அமுதமொழி – விகாரி – வைகாசி – 9 (2019)


பாடல்

பணிந்ததொரு சீடனே பார்த்துப்பின்பு
   பாலகனேயென் மகனே யென்றுசொல்லி
கணிந்ததொரு கண்மலரி லொற்றிப்பின்பு
   கனியானநற்கனியே சுந்தரமேஐயா
அணிந்ததொரு ஐந்தெழுத்தா லெல்லாந்தீரும்
   ஆத்மாவி லைந்தெழுத்துங் கலந்துநிற்கும்
அணிந்ததொரு நீறுமடா ஐந்தெழுத்துமாச்சு
   அம்பலத்தி லாடினது மஞ்சுமாச்சே

அகத்தியர் – தற்க சாஸ்திரம்

கருத்துநீறு அணிந்த அட்சரத்தினாலும், பாசத்தை நீக்கக் கூடிய சொல்லாலும், பாசவினைக் கொடுமைகளையும் நீக்கும் சொல்லும், நல் வழி காட்டும்  சொல்லையும், எமனின் வருகையை அகற்றும் சொல்லினையும் சொல்லுமாறு புலத்தியர் கூறுமாறு கேட்டபோது அகத்தியர் உரைத்தது இப்பாடல்.

பதவுரை

தன்னைப் பணிந்த சீடனை பார்த்து பின்பு என்னைப்பணிந்த சீடனே, பாலகனே என் மகனே, கண்ணைப் போன்ற மலரானது கனிந்து நல்ல கனியைப் போன்ற சுந்தரமே என்று சொல்லி “சிவதீட்சையின் படி திருநீற்றினை அணிந்து அனுஷ்டானங்கள் கடைப்பிடித்து, பஞ்சாட்சரம் ஓதி சிவபூசை செய்பவர்களுக்கு எல்லாவிதமான வினைகளும் தீரும்; அவ்வாறு ஓதப்பட்ட மந்திரங்களானது ஆன்மாவில் அழுந்தி கலந்து நிற்கும்; அவ்வாறு அணியப்பட்ட திருநீறானது பஞ்ச பூதத்தின் வடிவமான ஐந்தெழுத்து ஆனது; அது அழகும், இளமையும், வலிமையும் நிறைந்த மேகங்கள் நிறைந்த அம்பலத்தில் ஆடும் ஐந்தெழுத்தானது” என்று அகத்தியர் உரைத்தார்.

விளக்க உரை

 • மஞ்சு – அழகு, ஆபரணம், வெண்மேகம், மேகம், பனி, மூடுபனி, யானை முதுகு, களஞ்சியம், கட்டில், குறுமாடியின் அடைப்பு, வீட்டு முகடு, இளமை, வலிமை, மயில்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 8 (2019)


பாடல்

நாளார் வந்தணுகி நலி
   யாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடி
   யேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழ
   பாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால் இனி
   யாரை நினைக்கேனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்துஇறுதி நாளுக்கு முன்னமே சரணடைந்தால் தன்னை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும் என விளம்பும் பாடல்

பதவுரை

அடியவர்களுக்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற, திருமழபாடி எனும் திருத்தலத்தில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே! உனக்கு என்று நான் ஆளாயினபின், உன்னை அல்லாது வேறு யாரை நினைப்பேன்? எனக்கு இறுதிநாள் எனும் மரணம் வந்து எனக்கு நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதல் பொருட்டு வந்து உன்னை அடைந்து விட்டேன்; ஆதலினால் அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டு அருள்.

விளக்க உரை

 • திருமழபாடி திருத்தலத்தில் இயற்றியது
 • நாள் – இறுதிநாள்; இழிவு தோன்ற விளம்புவதற்காக  `நாளார்`

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 7 (2019)


பாடல்

மன்னுவார் சடையாரை முன்
   தொழுது மட்டிட்ட
என்னும் நற் பதிகத்தினில்
   போதியோ என்னும்
அன்ன மெய்த் திருவாக்கு
   எனும் அமுதம் அவ்வங்கம்
துன்ன வந்து வந்து
   உருவமாய்த் தொக்கது அக்குடத்துள்

பன்னிரண்டாம் திருமுறை –  பெரிய புராணம் – சேக்கிழார்

கருத்துசாம்பலில் இருந்த அங்கம்பூம்பாவை உயித்தெழ செய்யப் பாடிய பாடல்

பதவுரை

பதிகம் தொடங்கும் முன் கங்கையும் பிறையும் நிலைபொருந்தியதும், நீண்டதும் நிலைபெற்றதும் ஆன நீண்ட சடையினையுடைய சிவபெருமானைத் தொழுது “மட்டிட்ட” என்று தொடங்கும் அத்திருப்பதிகத்தினிலே மரணத்தைப் போக்குவதான “போதியோ” என்று கூறும்  அமுதம் போன்ற அந்த மெய்த்திருவாக்கு உரைத்திட்ட போது அந்தக் குடத்தினுள்ளே அந்த எலும்பின் உள்ளே பொருந்தி வந்து உருவமாய்க் கூடியது.

விளக்க உரை

 • “வருக!” என உரைப்பாராகிய பிள்ளையாரது கருத்தினை ஆணையின் வைத்துச் செயற்படுத்தியது அப்பதிகத்தினுள் போதியோ? என்ற மூவெழுத்தோர் சொல்லாகிய சிவஞான விளைவாம் சிவ சிற்சத்தியேயாம் என்று காட்டி, அதன் செயலை விளக்கியது இத்திருப்பாட்டு. “சடையாரைமுன்றொழுது” என்றதும் இக்குறிப்புத் தருவதாம்.
 • இந்தப் பதிகம் முழுவதும் கபாலீசர் திருநாமமும் போற்றுமாறு அமைந்து இருக்கும்
 • திருஞானசம்பந்தர் திருவுருவம் முழுதும் சிவஞான மயமே ஆகி  சிவ நிறைவுள்ளதாதலின் அவரது வாக்கு இறைவர் திருவாக்கேயாயிற்று
 • மெய்த் திருவாக்கு –  என்றும் அழிவில்லாத நித்தப் பொருள் ஆகிய சிவம்
 • வாக்கு – சிவ சிற்சத்தி
 • பிரணவ சொரூபமாய் நின்ற மூன்றெழுத்து மகாமந்திரமாய் நின்றது பதிகத்துள் “போதியோ” என்ற சொல்
 • அதுவே வருக என்ற ஆணையாகிய சிவ சிற்சத்தியை உள்ளிட்டு அருளப்பட்டமை அறிக
 • உருவமாய்த் தொக்கது – படிப்படியாக வளர்ச்சி முறையில் கூடிற்று

இன்று குரு பூசை – வைகாசி மூலம்

திருஞானசம்பந்தர்  
திருநீலகண்ட யாழ்ப்பாணர்
திருநீலநக்க நாயனார்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 5 (2019)


பாடல்

பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் –  திருமூலர்

கருத்துதிருவைந்தெழுத்து ஆனது போகம் வேண்டுவாருக்கு போகத்தையும், முக்தி வேண்டுவாருக்கும் முக்தியையும் தரும் என உணர்த்தும்

பதவுரை

திருவைந்தெழுத்தை ஓதுபவரிடத்தில் மாறுபாடுகளையும், வெறுப்பினையும் ஏற்படுத்தும் பகை, பணிதலைக் கொண்ட பெரியோர்களை இகழும் இகழ்ச்சி, நல்வினை தீவினை ஆகிய இருவினைகள்,  பொருந்தாச் செயல்கள், இடையூறு, மூப்பு, தடை, தளர்ச்சி, வஞ்சனை, நடுக்கம் மற்றும் மாறுபாடு இவைகள் என்பவை இல்லை; நாள்தோறும் நன்மைகளே விளையும். அம்மந்திரமே மலத்தை முற்றிலும் கழுவித் தூய்மையைத் தரும்.

விளக்க உரை

 • பகை – எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன் பகை கொள்ளுகை; கோளின் பகைவீடு; காமகுரோதம் முதலிய உட்பகை
 • பணிந்தவர் – பணியப்பட்டவர்
 • விருத்தம் – வட்டம், சொக்கட்டான் ஆட்டத்தில் விழும் தாயவகை, பாவினம் மூன்றனுள் ஒன்று, ஒழுக்கம், செய்தி, தொழில், ஒரு சிற்ப நூல், நிலக்கடம்புச்செடி, ஆமை, வெள்ளெருக்கு, மூப்புப்பருவம், பழைமை, அறிவு, முரண், பகைமை, குற்றம், பொல்லாவொழுக்கம், இடையூறு, ஏதுப்போலிகளுள் ஒன்று, கூட்டம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 25 (2019)


பாடல்

மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொணோய் வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ண முணர்வுதா வுலக மூர்த்தீ

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துநிலை அற்ற உடல் குறித்து குறிப்பிட்டு நிலையானதான சிவானுபவம் வேண்டுதல்.

பதவுரை

உலகத்துக்குத் தலைவனே! பெரு வாழ்வு வாழ்ந்து பிணம் கண்ட காக்கைகளைப் போல, அடியேனுடைய வலிமையான தீய வினைகள் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க, அடியேன் மயங்குகின்றேன்; பெரு வாழ்வு வாழ்ந்து பிணம் கண்ட காக்கைகளைப் போல, அடியேனுடைய வலிமையான தீய வினைகள் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க, அடியேன் மயங்குகின்றேன்; இழிவு தன்மை உடையவனும், கைவிடப்பட்டவனும் , குணமில்லாதவனும், நிரந்தர வடிவம் ஒன்றும் இல்லாததும்  இருந்து வெறுக்கத்தக்கதாய், பண்பு அற்றதாய் நாற்றம் கொண்டதாய், நோய்க்கு இருப்பிடமாய் இருக்கும் இந்த உடலை அடியோடு போக்கும் வண்ணம் அடியேனுக்குச் சிவானுபவத்தை அருளுவாயாக.

விளக்க உரை

 • பிணத்தைக் கண்ட காக்கை அதனை விடாது மொய்ப்பது போல் உயிரைக் கண்ட வினையும் அதனை விடாது மொய்க்கும்.
 • மோத்தை – வாழை தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ; முற்றுத்தேங்காய்; ஆட்டுக்கடா; வெள்ளாட்டுக்கடா; பொருந்த வாழ்வு
 • சீத்தை – குணமின்மை, கைவிடப்பட்டவன், கீழ் மகன், பதனழிவு, சீட்டுச்சீலை; சீ என்று வெறுத்தற்குரியது
 • சிதம்பு – பதனழிவு, இழிவு, தன்மையின் அழிவு

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 24 (2019)


பாடல்

மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம் – சேக்கிழார்

கருத்துமங்கையர்கரசியாரின் பெருமைகளை போற்றி புகழும் பாடல்.

பதவுரை

மங்கையர்கள் எல்லாருக்கும் ஒப்பில்லாத பேரரசி ஆக விளங்குபவரும், எங்கள் தெய்வம் ஆனவரும், சோழ வம்சத்தின் குலக்கொழுந்தாக விளங்குபவரும்,கைகளில் வளையல்களை  அணிந்த பெருமையுடையவரும், செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளைப் போன்றவரும், தென்னாடு ஆகிய பாண்டி நாட்டை ஆளும் பாண்டியரின் குலத்திற்கு உண்டான பழியைப் போக்கிய தெய்வத் தன்மையுடைய உடையவரும், எங்களுக்கு தலைவனாகவும், தேவனாகவும் இருக்கும் சீகாழித் தலைவரின் அருளால் பெரியதான தமிழ் நாட்டிற்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கியவரும், பொங்கி வருவது போன்று மேலோங்கிய ஒளியைத் தரும் நீருநீற்றைப் பரவச் செய்தவருமான மங்கையர்க்கரசியாரைப் போற்றுபவரின் திருவடிகள் எம்மால் போற்றத் தகுந்தாகும்.

விளக்க உரை

 • மானி எனும் இயற்பெயருடன் சோழ மன்னனுக்கு மகளாகப் பிறந்து பாண்டிய மன்னரது பட்டத்து அரசியானார். திருஞானசம்பந்தரை பாண்டி நாட்டிற்கு அழைத்து வந்து, சமணத்தைப் பின்பற்றி வந்த கணவரான பாண்டியன் நின்றசீர் நெடுமாற நாயனாருக்கு மன மாற்றம் ஏற்படுத்தி சைவராக மாற்றியவர்.
 • வளவர் – சோழர்

மங்கையர்கரசியார் குரு பூசை – சித்திரை – ரோகிணி (7-May-2019)

முக்தித் தலம் – திருஆலவாய் எனும் மதுரை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 23 (2019)


பாடல்

கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர்
கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியிணை இரண்டும் அடையுமா றடைந்தேன்
அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க
நிலைவிளக் கலகில்சா லேகப்
புடைகிடந் திலங்கும் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே

ஒன்பதாம் திருமுறை –  திருவிசைப்பா – கருவூர்த் தேவர்

கருத்துஉன் திருவடி அடைந்த பிறகும் அருள் செய்யாது இருப்பாயா என்று வினவும் பாடல்.

பதவுரை

நீண்டதும், உயரமானதும் ஆன அடுக்குக்களை உடைய மாட வீடுகளில் இரவு நேரங்களில் இருளைப்போக்குவதற்காக இருப்பதும், அணையாதும்  ஆன விளக்குகள் சாளரங்களுக்கு வெளியே வந்து ஒளியை வீசுகின்றதும் ஆன கடைத் தெருக்களையுடைய திருப்பூவணம் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கின்ற பெருமானே! கொடிய வினையாகிய பாசக்கடலைக் கடந்து, ஐம்பொறிகளாகிய திருடர்களை மெதுவாக விரட்டி, உன் திருவடிகள் இரண்டனையும் குருவால் சொல்லப்பட்ட நெறியில் நிற்கும் முறையை அடைந்துவிட்டேன். அடியேனுக்கு அருள் செய்வதோ, அருள் செய்யாது விடுப்பதோ உன் திருவுள்ளம்.

விளக்க உரை

 • அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய் – அருள் செய்வாய், அருள் செய்யாது ஒழிவாயா(நிச்சயம் மாட்டாய் என்பது மற்றொரு பொருள். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • அடையுமாறு அடைதல் – நூலில் சொல்லப்பட்ட நெறி வழி நின்று அந்த  முறையில் அடைதல் என்று சில இடங்களில் விளக்கப்பட்டு இருக்கிறது. குரு காட்டிய வழியில் அடைதல் என்பது பொருத்தமான பொருளாக இருக்கும் என்பதால் மேலே குறிப்பிடப்பட்ட விளக்கம் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • ஐவர் கள்ளர் – ஐம்பொறிகள்
 • மெள்ள – இனிமையாக விதித்த வழியில் சென்று நீக்கினமை பற்றி; சிறிது சிறிதாக நீக்கி என்று பொருள் பகர்வாரும் உளர்
 • துரந்து – ஓட்டி.
 • நிலை விளக்கு – அணையாது உள்ள விளக்கு.
 • சாலேகப் புடை – சாளரங்களுக்கு வெளியே
 • இலங்கும் – ஒளியை வீசுகின்ற

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 22 (2019)


பாடல்

ஆறு திங்கள் ஒழித்துண்போம்
உண்ணு மளவுந் தரியாது
சோறு நாளு முண்பீர்முன்
னுண்ப தென்நம் முடன்றுய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல்
மைந்தன் தன்னை யழையுமென
ஈறு முதலு மில்லா தார்க்
கிப்போ துதவான் அவனென்றார்

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம் – சேக்கிழார்

கருத்துவைரவர் கோலம் கொண்ட ஈசன் கறி உணவாக சமைக்கப்பட்ட சிறுதொண்டரின் மைந்தனை உணவு உண்ண அழைத்த போது கூறியது.

பதவுரை

ஆறு திங்கள் கழிந்த பிறகு நாம் ஒருமுறை உண்போம்; உண்ணும் அளவு தெரியாமல் நீவிர் ஒவ்வொரு நாளும் உண்பீர்! நாம் உண்பதற்கு முன் நீவிர் உணவு உண்ணப் புகுந்தது ஏன்? நம்முடன் இருந்து உண்பதற்கு ஒப்பில்லாத மகனைப் பெற்று இருக்கிறீர். ஆதலால் அவனையும் இப்போது அழையும்!  என்று கூறினார். அங்ஙனம் கூறிய முதலும் இறுதியும் இல்லாத இறைவருக்குச் சிறுத்தொண்டர், “அவன் இப்போது இங்கு உதவான்” என்று விடையளித்தனர்.

விளக்க உரை

 • இல்லை என்று கூறாமல் தனது மனைவி ஆகிய சந்தனத்தாதியார் உடன் சீராளன் ஆகிய தனது பிள்ளையை பிள்ளைக்கறி ஆக்கி சமைத்து சிவனடியாரை வழிபட்டவர்.

 

சிறுதொண்டர் குரு பூசை – சித்திரை – பரணி (5-May-2019)

முக்தித் தலம் – திருசெங்காட்டான்குடி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 21 (2019)


பாடல்

பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி
அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர
உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – அதிபக்குவம் உடையவர்கள் அருளை ஈயும் குருவை காணும் வழியையும், அவரை அடையும் வகையும் பற்றி கூறப்பட்டப் பாடல்.

பதவுரை

யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும்பி அடியேன் வருந்தி துடித்து ஒழிந்தேன்; அந்த விருப்பின் காரணமாக உம்மை அடைந்த யான் இனி ஒருவரோடும் சேரமாட்டேன்; அவருடனான சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன்; ஆகையால் அடியேனது வினைகள் அழிந்து ஒழியும்படி செய்து, என்னை ஏற்றுக் கொண்டு, என் தலையில் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டு அருள்வீர்.

விளக்க உரை

 • பக்குவம் உடைய ஆன்மாக்கள் பரம குருவைக் கண்டவுடன் பணிந்து இரப்பர் என்ற பொருளில் அவர்களின் கூற்றாக இப்பாடல்
 • அறக் கருணைசெய்து ஆட்கொள்ளாவிடினும், மறக் கருணை செய்தேனும் ஆளுதல் வேண்டும் என்று கூற ‘திருவடி சூட்டி’ என உயர் சொல் உரையாது, ‘உதைத்து` எனத் தாழ்சொல் உரைத்த முறை கண்டு அறிக.
 • பதைத்தல் – துடித்தல், வருந்துதல், நடுங்குதல், ஆத்திரப்படுதல், செருக்கடைதல்
 • அகைத்தல் – வருத்தல்; முறித்தல்; அறுத்தல்; உயர்த்தல்; அடித்தல்; ஓட்டுதல்; எழுதல்; தழைத்தல்; கிளைத்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 16 (2019)


பாடல்

மத்த னாய்மதி யாது மலைதனை
எத்தி னான்திரள் தோண்முடி பத்திற
ஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும்
பொத்தி னான்புக லூரைத் தொழுமினே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர் 

கருத்துஆணவம் கொண்டு இருந்து இராவணுக்கு ஆணவம் விலகியப் பின் அருள் புரிந்த திறம் பற்றி உரைத்தது.

பதவுரை

மதச் செருக்கு கொண்டு பித்து பித்தவனாய் நந்தி எம்மானை சிறிதும் மதியாமல் திருக்கயிலாயத்தை எடுத்த இராவணனின் திரண்ட தோள்களும், முடிகளைக் கொண்ட தலைகள் பத்தும் இறும்படியாகத்  திருவிரலால் ஒற்றியவனும், தன் தவறு உணர்ந்து தன் நரம்புகளை யாழாகக்கொண்டு அவன் ஒரு மனதாக வணங்கிய பொழுது மீண்டும் அருள்செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருப்புகலூரைத் தொழுவீர்களாக.

விளக்க உரை

 • ஒத்துதல் – தாளம் போடுதல், தாக்குதல், ஒற்றுதல், விலகுதல்
 • விரலால் ஒத்தினான் – கால்விரலை ஊன்றினான்
 • எத்தினான் – எற்றினான் என்பதன் திரிபு
 • இற – நெரிய

 

திருநாவுக்கரசர் குரு பூசை – சித்திரை – சதயம்

முக்தித் தலம் – திருப்புகலூர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 11 (2019)


பாடல்

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
      தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
      யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
      இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
      சிந்தைமிக விழைந்த தாலோ

திருஅருட்பா -ஆறாம் திருமுறை – வள்ளலார்

கருத்துஅருள் இருக்கும் இடமும் அதைப் பெற்றிடும் வழியும் பற்றி கூறும் பாடல்.

பதவுரை

எல்லா வகையிலும் மற்றைய உயிர்களிடத்து மனம், மொழி, காயம் இவைகளால் சிறு வேற்றுமை உணர்ச்சியுமின்றி எல்லா உயிர்களையும் தம்முடைய உயிர்போல கருதி, தனக்கு இருக்கும் உரிமைகள் போலவே ஏனைய பிற உயிர்களுக்கும் சமமான உரிமைகள் இருப்பது போல் கருதியும் அவைகளுக்கு மனம் உவந்து அருள் புரியும் உரிமை தமக்கு உண்டென்னும் உணர்வை உடையவராய் எவர் இருப்பார்களோ அவருடைய மனமே சுத்த ஞான உருவாகவும்,  எம் பெருமான் ஆகிய சிவபெருமான் திருக்கூத்து இயற்றும் ஞான சபையாகிய இடம் என்று நான் தெரிந்து கொண்டேன்; அத்தகைய திறமை உடைய ஞானவான்களின் திருவடிக்கு ஏவலாகி அடித்தொண்டு புரிவதற்கு என் சிந்தை மிகவும் விரும்புகின்றது.

விளக்க உரை

 • தனித் திருஅலங்கல் என்ற தலைப்பில் ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி வரும் பாடல்
 • ஒத்துரிமை  – அனைத்தையும் ஒன்றாய் காணும் பாங்கு
 • சித்துரு – கடவுள்
 • வித்தகன் – வியத்தகு தன்மையுடையவன்; வல்லவன்; வைரவன்; கம்மாளன்; தூதன்; இடையன்; பேரறிவாளன்; ஞானவான்கள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 9 (2019)


பாடல்

மாலினுக்கன்று சக்கரமீந்து மலரவற்கொருமுக மொழித்து
ஆலின்கீழறமோர் நால்வருக்கருளி யனலதுவாடுமெம் மடிகள்
காலனைக்காய்ந்து தங்கழலடியாற் காமனைப்பொடிபட நோக்கிப்
பாலனுக்கருள்கள் செய்தவெம்மடிகள் பாம்புர நன்னகராரே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

*கருத்துதிருப்பாம்புரம் எனும் திருத்தலத்து உறையும் இறைவனானவர் வீரச் செயல்கள் செய்த இறைவனின் வடிவமானவர் என்பதை கூறும் பாடல்.*

பதவுரை

திருப்பாம்புரம் எனும் திருத்தலத்து உறையும் இறைவனானவர் முன்பு திருமால் விரும்பியதன் பேரில் அவருக்கு சக்கராயுதம் அளித்தவர்; தாமரை மலர் மேல் உறையும் பிரமன் ஐந்து தலைகளை பெற்று அதன் காரணமாக அகந்தை கொண்டிருந்த போது ஒன்றைக் கொய்தவர்; பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருப்பதற்காக படைத்த சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி நால்வருக்குக் கல்லாலின் கீழிருந்து அறம் அருளியவர்; தீயில் நடனமாடும் திருவடிகளை உடையவர்; தங்கத்தால் செய்யப்பட்ட கழலினை அணிந்த திருவடியால் காலனைக் காய்ந்தவர்; காமனை கண்களால் நோக்கி அவனைப் பொடிபட செய்தவர்; உபமன்யு முனிவருக்குப் பாற்கடல் அளித்து அருள் பல செய்ததலைவர் ஆவார்.

விளக்க உரை

 • திருப்பாம்புரம் –  தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 59 வது சிவத்தலமாகும்
 • வீரச் செயல் செய்த தலங்களான திருவீழிழலை(சக்கரம் ஈந்தது), தலை கொய்தது(திருக்கண்டியூர்), காலனை அழித்தது (திருக்கடையூர்), காமனை எரித்தது (திருக்குறுக்கை) ஆகியவை பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
 • நால்வர் – சனகாதியர்.
 • அறம் – சிவாநுபவம் 
 • பாலன் – உபமன்யு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 8 (2019)


பாடல்

பற்றிய பற்றற உள்ளே – தன்னைப்
பற்றச் சொன் னான்பற்றிப் பார்த்த இடத்தே
பெற்றதை ஏதென்று சொல்வேன் – சற்றும்
பேசாத காரியம் பேசினான் தோழி – சங்கர

தாயுமானவர் திருப்பாடல்கள்

*கருத்துதாயுமானவர் முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி உரைத்ததும், அதனால் பெற்ற பேரின்பமும் பற்றி உரைக்கும் பாடல்*

பதவுரை

வினை பற்றி நின்று மாயைக்கு உட்பட்டு உலகியலிலும் அது சார்ந்த் பொருள்களிலும் அடியேன் கொண்டுள்ள பற்றுக்கள் முற்றிலும் அறுபடுமாறு செய்வதன் பொருட்டு எளியேன் ஆகிய எனது நெஞ்சத்திலே முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி உரைத்தேன்; அவ்வாறு  உரைத்த விடத்து தன்னைப்பற்றி கொள்ளும்படி சொன்னான்; திருவருளால் அவ்வாறு  உரைத்தது கண்டு நோக்கின இடத்தில் அடியேன் பெற்று நுகரும் பேரின்பினை எப்படிச் சொல்லுவேன்? அந்த பேரின்பமானது தன்னுனர்வாகிய சுவானுபூதி அன்றிப் பிறர்க்குச் சொல்ல இயலாததாகும். அதனையே தோழி குறிப்பால் பேசியருளினாள்.

விளக்க உரை

 • ஆனந்தக் களிப்பிற்கு கீழ் இடம் பெறும் பாடல்
 • பேரின்ப அனுபங்களை கூறுமிடத்து பெரியோர்கள் அதன் தன்மையை விளக்க இயலா நிலையில் நின்று விடுகின்றனர்.

போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்
வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து
தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே
ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே

எனும் கந்தர் அலங்காரப் பாடலுடம் ஒப்பு நோக்கி உணர்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 7 (2019)


பாடல்

பவன்எம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண்ணோர்பெருமான்
சிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண் டான்என் சிறுமைகண்டும்
அவன்எம் பிரான்என்ன நான்அடி யேன்என்ன இப்பரிசே
புவன்எம் பிரான்தெரி யும்பரி சாவ தியம்புகவே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

*கருத்துமாணிக்கவாசகர் தன் சிறுமை கண்டும் சிவன் அருளிய திறம் உரைத்தது பற்றியப் பாடல்*

பதவுரை

பவன் என்னும் திருப்பெயரால் போற்றப்படுபவனும், எம் தலைவன் ஆனவனும், குளிர்ச்சி பொருந்திய பெருமையமைந்த கங்கையை தலைமாலையாக அணிந்தவனும், விண்ணோர்கள் ஆன தேவர்களுக்கு பெருமான் ஆனவனும், சிவன் என்னும் பெயர் உடையவனும், வினை பற்றி நின்று யான் கொள்ளும் சிறுமையைக் கொண்டும், என்றைக்கும்  முழுமையான பிரானான அவன் தன் அடியேன் என்று  என்னை ஆண்டு கொண்டருளினன். இதைவிட வேறு என்ன வெகுமதி இருக்க இயலும்?

விளக்க உரை

 • பிரான் – தலைவன், தேவன், இறைவன்
 • பவனாகிய எம்பிரான், சிவனாகிய எம்பிரான், புவனமாகிய எம்பிரான் – சிவன் தன்மைகளைக் குறிப்பது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 4 (2019)


பாடல்

மூலம்

மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத்
தெருவுதொறும் மிகஅலறிச் சிவபெருமா னென்றேத்திப்
பருகியநின் பரங்கருணைத் தடங்கடலிற் படிவாமா
றருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே

பதப்பிரிப்பு

மருவு இனிய மலர்ப் பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருகத்
தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமான் என்று ஏத்திப்
பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம்
ஆறு அருள் எனக்கு இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துதிருவிடைமருதூர் பெருமானிடம் உன்னுடைய பரங்கருணை ஆகிய  பெரிய கடலில் படிந்து மூழ்கும் வண்ணம் அருள் செய்ய வேண்டுதல்

பதவுரை

திருவிடைமருதூரை ஊராகக் கொண்ட எம் தந்தையே! தழுவி  இரண்டற கலத்தலுக்கு உரித்தான இனிய மலர் போன்ற திருவடியை உள்ளத்தில் வைத்து அது மலருமாறு செய்து உள்ளம் உருகி, வீதிகள் தோறும் மிகவும் ஓலமிட்டு அலறி, சிவபெருமானே என்று புகழ்ந்தும் துதித்தும் நுகர்ந்த மேலான கருணையை  அறியாதவனாக இருப்பினும் உன் பரங்கருணை ஆகிய  பெரிய கடலில் படிந்து மூழ்கும் வண்ணம், அடியேனுக்கு இங்கு அருள் செய்வாயாக.

விளக்க உரை

 • மருவுதல் –  ஒன்றாதல்; இரண்டறக் கலத்தல். தழுவுதல்
 • வளர்தல் – விளங்குதல்; வளர்ந்து – வளர்தலால்
 • உள் உருக – உள்ளம் உருக
 • படிவு ஆமாறு – மூழ்குதல் உண்டாகும்படி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 2 (2019)


பாடல்

மூலம்

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் – சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு

பதப்பிரிப்பு

இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்நெஞ் சவர்க்கு

பதினொன்றாம் திருமுறை –  அற்புதத் திருவந்தாதி – காரைக்கால் அம்மையார்

*கருத்துஎம்மானிடம் நெஞ்சினில் கொண்ட அன்பு மாறாது என்பதைக் கூறும் பாடல்.*

பதவுரை

வினைப் பற்றி நின்று எனக்கு ஏற்படும் துன்பங்களை அவர் தீர்க்காவிட்டாலும், அவ்வாறு நான் படும் துன்பங்கள் கண்டு இரக்கம் கொள்ளாவிட்டாலும், உன்னை நினைத்தும்,  பாடுதலும்  உன் மீது அன்பு கொண்டு உன்னைப் பின்பற்ற வேண்டிய வழி பற்றி எனக்கு உணர்த்தாவிட்டாலும், எலும்பு மாலை அணிந்த கோலம் கொண்டு, சுடுகாட்டு நெருப்பினிடையே தானும் ஒரு சுடர் வடிவம் கொண்டவராகக் கையில் தீ ஏந்தி நடனம் ஆடுகின்ற எம்மானிடம் நான் நெஞ்சினில் கொண்ட அன்பு மாறாது.

விளக்க உரை

 • படர்தல் – ஓடுதல், கிளைத்தோடுதல், பரவுதல், பெருகுதல், அகலுதல், விட்டு நீங்குதல், வருந்துதல், அடைதல், நினைத்தல், பாடுதல்
 • படரும் நெறி – செல்லும் கதி, நற்கதி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 1 (2019)


பாடல்

மூலம்

எங்கு மாகிநின் றானு மியல்பறி யப்படா
மங்கை பாகங்கொண் டானு மதிசூடு மைந்தனும்
பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்
அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை யையனே

பதப்பிரிப்பு

எங்கும் ஆகி நின்றானும் இயல்புஅறி யப்படா
மங்கை பாகங் கொண்டானும் மதிசூடு மைந்தனும்
பங்கமில் பதினெட் டொடு நான்குக்கு உணர்வுமாய்
அங்கம் ஆறும்சொன் னானும்ஐ யாறுடை ஐயனே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

*கருத்துசிவனின் வடிவத்தையும் தன்மைகளையும் உரை செய்து அவன் திருவையாறு தலத்தில் உறைகிறான் என உரைக்கும் பாடல்.*

பதவுரை

எண் குணங்களில் ஒன்றாகிய எங்கும் நிறைதல் ஆகி இருப்பவனும், பிறரால் அறிய இயலாத இயல்பு கொண்டவனும்,  உமையம்மையை ஒருபாகமாக தன் வலப்பக்கத்தில் கொண்டவனும், சந்திரனை மதியில் சூடிய சிறந்த வீர மிகு ஆண்மகனும், சிவபேத ஆகமங்கள் ஆகிய காமிக ஆகமம், யோகஜ ஆகமம், சிந்திய ஆகமம், காரண ஆகமம், அஜித ஆகமம், தீப்த ஆகமம், சூட்சும ஆகமம், சகஸ்ர ஆகமம், அஞ்சுமான் ஆகமம், சுப்ரபேத ஆகமம் (10) மற்றும் ருத்திரபேத ஆகமங்கள் ஆகிய விஜய ஆகமம், நிஸ்வாச ஆகமம், சுயம்பூத ஆகமம், ஆக்னேய ஆகமம், வீர ஆகமம், இரௌரவ ஆகமம், மகுட ஆகமம், விமல ஆகமம், சந்திரஞான ஆகமம்,முகவிம்ப ஆகமம், புரோற்கீத ஆகமம், லலித ஆகமம், சித்த ஆகமம், சந்தான ஆகமம், சர்வோத்த ஆகமம், பரமேசுவர ஆகமம், கிரண ஆகமம், வாதுள ஆகமம் (18)  ஆகியவற்றை உரைத்தருளியவனும் ஆன பெருமான், ஐயாறுடைய ஐயனாவான்.

விளக்க உரை

 • குற்றமற்ற பதினெண்புராணங்கள், நான்கு வேதங்கள் அவற்றை அறிதற்கு உதவும் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை உரைத்தருளியவனும்  ஆனவன் என எண்ணிக்கை முன்வைத்து (28) சில இடங்களில் உரை செய்யப்பட்டுள்ளது. சைவ ஆகமம் என்பது சிவபெருமானிடமிருந்து வந்தது என்பதால் சிவபேத மற்றும் ருத்ரபேத ஆகமங்கள்  ஆகமங்கள் முன்வைத்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • எங்கும் ஆகி நின்றானும் இயல்புஅறி யப்படா  – எங்கும் நிறைந்து இருந்தாலும், எளிதில் அறிய இயலாதவனாக இருக்கிறான். எதிர்மறை செயல்களை தானே முன்னின்று இயல்பாக நடத்துபவன் என ஒரு பொருளும் இயல்பு அறியப்படா உமையம்மையை தன் பாகமாக கொண்டவன் என மற்றொரு பொருளுமாக விரியும்.
 • மைந்தன் – மகன், இளைஞன், விலங்கு ஊர்வனவற்றின் குட்டி, மாணாக்கன், ஆண்மகன், வீரன், கணவன்
 • எங்குமாகி நின்றான் – அகண்ட வியாபகன்
 • பங்கம் – இழிவு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 30 (2019)


பாடல்

மூலம்

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே

பதப்பிரிப்பு

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டும் இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற் கங்கை செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து – புழுவாகப் பிறக்க நேர்ந்தாலும் உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு என்றும் நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும் என விளிம்பும் பாடல்.

பதவுரை

இந்த வையகம் ஆகிய பூவுலகிலே அடியவர்கள் மேல் இரக்கப்பட்டு அவர்களுக்கு அருள் செய்கின்றவனும், திருப்புலியூர் எனும் திருப்பாதிரிப்புலியூரில் உறைபவனும், செழுமையான கங்கைநீரைச் செஞ்சடையில் தேக்கி வைத்திருப்பவனும்,  தீப்போன்ற செந்நிறத்துப் பெருமானே! அடியேன் வினைகளுக்கு உட்பட்டு மறுபிறவியில் மிகழும் இழிவான பிறவியாகிய புழுவாகப் பிறக்க நேர்ந்தாலும் புண்ணியமே வடிவெடுத்த உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு என்றும் நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 29 (2019)


பாடல்

வெடிக்கும் பரவை முரசதிர் காமனை வீறழியப்
பொடிக்கு கனல் விழிப்புண்ணியனே புவியோர்கள் நெஞ்சம்
துடிக்கும் பொல்லாத பிசாசுகள் தம்மைத் துரத்திவெட்டி
அடிக்கும் தண்டாயுதனே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

*கருத்துகாமனை அழித்தவனே, தன்னை பிசாசுகளிடத்தில் இருந்தும் காக்க வேண்டும் என்பது பற்றிய பாடல்.*

பதவுரை

கைகளில் தண்டாயுதம் கொண்டு, புவியினில் வாழ்பவர்கள் நெஞ்சம் துடிக்குமாறு செய்வதும், எப்பொழுதும் தீமை தரத் தக்கதும் ஆன  பொல்லாத பிசாசுகளை துரத்தியும் வெட்டியும் அடித்தும் செய்யக்கூடியவனாய் ஆன காழிப் பதியில் உறையும் ஆபதுத்தாரணனே! மிகப் பெரிய கடல்பரப்பு போன்றதும், முரசு அதிர்வடைவது போன்றதும் ஆன காமத்தினை உருவாக்கும் காமனை அவந்து தனிப்பட்டசிறப்பு, அழகு, பொலிவு, பெருமை அனைத்தும் பொடியாகுமாறு கனல் விழி கொண்டு அழித்த புண்ணியனே! எம்மைக் காக்க வேண்டும்.

விளக்க உரை

 • பரவை – பரப்பு; கடல்; உப்பு; ஆடல்; பரவல்; மதில்; பரவிநிற்கும்நீர்; திடல்; சுந்தரர்மனைவி
 • வீறு – தனிப்பட்டசிறப்பு; வெற்றி; வேறொன்றற்கில்லாஅழகு; பொலிவு; பெருமை; மிகுதி; நல்வினை; மருந்துமுதலியவற்றின்ஆற்றல்; செருக்கு; வெறுப்பு; ஒளி; வேறு; தனிமை; அடி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 27 (2019)


பாடல்

ஆறேறு சடையானை யாயிரம்பே ரம்மானைப்
பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்துஇறைவன் வடிவம் விவரித்து அதை வரித்துக் கொண்டதைக் கூறும் பாடல்.

பதவுரை

கங்கை ஆற்றினை சடையில் தாங்கியவனும், ஆயிரம் திருநாமங்களை உடைய தலைவனாகவும், உலர்ந்தும், இறந்து பட்டதுமான மண்டையோட்டில் யாசித்து ஏற்கும் மேம்பட்ட இறைவனாய் இருப்பவனும், திருநீறு அணிந்த திருமேனியை உடையவனாகவும், இயல்பில் தூயோனாய் இருப்பவனும், நீண்ட வாலினை உடைய காளையை உடைய பெருமானை என்மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்.

விளக்க உரை

• திருக்கச்சியேகம்பம் எனும் தொண்டை மண்டலத் திருத்தலம்
• பாறு – உலர்தல், வற்றுதல்
•ஆயாயிரம்பே ரம்மானை – எண்ணிக்கை வைத்து கணக்கிட இயலாத அளவு உள்ளவர்களால் வணங்கப்பட்டவன் என்பது ஒரு பொருள். இந்திரன் ஆயிரம் கண் உடையவன். இந்திரனால் வணங்கப்பட்டவன் என்பதும் ஒரு பொருள். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்
1 2 3 16