அமுதமொழி – விளம்பி – பங்குனி – 6 (2019)

பாடல்

உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசத்தியைப் பெறுதற்குரிய வழியினைக் கூறும் பாடல்.

பதவுரை

நீண்டதொரு காலப்பகுதி ஆகிய ஊழிகளையும், அதனைப் போல பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படுவதும், முற்றுணர்வு எனப்படுவதும் ஆன பூரணம் ஆகும். இவ்வாறான சக்தியை சிவனுடன் இணைத்து உணராமல்  சிவனைத் தனித்து நிற்பவனாகக் கருதுவோர் சிவனையும் உணராதவரே; தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ளவழி பிராணனை யோகமுறையில் மூச்சடக்குதலே ஆகும்.

விளக்க உரை

 • ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
 • கும்பித்தல் – யோகமுறையில் மூச்சடக்குதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 29 (2019)

பாடல்

கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத் திடையில்நின் றானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் –  திருமூலர்

கருத்துஅட்டாங்க யோகம் எனும் எட்டு வகையான யோகங்களில் முதலாதவதான இயமம் அடையும் முறை பற்றிய பாடல்.

பதவுரை

கொல்லாமை, பொய்யாமை, களவின்மை, வெகுளாமை, காமம் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை,  கூடா ஒழுக்கம் இன்மை ஆகியவற்றைக் கொண்டு நல்லவனாகவும், அடக்க முடையவனாகவும் இருப்பவனே தடை இல்லாத இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.

விளக்க உரை

 • சரி எதையெல்லாம் கொல்லான் உடலையா, உயிரையா, மனதையா, அறிவையா அல்லது ஆத்மாவையா எனக் கேட்டபின்னரே அதில் நாம் கடைந்தேரியவராக இருப்பின் இயமத்தின் கொல்லானைக் கடக்குமெனவுரைக்கிறார். (குருநாதர் உரை செய்த வண்ணம்)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 18 (2019)

பாடல்

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலைபெற லாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்கள் எப்பொழுதும் மல கன்ம மாயையாகிய பாசங்கள் நீங்கியவர்களாக இருப்பார்கள் என்பது பற்றிய பாடல்.

பதவுரை

உயிர்களே என்றும் விட்டு நீங்காததும், நலம் தரக்கூடியதும், பேரின்பத்தை தருவதுமான சிவபரம் பொருளைத் தியானித்தல், உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கும் ஆன்மாவை அணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங்கள் (முன்னர்ப் பிணிப்பவிழ்ந்து நீங்கினவை) மீளவும் தொடர்ந்தும் பற்றமாட்டாது. அவைகள் சில நேரங்களில் பழைய வாசனையின் காரணமாக  மீண்டும் வந்து பற்ற முற்பட்டால் திருவருளின் துணையினால் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி, ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையில் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்களாகவே வாழ்வர்.

விளக்க உரை

 • காட்டுவது – ஞானம்.
 • காண்பது – காணப்படுவது.
 • ஞாதுரு = காண்பவன் –  ஆன்மா / சீவன்
 • ஞானம் = பெறும் அறிவு – சிவ ஞானம்
 • ஞேயம் = காணப்படும் பொருள் –  சிவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 15 (2019)

பாடல்

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலைபெற லாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவானந்தத்தில் நிலை பெற்று இருந்தால் அறிவுத் திறனை ஆணவம் மறைக்காது; அப்படி மறைக்க முயன்றாலும் குருவின் அருளால் அகங்காரம் நீங்கும் என்பது பற்றியப் பாடல்.

பதவுரை

உயிர்களே என்றும் விட்டு நீங்காததும், நலம் தரக்கூடியதும், பேரின்பத்தை தருவதுமான சிவபரம் பொருளைத் தியானித்தல் உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கும் ஆன்மாவை அணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங்கள்  மீளவும் தொடர்ந்தும் பற்ற மாட்டாது. அவைகள் சில நேரங்களில் பழைய வாசனையின் காரணமாக  மீண்டும் வந்து பற்ற முற்பட்டால் திருவருளின் துணையினால் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி, ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையில் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்களாகவே வாழ்வர்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 7 (2019)

பாடல்

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – ஊனினை நீக்கி உணர்தல் என்பது குருபூசையால் பெறப்படும் என்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

காட்டில் மிகுந்தும், பொருந்தி உள்ளதும், நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தை தருவதுமான கோடிக் கணக்கான சந்தன மரங்களின் கட்டைகளைத் தேய்த்தும், ஆகாயம் அளவு குவிக்கப்பட்டதும், பெருமை மிக்க மலர்களையும் கொண்டு சிவனை வழிபட்டாலும், உடம்பை தம்மில் இருந்து வேறாக உணர்ந்து, உடம்பை தம்மில் இருந்து வேறாக உணர்ந்து, அதனால் உடல் மேல் உள்ள பற்றை விடுத்து, சிவனையே பற்றாக உணர்பவர்க்கள் அல்லாது  ஏனையோர்க்கு அவனது, தேன் நிறைந்த செந்தாமரை மலர்போலும் திருவடியைச் சேர இயலாது.

விளக்க உரை

 • ஊனினை நீக்கி உணர்தல் என்பது குருபூசையால் பெறப்படும் என்பதும், ‘சிவபூசைக்கு முன்னே குருபூசை செய்தல் இன்றியமையாதது’ என்பதும், ‘சிவபூசையும் குருவருள் பெற்றே செய்யப்பட வேண்டும்’ என்பதும், `சிவனை அவ்வாறு உணரும் உணர்வை குருவருளால் அன்றி அடைய இயலாது` என்பதும் குறிப்பு.
 • உறுதல் – உண்டாதல், மிகுதல், சேர்தல், இருத்தல், பொருந்தல், கூடல், நேர்தல், பயனுறல், கிடைத்தல், வருந்தல், தங்கல், அடைதல், நன்மையாதல், உறுதியாதல், நிகழ்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 5 (2019)

பாடல்

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்தி ஆகியவை இரு பொருள்கள் ஆகாமல் ஒன்றாய் இருக்கும்  சொரூப நிலை பற்றி உரைத்தப் பாடல்

பதவுரை

சிவத்தை விட்டுத் தனியாய் இல்லாமலும், சிவம் விடுத்து தனியே இயங்காமலும் இருக்கும் சத்தியானது, உலகம் செயற்படுதன் பொருட்டு,  சிவத்தினில் தோன்றி வேறு நிற்பது போல இருக்கிறது என சொல்லப்பட்டாலும், சத்தியானது எஞ்ஞான்றும் தனித்து நிற்காமல், மணியில் ஒளிபோலச் சிவத்தோடு எப்பொழுது ஒன்றி நிற்கும்; எனவே, `சிவபேதம், சத்திபேதம்` எனப் பிரித்து வழங்குதல் என்பது, அறிவு, செயல் என்னும் வேறுபாடு கொண்டு கொள்ளப்படும் தொழில் என்பன பற்றியதே; இவ்வாறான தன்மை உடையதும், தன்னில் இருந்து  வேறு ஆகாததுமான சத்தியை ‘அதுதானே எல்லாம் செய்யவல்லதாக நிறுத்தி உலகம் செயற்படுதற்கு வழியை உண்டாக்கிய அந்தப் பெரும்பொருளாகிய முதல்வனை, `இப்படிப்படவன், இந்த நிறமுடையவன்’ என்று சொல்லால் சொல்லி விளக்க முற்பட்டால் , அஃது ஒருவனாலும் செய்ய  இயலாது. ஏனெனில், விளக்கப்படும் சொற்களுக்கும், அந்தப் பொருட்கும் இடையேயுள்ள வெளி மிக மிக நீண்டது.

விளக்க உரை

 • கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் – கண்ணில் ஒளி போல் இருக்கும் என்று பொருள் உரைப்பாரும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 16 (2019)

பாடல்

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

ஒரே வகை மண்ணாலே இரண்டு பாண்டங்கள் செய்யப்பட்டன. தீய வினைகளின் காரணமாக ஒன்று தீயினால சுடப்பட்டது; மற்றொன்று சுடப்படாமல் இருந்ததால் வானில் இருந்து மழை வீழ்ந்ததால் அது கரைந்து மண்ணோடு கலந்து மண்ணாகி விட்டது. இது போல் எண்ணிக்கையில் அடங்காத அளவில் மனிதர்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து பின் இறக்கின்றனர்.

விளக்க உரை

 • யாக்கை நிலையாமை தன்மை உடையதால் , மானுடப் பிறப்பின் பயனை அடைய முயலுதலை தள்ளி வைத்துப் பின்னர்ச் செய்வோம் என நினையாது, விரைந்து செய்தல் வேண்டும் என்பது குறித்து கூறப்பட்டப் பாடல்.
 • குறிக்கோள் – ஆறாம் அறிவு கொண்டு எடுத்த  மக்கள் பிறப்பின் பயனாகிய மெய்யுணர்வை அடைந்து, யோகம் முதலியவற்றால் உடம்பை நெடுங்காலம் நிலைப்பெறச் செய்தல்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 8 (2019)

பாடல்

தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே
அளித்து ஆங்கு அடைவது எம் ஆதிப் பிரானை
விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங்கு அருள் செய்த தூய் மொழியானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

சிவபெருமானை இகழ்ந்தமையால்அப்பொழுதே இறந்தவனாகிய தக்கனது வேள்வியை அழியுமாறு செய்தும், பின் இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டுஅழிந்த அனைவரையும் மீண்டு எழுமாறு வாழ்த்தியும்  அருளிச் செய்த வாய்மையை உடைய எங்கள் உமாதேவியே, யார் தங்கள் மனத் துணிவை இழந்து, நிலைகலங்கி, பிறரைச் சார்ந்து இருந்த போதிலும், நீ உன்னுடைய நிலை கலங்காமலே நின்று அன்போடு அணைவது எங்கள் சிவபெருமானையே அன்றோ!

விளக்க உரை

 • இறை அருளோடு செய்யப்படும் வேள்வியின் தத்துவம் மற்றும் அவற்றின் பலன் குறித்தது இப்பாடல்.
 • அளிந்து – குழைந்து
 • சுளிந்து – வெகுண்டு
 • தூய் மொழியாள் : உமை.
 • தக்கன் வேள்வி, உமை அம்மை அறிவுரை, வீர பத்திரர் தோற்றம் போன்றவற்றை கந்த புராணம் மூலம் அறிக.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 2 (2019)

பாடல்

மாய விளக்கது நின்று மறைந்திடுந்
தூய விளக்கது நின்று சுடர்விடுங்
காய விளக்கது நின்று கனன்றிடுஞ்
சேய விளக்கினைத் தேடுகின்றேனே

பத்தாம் திருமுறை –  திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

மாயாகாரியமாகிய உடல், உலகு, ஊண் முதலிய பொருள்கள் விளக்குப்போல் நம் வாழ்க்கைக்குத் துணையாக இருந்து  காலவரையறைக்கு உட்பட்டு மாயும். பேரின்பப் பெருவாழ்வினைத் தருவதும், செம்மையான விளக்கானதும், திருவடிப்பேற்றினை தருவதுமான தூய விளக்காகிய சிவன் திருவடியானது விளக்காக நின்று உயிர்களுக்கு முற்றுணர்த்தி வினைகளை விளக்கி நீக்கம் செய்விக்கும். திருவருள் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவித்து வருவதால் காயவிளக்கு சுடர் பெறும். எனவே அந்த திருவிளக்கினை அருளால் நாடி, அடைய அதைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.

விளக்க உரை

 • தோன்றிய அறிவால் ஆன்மரூபத்தின் வழி தத்துவ தரிசனத்தைச் செய்து, திருவருளை நாடவேண்டும், திருவருளே ஞானக்கண் என்பது பற்றியது
 • சேய – செம்மையான
 • கனற்றுதல் – வெதுப்புதல்; துன்பம் தருதல்
 • மாய விளக்கு  – இயற்கை ஒளி
 • தூய விளக்கு   – ஞான ஒளி
 • காய  விளக்கு  – உள் ஒளி
 • சேய விளக்கு  – சிவ ஒளி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 23 (2019)

பாடல்

நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

தோற்பை போன்றதாகிய இந்த உடம்பினுள் இருந்து பல தொழில்களையும் செய்விப்பவனாகிய கூத்தன், இந்த உடலை விட்டுப் புறப்பட்டுப் போனபின் அந்த உடம்பை நாரினாற் கட்டி இழுத்தால் என்ன,  நன்றாகத் தூய்மைசெய்து அடக்கம் செய்தால் என்ன,  கண்ட இடத்தில் போட்டால் என்ன, அதனாற் பலரும் பழித்தாற்றான் என்ன; அதனால் வருகின்ற பெருமை சிறுமைகள் ஒன்றுமில்லை.

விளக்க உரை

 • தோற்பை – இழிவு தோன்றுதலின் பொருட்டு
 • அசைவோன் அவனே; ஆதலால் இந்த உடம்பில் ஒன்றுமில்லை; ஆதலால் இவ்வுடலை பாதுகாத்தல் பொருட்டு அந்த உயிரை ஓம்பும் அறச்செயல்களைக் கைவிடற்க எனும் பொருள் பற்றியது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 17 (2019)

 

பாடல்

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால்
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

வீடு பேறு ஆகிய முக்தியும், அது கைகூடுதல் ஆகிய சித்தியும் பற்றி நின்று, ஞானத்தின் பயனாகச் சிவனிடத்தில் பேரன்பு செய்து, அவனிடத்தில் பக்தி கொண்டு, அவனது பெருங்குணமாகிய பேரானந்தத்தில் திளைத்து, ஆன்மாக்கள் போல் உடல் எடுத்துப் பிறப்பு இறப்புகளுக்கு உட்படாதாகிய சகலாவத்தை எனும் சகலத்தில் நின்று, பின் அதன் மா பெரும் சக்தி ஆகிய ஆற்றலால் சிவத்துள் நின்று ஆராய்கின்ற மெய்ப்பொருளைத் பெற்று, சத்தாவத்தை ஆனதான  சீவான்மாவுக்கு நிகழக்கூடிய அறியாமை, ஆவரணம், விட்சேபம், பரோட்சஞானம், அபரோட்ச ஞானம், சோகநிவர்த்தி, தடையற்ற ஆனந்தம் என்னும் ஏழுவகை நிலைகள் கடந்து நின்ற ஞானியர் ஆவர்.

விளக்க உரை

 • நின்மலாவத்தையைக் கடந்து பராவத்தையை அடைந்தவர்கள், அந்நிலையினின்று இறங்கினாலும், சிவயோக நிலையினின்றும் இறங்க மாட்டார்கள் என்பது பற்றியது.
 • ஓர்த்தல் – ஆராய்தல்
 • தத்துவம் – மெய்ப் பொருள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 7 (2018)

பாடல்

போகம்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

அடியார்கள் நாள்தோறும் தங்கள் மனத்தினால், கடைகுழன்று சுருண்ட கூந்தலை உடையவளும், இன்பம் தரத் தக்கவளுமாக திரிபுரையை தியானிக்க, அங்ஙனம் தியானிக்கும் அடியவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, மெய் ஞானமாகிய கொடி படருவதற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தி,  திரோதான சத்தியாக  நின்று, பின் அருள் சத்தியாகவே விளங்குவாள்.

விளக்க உரை

 • திரோதான சத்தி, அருள் சத்தி என வேறு வேறு ஆகாமல்  அருள் சத்தி இயல்பும், திரோதான சத்தி  பயனும் உணர்த்தப் பெறும்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 18 (2018)

பாடல்

வாசியும் மூசியும் பேசி வகையினால்
பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

வாசி யோகத்தின் பெருமைகளையும்,  கண்களை மூடி அதன் பெருமையையும் நூல்களால் உணர்ந்து அவற்றை வகை வகையாக விரித்துரைப்பவனைப் போல, விரித்துரைத்துக் கொண்டு காலம் போக்குவதில் பயனில்லை. ஆகையால் நீவிர் உயிர் பொருள்கள் மேல் செல்லும் ஆசையையும், அதனோடு இணைந்து  செல்லும் அன்பினையும் அடியோடு நீக்குங்கள். நீக்கினால் நீங்கள் ஈசன் இருப்பிடத்தை எளிதில் அடையலாம்.

விளக்க உரை

 • மூசுதல் – மூடுதல். மூசி – மூடியிருப்பவன். மூடப்படுவன கண்கள்.
 • அன்பு இல்லறத்தார்க்கே உயிராவதால் அன்பு நீக்கப்பட வேண்டியது. (ஞானியர்களுக்கு அருளே உரித்தாதல் பற்றியது)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 16 (2018)

பாடல்

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாயச் சொரியுமே

பத்தாம் திருமுறை –  திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

பிரமனால் படைக்கப்பட்டு சரீரம் கொண்ட ஆருயிர்களின் அகமாகிய உடம்பில் பாலினைத் தரும் பசுக்கள் ஐந்து உள்ளன. அவை அறிவுக்கு புலனாகும்  மெய், வாய், கண், மூக்கு, செவி. அப் பசுக்களை மேய்த்தருள்பவன் சிவன். மேய்ப்பார் இன்மையாலே அப்பசுக்கள் உலகியல் புலன்களில் ஆருயிர்களை ஈர்த்துச் செல்வதால் அவைகள் வெறித்துத் திரிகின்றன. அப் பசுக்களை மேய்ப்பானாகிய சிவ பெருமான் வெளிப்பட்டு காத்து அருளினால்  அப்பசுக்களுக்கு வெறியடங்கும். வெறியடங்கினால் அப் பசுக்கள் அந்த உயிர் சிவப்புலனை நுகருமாறு துணை நிற்கும். புலன்கள் திருவடியின்பத்தினை நுகரத் துணைநின்று அப்புலன்களும் சிவ வண்ணமாகும்.அப்பொழுது பசு கரணங்கள் பதி கரணங்களாகத் திரியும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 1 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : சிலம்பு

 

 

ஓவியம் : Wikipedia

பாடல்

அங்கே அடற்பெருந் தேவரெல் லாந்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தான்என்று
சங்கார் வளையும் சிலம்பும் சலேல்எனப்
பொங்கார் குழலியும் போற்றிஎன் றாளே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

‘எந்த உயிருக்கு ஆணவமாகிய குற்றம் நீங்கி மல பரிபாகம் எனும் பக்குவம் வந்ததோ, அந்த உயிரின் உள்ளத்திலே வலிமையும், பெருமையும் உடைய அனைத்துத் தேவர்களும் தொழும்படி சிவபெருமான் வீற்றிருக்கின்றான்` என்பதை உணர்ந்து, பொங்குதல் நிறைந்த குழலை உடையவளான  அருள் சத்தியாகிய தேவியும் சங்கினையும், வளையினையும், சிலம்பினையும் அணிந்து அவைகள் ஒலிக்குமாறு விரைவில் சென்று அங்கே மகிழ்ச்சியோடு அப்பெருமானை வணங்குவாள்.

விளக்க உரை

 • ஈசனின் வழிபற்றி அவன் தன்மையில் அம்மையும் அருளுதல் செய்தலை விளக்கும் பாடல்
 • ‘அங்கே’ – சிவன் அங்கே எப்பொழுதும் இருப்பினும் கள்வன்போல ஒளித்திருந்து, பின் வெளிப்பட்டமை பற்றியது
 • சிங்காசனத்தே சிவபெருமானைக் கொலுவிருப்பவன் போலக் கூறியதும், அருட்சத்தியை மகிழ்பவள்போலக் கூறியதும் உயிர்கட்கு மல பரிபாகம் வருவித்தலே அவர்களது குறிக்கோள்.
 • சலேல் – ஒலிக் குறிப்பு; ஓடி வருதல்
 • நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்புவதும், நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பினை, சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் அணிந்தனர். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த அணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று அமைக்கப்பட்டு,  உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும்.  (கழல் –  ஆண்கள் அணியும் சிலம்பு வகை)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 2 (2018)

பாடல்

வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பாரபரச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலைவிய ளாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

அம்மையானவள், அருளால் தோற்றுவித்துள்ள உலகமும் மற்றும் உண்பொருள்களும் அந்த உண் பொருள்களுடன் இணைந்த அழிவில்லாத பலவுயிர்களும், எண் திசைகளுடன் கூடி மேல் மற்றும் கீழ் இணைந்த பத்துத்திசையிலும், நிறைந்து நின்று இயக்கும் தன்மையால்  பத்து முகம் உடையவளாகவும், சிவசக்தி வடிவமாகவும், சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி  முதலிய நால்வகை வாக்குகளும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்களது உயர்வும், தாழ்வுமாகிய எண்ண அலைவுகளும், அவ் எண்ணங்களின் வழி நிகழ்கின்ற செயலாகவும் நிற்பாள்.

விளக்க உரை

 • திரிபுரை வழிபாட்டு முறைகளும், அவற்றின்  பயன்களும் விளக்கப்பட்டுள்ளது
 • வித்தை – திருவடியுணர்வு; மெய்யுணர்வு; பதிஞானம்; பிரம வித்தை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 1 (2018)

பாடல்

கொம்பு அனையாளை குவிமுலை மங்கையை
வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம் பவளத் திருமேனிச் சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

பூங்கொம்பு  கொம்பு போன்ற துவளும் இடையினை உடையாளை, குவிந்த அழகிய தனங்களையுடைய மங்கையை, மணம் வீசுகின்ற மலர்சூடிய கூந்தலை உடையவளை, தேவர்களால் விரும்பிப் பூசிக்கப்படுபவளை, செம்மையான பவழம் போன்ற திருமேனியை உடைய ஆகிய திரிபுரையை பெருந்துணையென்று உறுதியாக நம்பி மிக விரும்பி என் உள்ளத்துள் வைத்தேன்.

விளக்க உரை

 • திரிபுரையின் தியானச் சிறப்பு பற்றிக் கூறப்பட்டப் பாடல்
 • சிறுமி – கௌரி; எட்டு அல்லது பத்து ஆண்டுப் பருவப்பெண்.
 • வானவர் நாடியை – தேவ வாழ்வினை உடையவள் என்றும் சில இடங்களில் விளக்கப்பட்டுளது. தேவ வாழ்வினை கொண்டவள் ஆயினும் அவள் எப்பொழுதும் சிறுமியாக இருக்கிறாள்.
 •  `மென்கடிக் குங்கும தோயம் என்ன’ எனும் அபிராமி அந்தாதி பாடலுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 31 (2018)

பாடல்

போகம் செய் சத்தி , புரிகுழ லாளொடும்
பாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும்,
ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள்தோறும்
பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரை ஆனவள், உயிர்களுக்கு இன்பத்தைத் தருபவள் சக்தி; திரண்டு சுருண்ட நீண்ட கூந்தலை உடைய பராசக்தி ஆகி உயிர்களை பக்குவப்படுத்துவாள்; அடியார்கள் தினம்தோறும் தங்கள் உள்ளத்தில் அவளை தியானிக்க, அவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, உண்மை ஞானமாகிய கொடி படருவதற்கு  ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தி ஆனவள்.

விளக்க உரை

 • சிவபெருமானுடைய பஞ்ச சத்திகளுள் ஒன்றானதும்,  ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களை தந்து உண்மையை மறைத்தல் செய்யும் சத்தி ஆகிய திரோதான சத்தியும்,  அருள் சத்தியும் வேறு வேறு அல்ல என்பதைக் கூறும் பாடல்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 30 (2018)

பாடல்

பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை உணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனாம்
புராசத்தி புண்ணிய மாகிய போகமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

திரிபுரை ஆனவள், எங்கும் வியாபித்து, மாபெரும் சக்தி ஆனவள்; எல்லா வகையிலும் எல்லாவற்றுக்கும் ஆதாரமானவள்; அதோடுமட்டுமல்லாமல் அதில் எல்லாவற்றிலும் பொருந்தி அதன் மெய் உணர்வு வடிவகமாக இருப்பவள்; திரிவுபடும் ஊழி எனப்படும் மிக நீண்ட காலத்தில் உயிர்களிடத்தில் உடனிருந்து நின்று அதன் புண்ணியப் பலன்களை அருள்பவள்.

விளக்க உரை

 • பராசத்தி – எங்கும் வியாபித்துள்ள சத்தி.
 • தராசத்தி – ஆதாரசத்தி, தாங்கும் ஆற்றல்
 • உராசத்தி – பொருந்தும் சத்தி.
 • புராசத்தி – திரிபுரை.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 29 (2018)

பாடல்

தான்எங் குளன்அங் குளள்தையல் மாதேவி
ஊன்எங் குளஅங் குளஉயிர் காவலன்
வான்எங் குளதங் குளேவந்தும் அப்பாலாம்
கோன்எங்கும் நின்ற குறிபல பாரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

எங்கெல்லாம் சிவம் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் சிவத்துடன்  உடன் இருப்பாள் சக்தி; எங்கெல்லாம் உடல் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் சிவத்துடன் அந்த உடல் சார்ந்திருக்கும் உயிருக்குக் காவல் ஆவாள்; எங்கெல்லாம் வான் எனும் ஆகாசம் உள்ளதோ அந்த இடங்கள் அனைத்திலும் விளங்கி, அதைத் தாண்டிய பரவெளியிலும் சிவனோடு நிறைந்து நிற்கும் அடையாளங்களை ஆராய்ந்து அறிவாயாக!

விளக்க உரை

 • குறி, வடிவம் – சிவனது வடிவங்கள் யாவும் சத்தி ஆதல் என்பது பற்றி கூறப்பட்டப் பாடல். அஃதாவது சத்தியும் சிவமும் உலகில் எவ்வித பேதமும் இல்லாமல் நின்ற நிலையைக் கூறுதல்.
 • உயிர்களுக்கு உடல்  ஆதாரமாக இருப்பதும், எல்லா பொருள்களுக்கும் வானம் ஆதாரமாக இருப்பதும் வெளிப்படை. (சைவ சித்தாந்த கருத்துப்படி).

சமூக ஊடகங்கள்
1 2 3