அமுதமொழி – சார்வரி – சித்திரை-1 (2020)


பாடல்

இந்தனந்தில் அங்கி எரிஉறுநீர் தேனிரதங்
கந்தமலர்ப் போதுவான் காலொளிகண் – சந்ததமும்
அத்துவித மாவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்
முத்தியிலே நிற்கும் முறை

சிவஞானபோதம்

கருத்து – முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் இருப்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் அத்துவைத நிலை எனும் பிரிக்க இயலாத நிலையில் ஒன்றி விறகில் தீ இருப்பது போலவும், சுடுநீரில் வெப்பம் போலவும், தேனில் தித்திப்பு போலவும், வாசனை உடைய மலர்களில் மணம் போலவும், ஆகாயத்தில் காற்று போலவும், கண்ணில் ஒளி போலவும் நிற்பான்.

விளக்க உரை

 • இந்தனம் – விறகு
 • அங்கி – ஆடை, மேலாடை, நெருப்பு, அக்கினி
 • ஆன்மாவுக்கு ஈசனுடன் அத்துவித கலப்பு ஏற்பட்டு விடுவதால் அது எல்லையற்ற இன்பத்தினை பெற்று விடுவதால் அதன் பின் வேறு நிலைக்குச் செல்லும் அனுபவம் / நிலை தேவைப்படாமல் போகிறது. ஆகவே அவ்வித ஆன்மாக்கள் சுத்தாத்வித சித்தாந்த பரமுக்தி, சாயுச்சிய பரமுக்தி என்றெல்லாம் அழைக்கப்படும் இரண்டற கலத்தல் நிலைக்குச் செல்கின்றன.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 17 (2020)


பாடல்

மூலம்

ஒருமையுடன் ஈசனருள் ஒங்கிஎன்றுந் தூங்கல்
அருமை அருமை அருமை – பெருமை இடும்(பு)
ஆங்காரங் கோபம் அபிமானம் ஆசைவினை
நீங்காத போதுதா னே

பதப்பிரிப்பு

ஒருமையுடன் ஈசன் அருள் ஒங்கி என்றும் தூங்கல்
அருமை அருமை அருமை – பெருமை இடும்பு
ஆங்காரம் கோபம் அபிமானம் ஆசைவினை
நீங்காத போது தானே

சிவபோகசாரம் – தருமை ஆதீன குரு முதல்வர்

கருத்து – புறச்செயல்கள் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து என்று உணர்வதை குறிக்கும் பாடல்.

பதவுரை

உயர்ந்த நிலை, மேன்மை, கீர்த்தி போன்றவைகள் குறித்து பெருமை, வெறுப்பு கொண்டு தீங்கு செய்தல், செருக்கு கொண்டு இருத்தல், சினம் கொள்ளுதல், அன்பு பாசம் கொண்டு அபிமானத்துடன் இருத்தல், ஆசை போன்ற வினைகள்  நீங்காத போது மனதில் வேறு எவ்விதமான சிந்தனைகளும் இல்லாமல் அனைத்தும் ஈசன் அருளினால் நிகழ்த்தப்படும் கூத்து என்று இருப்பது அருமையாகும்.

விளக்க உரை

 • இடும்பு – அகந்தை, அவமதிப்பு, வெறுப்பு, கொடுஞ்செயல், தீங்கு, சேட்டை
 • ஆங்காரம் – செருக்கு, அகங்காரம், அபிமானம்
 • தூங்கல் – தொங்கல், தராசு, தாழ்கை, நெருங்குகை, உறக்கக்கலக்கம், சோம்பல், சோர்தல், ஓரிசை, வஞ்சிப்பா ஓசை, கூத்து

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மாசி – 27 (2020)


பாடல்

காண்பதும்பொய் கேட்பதும்பொய் காரியம்போலேயிதமாய்ப்
பூண்வதும்பொய் எவ்விடத்தும் போகமும்பொய் மாண்பாகத்
தோற்றியின்ப வெள்ளமாய்த் துன்னிஎன்னுட் சம்பந்தன்
வீற்றிருப்ப தொன்றுமே மெய்

சிவபோகசாரம் – ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்

கருத்துகுரு தன்னுள் வீற்றிருப்பது மட்டுமே மெய்யானது என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

கண்களால் காணப்படும் காட்சிகள் எல்லாம் உண்மையானவை அல்ல; காதுகளால் கேட்கப்படும் ஒலிகள் எல்லாம் உண்மையானவை அல்லமுடிவுறும் செயல்கள் இதமாக தோன்றுவதும் உண்மையானவை அல்ல; இவைகள் எவ்விடத்தில் ஒன்று கூடினாலும் அது உண்மையானது அல்ல; சிறப்பும், பெருமையும், அழகும் உடையதாக தோன்றி இன்ப வெள்ளமாக பாய்ந்து என் உள்ளே சம்பந்தன் வீற்றிருப்பது ஒன்றே மெய்யானது.

விளக்க உரை

 • நூல் இயற்றியவர் – தருமபுர ஆதின ஸ்தாபகர்
 • பூணுதல் – அணிதல், மேற்கொள்ளுதல், விலங்கு முதலியன தரித்தல், சூழ்ந்துகொள்ளுதல், உடைத்தாதல், சிக்கிக்கொள்ளுதல், கட்டப்படுதல், நெருங்கியிறுகுதல்
 • மாண்பு – மாட்சி, சிறப்பு, பெருமை, அழகு
 • புவனம் மாயத் தோற்றம் உடையது எனக்கொண்டால் அதில் உறையும் பொருள்களும் உயிர்களும் மாயைக்கு உட்படும். ஆகவே அதைப் பெற்ற உயிர்களில் தொழில்கள் ஆகிய காணுதல், கேட்டல், செயல்கள் அனைத்தும் பொய் எனும் பொருள் பெறப்படும். ஆன்மா இறையுடன் சம்பந்தப்பட்டது என்பதால் அதில் உறையும் குரு நாதர் மட்டுமே உண்மையானவர் என்பதும் கடைசி இரு வரிகளால் பெறப்படும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – தை – 21 (2020)


பாடல்

துரத்தி உன்னை ஆசை தொடராமல் என்றும்
விரத்தியினால் ஆங்கு அவற்றை விட்டுப் – பரத்தில் அன்பு
செய்யடா செய்யடா, சேரப்பா பஞ்சம் எல்லாம்
பொய்யடா பொய்யடா பொய்

சிவபோக சாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்

கருத்து – உடலினை பொய் என்று உணர்ந்து ஆசையை அறுத்து, பரத்தில் அன்பு செய்ய வேண்டி உபதேசம் செய்து வலியுறுத்தும் பாடல்.

பதவுரை

பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகியவற்றால் ஆன இந்த உடல் பொய்யானது என்பதை உணர்ந்து, கையறு நிலையினை மனதில் கொண்டு, எக்காலத்திலும் துன்பத்தை தருவதாகிய ஆசை என்றும் தொடராமல், மேலுலகமானதும், மோட்சத்தின் இருப்பிடமானதும், நிறைவானதும் ஆன பரத்தில் அன்பு செய்.

விளக்க உரை

 • காலம் – 16 ஆம் நூற்றாண்டு
 • இந்த நூல் 139 வெண்பாக்களைக் கொண்டது
 • துரத்துதல் – வெருட்டி ஓட்டுதல், அப்புறப்படுத்துதல், திருடன் முதலியோரைப் பிடிக்கப் பின் தொடர்தல், வண்டிமாடு முதலியவற்றைத் தூண்டி விரைந்தோடச் செய்தல்
 • பரம் – மேலானது, திருமால்நிலை ஐந்தனுள் ஒன்றான முதல் நிலை, கடவுள், மேலுலகம், திவ்வியம், மோட்சம், பிறவி நீக்கம், முன், மேலிடம், அன்னியம், சார்பு, தகுதி, நிறைவு, நரகம், பாரம், உடல், கவசம், கேடகவகை, குதிரைக்கலனை
 • செய்யடா செய்யடா, பொய்யடா பொய்யடா – அடுக்குத் தொடர். முதலில் சொன்னைதை உறுதிபடுத்த இரண்டாவது முறை.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 30 (2019)


பாடல்

ஒருகோடி ஆகமங்கள் எல்லாம் உணர்ந்தும்
பெருகுதவம் சித்தியெல்லாம் பெற்றும் – குருவருளால்
வைத்த படியிருக்க மாட்டாத மாந்தர்க்குச்
சித்த சல னம்மாந் தினம்

சிவபோகசாரம் – ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்

கருத்து – குருவழி நடக்க இயலா மாந்தர்கள் கரை ஏறுதல் கடினம் என்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

இந்து சமயத்தின் மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதும், சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்ற ஒருகோடி ஆகமங்களால் உணர்த்தப்பட்ட எல்லாவற்றையும் உணர்ந்தும், பெருகக் கூடியதான தவம் செய்து சித்தி எல்லாம் பெற்றும் குருவருள் வாய்க்கபெற்றும் அவர் கூறியபடி நடக்க இயலாத மாந்தர்களுக்கு அவர்களுடைய சித்தம் தினம் தினம் சலனம் கொள்ளும்.

விளக்க உரை

 • தருமபுர ஆதின ஸ்தாபகர் அவர்களால் எழுதப்பெற்றது.

சமூக ஊடகங்கள்