அமுதமொழி – விகாரி – ஆனி – 31 (2019)


பாடல்

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல ஏன்றிடும் கன்னி என் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – திரிபுரை ஒன்றொடு ஒன்று ஒவ்வாத நிலைகள் பலவற்றையும் உடையவள் எனக் கூறும் பாடல்.

பதவுரை

என்னை வழி நடத்துபவள் என்று  முன்னால் அழைக்கப்பட்ட தலைவியான  திரிபுரை பால் சுரந்து விம்ம நிற்றலால் கூடிய அருள் பெருக்கு, இளமையாக இருத்தல் ஆகிய காரணங்களால் கொங்கைகள் விம்ம பேரழகுடன் நிற்பவள்; கலைகள் அனைத்தையும் தனதாக்கிக் தன்னுள் தானே அடக்கி நிற்பவள்; பற்றற்று இருப்பவள். இவ்வாறான அவள் என் மனம் நிலைத்தன்மை பெறுவதற்காக என் உள்ளத்திலே நீங்காது நிறைந்து நிற்கின்றாள்.

விளக்க உரை

 • கலை – நூல்களை அடக்கி நிற்றல் என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரனை முன்வைத்து 16 கலைகளை உடையவள் என்று சாக்தத்தில் சில இடங்களில் கூறுப்படுவதாலும், அனைத்து கலை வடிவங்களுக்கும் முன்மாதிரியாக இருப்பதாலும் ‘நூல்களை அடக்கி நிற்றல்’ எனும் பொருள் விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • கன்னி – குமரி, இளமை, புதுமை, முதன்முதலான நிகழ்ச்சி. கன்னிப்போர், அழிவின்மை, பெண், தவப் பெண், என்றும் இளமையழியாத பெண்-சப்தகன்னியர், துர்க்கை, பார்வதி, குமரியாறு, கன்னியாராசி, புரட்டாசி மாதம், அத்தம் நட்சத்திரம், தசநாடியிலொன்று, கற்றாழை, காக்கணம்
 • தையல் – தைப்பு, தையல் வேலை, அலங்காரத் துணி, புனையப்படுவது, கட்டழகு, மேகம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 18 (2019)


பாடல்

பிணங்கவும் வேண்டா பெருநிலம் முற்றும்
இணங்கிஎம் ஈசனே ஈசன்என் றுன்னிக்
கணம்பதி னெட்டும் கழலடி காண
வணங்கெழும் நாடிஅங்(கு) அன்புறல் ஆமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சிவனிடத்தில் அன்பு செய்து உய்யும்  நெறியைக் கூறும் பாடல்.

பதவுரை

பெரிய நிலவுலகத்தவர்களும், வானுலகத்தில் வாழும் தேவர்கள், சித்தர்கள், அசுரர், தைத்தியர்கள், கருடர்கள், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், இயக்கர்கள், விஞ்சையர், பூத கணங்கள், பிசாசர்கள், அந்தரர், முனிவர்கள், உரகர்கள், ஆகாய வாசியர், போக பூமியர் ஆகிய பதினெண் கணங்களும்,  எங்கள் இறைவனாகிய ஈசனையே `பரம்பொருள்` என எண்ணத்தால் உடன்பட்டும் மனத்தால் நினைத்தும் அவன் திருவடியைக் கண்டு வாக்கால் வாழ்த்தியும் தலையால் வணங்கியும் பயன் பெற முயல்கின்றனர். இதனை  நன்கு மனதால் சிந்தித்து அவனிடத்தில் அன்பு செய்யுங்கள்.

விளக்க உரை

 • சப்தரிஷிகள் & வாலகில்யர்கள், தேவர்கள், அரம்பையர்கள், அசுரர்கள், தானவர்கள், தைத்தியர்கள், நாகர்கள், கருடர்கள், கிண்ணரர்கள், கிம்புருசர்கள், யட்சர்கள் & யட்சினிகள், வித்தியாதரர்கள், அரக்கர், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், பூத கணங்கள், பிசாசர்கள் என்று வேறு சில இடங்களில் பதினெண் கணங்கள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 4 (2019)


பாடல்

ஓடும் இருக்கும் கிடக்கும் உடனெழுந்து
ஆடும் பறக்கும் அகண்டமும் பேசிடும்
பாடும் புறத்தெழும் பல்லுயிர் ஆனந்தம்
கூடும் பொழுதிற் குறிப்பிவை தானன்றே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவபெருமானின் திருவடிப் பேரின்பம் கிடைக்கப்பெற்றவர்களின் சில செயல்களைக் கூறும் பாடல்.

பதவுரை

திருவருளால் பல உயிர்களுக்கும் சிவபெருமானின் திருவடிப் பேரின்பம் கைகூடிய காலத்தில் அந்த இன்பமானது அருள் கதிராய்ப் புறத்தில் தோன்றும். தான் எனும் நிலை அற்ற நல்ல தவம் உடையோருக்கு அந்நிலையில் அந்த உயிர்களின் செய்கைகளை அளவிட்டுக் கூறுதல் இயலாது. பக்குவப்பட்ட அந்த உயிர் ஓடும்; இருக்கும்; கிடக்கும்; உடனே எழுந்து ஆடும்; விரும்பி  பறக்கவும் செய்யும்; ஓர் இடத்தில் இருந்துகொண்டே எல்லையின்றிப் பரந்த உலகங்களின் நிகழ்வுகளை எல்லாம் ஒன்றும் விடுபடாமல் உரைக்கக் கூடிய ஆற்றல் பெருகும் பண்ணொடு பொருந்தப் பாடும்; இவ்வாறான சில குறிப்புகளால் அந்த உண்மை புலனாகும்.

விளக்க உரை

 • நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்னாதன்
  தன்செயல் தானேயென் றுந்தீபற
  தன்னையே தந்தானென் றுந்தீபற

எனும் திருவுந்தியாரின் பாடலும் ஒப்பு நோக்கி உணர்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆனி – 1 (2019)


பாடல்

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந் தேழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றொனொ டொன்றிநின் றொத்தடைந் தாள

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துதிரிபுரை அன்பர்களையே அடைதல் பற்றி கூறப்பட்டப் பாடல்.

பதவுரை

எனது உள்ளத்திலே நிறைந்து நிற்பவளாகிய பெண்வடிவனாமான மனோன்மனி எனும் திரிபுரை, மனதில் ஒன்றியவளாகவும், திசைகளை ஆடையாகக் கொண்டவளாகவும், அழியாத மங்கலத்தை உடையவளாயும் இருக்கிறாள்.  அருளும் தன்மைக்கு ஏற்றவாறு பல வகைப்பட்ட தேவியின் வடிவங்களாக என் உள்ளத்தில் பொருந்தியும், உலகம் எல்லாம் வணங்கும்படியாக அம்பலத்தில் நின்றும் அவளையே பற்றி நிற்கின்ற என்னிடத்தில் யான் வேறு, அவள் வேறு எனும் வேறுபாடு இல்லாமல் நிற்க இசைந்து, வந்து நின்றாள்.

விளக்க உரை

 • நேரிழை – பெண்
 • நீள்கலை – நீண்ட ஆடைகள்.(திசைகளை ஆடையாகக் கொண்டவள் எனவும் கொள்ளலாம்.
 • கலை – கூறு
 • ‘அகம் படிந்து’,’மன்றது ஒன்றி’ – அகத்தும் புறத்தும் விளங்குபவளாக தெரிதல்
 • ஒத்தல் – உள்ளம் ஒத்தல்
 • ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்‘ என்பதனை `ஒத்து அடைந்து ஒன்றி நின்றாள்“ எனப் பின் முன்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டுக என சில இடங்களில் விரிவுரை எழுதப்பட்டு இருக்கிறது. அவள் அடியவரை அடைந்து பின் ஒன்றி நின்றாள் எனும் பொருள் படுமாறு வருகிறது. அன்னை அனைத்து உயிர்களின் வடிவமாக இருப்பதாலும் மாறுதல் கொண்ட எண்ணங்களை மாற்றி நிற்பதாலும் ‘ஒன்றி நின்று ஒத்து அடைந்தாள்’ எனும் பொருளில் இங்கு விளக்கப் பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – வைகாசி – 5 (2019)


பாடல்

பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் –  திருமூலர்

கருத்துதிருவைந்தெழுத்து ஆனது போகம் வேண்டுவாருக்கு போகத்தையும், முக்தி வேண்டுவாருக்கும் முக்தியையும் தரும் என உணர்த்தும்

பதவுரை

திருவைந்தெழுத்தை ஓதுபவரிடத்தில் மாறுபாடுகளையும், வெறுப்பினையும் ஏற்படுத்தும் பகை, பணிதலைக் கொண்ட பெரியோர்களை இகழும் இகழ்ச்சி, நல்வினை தீவினை ஆகிய இருவினைகள்,  பொருந்தாச் செயல்கள், இடையூறு, மூப்பு, தடை, தளர்ச்சி, வஞ்சனை, நடுக்கம் மற்றும் மாறுபாடு இவைகள் என்பவை இல்லை; நாள்தோறும் நன்மைகளே விளையும். அம்மந்திரமே மலத்தை முற்றிலும் கழுவித் தூய்மையைத் தரும்.

விளக்க உரை

 • பகை – எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன் பகை கொள்ளுகை; கோளின் பகைவீடு; காமகுரோதம் முதலிய உட்பகை
 • பணிந்தவர் – பணியப்பட்டவர்
 • விருத்தம் – வட்டம், சொக்கட்டான் ஆட்டத்தில் விழும் தாயவகை, பாவினம் மூன்றனுள் ஒன்று, ஒழுக்கம், செய்தி, தொழில், ஒரு சிற்ப நூல், நிலக்கடம்புச்செடி, ஆமை, வெள்ளெருக்கு, மூப்புப்பருவம், பழைமை, அறிவு, முரண், பகைமை, குற்றம், பொல்லாவொழுக்கம், இடையூறு, ஏதுப்போலிகளுள் ஒன்று, கூட்டம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – சித்திரை – 21 (2019)


பாடல்

பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி
அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர
உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – அதிபக்குவம் உடையவர்கள் அருளை ஈயும் குருவை காணும் வழியையும், அவரை அடையும் வகையும் பற்றி கூறப்பட்டப் பாடல்.

பதவுரை

யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும்பி அடியேன் வருந்தி துடித்து ஒழிந்தேன்; அந்த விருப்பின் காரணமாக உம்மை அடைந்த யான் இனி ஒருவரோடும் சேரமாட்டேன்; அவருடனான சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன்; ஆகையால் அடியேனது வினைகள் அழிந்து ஒழியும்படி செய்து, என்னை ஏற்றுக் கொண்டு, என் தலையில் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டு அருள்வீர்.

விளக்க உரை

 • பக்குவம் உடைய ஆன்மாக்கள் பரம குருவைக் கண்டவுடன் பணிந்து இரப்பர் என்ற பொருளில் அவர்களின் கூற்றாக இப்பாடல்
 • அறக் கருணைசெய்து ஆட்கொள்ளாவிடினும், மறக் கருணை செய்தேனும் ஆளுதல் வேண்டும் என்று கூற ‘திருவடி சூட்டி’ என உயர் சொல் உரையாது, ‘உதைத்து` எனத் தாழ்சொல் உரைத்த முறை கண்டு அறிக.
 • பதைத்தல் – துடித்தல், வருந்துதல், நடுங்குதல், ஆத்திரப்படுதல், செருக்கடைதல்
 • அகைத்தல் – வருத்தல்; முறித்தல்; அறுத்தல்; உயர்த்தல்; அடித்தல்; ஓட்டுதல்; எழுதல்; தழைத்தல்; கிளைத்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 24 (2019)


பாடல்

தன்னது சாயை தனக்குத வாதுகண்
டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசெல்வம் நில்லாது; நின்றபொழுதும் உதவுதல் இல்லை என்று கூறும் பாடல்

பதவுரை

தமது நிழல் ஆனது தம் வெயிலின் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டும்,  அறிவிலாதவர்களாகிய வறியவர்கள், தமது செல்வமானது தம் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்து இருக்கின்றனர். உணரப்படுவதாகிய உயிர், காணப்படுவதாகிய உடம்பு இரண்டும் ஒன்றாய்ப் பிறந்தாலும், உயிரானது உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டொழிகின்றது. அவ்வாறு இருக்க வினைகளுக்கு வேறாய் இடையே வந்த செல்வமோ நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்! ஆகவே நிலை பெறுவது செய்வதாகிய மெய்ப் பொருளைக் காணும் ஆற்றல் உங்கள் கண்ணில் உள்ளது கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டுகொள்ளுங்கள்.

விளக்க உரை

• முதல் தந்திரம் – செல்வம் நிலையாமை
• காணொளி – அகக் கண்ணால் காணக்கூடிய ஒளி. குரு முகமாக அறிக.
• ‘கண்ணது காணொளி’ – பிறர் அறிவிக்க வேண்டாது நீங்களே எளிதின் அறிதல் கூடும்` என்று பொருள் உரைப்பார்களும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
• ‘வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்
கையிற்பொருளும் உதவாது காணுங் கடைவழிக்கே
எனும் அருணகிரிநாதர் கந்தரலங்காரப் பாடலும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
• மாடு – செல்வம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 10 (2019)

பாடல்

 

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துநந்திகள் நால்வரும் நிலவுலகத் தொடர்பு உடையவராக ஆகியது பற்றிய பாடல்.

பதவுரை

தன்னைவிட்டு இமையளவும் பிரிய விரும்பாத நந்திகள் நால்வர்க்கும் (சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர்) தலைமைப்பாடுடையவனும் திருவருள் செய்பவனும் பவழம் போன்ற குன்றனைய குளிர்சடையோன் ஆகிய சிவனாவன்,பெரியதான எண் திசையிலும் மேகங்கள் கடல்நீரை முகந்து பெய்யினும் அதற்குக் காரணம் முன்பு நீங்கள் செய்திட்ட நியமங்களை  நன்றாக ஆற்றியதே ஆகும்.  ஆதலால் மேலும் தொடர்ந்து அதனை நன்றாகப் புரியுங்கள் என்று அருளினான்.

விளக்க உரை

 • அஃதாவது உலகம் அழிகின்ற ஊழிக் காலத்திலும் நீங்கள் நம்மை வழிபட்டிருப்பீராக என்று அருளினான்.
 • நல்ல முறையில் உழைத்து ஈட்டப்பெற்ற நல் ஊதியம் மற்றும் பொருளானது அறத்தையும் இன்பத்தையும் தரும். அவ்வாறு பெறப்பட்ட அறமும் இன்பமும் தொடர்ந்து நிகழ்வதற்கு நடைமுறையில் அப்பொருளை மேன்மேலும் ஈட்டுதல் பற்றியே ஈசனின் அருளியது.
 • நாலவர் மரபில் சனற்குமாரர் மரபாகிய மெய்கண்ட மரபு ஒன்றுமே நிலை பெற்றுள்ளது.
 • ஆசிரியர் மரபுவகை பலவற்றையும் கூறிய திருமூலர் அவற்றுள் ஒன்றின் முதல்வராகிய தாம் தமது நெறிப்பொருளை உலகிற்கு உணர்த்துதல் பொருட்டுச்  தம் வரலாற்றையே கூறுகின்றார்.
 • சனத்குமாரரே மாணிக்கவாசகராக அவதாரம் செய்தார் என்பது பற்றியும், அவரே மெய்கண்டாராக அவதாரம் செய்தார் என்பது பற்றியும் இருக்கும் விஷயங்களில் இருக்கும் மெய் அறிந்து உணர்க.
 • எழுந்து – முகில்கள் கடல்நீரையுண்டு விண்ணில் எழுந்து.
 • தண் – அமைதி.
 • அழுந்திய – திருவடி அன்பில் உறுதியாய உள்ள நால்வர் (  நன்னெறியாகிய சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நிலை நான்கினையும் கைக்கொண்டோர் எனவும் கொள்ளலாம்)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 6 (2019)

பாடல்

உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசத்தியைப் பெறுதற்குரிய வழியினைக் கூறும் பாடல்.

பதவுரை

நீண்டதொரு காலப்பகுதி ஆகிய ஊழிகளையும், அதனைப் போல பல ஊழிகளையும் ஆக்குபவளாகிய சத்தியை உணர்தலே `பேரறிவு` எனப்படுவதும், முற்றுணர்வு எனப்படுவதும் ஆன பூரணம் ஆகும். இவ்வாறான சக்தியை சிவனுடன் இணைத்து உணராமல்  சிவனைத் தனித்து நிற்பவனாகக் கருதுவோர் சிவனையும் உணராதவரே; தன்னை அடைகின்ற புண்ணியம் உடையவர்களைத் தனது அருள்வடிவாகச் செய்கின்ற சத்தி, பலரைப் புண்ணியராகச் செய்தற்கு ஆக்கியுள்ளவழி பிராணனை யோகமுறையில் மூச்சடக்குதலே ஆகும்.

விளக்க உரை

 • ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
 • கும்பித்தல் – யோகமுறையில் மூச்சடக்குதல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 29 (2019)

பாடல்

கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத் திடையில்நின் றானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் –  திருமூலர்

கருத்துஅட்டாங்க யோகம் எனும் எட்டு வகையான யோகங்களில் முதலாதவதான இயமம் அடையும் முறை பற்றிய பாடல்.

பதவுரை

கொல்லாமை, பொய்யாமை, களவின்மை, வெகுளாமை, காமம் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை,  கூடா ஒழுக்கம் இன்மை ஆகியவற்றைக் கொண்டு நல்லவனாகவும், அடக்க முடையவனாகவும் இருப்பவனே தடை இல்லாத இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.

விளக்க உரை

 • சரி எதையெல்லாம் கொல்லான் உடலையா, உயிரையா, மனதையா, அறிவையா அல்லது ஆத்மாவையா எனக் கேட்டபின்னரே அதில் நாம் கடைந்தேரியவராக இருப்பின் இயமத்தின் கொல்லானைக் கடக்குமெனவுரைக்கிறார். (குருநாதர் உரை செய்த வண்ணம்)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 18 (2019)

பாடல்

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலைபெற லாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்கள் எப்பொழுதும் மல கன்ம மாயையாகிய பாசங்கள் நீங்கியவர்களாக இருப்பார்கள் என்பது பற்றிய பாடல்.

பதவுரை

உயிர்களே என்றும் விட்டு நீங்காததும், நலம் தரக்கூடியதும், பேரின்பத்தை தருவதுமான சிவபரம் பொருளைத் தியானித்தல், உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கும் ஆன்மாவை அணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங்கள் (முன்னர்ப் பிணிப்பவிழ்ந்து நீங்கினவை) மீளவும் தொடர்ந்தும் பற்றமாட்டாது. அவைகள் சில நேரங்களில் பழைய வாசனையின் காரணமாக  மீண்டும் வந்து பற்ற முற்பட்டால் திருவருளின் துணையினால் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி, ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையில் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்களாகவே வாழ்வர்.

விளக்க உரை

 • காட்டுவது – ஞானம்.
 • காண்பது – காணப்படுவது.
 • ஞாதுரு = காண்பவன் –  ஆன்மா / சீவன்
 • ஞானம் = பெறும் அறிவு – சிவ ஞானம்
 • ஞேயம் = காணப்படும் பொருள் –  சிவம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 15 (2019)

பாடல்

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலைபெற லாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவானந்தத்தில் நிலை பெற்று இருந்தால் அறிவுத் திறனை ஆணவம் மறைக்காது; அப்படி மறைக்க முயன்றாலும் குருவின் அருளால் அகங்காரம் நீங்கும் என்பது பற்றியப் பாடல்.

பதவுரை

உயிர்களே என்றும் விட்டு நீங்காததும், நலம் தரக்கூடியதும், பேரின்பத்தை தருவதுமான சிவபரம் பொருளைத் தியானித்தல் உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கும் ஆன்மாவை அணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங்கள்  மீளவும் தொடர்ந்தும் பற்ற மாட்டாது. அவைகள் சில நேரங்களில் பழைய வாசனையின் காரணமாக  மீண்டும் வந்து பற்ற முற்பட்டால் திருவருளின் துணையினால் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி, ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையில் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் மெய்யடியார்களாகவே வாழ்வர்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 7 (2019)

பாடல்

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – ஊனினை நீக்கி உணர்தல் என்பது குருபூசையால் பெறப்படும் என்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

காட்டில் மிகுந்தும், பொருந்தி உள்ளதும், நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தை தருவதுமான கோடிக் கணக்கான சந்தன மரங்களின் கட்டைகளைத் தேய்த்தும், ஆகாயம் அளவு குவிக்கப்பட்டதும், பெருமை மிக்க மலர்களையும் கொண்டு சிவனை வழிபட்டாலும், உடம்பை தம்மில் இருந்து வேறாக உணர்ந்து, உடம்பை தம்மில் இருந்து வேறாக உணர்ந்து, அதனால் உடல் மேல் உள்ள பற்றை விடுத்து, சிவனையே பற்றாக உணர்பவர்க்கள் அல்லாது  ஏனையோர்க்கு அவனது, தேன் நிறைந்த செந்தாமரை மலர்போலும் திருவடியைச் சேர இயலாது.

விளக்க உரை

 • ஊனினை நீக்கி உணர்தல் என்பது குருபூசையால் பெறப்படும் என்பதும், ‘சிவபூசைக்கு முன்னே குருபூசை செய்தல் இன்றியமையாதது’ என்பதும், ‘சிவபூசையும் குருவருள் பெற்றே செய்யப்பட வேண்டும்’ என்பதும், `சிவனை அவ்வாறு உணரும் உணர்வை குருவருளால் அன்றி அடைய இயலாது` என்பதும் குறிப்பு.
 • உறுதல் – உண்டாதல், மிகுதல், சேர்தல், இருத்தல், பொருந்தல், கூடல், நேர்தல், பயனுறல், கிடைத்தல், வருந்தல், தங்கல், அடைதல், நன்மையாதல், உறுதியாதல், நிகழ்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மாசி – 5 (2019)

பாடல்

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்தி ஆகியவை இரு பொருள்கள் ஆகாமல் ஒன்றாய் இருக்கும்  சொரூப நிலை பற்றி உரைத்தப் பாடல்

பதவுரை

சிவத்தை விட்டுத் தனியாய் இல்லாமலும், சிவம் விடுத்து தனியே இயங்காமலும் இருக்கும் சத்தியானது, உலகம் செயற்படுதன் பொருட்டு,  சிவத்தினில் தோன்றி வேறு நிற்பது போல இருக்கிறது என சொல்லப்பட்டாலும், சத்தியானது எஞ்ஞான்றும் தனித்து நிற்காமல், மணியில் ஒளிபோலச் சிவத்தோடு எப்பொழுது ஒன்றி நிற்கும்; எனவே, `சிவபேதம், சத்திபேதம்` எனப் பிரித்து வழங்குதல் என்பது, அறிவு, செயல் என்னும் வேறுபாடு கொண்டு கொள்ளப்படும் தொழில் என்பன பற்றியதே; இவ்வாறான தன்மை உடையதும், தன்னில் இருந்து  வேறு ஆகாததுமான சத்தியை ‘அதுதானே எல்லாம் செய்யவல்லதாக நிறுத்தி உலகம் செயற்படுதற்கு வழியை உண்டாக்கிய அந்தப் பெரும்பொருளாகிய முதல்வனை, `இப்படிப்படவன், இந்த நிறமுடையவன்’ என்று சொல்லால் சொல்லி விளக்க முற்பட்டால் , அஃது ஒருவனாலும் செய்ய  இயலாது. ஏனெனில், விளக்கப்படும் சொற்களுக்கும், அந்தப் பொருட்கும் இடையேயுள்ள வெளி மிக மிக நீண்டது.

விளக்க உரை

 • கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் – கண்ணில் ஒளி போல் இருக்கும் என்று பொருள் உரைப்பாரும் உளர். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 16 (2019)

பாடல்

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

ஒரே வகை மண்ணாலே இரண்டு பாண்டங்கள் செய்யப்பட்டன. தீய வினைகளின் காரணமாக ஒன்று தீயினால சுடப்பட்டது; மற்றொன்று சுடப்படாமல் இருந்ததால் வானில் இருந்து மழை வீழ்ந்ததால் அது கரைந்து மண்ணோடு கலந்து மண்ணாகி விட்டது. இது போல் எண்ணிக்கையில் அடங்காத அளவில் மனிதர்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து பின் இறக்கின்றனர்.

விளக்க உரை

 • யாக்கை நிலையாமை தன்மை உடையதால் , மானுடப் பிறப்பின் பயனை அடைய முயலுதலை தள்ளி வைத்துப் பின்னர்ச் செய்வோம் என நினையாது, விரைந்து செய்தல் வேண்டும் என்பது குறித்து கூறப்பட்டப் பாடல்.
 • குறிக்கோள் – ஆறாம் அறிவு கொண்டு எடுத்த  மக்கள் பிறப்பின் பயனாகிய மெய்யுணர்வை அடைந்து, யோகம் முதலியவற்றால் உடம்பை நெடுங்காலம் நிலைப்பெறச் செய்தல்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 8 (2019)

பாடல்

தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே
அளித்து ஆங்கு அடைவது எம் ஆதிப் பிரானை
விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங்கு அருள் செய்த தூய் மொழியானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

சிவபெருமானை இகழ்ந்தமையால்அப்பொழுதே இறந்தவனாகிய தக்கனது வேள்வியை அழியுமாறு செய்தும், பின் இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டுஅழிந்த அனைவரையும் மீண்டு எழுமாறு வாழ்த்தியும்  அருளிச் செய்த வாய்மையை உடைய எங்கள் உமாதேவியே, யார் தங்கள் மனத் துணிவை இழந்து, நிலைகலங்கி, பிறரைச் சார்ந்து இருந்த போதிலும், நீ உன்னுடைய நிலை கலங்காமலே நின்று அன்போடு அணைவது எங்கள் சிவபெருமானையே அன்றோ!

விளக்க உரை

 • இறை அருளோடு செய்யப்படும் வேள்வியின் தத்துவம் மற்றும் அவற்றின் பலன் குறித்தது இப்பாடல்.
 • அளிந்து – குழைந்து
 • சுளிந்து – வெகுண்டு
 • தூய் மொழியாள் : உமை.
 • தக்கன் வேள்வி, உமை அம்மை அறிவுரை, வீர பத்திரர் தோற்றம் போன்றவற்றை கந்த புராணம் மூலம் அறிக.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – தை – 2 (2019)

பாடல்

மாய விளக்கது நின்று மறைந்திடுந்
தூய விளக்கது நின்று சுடர்விடுங்
காய விளக்கது நின்று கனன்றிடுஞ்
சேய விளக்கினைத் தேடுகின்றேனே

பத்தாம் திருமுறை –  திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

மாயாகாரியமாகிய உடல், உலகு, ஊண் முதலிய பொருள்கள் விளக்குப்போல் நம் வாழ்க்கைக்குத் துணையாக இருந்து  காலவரையறைக்கு உட்பட்டு மாயும். பேரின்பப் பெருவாழ்வினைத் தருவதும், செம்மையான விளக்கானதும், திருவடிப்பேற்றினை தருவதுமான தூய விளக்காகிய சிவன் திருவடியானது விளக்காக நின்று உயிர்களுக்கு முற்றுணர்த்தி வினைகளை விளக்கி நீக்கம் செய்விக்கும். திருவருள் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவித்து வருவதால் காயவிளக்கு சுடர் பெறும். எனவே அந்த திருவிளக்கினை அருளால் நாடி, அடைய அதைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.

விளக்க உரை

 • தோன்றிய அறிவால் ஆன்மரூபத்தின் வழி தத்துவ தரிசனத்தைச் செய்து, திருவருளை நாடவேண்டும், திருவருளே ஞானக்கண் என்பது பற்றியது
 • சேய – செம்மையான
 • கனற்றுதல் – வெதுப்புதல்; துன்பம் தருதல்
 • மாய விளக்கு  – இயற்கை ஒளி
 • தூய விளக்கு   – ஞான ஒளி
 • காய  விளக்கு  – உள் ஒளி
 • சேய விளக்கு  – சிவ ஒளி

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 23 (2019)

பாடல்

நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

தோற்பை போன்றதாகிய இந்த உடம்பினுள் இருந்து பல தொழில்களையும் செய்விப்பவனாகிய கூத்தன், இந்த உடலை விட்டுப் புறப்பட்டுப் போனபின் அந்த உடம்பை நாரினாற் கட்டி இழுத்தால் என்ன,  நன்றாகத் தூய்மைசெய்து அடக்கம் செய்தால் என்ன,  கண்ட இடத்தில் போட்டால் என்ன, அதனாற் பலரும் பழித்தாற்றான் என்ன; அதனால் வருகின்ற பெருமை சிறுமைகள் ஒன்றுமில்லை.

விளக்க உரை

 • தோற்பை – இழிவு தோன்றுதலின் பொருட்டு
 • அசைவோன் அவனே; ஆதலால் இந்த உடம்பில் ஒன்றுமில்லை; ஆதலால் இவ்வுடலை பாதுகாத்தல் பொருட்டு அந்த உயிரை ஓம்பும் அறச்செயல்களைக் கைவிடற்க எனும் பொருள் பற்றியது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 17 (2019)

 

பாடல்

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால்
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

வீடு பேறு ஆகிய முக்தியும், அது கைகூடுதல் ஆகிய சித்தியும் பற்றி நின்று, ஞானத்தின் பயனாகச் சிவனிடத்தில் பேரன்பு செய்து, அவனிடத்தில் பக்தி கொண்டு, அவனது பெருங்குணமாகிய பேரானந்தத்தில் திளைத்து, ஆன்மாக்கள் போல் உடல் எடுத்துப் பிறப்பு இறப்புகளுக்கு உட்படாதாகிய சகலாவத்தை எனும் சகலத்தில் நின்று, பின் அதன் மா பெரும் சக்தி ஆகிய ஆற்றலால் சிவத்துள் நின்று ஆராய்கின்ற மெய்ப்பொருளைத் பெற்று, சத்தாவத்தை ஆனதான  சீவான்மாவுக்கு நிகழக்கூடிய அறியாமை, ஆவரணம், விட்சேபம், பரோட்சஞானம், அபரோட்ச ஞானம், சோகநிவர்த்தி, தடையற்ற ஆனந்தம் என்னும் ஏழுவகை நிலைகள் கடந்து நின்ற ஞானியர் ஆவர்.

விளக்க உரை

 • நின்மலாவத்தையைக் கடந்து பராவத்தையை அடைந்தவர்கள், அந்நிலையினின்று இறங்கினாலும், சிவயோக நிலையினின்றும் இறங்க மாட்டார்கள் என்பது பற்றியது.
 • ஓர்த்தல் – ஆராய்தல்
 • தத்துவம் – மெய்ப் பொருள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 7 (2018)

பாடல்

போகம்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகம்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகம்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகம்செய் ஞானம் படர்கின்ற கொம்பே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

அடியார்கள் நாள்தோறும் தங்கள் மனத்தினால், கடைகுழன்று சுருண்ட கூந்தலை உடையவளும், இன்பம் தரத் தக்கவளுமாக திரிபுரையை தியானிக்க, அங்ஙனம் தியானிக்கும் அடியவர்களது உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, மெய் ஞானமாகிய கொடி படருவதற்கு ஏற்ற கொழு கொம்பாய் நிற்கின்ற அருட்சத்தி,  திரோதான சத்தியாக  நின்று, பின் அருள் சத்தியாகவே விளங்குவாள்.

விளக்க உரை

 • திரோதான சத்தி, அருள் சத்தி என வேறு வேறு ஆகாமல்  அருள் சத்தி இயல்பும், திரோதான சத்தி  பயனும் உணர்த்தப் பெறும்

சமூக ஊடகங்கள்

1 2 3