இவன்; சினத்தையும் வருத்தத்தையும் தருவதான வினைகளை நீக்க வல்லவன்; இவன் காயம் ஆகிய உடலால் அழிவில்லாதவன் எனும் கருந்து அழிக்கப்படும் போது யார் எனக்கு சரி நிகர் சமானமாக இயலும் எனும் காயம் பற்றி மாயக் கருத்து ஒருங்கே தோன்றுகின்றது; தானே மாயையின் வடிவமாக*  இருக்கும் அவன் வெளிப்படுத்த கூடியதான மாயையினால் ஒரு மாய வடிவம் காட்டி அவனிடத்தில் மையல் கொள்ள வைத்தான்.

விளக்க உரை

 • யுத்த காண்டம், சூரபன்மன் வதைப் படலத்தில் வரும் பாடல்
 • * மறைத்தல் (திரோபவம்) – கன்மம் கொண்டு பற்றுக் கொண்ட உயிர்கள் உலக அனுபவங்களில் உழன்று பக்குவம் பெறுவதற்காக சிவன் தன்னை மறைத்து தானே உலகம் என்று தோன்றும்படி காட்டுவதான தொழில் மறைத்தல் எனப்படும். சேய் ஆனதால் இது முருகப் பெருமானுக்கும் பொருந்தும்
 • செறுதல் – அடக்குதல், தடுத்தல், சினத்தல், வெறுத்தல், வருத்துதல், வெல்லுதல், அழித்தல், வேறுபடுதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 21 (2019)


பாடல்

தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனு மாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  சக்தியை வழிபாடு செய்யும் அன்பர்களின் சில குணங்களை எடுத்துக் கூறும் பாடல்.

பதவுரை

பக்குவ முதிர்ச்சியால் நவாக்கரி  சக்கரத்தில் உறையும் சத்தியை வழிபடுபவன், தனது தவற்றை உணர்ந்து தானே திருத்தி கொள்ள தக்கவனாகவும், தான் ஆய்ந்து உணர்ந்தவற்றை தான் உணர்ந்த வகையில் பிறருக்குச் சொல்லத் தக்கவனாகவும், இறைவனின் ஒப்பற்ற திருநடனத்தை எப்பொழுதும் காண்பவளாகிய சத்தியையும் தானே விரும்பி வழிபட்டு தலைவனாகவும் விளங்குவான்.

விளக்க உரை

 • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
 • தனி நடம் தானே கண்டவள் – ஊழிக் காலத்திற்கு பின்னான படைப்பிற்கு முன்னும், படைக்கப்பட்டவைகளைக் காக்கும் காலத்திலும், ஊழிக் கால அழிப்பிற்குப் பின்னும் திரு நடம் காண்பவள். அவ்வாறு காண்பவள் சத்தியன்றிப் பிறர் இல்லை என்பதை கூறுகிறது. சிவசக்தி இடத்தில் பேதம் இல்லை என்பதால் தானே பாத்திரமாகவும் தானே சாட்சி பாவமாகவும் இருக்கிறாள் எனவும் கூறலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • கழறுதல் – இடித்துத் திருத்தல்.
 • தணிதல் – அடங்குதல்.
 • நினைத்தல் – காரியம் தோன்ற நின்றது.
 • தானே வணங்குதல் – பிறர் தூண்டுதலின்றி  தானே இயல்பால் வணங்குதல்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 20 (2019)


பாடல்

நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள்கள் [தானும்
கடந்திடும் கல்விக் கரசிவளாகப்
படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  வாகீசுவரி வழிபாட்டின் மேன்மைச் சொல்லி அவர்கள் நிறைபுலமை உடையவர்கள் ஆவர்கள் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

நவாக்கரி சக்கர சத்தி ஆனவளாள் இந்த வாகீசுவரி;  ஆதலின் இவளது அருள் கிடைக்கப் பெற்ற அடியவர்க்கு அவர்கள் நாவில் வழக்கும் செய்யுளுமாய் உரைத்த சொல்லாகவும் சொல் பொருளாகவும் இருப்பதால்  வேண்டிய நன்மைகள் யாவும் அவர்கள் உரைத்து சொன்ன அளவிலே முடியும். பரந்து விரிந்து கிடக்கின்ற இவ்வுலகில் அனைவரும் நண்பராகவும்  உறவினரும் ஆனதால் எந்த ஒரு இடத்திலும் அவர்களுக்கு  பகையாவர் இல்லை.

விளக்க உரை

 • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
 • ‘கல்விக் கரசிவ ளாக’ என்பதனை முதலில் கொண்டு உரைக்க வாகீஸ்வரி எனும் பொருள் படும்.
 • படர்ந்திடும் பார்  – பிரபஞ்சம்
 • கல்வியைக் கரை கண்டவர்க்கு, `யாதானும் நாடாம் ஊராம்` என்பது பற்றியும், ‘கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பது பற்றியும் பகையில்லை எனும் சொல்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 19 (2019)


பாடல்

ஐம்முத லாக அமர்ந்தெழு சக்கரம்
ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்
ஐம்முத லாகி யவற்றுடை யாளை
மைம்முத லாக வழுத்திடு நீயே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  இச்சக்கர வழிபாட்டின் சிறப்புகளைக் கூறி அது அஞ்ஞானத்தைப் போக்கும் என்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

நவாக்கரி சக்கர வகைகளுள் `ஐம்` எனும் பீஜத்தை முதலாகப் பொருந்திச் செல்லுகின்ற வகை ஒன்று உளது; அவ்வாறான  அந்த முறையானது `ஐம்` என்பதை முதலாகப் பொருந்திப் பின்பு `ஹ்ரீம்` என்பதை முடிவில் உடையதாகும். அந்த `ஐம்` எனும் பீஜத்தை முதலாகக் கொண்டும் மற்றும் அனைத்து எழுத்துக்களையும் தன்னுடையனவாக உடைய அந்தச் சக்கர சத்தியையே உன்னுடைய அறியாமையைப் போக்கி மெய்யறிவினை தரும் தலைவியாக அறிந்து நீ துதிசெய்.

விளக்க உரை

 • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
 • அவ்வாறு துதித்தால் அறியாமை நீங்கி மெய்யறிவு பிறக்கும் என்பது உட்கருத்து.
 • மை – இருள்; மலம்.  அதனை ஏற்றவழியால் கழுவுபவள் எனும் பொருள் பற்றியது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 18 (2019)


பாடல்

கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
ஆறுமின் அண்டத் தமரர்கள் வாழ்வெனல்
மாறுமின் வையம் வரும்வழி தன்னையும்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  இந்த நவாக்கிரி சக்கர வழிபாட்டினை முத்தியை விரும்பிச் செய்தல் சிறந்ததாகும் என்று கூறும் பாடல்.

பதவுரை

உலகின் வரையறை செய்யப்பட்ட சில பகுதிகளுக்கு மட்டும்  தலைவராக உள்ள தேவர்களது வாழ்வு வேண்டும் என்னும் ஆசை நீக்குங்கள்; இக்காரணம் பற்றி மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறக்கும் நிலையையும் நீங்கி பிறவி சங்கிலியில் இருந்து விடுதலை பெறுங்கள்; நவாக்கிரி சக்கரத்தில் உறையும் சத்தியானவள் எல்லா உலகங்களையும் உடையவள் என்பதை அறிந்து அவளை துதியுங்கள்; முடிவாக அந்த சத்தியின் திருவடியைச் சேர்ந்து மயக்கமெல்லாம் அற்றுத் தெளிவு பெறுங்கள்.

விளக்க உரை

 • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
 • ஆறுதல் – தணிதல்; நீங்குதல்.
 • வாழ்வு எனல் – வாழ்வு வேண்டும் என விரும்புதல்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 17 (2019)


பாடல்

பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாகுவர்
மாறுடை யார்களும் வாழ்வது தான்இலை
கூறுடை யாளையும் கூறுமின் நீரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  அனைத்துப் பேற்றையும் சத்தி தரவல்லவள் என்பதைக் கூறும் பாடல்

பதவுரை

பெறத் தக்கது என்று எண்ணக் கூடிய பேறுகள் அனைத்திற்கும் உரியவளாகிய சத்தியின் பெருமையை அறிந்து அவளை வழிபட்டால் நாட்டினை ஆளும் மன்னரும் நம் வசப்படுவர்; நம் கருத்திற்கு எதிரானவர்களான பகைவர்கள் உயிர்த்திருக்க மாட்டார்கள்; ஆதலினால், சிவனது பாகம் எனப்படுவதான ஒரு கூற்றைத் தனதாக உடைய அவளை நீங்கள் துதியுங்கள்.

விளக்க உரை

 • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
 • எண்ணுதல் – .இது தன் காரியம் தோன்ற நிற்பதன் பொருட்டு ஆய்ந்தளித்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 16 (2019)


பாடல்

அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடு வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வாளை முயன்றிடும் நீரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  நவாக்கரி  சக்கரத்தில் உறையும் உமை சத்தி தன் பெருமைகளை கூறும் பாடல்

பதவுரை

மெய்யறிவு உடையோர் பிறப்பின்மையின் காரணமாக உண்மை அமரர்களாதல் அவர்களால்  அறிந்து வழிபடுகின்ற தேவதேவனும், வானத்தைப் கிழித்துக் கொண்டு கீழே பாய்ந்த வலிய ஆகாய கங்கையை தன்  சடையில் சூடிக்கொண்டவனும் ஆகிய சிவப் பரம்பொருள் பணிகின்ற சத்தியை நீங்கள் வழிபட்டு மேற்கூறிய (முந்தைய பாடல்களில் குறிப்பிடப்பட்டவை) பயன்களைப் பெறுங்கள்.

விளக்க உரை

 • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
 • அமரர் – இறவாதவர்கள்; மார்க்கண்டேயர் போன்ற ரிஷிகள் எனவும் கொள்ளலாம்.
 • வானோர் – வானுலகில் உள்ளவர்.
 • பாய்புனல் சூடி – திருச்சடையில் புல் நுனிமேல் துளியளவாக மலர் போல் பாய்ந்து வந்த கங்கையை எளிதில் ஏற்றமை குறித்து சூடி எனும் சொல்.
 • முரிதல் – வளைதல்; நாயக நாயகி பாவம் பற்றி இன்பச்சுவை தோன்றச் சிவன் உமையின் ஊடலைத் தீர்க்க அவளை அடிபணிவதாக கூறும் இலக்கிய மரபினை இங்குச் சத்தியின் பெருமை புலப்படுதற்கு எடுத்தாளப்பட்டு இருக்கிறது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 15 (2019)


பாடல்

நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் கண்ணிய நாளும்
படர்ந்திடும் நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடும் வண்ணம் அடைந்திடு நீயே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  நவாக்கரி சக்கர வழிபாட்டின் இம்மைப் பயன்களைக் கூறும் பாடல்

பதவுரை

நவாக்கரி  சக்கரத்தின் மீது நீ அன்பு கொண்டு அதுபற்றி நின்றால் இவ்வுலகில் நீ நினைக்கின்ற நன்மைகள் எல்லாம் நினைத்தபடியே முடியும்; காலன் எனப்படுபவனாகிய கூற்றுவன் உன்னைக் கொண்டுபோவதற்குக் குறித்துவைத்த நாள் அதுவும் அங்ஙனம் உயிரினைக் கொண்டுபோகாமலே கடந்துவிடும்; உனது பெயர் உலகம் எங்கும் பரவும்; உடம்பின் நிறம் பகலவனது விரிந்து வீசுகின்ற கதிர்கள் போல மாறும்; இப் பயன்களை எல்லாம் இவ்வகையில் நீ எய்துவாயாக.

விளக்க உரை

 • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம் , ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 14 (2019)


பாடல்

நேர்தரு மந்திர நாயகி யானவள்
யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  நவாக்கரி  சக்கரத்தின் தியானவண்ணம் கூறும் பாடல்

பதவுரை

தன்னை வழிபடுபவர்களுக்கு நேரில் வந்து அருள் புரிகின்ற அந்த நவாக்ரி சக்கர சத்தி என்ன நிறத்தை உடையவள் என ஆராய்ந்தால் அழகிய தேவியாகிய அவள் மேகம் போன்ற நீல நிறத்தை உடையவள் என அறியலாம்; இதனை அறிந்து அவள்பால் உனது அன்பினை செலுத்தி அப்படியே நீ நட; அப்பொழுது நீ நினைத்தவை எல்லாம் உனக்குக் கைகூடும்.

விளக்க உரை

 • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம் , ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
 • திரிகை – சக்கரம்
 • ‘யாதொரு வண்ணம்’ என்பது வினாவாகவும், ‘கார்தரு வண்ணம்’ என விடையாகவும் தாமே விடை பகன்றார். நேரின் வந்து அருளும் போது அவளின் நீல நிறம் கண்டு அவளை அறியாமல் இருக்கலாகது என்பது பற்றியே `யாதொரு வண்ணம்` கார்தரு வண்ணம்’ எனவும் கொள்ளலாம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 13 (2019)


பாடல்

நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் அந்தமும்
நினைத்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே
நினைத்தி (டு) அருச்சனை நேர்தரு வாளே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர் 

கருத்து –  இச்சக்கர வழிபாட்டிற்கு ஏற்றதான சிறப்புமுறை கூறும் பாடல்

பதவுரை

முதலெழுத்து முதல் உன்னதமான ஸ்ரீம் க்லீம் ஆகியவற்றை ஈறாக உடைய நவாக்கரங்களை அங்ஙனமே வைத்து சக்கரத்தினை செந்நெல், அறுகம் புல் ஆகியவற்றை மனத்திலே  கொண்டு அவற்றைக்கொண்டு அருச்சனை செய்தால் அந்த அர்ச்சனையை ஆதியும் அந்தமும் இல்லாத அச்சத்தி ஏற்றுக் கொள்வாள்.

விளக்க உரை

 • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம் , ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
 • நினைத்திடும் என்பதை முதலில் கொண்டு மேற்குறித்த பயன்களைத் தருவாள் என்பது பொருள் கொள்ளலாம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 12 (2019)


பாடல்

நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை உம்மைவிட் டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர் 

கருத்து –  நவாக்கரி வித்தையானது ஸ்ரீவித்தையோடு ஒத்த சிறப்புடையதாய்ப் பயன்தருதல் பற்றி பொது வகையிலும், சிறப்பு வகையிலும் கூறப்பட்ட பாடல்

பதவுரை

நவாக்கரி சக்கர வழிபாட்டினால் வேண்டுவார் வேண்டுவதைத் தருகின்ற சிவனது திருவருள் கைவந்து உதவுவதால் துன்பத்தைத் தர இருந்த அந்தத் தீய வினைகளை ஓட்டாமல் வலியதான வினைகள் நோக்காது விட்டு ஓடிவிடும்; மேலும் இச்சக்கர வழிபாட்டினால் பெரிய நன்மையைத் தருவதாகிய அனுபவ ஞானமும், பஞ்சபூதங்களுடன் கூடியதும் 64 கலைஞானம் எனப்படும் 64 விதமான தந்த்ரங்கள் கூறும் வித்தை ஆனதும்  ஒன்றிய நிலையிலே வேறுவேறாக தோன்றிய அவைகளெல்லாம் ஒன்றாகவே இணைந்து விடுகின்றதுமான கலாஞானமும் வலிமை பெற்று நிலைத் தன்மை அடையும்.

விளக்க உரை

 • நவாக்கரி சக்கரம் – ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம் ஆனதும், நவ அட்சரிம் என்று அழைக்கப்படுவதான நவாக்கரி ஆனது சௌம், ஔம், ஹௌம், க்ரீம், கௌம் , ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம் எனும் எழுத்துக்களால் குறிக்கப்பெறும்; இவை ஒவ்வொன்றையும் முதலாக்கிக் கூற 81 அட்சரங்கள் பெறப்படும்.
 • `சிரமம்` என்பது குறைந்து `சிரம்` என்றானது என்றும் அது வாய்த்து அகற்றிடும் என்ற பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. வினைகளைத் தரும் ப்ரம்ம முடிச்சானது தலை தொடங்கி செயலாற்றுவதால் அந்த வினைகளை முழுவதும் அகற்றும் எனவும் அதன் தொடர்ச்சியாக அண்ட உச்சியில் சோதி தோன்றும் எனவும் கூறலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 9 (2019)


பாடல்

ஆச்சப்பா சிவயோகி ஆவதென்றால்
     அடங்கி நின்ற பஞ்சகர்த்தாள் அஞ்சு பேரை
பேச்சப்பா பேச்சறிந்து கண்டு கொண்டு
     பெருமையினால் சிவயோக முத்தனாச்சு
மூச்சப்பா தானறிந்து தன்னைப் பார்த்து
     முனையான சுழினையில் வாசி பூட்டி
காச்சப்பா அக்கினி கொண்டாறாதாரங்
     கசடகலக் காச்சிவிடு கனகமாமே

அகத்தியர் சௌமியசாகரம்

கருத்து –  சிவயோகி ஆவது எவ்வாறு  என்பதை குறிக்கும் பாடல்

பதவுரை

அக்னி எனப்படுவதான குண்டலினியில் தொடங்கி ஆறு உணர்வு நிலைகளைக் குறிப்பதானதும், தத்துவங்கள் எனப்படுவதும், மலங்கள் எனப்படுவதும் ஆன ஆறு ஆதாரங்களையும் குற்றம் இல்லாமல் கடக்க வேண்டும்;  பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன் மற்றும் சதாசிவன் ஆகிய பஞ்ச கர்த்தாக்களையும் அவர்களுக்கு உரித்தான  மூலமான நாதத்தை பிராணன் என்றும் வாசி என்றும் உரைக்கப்படுவதான மூச்சின் வழி அறிந்து அதன் மூலம் தன்னையும் அறிந்து அதை சுழிமுனை எனப்படும் ஆக்ஞையில் பூட்ட வேண்டும்; அவ்வாறு செய்யும் பொழுது உடல் கனகம் எனப்படுவதான பொன் போன்ற  மேனியாகும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 6 (2019)


பாடல்

பூவார் சென்னி மன்னனெம்
     புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய்
     உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆஆ என்னப் பட்டன்பாய்
     ஆட்பட்டீர்வந் தொருப் படுமின்
போவோம் காலம் வந்ததுகாண்
      பொய்விட் டுடையான் கழல்புகவே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து –  ஈசன் அன்பு கிடைத்ததால் இவ்வுலக வாழ்வினை விட்டு இறைவன் திருவடியை அடையும் காலம் வந்து விட்டது எனும் பாடல்

பதவுரை

மலர்கள் நிறைந்த திருமுடியையுடைய அரசனாகிய பாம்பணிந்த எங்கள் பெருமான்; அவன் திருவடி குறித்த சிந்தனை குன்றிய எண்ணங்களால் சிறியவர்களாகிய ஆனபோதும், நம்முடைய  உள்ளத்தில் கலந்து உணர்வுருவாய் உருக்குகின்ற பெருகிய கருணையினால், ஐயோ என்று நம்மீது இரங்கி அருளப்பட்டு அன்பு உருவாய் ஆட்பட்ட செய்தவன்; அவன் அன்பு கொண்டதால் நிலையில்லாத இந்த வாழ்க்கையை விட்டு நம்மை ஆட்கொண்டவனாகிய இறைவனது திருவடியை அடையக் காலம் வந்துவிட்டது. போவோம். மாறுதல் இல்லா ஒருநிலையான மனநிலையோடு வாருங்கள்

விளக்க உரை

 • புயங்கம் – பாம்பு,ஒருவகை நடனம்
 • சிறியோமை ஓவாது – குற்றம் உடைய வாழ்வின் குணங்களை விட்டு நீங்காது.
 • என்னப்பட்டு – என்று இரங்கி அருள் செய்யப்பட்டு
 • பொய் – நிலையில்லாத உடம்பு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 3 (2019)


பாடல்

ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள் கொன்றைவேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

வாராகிமாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்து –  தன்னை அண்டிய அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுத்துபவர்களை வீழ்த்தி பகைவர்களுடம் இருந்து காப்பாள் என்று கூறும் பாடல்.

பதவுரை

கொன்றை மலர்களையும், அழகான மகுடத்தினையும்  தன் கூந்தலில் சூடியவளும், தடியினை ஏந்தியவளுமான திரிபுரை எனப்படும் வராகி என்னை வாழ்விப்பதற்காக  வந்து குடி இருந்தாள்; அதுமட்டும் அல்லாமல் எவராவது நமக்கு வினையின் காரணமாக துன்பம் ஏற்படுத்துமாறு செய்தால் அவர்கள் உடலை கூரான வாள் கொண்டு வெட்டி  வாளுக்கு இரையாக்கி விடுவாள்.

விளக்க உரை

 • சீர் – 1) செல்வம் 2) அழகு 3) நன்மை 4) பெருமை 5) புகழ் 6) இயல்பு  7) சமம் 8) கனம் 9) ஓசை 10) செய்யுளின் ஓருறுப்பு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – புரட்டாசி – 2 (2019)


பாடல்

ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே

சிவவாக்கியர்

கருத்து –  அகத்திலும் புறத்திலும் நிறைந்திருக்கும் ஈசனை வழிபடும் முறையை கூறும் பாடல்

பதவுரை

யோக சாதனை செய்து தவ வாழ்வு மேற்கொள்பவர்களால் கண்டம் எனப்படுவதாகிய கழுத்தில் இருந்து சங்கின் ஒலியை எழுப்ப இயலும். அது அகத்தில் இருந்து பெறப்பட்டு புறத்தில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அகம் புறம் அனைத்திலும் நிறைந்திருக்கும் ஈசனையும் அவன் திருவருளையும் உணராமல் புற உடல் சார்ந்து அதற்கு மட்டும் மதிப்பு அளித்தல் எவ்வாறு பொருந்தும்?

விளக்க உரை

 • ‘ஒரு கல்லை இரண்டாய் உடைத்து ஒன்றை வாசலில் பதித்தும் இன்னொன்றைக் கடவுள் எனச் சிலை செய்து வணங்குகிறீர்கள்;. இவற்றில் ஈசனுக்குகந்த கல் எதுவென்று கொள்ள முடியும் என்று வினவுகிறார்’ என்று பல இடங்களில் விளக்கம் காணப்படுகிறது. சிவனுடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் சித்தர் என்பதாலும், உருவ வழிபாட்டினை ஏற்றுக் கொள்ளாதவர் என்பதாலும் பொதுவான இக்கருத்து விலக்கப்படுகிறது.  ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சித்தர் பாடல் என்பதாலும் ஈசனிடம் இருந்து பெறப்பட்ட அனுபங்களை விவரித்து எழுதியதாலும் பதவுரையில் பொருள் குற்றம் இருக்கலாம். குறை எனில் மானிடப் பிறப்பு சார்ந்தது. நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்
1 2 3 51