அமுதமொழி – விகாரி – வைகாசி – 14 (2019)


பாடல்

மூலம்

சீர்க்கும ரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில்
ஏர்க்குறும் ஒளியுஞ் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குள வுலகில் அம்மா அற்புதத் தோடும் பல்காற்
பார்க்கினுந் தெவிட்டிற் றில்லை இன்னுமென் பார்வை தானும்

பதப்பிரிப்பு

சீர்க் குமரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில்
ஏர்க்குறும் ஒளியும் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குஉள உலகில் அம்மா! அற்புதத் தோடும் பல்கால்
பார்க்கினும் தெவிட்டிற்று இல்லை இன்னும்என் பார்வை தானும்

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துசூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமானின் தோற்றப் பொலிவை உரைத்து மேலும் உரைக்க இயலாமை குறித்து உரைத்தப் பாடல்.

பதவுரை

நன்மை, பெருமை, புகழ் ஆகியவற்றை இயல்பாக உடைய குமரேசன் அழகிய பெரியதான வடிவம் கொண்டவனானாகவும், தோற்றப் பொலிவு உடைய ஒளி கொண்டவனாகவும், இளமையும், அழகு எல்லாம் உடையவனாகவும் உள்ளான்; இந்த அழகிற்கு ஈடாக உலகில் எவன் உளான்; அம்மாடி! இந்த அற்புதத் தோற்றம் கொண்டவனை எத்தனைக் காலம் பார்த்தாலும் அந்தத் தோற்றப் பொலிவானது எனக்குத் திகட்டவில்லை.

விளக்க உரை

 • சீர் – செல்வம், அழகு, நன்மை, பெருமை, புகழ், இயல்பு, சமம், கனம், ஓசை, செய்யுளின் ஓருறுப்பு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 10 (2019)


பாடல்

அண்டர்கள் முனிவர் ஏனோர் அகிலமும் காட்டி அண்ணல்
கொண்டிடு படிவ முற்றும் குறித்தி யார் தெரிதற் பாலார்
எண்டரு விழிகள் யாக்கை எங்கணும் படைத்தோர்க்கு ஏனும்
கண்டிட அநந்த கோடி கற்பமும் கடக்கும் அன்றே

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துசூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமான் பல பிரம்மாக்களை கண்ட திறம் பற்றி உரைத்தப்  பாடல்.

பதவுரை

தேவர்களும், முனிவர்களும் மற்றைய அகிலங்கள் அனைத்தும் (தன்னில்) காட்டி அவைகள் வாழ்ந்தற்கான எச்சங்களும் காட்டிய பாலனானவன், இயல்பின் இருந்து மீறிய கண்கள், உடல் மற்றும் எங்களையும் படைத்திட்ட பிரம்மனும் கண்டிடுமாறு  கடவுள் தன்மை கொண்டு பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் ஆகிய நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடம் கொண்ட பிரமனது ஒருநாள் கடந்து பல பிரம்மன்களைக் கண்டவனாகவும், எவரும் எளிதில் அறிய இயலாதவனாகவும் தோன்றினான்.

விளக்க உரை

 • யுத்த காண்டம் , சூரபன்மன் வதைப் படலத்தில் வரும் பாடல்
 • கற்பம் – இருத்தற்கு ஏற்படுத்தப் பட்ட இடம், நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடம் கொண்ட பிரமனது ஒருநாள், பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள், இந்திரன் முதலிய தேவர்க்குரிய வாழ்நாளளவு, ஆயுளை நீடிக்கச் செய்யும் மருந்து, இலக்ஷங்கோடி, தேவர் உலகம், பசுவின் சாணத் தைக் கையாலேந்தி ஆகமப்படி உண்டாக்கிய திருநீறு, கற்பகம்
 • பல பிரம்மன்களைக் கண்ட பின்னும் இன்னும் பாலனாகவே இருக்கிறான் என்பது வியப்பு
 • அண்டர் – தேவர், இடையர், பகைவர்
 • அநந்தன் – கடவுள், ஆதிஷேஷன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 3 (2019)


பாடல்

மூலம்

ஒற்றென முன்னம் வந்தோன் ஒருதனி வேலோன் தன்னைப்
பற்றிக லின்றி நின்ற பராபர முதல்வன் என்றே
சொற்றனன் சொற்ற எல்லாந் துணிபெனக் கொண்டி லேனால்
இற்றையிப் பொழுதில் ஈசன் இவனெனுந் தன்மை கண்டேன்

பதப்பிரிப்பு

ஒற்று என முன்னம் வந்தோன் ஒரு தனி வேலோன் தன்னைப்
பற்றி இகல் இன்றி நின்ற பராபர முதல்வன் என்றே
சொற்றனன் சொற்ற எல்லாந் துணிபு எனக் கொண்டிலேன் ஆல்
இற்றை இப் பொழுதில் ஈசன் இவன் எனும் தன்மை கண்டேன்

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துமாயை நீக்கம் பெற்ற பின் முருகனும் ஈசனும் வேறு வேறு அல்ல எனும் உண்மைத் தன்மையை கண்டதை சூரபன்மன் உரைத்தது

பதவுரை

போர் புரிவதற்காக முன்வந்த தனி வேலவன் தன்னை உளவு செய்வதன் பொருட்டு வந்தவன் என்று எண்ணி இருந்தேன். வலிமை மாறாதவரும், அந்த வலிமையில் மாறுபாடு இல்லாதவரும், எவரோடும் வலிமையில் ஒப்பு நோக்க இயலாதவரும் நின்ற முழுமுதற்கவுளும், இறைவனும் ஆன பரம்பொருளும் ஆன முதல்வன் என்று உணர்வில் பதியுமாறு எவரும்  உரைக்கவில்லை. அவ்வாறு அதற்கு நிகராக உரைக்கப்பட்ட சொற்களின் உண்மைத் தன்மை கொண்டு மன உறுதியும் யான் கொள்ளவில்லை. ஆனால் முருகனும் ஈசனும் வேறு வேறு அல்ல எனும் உண்மைத் தன்மையை இந்தக் கணப்பொழுதில் யான் கண்டேன்.

விளக்க உரை

 • ஒற்று – உளவு = வேவு, ஒற்றியெடுத்தல், மெய்யெழுத்து
 • இகல் – வலிமை, மாறுபடுதல், போட்டிபோடுதல், ஒத்தல், பகை, போர், சிக்கு, அளவு, புலவி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 26 (2019)


பாடல்

கந்தனை அருள் புரி கடவுள் ஆணையைச்
சிந்தையின் மாறு கொள் சிறியர் யாவரும்
அந்தம் அடைந்தனர் அன்றி வன்மையால்
உய்ந்தனர் இவர் என உரைக்க வல்லமோ

கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

*கருத்துபிறவாமை அடைய கந்தன் அருள் வேண்டும் எனும் பாடல்.*

பதவுரை

வினைபற்றி நிற்கும் சிந்தனையானது மாறுபாடு அடைந்து கந்தனை முன்னிறுத்தி தன்னை தாழ்த்திக் கொண்டவர் அனைவரும் பிறாவாமை எனும் அந்தமாகிய முடிவினை அடைந்தனர் என்பது இல்லாமல் கோபமும் கொடுஞ்சொல்லும் கொண்டு வலிமையால் இவர் உயிர் தப்பி ஈடேறினார்கள் என்று உரைக்க இயலுமோ? கந்தனைவிட அருள்புரியக் கூடிய கடவுள் எவையும் உண்டோ? இஃது ஆணை.

விளக்க உரை

• சூரபன்மனுக்கு அவன் மகன் இரணியன் அறிவுரையாக கந்தக் கடவுள் பற்றிக் கூறியது.
• வன்மை – வலிமை, கடினம், வன்சொல்,கடுஞ்சொல், ஆற்றல், வன்முறை; வலாற்காரம், சொல்லழுத்தம், கோபம், கருத்து, வல்லெழுத்து

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 12 (2019)

பாடல்

அருவமும் உருவம் ஆகி
     அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்
     பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைசேர் முகங்கள் ஆறும்
     கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திரு முருகன் வந்தாங்கு
     உதித்தனன் உலகம் உய்ய

கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துஅருவம், உருவம், அருவுருவம் ஆகிய வடிவம் கொண்ட சிவபெருமானே முருகனாக அவதாரம் செய்ததை கூறும் பாடல்.

பதவுரை

நிட்களம், நிட்களத் திருமேனி என்று அறியப்படுவதும் விந்து, நாதம், சக்தி, சிவம் எனும் நான்கினைக் குறிப்பதானதும், உறுப்புகள் எதுவும் இல்லாத அருவ வடிவம் கொண்டும், சகளத் திருமேனி, சகளம் என பலவாறு அறியப்படுவதும், பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் நான்கு தெய்வ வடிவங்களைக் குறிப்பதானதும், தலை, உடல், கை, கால் என உறுப்புகள் அமைந்த சிவ வடிவங்கள் ஆனதுமான உருவ வடிவம் கொண்டும், சதாசிவ வடிவமாக இருப்பதும், காலங்களால் அறிய முடியாததான அநாதியாய் அருவுருவ வடிவம் கொண்டும், பல பொருளாகவும், ஏகத்தினை உரைக்கும் ஒரு பொருளாகவும், பிரம்ம வடிவம் கொண்டும் நிற்கும் சோதியினை ஒத்த வடிவம் கொண்டு, கருணையை பொழிவதான அறுமுகங்களுடனும், திருக்கரங்கள் பன்னிரண்டுடனும் போற்றத் தக்கதாகிய முருகன் இந்த உலகம் உய்ய வந்து உதித்தான்.

விளக்க உரை

 • உதித்தல் – உதயமாதல், தோன்றுதல், பிறத்தல், பருத்தல்
 • ‘இல்லாதவை தோன்றாது; இருப்பவை உருமாறி தோன்றும்’ எனும் சைவ சித்தாந்தக் கருத்துப்படியும், பெம்மான் முருகன் பிறவான் இறவான் எனும் அருணகிரி நாதரின்  கருத்துப்படியும் ஒப்புமை கொண்டு சிவனே முருகனாக தோன்றினான் எனும் பொருள் அறிக.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 5 (2019)

பாடல்

கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் றன்னைப்
பாலனென் றிருந்தேன் அந்நாள் பரிசிவை உணர்ந்திலேன் யான்
மாலயன் றனக்கும்ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகாரணமாய் நின்ற மூர்த்தியிம் மூர்த்தி யன்றோ?

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துசூரபன்மன் பரமேஸ்வரனும்  முருகப்பெருமானும் ஒன்றே என உணர்ந்ததை கூறும் பாடல்.

பதவுரை

அழகிய மயிலின் மீது அமர்ந்த குமரன் ஆகிய முருகப் பெருமானை சாதாரண சிறுவன் என்று எண்ணி இருந்தேன். முந்தைய காலத்து பரமேஸ்வரன் என்று உணரவில்லை. விஷ்ணு, பிரம்மாவிற்கும் ஏனைய வானத்தில் உறையும் தேவர்களுக்கும் மூல காரணமாக இருக்கும் பரமேஸ்வரனும் இவனும் ஒன்றன்றோ?

விளக்க உரை

 • மஞ்ஞை – மயில்

சமூக ஊடகங்கள்