அமுதமொழி – விகாரி – சித்திரை – 8 (2019)


பாடல்

பற்றிய பற்றற உள்ளே – தன்னைப்
பற்றச் சொன் னான்பற்றிப் பார்த்த இடத்தே
பெற்றதை ஏதென்று சொல்வேன் – சற்றும்
பேசாத காரியம் பேசினான் தோழி – சங்கர

தாயுமானவர் திருப்பாடல்கள்

*கருத்துதாயுமானவர் முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி உரைத்ததும், அதனால் பெற்ற பேரின்பமும் பற்றி உரைக்கும் பாடல்*

பதவுரை

வினை பற்றி நின்று மாயைக்கு உட்பட்டு உலகியலிலும் அது சார்ந்த் பொருள்களிலும் அடியேன் கொண்டுள்ள பற்றுக்கள் முற்றிலும் அறுபடுமாறு செய்வதன் பொருட்டு எளியேன் ஆகிய எனது நெஞ்சத்திலே முதல்வனையே ஆதரவாகப் பற்றிக் கொள்ளும்படி உரைத்தேன்; அவ்வாறு  உரைத்த விடத்து தன்னைப்பற்றி கொள்ளும்படி சொன்னான்; திருவருளால் அவ்வாறு  உரைத்தது கண்டு நோக்கின இடத்தில் அடியேன் பெற்று நுகரும் பேரின்பினை எப்படிச் சொல்லுவேன்? அந்த பேரின்பமானது தன்னுனர்வாகிய சுவானுபூதி அன்றிப் பிறர்க்குச் சொல்ல இயலாததாகும். அதனையே தோழி குறிப்பால் பேசியருளினாள்.

விளக்க உரை

  • ஆனந்தக் களிப்பிற்கு கீழ் இடம் பெறும் பாடல்
  • பேரின்ப அனுபங்களை கூறுமிடத்து பெரியோர்கள் அதன் தன்மையை விளக்க இயலா நிலையில் நின்று விடுகின்றனர்.

போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்
வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து
தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே
ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே

எனும் கந்தர் அலங்காரப் பாடலுடம் ஒப்பு நோக்கி உணர்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 20 (2019)


பாடல்

இன்று னக்கன் பிழைத்திலன் நானென்றே
அன்று தொட்டெனை ஆளர சேஎன்று
நின்ற ரற்றிய நீலனைக் கைவிட்டால்
மன்றம் எப்படி நின்னருள் வாழ்த்துமே

தாயுமானவர் சுவாமி பாடல்கள்

கருத்து – ‘காத்து அருள்’ என்று முன்பு ஒருமுறை கதறிய காரணத்தால் இப்பொழுது காக்க வேண்டும் என வேண்டும் பாடல்.

பதவுரை

இப்போது யான் உன்னிடத்தில் அன்பு இல்லா காரணத்தால் பிழைப்பதற்கு வழி இல்லாமல் இருப்பினும், முன்னொரு காலத்தில், ஏ இறைவா! உனது திருவடிகளை சார்ந்து எனை ஆண்டருள் என்று வாய்விட்டு  கதறியுள்ள இந்த வஞ்சனை கொண்டவனும் கொடியவனும் ஆகிய உனக்கு உரித்தானவனை கைநெகிழ விட்டு விட்டால் ஞானம் கொண்ட கூட்டத்தார்கள் உன்னுடைய திருவருளினை நல்லுரை கூறி உன்னை எவ்வாறு புகழ்ந்து துதிப்பார்கள் என்று கூறுவாயாக!

விளக்க உரை

  • நீலன் – சனி; கொடியன்; ஒருகுரக்குப்படைத்தலைவன்; குதிரைவகை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 16 (2019)

பாடல்

காலன் றனையுதைத்தான் காமன் றனையெரித்தான்
பாலன் பசிக்கிரங்கி பாற்கடலை-ஞாலமெச்சப்
பின்னே நடக்கவிட்டான் பேரருளை நாடாதார்க்
கென்னே நடக்கை யினி               

தாயுமானவர்

கருத்துசிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

இறப்பை உண்டு பண்ணுபவன் ஆகிய மறலி எனும் எமனை காலால் உதைத்தான்;  பிறவிக்குக் காரணமான அவாவை உண்டு பண்ணுபவன் ஆன மன்மதனை எரித்தான்; குழந்தை ஆகிய ஞானசம்பந்தர் பசித்து அழுதபோது அவர் பசிக்காக இரங்கி அவருக்கு பாற்கடலை தந்து, அவர் இந்த ஞாலத்தில் புகழ்பெறுமாறு செய்து, ஞான சம்பந்தரின் பின்னே உலகத்தவரை நடக்கச் செய்தான். பெரியதான அருளைத் தரத் தக்கவனான அவனை நாடாதவர்க்கு இனி செல்லும் வகை எது?

விளக்க உரை

  • மறலியையும், எமனையும்  இறைவர் உதைத்தும் எரித்தும் தண்டித்தனால் சிவ வழிபாட்டினை அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் வந்து எய்தாது
  • நடக்கை – ஒழுக்கம், செல்கை, வழக்கு
  • பாற்கடல் ஈந்தது காழிப் பதி திருத்தலத்தில்
  • ஞாலமெச்சப் பின்னே நடக்கவிட்டான் – வெய்யிலின் தாக்கம் ஞானசம்பந்தரைத் தாக்காமல் இருக்க  சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அமைத்து நந்தியை விலகச் செய்து அவர் சார்ந்தவர்களையும் அழைத்து வரச் செய்தச் செய்த தலம் பட்டீஸ்வரம். (இத்தலத்து இறைவனை வழிபடுபவர்களுக்கு வினைகள் பற்றாது என்பது ஞானசம்பந்தர் தேவாரம்)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 23 (2019)

பாடல்

சகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க
சுகமனைத்தும் பொய்யன்றோ சோரா-திகபரத்தும்
விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக்
கட்டுக்குள் ஆவதென்றோ காண்

தாயுமானவர்

பதவுரை

நிலையாமை உடையதாகியதும், பொய்யானதும், தன்னுனர்வு இல்லாமல் சுட்டி உணரப்படும் அறிவு மட்டும் உடைய இந்த உலகம், மாயையின் தோற்றமாகிய  தோன்றி ஒடுங்கும் தொழிலுடையதுஇந்த  உண்மையினை உள்ளவாறு உணர்ந்து கொண்டால் இம்மையில் அடையக் கூடிய துன்ப இன்பங்கள் நிலையாமை உடைய பொருள்கள் என்றாகிவிடும். எனவே அவற்றைக் கொள்ளாது, மனம் தளராமல், இம்மையிலும் மறுமையிலும் விட்டு நீங்காததும், மிக மேன்மை படைத்ததும் பரமாத்துமாவும் சீவாத்துமாவும் ஒன்றே எனப்படுவதும், ஏகாத்மவாதமும் ஆன அத்துவிதம் ஆகிய கட்டுக்கு உள்ளாவது எந்த நாளோ? (எளியேன் அறிகின்றிலேன்)

விளக்க உரை

  • திகபரம் – இகம் மற்றும் பரம்

சமூக ஊடகங்கள்