அமுதமொழி – விகாரி – ஆடி – 28 (2019)


பாடல்

மூலம்

அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே

சொற் பிரிப்பு

அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்துமுருகப் பெருமானின் பெருமைகளை எல்லாக் காலங்களிலும் ஓத வேண்டியது குறித்து அறிவுறுத்தும் பாடல்.

பதவுரை

உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினை, அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினை, பிராப்தம் ஆகிய நிகழ்கால வினை, ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினை ஆகிய எல்லா வினைகளையும் அழித்து, இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காமல் இருந்து பேரின்ப வீடாகிய முக்தியை தர வல்லதுமான கூர்மையான வேலினை ஏந்திய திருமுருகப் பெருமானின் புகழினைக் கூறும் பாடல்களை எழுத்துப் பிழைகள் சிறிதுமின்றி கற்றுக் கொள்ளாமலும், ஓதாமலும் இருக்கின்றீர்களே! நெருப்பு மூண்டு எரிவதைப் போல தன்னுடைய கண்களை உருட்டி, புகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் நம்மை நோக்கி வீசும் வீசுகின்ற பாசக் கயிறு கொண்டு நம் கழுத்தில் சுருக்கு விழும்படி செய்து நம் உயிரைப் பறிக்கும் நாளிலா முருகனின் புகழைக் கூறும் பாடல்களைக் கற்க(ஓத) இயலும்?

விளக்க உரை

 • எழுத்துப் பிழையறக் கற்கின்றி – பேசா எழுத்து – ‘ஓம்’ என்பதே பிரணவம். இதுவே அசபை என்னும் பேசா எழுத்தும், ஊமை எழுத்தும் ஆகும். இதுவே வாசி. முருகன் பிரணவ வடிவில் இருப்பதை குற்றம் இல்லாமல் உணரவேண்டும்.இதற்கு வேறு விளக்கங்களும் அருளப்பட்டு இருக்கின்றன. ஆன்றோர் அறிந்து உய்க

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 14 (2019)


பாடல்

காரண னாகித் தானே கருணையால் எவையும் நல்கி
ஆருயிர் முழுது மேவி அனைத்தையும் இயற்றி நிற்கும்
பூரண முதல்வன் மைந்தன் போதகம் அளித்து மாற்றிச்
சூரனை மயக்கஞ் செய்யுஞ் சூழ்ச்சியோ அரிய தன்றே

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துசிவனின் எண் குணங்களில் சிலவற்றை எடுத்துக் கூறி அவனின் குமாரரான நீ மயக்கம் செய்தல் ஆகாது என பழிப்பது போல் புகழும் பாடல்.

பதவுரை

இந்த உலகம், உலகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் காரணமாக இருப்பவனும், பிறர் தூண்டுதல் இன்றி தன்னுடைய கருணையால் அனைத்தையும் கொடுத்து, மிகவும் நேசத்துக்கு உரிய அனைத்து உயிர்கள் இடத்திலும் பொருந்தி நின்று அனைத்தையும் சிருட்டித்தலை செய்பவன் ஆனவனும், முழுமையானதாகிய பூரணத்துவத்துடன் இருப்பவனுமான சிவபெருமானின் குமாரன் ஆகிய முருகப் பெருமான அறிவுரை கூறி அசுர குணங்களை மாற்றி, சூரனை மயக்கம் செய்யும் சூழ்ச்சி மிகவும் அரிதானது.

விளக்க உரை

 • போதகம் – யானையின் இளங்கன்று, அறிவுரை கூறுதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 11 (2019)


பாடல்

தரணிதனில் அறுபத்து அறுகோடி தீர்த்தமும்
   சரவ ணத்துள் அடக்கம்
சாற்றுமோர் எழுகோடி மந்திரங் களுமுன்
   சடாக்ஷ ரத்துள் அடக்கம்
விரதமிகு நவகோடி சித்தர்களும் உனதுசுப
   வீக்ஷணத் தனில் அடக்கம்
மேலான தேவால யங்களும்உன் ஆறுபடை
   வீட்டி னிற்குள் அடக்கம்
இரவிமுதல் முப்பது முக்கோடி தேவருமுன்
   இதயக் கமலத் தடக்கம்
ஈரேழு புவனமுதல் அண்டங்கள் பலவும்உன்
   இடத்தினில் அடக்கம் ஐயா
வரிசைமிகு பக்தஜன பரிபால னாமோக
   வள்ளி குஞ்சரி மணாளா
வனசமலர் அயன்மதனை அருள்சரச கோபாலன்
   மருகச ரவண முருகனே

கருத்து – புவனங்களும், அண்டங்களும், புவனியில் இருக்கும் தீர்த்தங்களும், ஏழுகோடி மகா மந்திரங்களும், ஒன்பது கோடி சித்தர்களும், அனைத்து தேவாலயங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் முருகன் உள்ளே அடக்கம் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

பக்தர்களை பாதுகாக்கவும் அவர்களை ஆதிக்கம் செய்யவும் வள்ளி தெய்வானையுடன் வருபவனே, தாமரை மலர் மீது வீற்றிருக்கும் நான்முகன் ஆகிய பிரம்மாவிற்கு  அருளுபவனும், இனிய குணம் கொண்டவனும், உண்மையைப் பேசுபவனுமான கோபாலனின் மருமகனே, சரவண முருகனே!  இந்த தரணியில் இருப்பதாக கூறிப்படும் அறுபத்து அறுகோடி தீர்த்தங்களும் சரவணத்துள் பணிவுடன்  அடங்கி இருக்கின்றன; மெய்யறிவினைத் தரத்தக்கதும், பிறவா நிலையை ஏற்படுத்தும் ஆனதும், எண்ணிக்கையில் கூறும்போது ஏழுகோடி மகா மந்திரங்கள் ஆனவைகள் சடாசர மந்திரத்தில் பணிவுடன் அடங்கி இருக்கின்றன; மிகுந்த விரத்தினை உடையவர்கள் ஆன ஒன்பது கோடி சித்தர்களும் உன்னுடைய சுபப் பார்வை தனில் பணிவுடன்  அடங்கி இருக்கின்றனர்; மேலானவைகள் என்று எந்த எந்த கோயில்கள் குறிப்பிடப்படுகின்றனவோ அவைகள் எல்லாம் உன்னுடைய படை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய வீடுகளில் பணிவுடன் அடங்கி இருக்கின்றன; ஆதித்தியனை முதலாவதாக கொண்ட படைக்கப்பட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும்* உன்னுடைய இருதய கமலத்தில் பணிவுடன் அடங்கி இருக்கின்றனர்; பூமியை முன்வைத்து மேல் ஏழும், கீழ் ஏழும் இருக்கும் புவனம் முதல் அண்டங்கள் பலவும் உன்னிடத்தில் நிலைபெற்று இருக்கின்றன.

விளக்க உரை

 • சித்தர்களுக்கு தலைவனாகவும், ஆதி அந்தம் அற்றவனாகவும் இருப்பதால் உடலினை முன்வைத்து ஆறு ஆதாரங்களும் தலைவன் என்று யோக மரபின் உரைப்பது உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • சாற்றுதல் – சொல்லுதல், விளம்பரப்படுத்தல், விற்றல், நிறைத்தல், அடித்தல், உணர்த்துதல்
 • பரிபாலனம் – பாதுகாப்பு, மேற்பார்வை செய்தல், மேலாதிக்கம் செய்தல், ஆட்சி செய்தல்
 • குஞ்சரி – பெண் யானை, முருகக்கடவுளின் தேவியான தெய்வயானை
 • வனசமலர் – தாமரை
 • *
 1. ஆதித்ய நிலையில் 12 பிரிவுகள் – விஷ்ணு, தாதா, மித, ஆர்யமா, ஷக்ரா, வருண, அம்ஷ, பாக, விவாஸ்வான், பூஷ, ஸவிதா, தவாஸ்தா
 2. வசு நிலையில் 8 பிரிவுகள் – தர, த்ருவ, சோம, அனில,  அனல, ப்ரத்யுஷ, ப்ரபாஷ
 3. ருத்ரன் நிலையில் 11 பிரிவுகள் – ஹர, பஹூரூப, த்ரயம்பக, அபராஜிதா, ப்ருஷாகாபி, ஷம்பூ, கபார்தி, ரேவாத், ம்ருகவ்யாத, ஷர்வா, கபாலி
 4. மற்றும் அஷ்வினி குமாரர்கள் (2)
 5. ஆக மொத்தம் = 33 வகையான தெய்வங்கள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 7 (2019)


பாடல்

போயின அகந்தை போதம் புகுந்தன வலத்த தான
தூயதோர் தோளுங் கண்ணுந் துடித்தன புவன மெங்கும்
மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படு கின்ற விண்ணோர்
நாயகன் வடிவங் கண்டேன் நற்றவப் பயனீ தன்றோ

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்து – சூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமானின் தோற்றப் பொலிவை உரைத்து இது பல காலம் செய்த தவப்பயன் என்று கூறும் பாடல்.

பதவுரை

நான், எனது எனும் அகங்காரம் கொண்டிருந்த எனது அகந்தை போனது; அதன் காரணமாக என்னுள் பேரறிவாகிய ஞானம் புகுந்தது; வலப்பக்கத்தில் இருக்கக்கூடிய தூய்மையான தோளும், வலது கண்ணும் துடித்தன; புவனம் முழுமைக்கும் சஞ்சரிக்கும் பொருள்களின் மாயைத் தன்மை நீங்கி தேவர்களுக்கு எல்லாம் நாயகன் ஆன நாயகன் வடிவம் கண்டேன்; இது பலகாலம் நல்ல தவம் செய்து அதனால் பெறுவதற்குரிய நற்தவத்தின் பயன் அல்லவா இது? என்று சூரபத்மன் உரைத்தான்

விளக்க உரை

 • யுத்த காண்டம் , சூரபன்மன் வதைப் படலத்தில் வரும் பாடல்
 • எம்பெருமான் தன்னுடைய பேரெழில் கொண்ட திருக்கோலத்தினைக் காட்டிக்கொண்டு முன்வந்து நிற்கும் பாக்கியம் அவனுடைய பகைவனாகிய, மாபாவியாகிய எனக்கும் கிடைத்ததே” என்று இறைவனுடைய கருணையை எண்ணி ஆச்சரியம் கொள்கிறான்.
 • போதம் – ஞானம், அறிவு
 • மேய்தல் – விலங்கு முதலியன உணவுகொள்ளுதல், பருகுதல், கெடுத்தல், அபகரித்தனுபவித்தல், மேற்போதல், சஞ்சரித்தல், விடனாய்த் திரிதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 17 (2019)


பாடல்

திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி
     சிவவழி யுடனுற் றேக …… பரமீதே
சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல
     திரிபுர மெரியத் தீயி …… னகைமேவி
இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி
    யிருள்கதி ரிலிபொற் பூமி …… தவசூடே
இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ
    ரிளையவ னெனவித் தார …… மருள்வாயே
பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர்
    பழமறை பணியச் சூல …… மழுமானும்
பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு
     பரியினை மலர்விட் டாடி …… அடியார்கள்
அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல
     மருள்செயு முமையிற் பாக …… ரருள்பாலா
அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ
     டடியவர் கயிலைக் கான …… பெருமாளே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்துமுருகப் பெருமானின் வடிவே தாமும் எய்தி வாழ்வதாகிய சாரூப வடிவம் வேண்டுதல்.

பதவுரை

சிலம்பு அணிந்த வீரக் கழல்களின்  ஒலிகள் எட்டு திசைகளிலும் இருப்பவர்களின் செவிகளில் படும்படியாக ஒலிக்க,  பிரமன், ருத்திரன், திருமால் ஆகிய முத்தேவர்களும், பழமையான வேதங்களும் பணிந்து போற்ற,  கைகளில் ஏந்திய சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, ஆதிசேஷனின் படமுடிகள் நெறு நெறு என்று முறிய, நந்தியாகிய வாகனத்தில் திருவடிகளை வைத்திருக்காமல், நடனம் செய்து, அடியார்கள் அரகர என்றும் மனம் உருகி ஜெய ஜெய என்றும் போற்ற, பார்வதியுடன் இணைந்து ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பாகராக இருப்பவரான  சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவை ஆன லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் நாயகனே, ஆராவாரத்துடன் போர் செய்து வெற்றி கொண்டவனாகிய இராவணின் ஆணவம் அழியுமாறு செய்தவனும் கயிலைமலையில் வீற்றிருப்பவனும் ஆன சிவனுடன்  இணைந்து வீற்றிருப்பவனே!  தவ நெறிப் பயனாய் பெறப்படுவதும் இருளும் ஒளியும் இல்லாத அழகிய நிலம் எனப்படுவதும் ஒளி வீசும் ஜோதி போன்றதுமான இடமானதும்  மூலாதாரம் எனப்படும் ஆகி இடத்தில் இருந்து பிராணன் எனப்படும் இடகலை, பிங்கலை மார்க்கங்கள் அடைபடும்படி செய்து சுழுமுனை வழியாக மூச்சை ஓட்டி, சிவ நெறியில் நின்று, தனித்து நிற்கும் மேலிடத்தே புறத்தில் கூடுதலை நிகழ்த்துதல் போல் அகத்தில் சிவ ஜோதியுடம் கூடி, அவ்வாறு விளங்கும் திருக்கோலத்தில் ஆணவம், மாயை,கண்மம் ஆகிய மும்மலங்களும் உனது புன்னகையில் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, எனது நல்வினை, தீவினை ஆகிய இரண்டு வினைகளும் தீய்ந்து சாம்பலாக, அதனால் அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபட்டு,  நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து,  அதனால் இவ்வுடல் நிலைபட்டது எனக் கருதும் படியாகப் பொருந்தி, இவன் முருகனுக்கு இளையவன் என்று என்னை விரிந்து கூறும்படியான பெரும் பேற்றை அருள்வாயாக.

விளக்க உரை

 • அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளிப் போரொடு – மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் மஞ்சத்திலே இன்பப் போரிடுதலை விரும்புவதோடு என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ‘அமளிப் போரொ டடியவர் கயிலைக் கான‘ எனும் வரிகளே பொருத்தமாக இருக்கும் என்பதாலும், வள்ளி நாச்சியார் இச்சா சக்தி, முருகப் பெருமான் ஞான மூர்த்தி என்பதாலும் பொருள் விலக்கப்பட்டுளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • இருவரும் உருகிக் காய(ம்) நிலை என மருவி – முருகப் பெருமானின் வடிவே தாமும் எய்தி வாழ்வதாகிய சாரூப வடிவம் கொள்ளுதல்
 • சிவ சுடர் அதனைப் பாவை மணம் என மருவி – சிவ ஜோதியை பொம்மைக் கல்யாணம் போலக் கூடி” என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. மூலாதாரம் பற்றி குறிப்பிட்டு இருப்பதாலும், தவ நெறியால் பெறப்படுவது பற்றி குறிப்பிடப்பட்டு இருப்பதாலும், தவநெறியின் பயன் சிவசக்தி ரூபம் காணல் என்பதாலும் இப்பொருள் விலக்கப்பட்டுள்ளது.
 • பணாமுடி – பாம்பின் படமுடி; பணாமுடி தாக்க – ‘அநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்து அதிர்ந்து‘ எனும் கந்தர் அலங்கார பாடலுடன் ஒப்பு நோக்கி அறிந்து உய்க.
 • தேவ ரிளையவ னெனவித் தார – முன்னர் கூறப்பட்ட மும்முனை நாடிகள் கொண்டும் ,

  உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
  கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
  விருத்தரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
  அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே

  எனும் சிவவாக்கியர் பாடல் கொண்டும், இளமையாக இருப்பதன் இரகசியம் கண்டு கொள்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 14 (2019)


பாடல்

மூலம்

சீர்க்கும ரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில்
ஏர்க்குறும் ஒளியுஞ் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குள வுலகில் அம்மா அற்புதத் தோடும் பல்காற்
பார்க்கினுந் தெவிட்டிற் றில்லை இன்னுமென் பார்வை தானும்

பதப்பிரிப்பு

சீர்க் குமரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில்
ஏர்க்குறும் ஒளியும் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குஉள உலகில் அம்மா! அற்புதத் தோடும் பல்கால்
பார்க்கினும் தெவிட்டிற்று இல்லை இன்னும்என் பார்வை தானும்

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துசூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமானின் தோற்றப் பொலிவை உரைத்து மேலும் உரைக்க இயலாமை குறித்து உரைத்தப் பாடல்.

பதவுரை

நன்மை, பெருமை, புகழ் ஆகியவற்றை இயல்பாக உடைய குமரேசன் அழகிய பெரியதான வடிவம் கொண்டவனானாகவும், தோற்றப் பொலிவு உடைய ஒளி கொண்டவனாகவும், இளமையும், அழகு எல்லாம் உடையவனாகவும் உள்ளான்; இந்த அழகிற்கு ஈடாக உலகில் எவன் உளான்; அம்மாடி! இந்த அற்புதத் தோற்றம் கொண்டவனை எத்தனைக் காலம் பார்த்தாலும் அந்தத் தோற்றப் பொலிவானது எனக்குத் திகட்டவில்லை.

விளக்க உரை

 • சீர் – செல்வம், அழகு, நன்மை, பெருமை, புகழ், இயல்பு, சமம், கனம், ஓசை, செய்யுளின் ஓருறுப்பு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 17 (2019)


பாடல்

மூலம்

ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றி லேன்வினை தீர்த்தருளாய்
வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே

பதப்பிரிப்பு

ஆவிக்கு மோசம் வருமாறு அறிந்து உன் அருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றிலேன் வினைதீர்த்து அருளாய்
வாவித் தடவயல் சூழும் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடையானே அமர சிகாமணியே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

கருத்துஇரு வினைபட்டு திருவடி வணங்கா தன்மையும், அதனை தீர்த்து அருள் புரிய வேண்டியும் முருகனிடம் விண்ணப்பித்தது.

பதவுரை

ஆறுகளும், தடாகங்களும் சூழ்ந்திருக்குமாறு அமையப்பெற்றதும், பரந்த வயல்கள் சூழ்ந்துள்ளதும், பெருமைக்குரியதும் ஆன திருத்தணி மலைமீது எழுந்தருளி சேவற்கொடியை உடையவரே, தேவர்களுக்கு முடிமணியாகத் திகழ்பவரே! இரு வினைகளின் விளைவாக வெளிப்பட்டு பிறவிநோய்க்கு காரணமான  உயிருக்குக் கேடு உள்ளது என்பதை அறிந்த போதிலும் தேவரீருடைய அருளை வழங்கக் கூடியதான திருவடிகளை வணங்குவதை எக்காலமும் சிந்திக்கவில்லை.  அவ்வாறான அடியேனுடைய வினைகளையும், அதன் விளைவையும் தீர்த்து அருள் புரிவீராக.

விளக்க உரை

 • வாவி – தடாகம்,  நீர்நிலை, நடைக்கிணறு, ஆற்றிலோடை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 10 (2019)


பாடல்

அண்டர்கள் முனிவர் ஏனோர் அகிலமும் காட்டி அண்ணல்
கொண்டிடு படிவ முற்றும் குறித்தி யார் தெரிதற் பாலார்
எண்டரு விழிகள் யாக்கை எங்கணும் படைத்தோர்க்கு ஏனும்
கண்டிட அநந்த கோடி கற்பமும் கடக்கும் அன்றே

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துசூரபன்மன், மாயை நீக்கம் பெற்ற பின் முருகப் பெருமான் பல பிரம்மாக்களை கண்ட திறம் பற்றி உரைத்தப்  பாடல்.

பதவுரை

தேவர்களும், முனிவர்களும் மற்றைய அகிலங்கள் அனைத்தும் (தன்னில்) காட்டி அவைகள் வாழ்ந்தற்கான எச்சங்களும் காட்டிய பாலனானவன், இயல்பின் இருந்து மீறிய கண்கள், உடல் மற்றும் எங்களையும் படைத்திட்ட பிரம்மனும் கண்டிடுமாறு  கடவுள் தன்மை கொண்டு பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் ஆகிய நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடம் கொண்ட பிரமனது ஒருநாள் கடந்து பல பிரம்மன்களைக் கண்டவனாகவும், எவரும் எளிதில் அறிய இயலாதவனாகவும் தோன்றினான்.

விளக்க உரை

 • யுத்த காண்டம் , சூரபன்மன் வதைப் படலத்தில் வரும் பாடல்
 • கற்பம் – இருத்தற்கு ஏற்படுத்தப் பட்ட இடம், நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடம் கொண்ட பிரமனது ஒருநாள், பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள், இந்திரன் முதலிய தேவர்க்குரிய வாழ்நாளளவு, ஆயுளை நீடிக்கச் செய்யும் மருந்து, இலக்ஷங்கோடி, தேவர் உலகம், பசுவின் சாணத் தைக் கையாலேந்தி ஆகமப்படி உண்டாக்கிய திருநீறு, கற்பகம்
 • பல பிரம்மன்களைக் கண்ட பின்னும் இன்னும் பாலனாகவே இருக்கிறான் என்பது வியப்பு
 • அண்டர் – தேவர், இடையர், பகைவர்
 • அநந்தன் – கடவுள், ஆதிஷேஷன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 3 (2019)


பாடல்

மூலம்

ஒற்றென முன்னம் வந்தோன் ஒருதனி வேலோன் தன்னைப்
பற்றிக லின்றி நின்ற பராபர முதல்வன் என்றே
சொற்றனன் சொற்ற எல்லாந் துணிபெனக் கொண்டி லேனால்
இற்றையிப் பொழுதில் ஈசன் இவனெனுந் தன்மை கண்டேன்

பதப்பிரிப்பு

ஒற்று என முன்னம் வந்தோன் ஒரு தனி வேலோன் தன்னைப்
பற்றி இகல் இன்றி நின்ற பராபர முதல்வன் என்றே
சொற்றனன் சொற்ற எல்லாந் துணிபு எனக் கொண்டிலேன் ஆல்
இற்றை இப் பொழுதில் ஈசன் இவன் எனும் தன்மை கண்டேன்

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துமாயை நீக்கம் பெற்ற பின் முருகனும் ஈசனும் வேறு வேறு அல்ல எனும் உண்மைத் தன்மையை கண்டதை சூரபன்மன் உரைத்தது

பதவுரை

போர் புரிவதற்காக முன்வந்த தனி வேலவன் தன்னை உளவு செய்வதன் பொருட்டு வந்தவன் என்று எண்ணி இருந்தேன். வலிமை மாறாதவரும், அந்த வலிமையில் மாறுபாடு இல்லாதவரும், எவரோடும் வலிமையில் ஒப்பு நோக்க இயலாதவரும் நின்ற முழுமுதற்கவுளும், இறைவனும் ஆன பரம்பொருளும் ஆன முதல்வன் என்று உணர்வில் பதியுமாறு எவரும்  உரைக்கவில்லை. அவ்வாறு அதற்கு நிகராக உரைக்கப்பட்ட சொற்களின் உண்மைத் தன்மை கொண்டு மன உறுதியும் யான் கொள்ளவில்லை. ஆனால் முருகனும் ஈசனும் வேறு வேறு அல்ல எனும் உண்மைத் தன்மையை இந்தக் கணப்பொழுதில் யான் கண்டேன்.

விளக்க உரை

 • ஒற்று – உளவு = வேவு, ஒற்றியெடுத்தல், மெய்யெழுத்து
 • இகல் – வலிமை, மாறுபடுதல், போட்டிபோடுதல், ஒத்தல், பகை, போர், சிக்கு, அளவு, புலவி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 26 (2019)


பாடல்

கந்தனை அருள் புரி கடவுள் ஆணையைச்
சிந்தையின் மாறு கொள் சிறியர் யாவரும்
அந்தம் அடைந்தனர் அன்றி வன்மையால்
உய்ந்தனர் இவர் என உரைக்க வல்லமோ

கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

*கருத்துபிறவாமை அடைய கந்தன் அருள் வேண்டும் எனும் பாடல்.*

பதவுரை

வினைபற்றி நிற்கும் சிந்தனையானது மாறுபாடு அடைந்து கந்தனை முன்னிறுத்தி தன்னை தாழ்த்திக் கொண்டவர் அனைவரும் பிறாவாமை எனும் அந்தமாகிய முடிவினை அடைந்தனர் என்பது இல்லாமல் கோபமும் கொடுஞ்சொல்லும் கொண்டு வலிமையால் இவர் உயிர் தப்பி ஈடேறினார்கள் என்று உரைக்க இயலுமோ? கந்தனைவிட அருள்புரியக் கூடிய கடவுள் எவையும் உண்டோ? இஃது ஆணை.

விளக்க உரை

• சூரபன்மனுக்கு அவன் மகன் இரணியன் அறிவுரையாக கந்தக் கடவுள் பற்றிக் கூறியது.
• வன்மை – வலிமை, கடினம், வன்சொல்,கடுஞ்சொல், ஆற்றல், வன்முறை; வலாற்காரம், சொல்லழுத்தம், கோபம், கருத்து, வல்லெழுத்து

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 12 (2019)

பாடல்

அருவமும் உருவம் ஆகி
     அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்
     பிழம்பதோர் மேனி யாகிக்
கருணைசேர் முகங்கள் ஆறும்
     கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திரு முருகன் வந்தாங்கு
     உதித்தனன் உலகம் உய்ய

கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துஅருவம், உருவம், அருவுருவம் ஆகிய வடிவம் கொண்ட சிவபெருமானே முருகனாக அவதாரம் செய்ததை கூறும் பாடல்.

பதவுரை

நிட்களம், நிட்களத் திருமேனி என்று அறியப்படுவதும் விந்து, நாதம், சக்தி, சிவம் எனும் நான்கினைக் குறிப்பதானதும், உறுப்புகள் எதுவும் இல்லாத அருவ வடிவம் கொண்டும், சகளத் திருமேனி, சகளம் என பலவாறு அறியப்படுவதும், பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் நான்கு தெய்வ வடிவங்களைக் குறிப்பதானதும், தலை, உடல், கை, கால் என உறுப்புகள் அமைந்த சிவ வடிவங்கள் ஆனதுமான உருவ வடிவம் கொண்டும், சதாசிவ வடிவமாக இருப்பதும், காலங்களால் அறிய முடியாததான அநாதியாய் அருவுருவ வடிவம் கொண்டும், பல பொருளாகவும், ஏகத்தினை உரைக்கும் ஒரு பொருளாகவும், பிரம்ம வடிவம் கொண்டும் நிற்கும் சோதியினை ஒத்த வடிவம் கொண்டு, கருணையை பொழிவதான அறுமுகங்களுடனும், திருக்கரங்கள் பன்னிரண்டுடனும் போற்றத் தக்கதாகிய முருகன் இந்த உலகம் உய்ய வந்து உதித்தான்.

விளக்க உரை

 • உதித்தல் – உதயமாதல், தோன்றுதல், பிறத்தல், பருத்தல்
 • ‘இல்லாதவை தோன்றாது; இருப்பவை உருமாறி தோன்றும்’ எனும் சைவ சித்தாந்தக் கருத்துப்படியும், பெம்மான் முருகன் பிறவான் இறவான் எனும் அருணகிரி நாதரின்  கருத்துப்படியும் ஒப்புமை கொண்டு சிவனே முருகனாக தோன்றினான் எனும் பொருள் அறிக.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 7 (2019)

பாடல்

அடைத்திடவே சிலம்பொலியுங் கேட்டேன் யானும்
     ஐயையா காதிரண்டும் அடைத்துப் போச்சு
படைத்திடவே ரோசமென்ற வெக்கம் போச்சு
     பரிவான மயில் மீதில் பாய்ந்து சென்றேன்
வடைத்திடவே வாசியின் மேற் சொக்கிக் கொண்டேன்
     வயிரமங்கே யிருக்கின்ற வகையுங் கண்டேன்
முடைத்திடவே மும்மூலங் கொண்டதாலே
     முருகனென்று யெந்தனுக்குப் பேரு மாச்சே

சுப்ரமணியர் ஞானம்

கருத்துமுருகன் என பெயர் பெற்றதை தன்நிலை விளக்கமாக அருளும் பாடல்.

பதவுரை

அப்பொழுது யானும் சிலம்பொலியினைக் கேட்டேன்; அதன் காரணத்தால் காது இரண்டும் அடைத்துப் போனது;  ரோசம், வெட்கம் ஆகியவை விட்டகன்றது; இரக்கம் தருவதான மயில் மீது ஏறி பறந்து சென்றேன்; வாசி வழி பற்றி நின்றதால் மனம் மயங்கி நின்றது. வைரம் போன்ற தன்மை உடைய மெய்ப்பொருளின் வகையினைக் கண்டேன்; மெய்ப் பொருளை உணர்ந்தவர்கள் தன்னிலையை உணர்ந்திடுவார் என்பதாலும். தன்னை முழுமையாக அறிந்து மெய்ஞான வடிவாக நிறைந்து, மூம்மூலம் உரைத்து அதை உணர்வதால் பொய்மை விலகி உண்மை நிலை  விளங்கிக் கொண்டவர் என்பதாலும், கொள்ளத்தக்க தேவை என்பது ஏதும் இல்லை என்பதாலும் எனக்கு முருகன் என்று பெயர் ஆனது.

விளக்க உரை

 • பல விளக்கங்கள் குரு மூலமாக அறியக்கூடியவை. உ.ம் சிலம்பொலி. ‘சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை‘ எனும் பாடல் வரிகொண்டும், வள்ளலார் பாடல்கள் மூலமும், தச தீட்சை மூலமாகவும் பல விளக்கங்கள் அளிக்க இயலும். குருவருள் பெற்று குரு மூலமாக பொருள் அறிக.
 • சொக்குதல்-மயங்குதல், மனம் பிறர்வசமாதல், பிறரை மயங்குமாறு ஒழுகுதல்

(இப் பாடலுக்கான விளக்கத்தின் ஒரு பகுதி சித்தர்களுக்கு தலைவரான அகத்திய மாமுனியால் அருளப் பெற்றது. அவரின் பாடல்களைக் கொண்டு அவர் குருவான முருகனைப் பற்றி விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்)

மதனா அண்ணா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 5 (2019)

பாடல்

கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் றன்னைப்
பாலனென் றிருந்தேன் அந்நாள் பரிசிவை உணர்ந்திலேன் யான்
மாலயன் றனக்கும்ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகாரணமாய் நின்ற மூர்த்தியிம் மூர்த்தி யன்றோ?

கந்த புராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்துசூரபன்மன் பரமேஸ்வரனும்  முருகப்பெருமானும் ஒன்றே என உணர்ந்ததை கூறும் பாடல்.

பதவுரை

அழகிய மயிலின் மீது அமர்ந்த குமரன் ஆகிய முருகப் பெருமானை சாதாரண சிறுவன் என்று எண்ணி இருந்தேன். முந்தைய காலத்து பரமேஸ்வரன் என்று உணரவில்லை. விஷ்ணு, பிரம்மாவிற்கும் ஏனைய வானத்தில் உறையும் தேவர்களுக்கும் மூல காரணமாக இருக்கும் பரமேஸ்வரனும் இவனும் ஒன்றன்றோ?

விளக்க உரை

 • மஞ்ஞை – மயில்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 28 (2019)

பாடல்

ஓரா தொன்றைப் பாரா தந்தத்
     தோடே வந்திட் …… டுயிர்சோர
ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
     டாமால் தந்திட் …… டுழல்மாதர்
கூரா வன்பிற் சோரா நின்றக்
     கோயா நின்றுட் …… குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
     கோடா தென்கைக் …… கருள்தாராய்
தோரா வென்றிப் போரா மன்றற்
     றோளா குன்றைத் …… தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
     சூர்மா அஞ்சப் …… பொரும்வேலா
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
     சேவே றெந்தைக் …… கினியோனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
    சேயே செந்திற் …… பெருமாளே

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்துசரீரம் விடும் நேரத்திலும் முருகனை புகழ்ந்து உரைக்கும் சொற்கள் உதவும் என்பது பற்றியப் பாடல்.

பதவுரை

போரில் தோல்வி என்பதையே அறியாது  எப்பொழுதும்  வெற்றியைப் பெறும் போர் வீரா, மணம் வீசும்படியான மாலைகள் அணிந்த தோளை உடையவனே, கிரெளஞ்ச மலையை தனது வேலாயுதத்தால் துளைத்தவனே, சூழ்ச்சியினால் எட்டுத் திக்கும் பொருந்தி நின்ற வஞ்சனை பொருந்தியவனான சூரன் மாமரமாக நின்ற போது அவன் அஞ்சுமாறு போரிட்ட வேலனே, சிறப்புகள் உடைய கொன்றை மாலை மார்பில் திகழுமாறு ரிஷபத்தில் ஏறும் தந்தை ஆகிய சிவனுக்கு இனியவனே, தேன் போன்றவனே, அன்பர்களுக்கு  என்றும்  இனிய சொற்கள் வழங்கும் சேயே, மலைபோன்றதும்,  செம்மையானதும்,  அழகியதும் ஆன தோளை உடையவனே, திருச்செந்தூரில் உறையும் செந்தில் பெருமாளே!  மெய்யானது எது என்ற ஒன்றை ஆராய்ந்து அறியாமலும், அதில் பொருந்தி இருக்கும் உண்மையைப் பார்க்காமலும், உயிரானது சோர்ந்து போகும்படி ஊடல் செய்து, தங்களுக்கு நல்லது என்று எதும் இல்லாதவர்கள் போல நின்று, அளவற்ற காம மயக்கத்தைத் தந்து திரிகின்ற பெண்களின் கூரியதான பொய்யான அன்பில் சோர்வடைந்து, எலும்போடு கூடியதான இந்த சரீரம் ஓய்ந்து உள்ளம் குலைந்து போன போதும்,  உன்னைப் பற்றி புகழ்ந்து உரைக்கும் சொற்கள் நின்று உதவும் என்று உலகத்தார் கூறும்வண்ணம் திருவருள் தந்தருள்க.

விளக்க உரை

 • ‘ஓர்தல் – ஆராய்தல், எண்ணுதல், உணர்தல், அறிதல், தெளிதல்
 • கோடுதல் – வளைதல், நெறிதவறுதல், நடுவுநிலைமை தவறுதல், வெறுப்புறுதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 16 (2019)

பாடல்

வழுத்துகிறேன் என்மகனே மாணா கேளு
   வல்லவர்க்குப் பிள்ளை என்றவகையும் சொல்வேன்
அழுத்துகிற ஆத்தாளை அவர்க்கே ஈந்தேன்
   அதனாலே அரனுக்குப் பிள்ளை என்றார்
தொழுத்துகிற அவரையுந்தா நின்று யானும்
   துய்யவெளி உபதேசம் துரந்து சொல்லி
வழுத்துகிறேன் அதனாலே ஆசானென்று
   அல்லோரும் எனைத் தானும் அருளினாரே

சுப்ரமணியர் ஞானம்

கருத்துசிவன் தனக்கு தந்தையாகவும், மகனாகவும் ஆன ரகசியத்தை முருகப் பெருமான் அகத்தியர் கேட்டதற்கு இணங்க அவருக்கு கூறியது.

பதவுரை

என் மகனாகவும், என் மாணவன் ஆனவனாகவும் ஆன உன்னை வாழ்த்துதல் செய்கின்றேன். வலிமை உள்ளவனும் சமர்த்தவனும் ஆகியவருக்கு எவ்வாறு மகன் ஆனேன் என்று உரைக்கிறேன். தனது ஆத்தாள் ஆகிய பார்வதி தேவியை அவள் விரும்பியவாறு ஈசனாருக்கு கொடுத்தேன். அதனாலே  ஈசனார் ஆகிய அவரை விட இளமை உடைய இளைஞன் ஆனேன். தனக்கு ஞான உபதேசம் செய்யும் படி விரும்பி நின்ற அவரை, தூயவெளி என்பதும், வெட்டவெளி என்பதும் ஆகாசம் என்பதும் ஆன இடம் காட்டி உபதேசம் காட்டி அருளியதால் அவருக்கு ஆசான் ஆனதால் அவருக்கு மெய்ஞானத் தந்தை ஆனேன் என்று அல்லாதவர்களும் கூறியது குறித்து தன்னைப்பற்றி அருளினார்.

விளக்க உரை

 • வழுத்துதல் – வாழ்த்துதல், துதித்தல், அபிமந்திரித்தல்
 • அழுத்துதல் – அழுந்தச்செய்தல், பதித்தல், உறுதியாக்குதல், வற்புறுத்துதல், அமிழ்த்துதல், எய்தல்.

சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 9 (2019)

பாடல்

சித்தான சித்தனிட மார்க்கஞ்சொன்னேன்
     சிறப்பான இன்னமொரு வயனங்கேளிர்
முத்தான வடிவேலர் முருகரப்பா
     முயற்சியுடன் வயததுவும் ஏதென்றாக்கால்
சத்தியமாய் வயததுவுங் கணக்கோயில்லை
     சார்பான நூல்தனிலுஞ் சொல்லவில்லை
சித்திபெற ஞானவழி கொண்டசித்து
     சிறப்பான சுப்ரமணியர் என்னலாமே

போகர் சப்த காண்டம் – போகர்

கருத்து – போகர், முருகப் பெருமான் வயதினை கணித்து கூற இயலாமை குறித்தப் பாடல்.

பதவுரை

இவ்வாறான மெய்யறிவுப் பொருளாகியனும், அவன் பற்றிய மார்க்கத்தினையும் சொன்னேன்; சிறப்பான இன்னொரு வேதம் போன்றதான மற்றொரு வசனத்தினைச் சொல்கிறேன்; தூமணி போன்றவரான வடிவேலர் முருகப் பெருமானே ஆவார்; அப்படிப்பட்டவரான முருகனுக்கான வயது எதுவென்றால், சர்வ நிச்சயமாக வயதினைக் கணித்துக் கூற இயலாது. அவனைப் பற்றிய நூல்களிலும் அதுபற்றி உரைக்கப்படவில்லை. முக்தி அருளக் கூடியவனும், பேரறிவாக இருந்து, அந்த அறிவுடைப் பொருளாகவும் ஆகி, பரமான்மாவாகவும் ஆகி, அட்டமாசித்தி பெற அருள்வோனுமாய்,  ஞான வழி  அருள்பவனுமாய் இருப்பது சிறப்பான சுப்ரமணியர் என்று (மட்டும்) கூறலாம்.

விளக்க உரை

 • சித்து – அறிவு, அறிவுப்பொருள், ஆன்மா, அட்டமாசித்தி, கலம்பக உறுப்பு, வேள்வி, வெற்றி, ஒரு வரிக்கூத்து வகை, எழுத்தடிப்பு, கொத்தனுக்கு உதவிசெய்யும் சிற்றாள்
 • வயனம் – வசனம், வேதம், பழிமொழி
 • ‘பெம்மான் முருகன், பிறவான், இறவான்’ எனும் அருணகிரிநாதரரின் கந்தர் அனுபூதி பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 22 (2019)

பாடல்

சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
   சமர்த்தா யெதிர்த்தே …… வருசூரைச்
சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய்
   தகர்த்தா யுடற்றா …… னிருகூறாச்
சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
   செகுத்தாய் பலத்தார் …… விருதாகச்
சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய்
   திருத்தா மரைத்தா …… ளருள்வாயே
புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
   பொரத்தா னெதிர்த்தே …… வருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
   பொரித்தார் நுதற்பார் …… வையிலேபின்
கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
   கருத்தார் மருத்தூர் …… மதனாரைக்
கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே
   கதிர்க்காம முற்றார் …… முருகோனே.

திருப்புகழ் – அருணகிரிநாதர்

பதவுரை

சரம் போன்று புறப்பட்ட ஆறு திருப் பொறிகளில் இருந்து பிறந்தவனே, திரிபுரத்தில் இருந்த  தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய  வரம்பெற்ற மூன்று அசுரர்களும், அம்புகளை சரம் போல் கொண்டவர்களாக சண்டை செய்ய எதிர்த்து வரும்போது முதலில் பொறுமையோடு இருந்து  பிறகு போர்க்கோலம் தரித்து பின் தனது புன்னகையால் திரிபுரத்தை தனது நெற்றிக்கண் பார்வையாலேயே எரித்தவரும், பின்பு (கஜமுகாசுரனான) யானையின் தோலை உரித்து, அதனை ஆடையாக அணிந்து கொண்டவரும், தேவர்கள் விருப்பத்தின் பேரில் அவர்கள் கேட்டுக்கொண்டபடி தம்மீது அம்பு எய்யும் கருத்தோடுதென்றலைத் தேராகக்கொண்டு ஊர்ந்து வந்த மன்மதனை சாம்பல் ஆகும்படி செய்த சிவனாரின் கண்மணி போன்றவனே, கதிர்காமம் என்ற தலத்தில் விளங்கும் முருகனே! மிக வலிமையோடு போரில் குதித்து சாமர்த்தியமாய்  எதிர்த்துவந்த சூரனை அவன் நல்வினைப் பற்றி  ஒழுங்காக நடந்துகொண்ட வரையில் அவனை எதுவும் செய்யாமல் விட்டுவைத்தும், அவன் நல்வினைகள் நீங்கி, தீய்வினைகள் பற்றி துன்பம் செய்த போது அவனை நெருக்கிஉடலை இரு கூறுகள் ஆகுமாறு பிளந்துதலையையும் மார்பையும் அறுத்துக் கொன்று வெற்றியை கொண்டாய்; அப்படிப்பட்ட நீஉனது அழகிய தாமரைப் பாதங்களைத் தந்து அருளுக.

விளக்க உரை

 • சரத்தே யுதித்தாய் … நாணல் காட்டிலே பிறந்தவனே என்ற பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.
 • செகுத்தாய் … கொன்றெறிந்தாய்
 • வலக்காரம் – பலவந்தம், அதிகாரம், வெற்றி

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 15 (2019)

பாடல்

பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா! செம் சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

பதவுரை

குமரப் பெருமானே! அடர்ந்ததும்செம்மை நிறம் உடையதுமான சடையின்மீது கங்கை நதியையும்,நாகத்தையும், கொன்றை மலரையும் தும்பை மலரையும் சந்திரனது பிறையையும் சூடிக் கொண்டுள்ள சிவபெருமானின் குமாரனாகிய தேவராகிய திருமுருகப்பெருமானாக மட்டுமன்றி, கருணைக்கு உறைவிடமான கிருபாகரனாகவும் விளங்குபவரே! முக்தியைப் பெறுவதற்குரிய தவப்பயன் சிறிதேனும் இல்லாத அடியேனை, பிரபஞ்சம் என்னும் மாயச் சேற்றினை விட்டு உய்யுமாறு உண்மையான வழியைக் காட்டியருளினீர்!

விளக்க உரை

 • பூர்வ ஜென்ம கர்மங்களில் அனுபவித்தது போக மீதம் இருப்பவை ஆகிய சஞ்சீதம் கர்மாவின் தொடர்ச்சியாகிய நற்பேறு. தவம் என்பது இந்தப் பிறவியில் செய்வது.
 • அடவி – காடு
 • ஆறு = கங்கை
 • பணி = பாம்பு
 • இதழி = கொன்றைப் பூ
 • தும்பை = தும்பைப் பூ
 • அம்புலியின் கீற்று = சந்திரனின் பிறை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 7 (2019)

 

பாடல்

மூலம்

அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே

சொற் பிரிப்பு

அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே

கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்

பதவுரை

திருவிநாயகப் பெருமானை வழிபடுவதற்கு வருபவர்கள் “தட, பட” என்ற ஒலியுடன் தங்கள் தலையில்  குட்டிக் கொண்டு, அவர்கள் படைக்கும் சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தம் துதிக்கையால் ஏற்றுக் கொள்பவரும், “இச்சை, கிரியை, ஞானம்” என்னும் மும்மதங்களையும் கும்பத்தலங்களாக கொண்டிருப்பவருமான யானை முகத்தினை உடையவரான திருவிநாயகப் பெருமானின் இளையோனும், களிறு போன்றவனும்  ஆகிய திருமுருகப் பெருமானின் தரிசனத்தை வலிமை உடைய அருணை என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை கோயிலின் கோபுர வாயிலுக்கு வடக்குப் பக்கத்தில் சென்று கண்டுகொண்டேன்.

விளக்க உரை

 • அடல்-வீரம்.
 • திரு-திருமகள் விலாசம்
 • கடம்-மதம்.
 • தடம்-மதம் பிறக்கும் இடம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 6 (2019)

பாடல்

தொடஅ டாது நேராக வடிவு காண வாராது
     சுருதி கூறு வாராலு …… மெதிர்கூறத்
துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக
     துரிய மாகி வேறாகி …… யறிவாகி
நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு
     மெனவு நேர்மை நூல்கூறி …… நிறைமாயம்
நிகரில் கால னாரேவ முகரி யான தூதாளி
     நினைவொ டேகு மோர்நீதி …… மொழியாதோ
அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவி
     யமர்செய் வீர ஈராறு …… புயவேளே
அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன்
     அரியும் வாழ வானாளு …… மதிரேகா
கடுவி டாக ளாரூப நடவி நோத தாடாளர்
     கருதி டார்கள் தீமூள …… முதல்நாடுங்
கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத
     கருணை மேரு வேதேவர் …… பெருமாளே

திருப்புகழ் – அருணகிரிநாதர்

பதவுரை

வேதத்தை ஓதும் பிரமனும், திருமாலும்  சூரனுக்கு அஞ்சாமல் இருக்கும் படி செய்து, அவர்கள் வாழும்படியாக விண்ணுலகை ஆளும் மேம்பாடு உடையவனே! கடுமையான விஷம் நீங்காத கழுத்தை உடைய திருநீலகண்ட உருவத்தாரும், நடனங்களை அற்புத வகையில் செய்யும் மேன்மையாளரும், பகைவர்களாகிய திரிபுராதிகள் தீ மூண்டு அழியும்படியாக செய்ய, அவர்களோடு சண்டையிட்ட கடவுள் ஆனவரும், ரிஷப வாகனத்தின் மேல் ஏறி வருபவரும் ஆன சிவபெருமானின் புதல்வனே! எல்லாவற்றுக்கும் காரணமான மூல காரணனே! வேதப் பொருளாகி அதன் வடிவானவனே! உயிர்களிடத்தில் கருணை செய்வதில் பெருமலை போன்றவனே! தேவர்களின் பெருமாளே! வேதத்தின் உட் பொருளைக் கூற வல்லவர்களாலும் விளக்கமாகச் சொல்வதற்கு இயலாதவனாய், விருப்பத்துக்கு உரிய கடவுளாகவும், ஒப்பற்ற ஒரே பரம் பொருளாக நிற்பவனாகவும்,அவத்தைகளுக்கு உட்பட்டதாகிய  விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பவனாகவும், யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை ஆகிய துரியமாகவும், அந்த நிலைகளில் இருந்து வேறுபட்டவனாகவும், மெய் அறிவு வடிவம் கொண்டவனாகவும், அன்பு செய்தல் தவிர்த்து வேறு வகையில் அடைவதற்கு முடியாதவனாய், மாய மலம் கொண்டவர்களால் நேராக அதன் உருவத்தைக் காணுதற்குக் கிட்டாதவனாய், விருப்பத்துக்கு உரிய கடவுளாகவும், நிகரில்லாத ஒப்பற்ற ஒரே பரம் பொருளாக நிற்பவனாகவும், அவத்தை நிலைகளில் கூடியதான விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பவனாகவும், அதில் இருந்து றுபட்டவனாகவும்  பேரறிவு உடையவனாகவும், நீண்ட கால், கை ஆகியவற்றொடு  நடமாடும் இந்த உடலில் இடம் கொண்டு, நீ என்றும், நான் என்றும் துவைதமாக நூல்களால்  கூறப்படும் நிலைமையும், அதனால் நிரம்ப ஏற்படும் மாயமான உணர்ச்சி யாது என்பதையும், ஒப்பில்லாத யமன் ஏவ, அதை நிறைவேற்ற ஆரவாரத்துடன் வருகின்ற தூதர்கள், மறக்காமல் உயிரைப் பிரிக்க வருகின்ற ஒரு நீதி யாது என்பதையும் எனக்கு விளங்கச் சொல்லி அருள மாட்டாயோ?

சமூக ஊடகங்கள்

1 2