அமுதமொழி – சார்வரி – வைகாசி – 16 (2020)


பாடல்

பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
   பாடகந் தண்டை கொலுசும்
பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட
   பாதச் சிலம்பி னொலியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
   மோகன மாலை யழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
   முடிந்திட்ட தாலி யழகும்
சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
   செங்கையில் பொன்கங்கணம்
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
   சிறுகாது கொப்பி னழகும்
அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
   அடியனாற் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
   அம்மை காமாட்சி உமையே.

காமாட்சியம்மை விருத்தம்

கருத்துஅன்னையின் வடிவழகையும், திருமேனியில் அணிந்திருக்கும் பல்வேறு ஆபரணங்களையும், அதில் பதிக்கபெற்று இருக்கும் நவரத்தினங்களையும் குறிப்பிட்டு தன் இயல்பு நிலையினால் விளக்க முடியாமையை கூறும் பாடல் பாடல்.

பதவுரை

அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! உன்னுடைய பத்துவிரல்களில் அணிந்திருக்கும் மோதிரங்கள் எத்தனை பிரகாசமானது? கால்விரல்களில் அணிந்திருக்கும் பாடகமும், தண்டையும், கொலுசும், பாதங்களில் இருக்கும் பச்சை நிற வைடூரியங்களால் இழைத்திட்ட சிலம்பின் ஓசையும், முத்துகளால் பதிக்கப்பெற்ற மூக்குத்தியும், ரத்தினங்களால் பதிக்கப்பெற்ற பதக்கமும், மனதினை மயக்கும்படியாக அணிந்திருக்கும் மாலை அழகும், முழுவதும்  வைடூரியம் மற்றும் புஷ்பரா கத்தினால் செய்து முடிதிருக்கும் தாலி அழகும், , செம்மை உடைய கையில் பொன்னால் ஆன கங்கணமும், இந்த புவனத்தால் விலை மதிக்க முடிக்கமுடியா ஒளி பொருந்திய முகமும், அதில் தொடர்ச்சியாக இருக்கும் சிறு காதுகளில் வேறு நகைகள் அணியாத போதும் கும்மியாட்டம் போன்று ஒலி எழுப்பி கொண்டிருக்கும் கம்மலின் அழகும், அத்திவரதன் தங்கையும் ஆகிய சக்தியின் சிவரூபத்தை அடியேனால் சொல்ல இயலுமோ?

விளக்க உரை

 • கொப்பி – கும்மியாட்டம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 12 (2020)


பாடல்

திருவார் பெருந்துறை
   மேயபிரான் என்பிறவிக்
கருவேர் அறுத்தபின்
   யா  வரையுங் கண்டதில்லை
அருவாய் உருவமும்
  ஆயபிரான் அவன்மருவுந்
திருவாரூர் பாடிநாம்
  தெள்ளேணங் கொட்டாமோ

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துஈசன் தன் பிறவியை வேறறுத்தப்பின் அவனையே முழுமையாக கண்டதை உரைக்கும் பாடல்.

பதவுரை

நீர் நிலைகள் நிறைந்துள்ள இடங்களை உடையதான திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ளவனும், சிறப்புகள் உடையவனுமான சிவ பெருமான் என் பிறவியை வேரறுத்தபின்,  யான் அவனையன்றி வேறொருவரையும் கண்டதில்லை; அருவ வடிவமாகவும், உருவ வடிவமாகவும்  நின்ற அந்த இறைவன் எழுந்தருளி இருக்கிற திருவாரூரைப் புகழ்ந்து பாடி கைகொட்டிப் பாடி ஆடும் மகளிர் விளையாட்டு வகையான தெள்ளேணத்தினை நாம் கொட்டுவோம்.

விளக்க உரை

 • வார் – நீர், ஒழுகு, வரிசை, கடைகயிறு
 • தெள்ளேணம் – கைகொட்டிப் பாடியாடும் மகளிர் விளையாட்டு வகை
 • பிறவிக்கு காரணமான பாசத்தினை வேரோடு அறுத்தான் என சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. பிறவிக்கு காரணமான வினைகளை(சஞ்சீதம், பிரார்த்தம், ஆகாமியம் ஆகிய வினைகளை) அறுத்தான் என்பது பொருத்தமாக இருக்கும்; யாவரையுங் கண்டதில்லை என்பதை முன்வைத்து வினைகளை நீக்க வல்ல முதல்வன் என்பதை உணர்ந்து கண்டு கொண்டேன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
 • திருப்பெருந்துறை, திருவாரூர் ஆகியவற்றை யோக முறையில் உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளாக உருவகம் செய்வது யோகம் தொடர்வோரும் உண்டு.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – வைகாசி – 7 (2020)


பாடல்

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே

பத்தாம் திருமுறை – திருமூலர் – திருமந்திரம்

கருத்து –   இறையின் இயல்புகளை உணர்த்தும் பாடல்.

பதவுரை

போற்றப்படுவதாகிய உயிரை இடமாகக் கொண்டு நிலைபெற்று இருக்கும் புனிதத்துவம் மிக்கவனை, நான்கு திசைகளுக்கும், உமா தேவிக்கும் தலைவனாக் இருப்பவனை, மேலான திசை இரண்டிற்குள் ஒன்றான தெற்கு திசைக்குத் மன்னனாகிய கூற்றுவனை உதைத்தவனை அடியேன் புகழ்கின்றேன்.

விளக்க உரை

 • இதயத் தாமரையில் உறைபவன்; உலகங்களுக்குத் தலைவன்; கால காலன்; உமையுடம் சேர்ந்து சிவசக்தி ரூபமாக இருப்பவன் எனும் இறை இயல்புகளை உணர்த்தும்
 • போற்றுதல் – துதித்தல்
 • புனிதன் – இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன்
 • நல்ல மாதுக்கு நாதன் – ஆன்மாக்களுக்கு அருள் ஞானம் ஊட்டும் தாய் போன்றவன்
 • கூற்றுதைத்தான் – காலத்தை வென்றவன்
 • என் மனதிள் உள்ள தியானப் பொருளாகிய பரம் பொருளை நான் போற்றுவது போல் நீங்களும் போற்றுங்கள் எனும் கருணைக் குறிப்பு.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 28 (2020)


பாடல்

சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்
சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனாய்ச் – சார்ந்தடியார்
தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல்
ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு

திருநெறி 1 – சிவஞான போதம் – மெய்கண்ட தேவர்

கருத்து சார்ந்தாரைக் காத்தலையும், சாராதவர்களை வினைகளை கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்பவன் என்பதையும் உணர்த்தும் பாடல்.

பதவுரை

தன்னை சார்ந்து அடைக்கலம் புகுந்தவர்களை காத்தல் என்பது தலைவன் ஆகிய ஈசனின் கடமை; ஆனால தன்னைக் சாராமல் அடைக்கலம் புகாதவர்களை காக்காமல் வஞ்சம் செய்பவன் அல்ல; தன்னை சார்ந்து அடைக்கலம் புகுந்தவர்களை பிராப்த வினைகளை நீக்கி அவர்களைக் காப்பான்; தன்னைச் சாராதவர்களை  பிராப்த வினைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வினைகளைக் கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்து அவர்களைக் காப்பான்.

விளக்க உரை

 • இயல்பாகவே பாசங்களின் நீங்கி இருப்பவன் என்பதை முன்வைத்து பேரருள் உடைமை ஆகியவன் என்பதால் சார்ந்தாரைக் காத்தலையும், முடிவில் ஆற்றல் உடைமை என்பதை முன்வைத்து வினைகளை கொடுத்து அதை அனுபவிக்குமாறு செய்பவன் என்பதையும் உணரலாம். இவைகள் ஈசனின் எண்குணங்களின் தன்மைகள் ஆகும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 27 (2020)


பாடல்

வருமிவள் நம்மைப் பேணும்
அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப்
பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி
அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம்
உய்யவே அருளிச் செய்தார்

பன்னிரெண்டாம் திருமுறை – பெரியபுராணம் – சேக்கிழார்

கருத்துஈசன், காரைக்கால் அம்மையாரை நோக்கி இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவாள் என்று உரைத்து அம்மையே என்று அழைப்பதை விளிக்கும் பாடல்.

பதவுரை

வரும் இவர் யார் என்று கேட்ட உமையம்மைக்கு, “எலும்புக்கூடாக வரும் இவள் நம்மைப் போற்றி வரும் அம்மையே ஆவாள்; அதுமட்டும் அல்லாது பெருமை பொருந்திய வடிவமாகிய இப்பேய் வடிவத்தினை நம்மிடம் வேண்டிப் பெற்றுக் கொண்டவள்` என்று கூறினார்; காரைக்கால் அம்மையாரும் அருகில் வந்து சேரவே, அவரை நோக்கி, அம்மையே! என்னும் செம்மைதரும் ஒப்பற்ற ஒரு மொழியினை உலகமெல்லாம் உய்யும் பொருட்டு அருளிச் செய்தார்.

விளக்க உரை

 • பரவெளி
 • பேணுதல் – போற்றுதல், உபசரித்தல், ஒத்தல், மதித்தல், விரும்புதல், பாதுகாத்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல், ஓம்புதல், அலங்கரித்தல், கருதுதல், குறித்தல், உட்கொள்ளுதல், அறிதல்
 • செம்மையொரு மொழி – செம்பொருளை அடைதற்குரிய ஒப்பற்றதொரு மொழி
 • ஆங்குநின் தாள்கள் போற்றும்
  பேய்வடி வடியே னுக்குப்
  பாங்குற வேண்டும் என்று
  பரமர்தாள் பரவி நின்றார்

என்று எவராலும் விரும்பத் தக்காத பேய் வடிவினை விரும்பிக் கேட்டதால் இப் பெருமை சேர் வடிவும் வேண்டிப் பெற்றனள்` என்று சேக்கிழார் உரைக்கின்றார்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 24 (2020)


பாடல்

கூறுகிறேன் சதாசிவத்தி லிதழ்தான் ரண்டு
கொடியதொரு பரவெளி லிதழ்தானொன்று
தேறுகிறே னைம்பத்தோ ரிதழுமாச்சு
ஆறிதழாய்ப் பிறக்கின்ற கலைநான்கிற்கே
யரியமணி பூரகமா தாரமாச்சு
வேறுமினி நினையாம லாதாரத்தின்
விஞ்சையடா வைம்பத்தொன் றறிந்துகொள்ளே

அகத்தியர் யோக ஞானம் 500

கருத்துமுருகப் பெருமான் அகத்தியருக்கு ஆதாரங்களை தொட்டுக் காட்டி அது பற்றி உபதேசம் செய்த பாடல்.

பதவுரை

ஆறு இதழ்களாக பிறக்கின்றதும் நான்கு கலைகளை உடையதும் ஆன மணிபூரகம் எனும் இந்தத் தலமானது தவம் செய்ய முடியாதவர்களால் அடையப்பட முடியாததால் கொடியதாக இருக்கும் ஆகாசம் எனும் பரவெளியில் ஓர் இதழ் கொண்டும் சதாசிவ ரூபமாய் தோன்றும் போது இரு இதழ்களாக கொண்டும் முன்னேற்றம் அடைந்து ஐம்பத்தி ஓர் இதழுமாக ஆனது; வேறு எது பற்றியும் இனி நினையாமல் இந்த ஆதாரதத்திற்கு உரித்தான வித்தையினைத் தருவதாகிய ஐம்பத்தி ஓரு எழுத்துக்களைப் பற்றி அறிந்து கொள்வாயாக.

விளக்க உரை

 • பரவெளி – பரமன் உறையும் ஞானாகாசம், கடவுள்
 • விஞ்சை – கல்வி, ஞானம், வித்தை, வித்யா என்ற வடசொல், தெரு
 • தேறுதல் – ஆறுதல், முன்னேற்றம்
 • தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
  நிஷேவே-வர்ஷ்ந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவநம் ||  செளந்தர்யலஹரி

அம்மா! என்னுடைய மணிபூரக சக்ரத்தில் சதாசிவ தத்துவத்தை மேகமாகவும், மூன்று உலகங்களையும் குளிரச் செய்பவளாகவும் உன்னை அதில் தோன்றும் மின்னல் கொடியாகவும் தியானித்து நமஸ்கரிக்கிறேன் எனும் பாடல் கொண்டு ஒப்பு நோக்கி இதன் பெருமையினை அறியலாம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 23 (2020)


பாடல்

பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம்
   பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற
   வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர்எண்குணத்தவ நீ தான்
   குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும்நன் கறிவாய் அறிந்தும் என்றனைநீ
   முனிவதென் முனிவு தீர்ந்தருளே

ஆறாம் திருமுறை –  திருஅருட்பா – வள்ளலார்

கருத்துவள்ளல் என்று உரைத்திருப்பதாலும், என்னை ஈன்றவன் என்பதாலும் என் குற்றங்களைப் பொறுத்து அருள வேண்டும் என்று உரைக்கும் பாடல்.

பதவுரை

என்னை பெற்ற வள்ளலே, உலகினுக்கு வாயிலாக விளங்கும் தில்லை திருச்சபையில் நடனமிட்டு நடிப்பவனே, உலகிற்கு அரசனே, எண் குணங்கள் உடையவனே, தாம் பெற்ற குழந்தையின் நல்ல குணங்களையும், தீய குணங்களையும் பெற்றவர்கள் மட்டுமே அறிவார்கள் ; அவ்வாறு இல்லாமல் மற்றவர்கள் அறிய மாட்டார்கள்; நான் கொண்டுள்ள குணங்களால் கொடியவனாக இருக்கிறேன்; என்னுடைய இந்த குணங்கள் அனைத்தையும் நீ முற்றும்  நன்கறிவாய்; அவ்வாறு அறிந்திருந்தும் வெறுப்பது ஏன்? வெறுப்பினை நீக்கி  ஆண்டருள்க.

விளக்க உரை

 • மன்றில் – வாயில்முற்றம்
 • கொற்றவன் – அரசன், வெற்றியாளன்
 • முனிவு – கோபம், வெறுப்பு
 • எண் குணங்கள் – தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை (வட மொழி மூலம் – சுதந்தரத்துவம்,விசுத்த தேகம்,நிரன்மயான்மா,சர்வஞ்த்வம்,அநாதிபேதம், அநுபத சக்தி,அநந்த சக்தி,திருப்தி)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 22 (2020)


பாடல்

நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும்
பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்
தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பில்
தேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்

திருநெறி – சிவஞானசித்தியார்

கருத்துஉமையம்மை சிவனின் கண்களை விளையாட்டாக மூடியதால் ஏற்பட்டவைகளே போக, வேக, யோக வடிவங்கள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

புவனங்களுக்கு நாயகனின் திருக்கண்களை நாயகி மூடியபோது சகலம், கேவலம், சுத்தம் ஆகிய தத்துவங்கள் ஒன்றான தன்மையான சங்காரம் ஒத்து எங்கும் இருள் சூழ்ந்த போது,  தனது நெற்றிக் கண்ணை திறந்தார். அந்த முதல்வன் கொண்ட திருமேனிகள் போகம் கொள்வதன் பொருட்டு  சில திருமேனி போகவடிவமும், வினையினை விடுதலை முன்வைத்து சில திருமேனி கோரவடிவமும், யோகமுத்தி தருவதன் பொருட்டு யோக வடிவமும் வெளிப்பட்டன; இவைகள் ஆன்மாக்கள் உய்வுறுவதன் பொருட்டு அருள்புரிக்கூடிவை என்பதால் இந்த அருளுதல் தொழில் செய்வதற்காக  திருக்கண் புதைத்த திருவிளையாட்டின் வழி நிகழ்ந்த நிகழ்ச்சியே என்பதற்கு இது சான்று.

விளக்க உரை

 • நயப்பு – அன்பு. விருப்பம், இன்பம், தலைவி எழிலைப் புகழ்கை, மலிவு, இலாபம், மேம்பாடு, நன்மை, மகிழ்ச்சி
 • பாய்தல் – பரத்தல்
 • தேயம் – உலகம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 16 (2020)


பாடல்

விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி
வண்டார் கருமென் குழன்மங் கையொர்பாகம்
கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துஈசனின் பெருமைகளை உரைத்து, ஈசன் அவ்வாறான உறையும் இடம் குரங்காடுதுறை எனக் கூறும் பாடல்.

பதவுரை

தன்னோடு பகை பூண்டவர்கள் ஆகிய தாரகாஷன், கமலாக்ஷன், வித்துன்மாலி ஆகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த குற்றம் இல்லாதவனும், புலிதொடக்கிக்கொடி எனும் தொட்டாற்சிணுங்கி கொடிகள் படர்ந்த சுடுகாட்டில் நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கக் கூடிய கருமையானதும் மெல்லியதும் ஆன கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இருப்பிடம் குரங்காடுதுறை.

விளக்க உரை

 • தலம்- தென்குரங்காடுதுறை
 • விண்டார் – பகைவர்
 • விமலன் – மலமில்லாதவன்.
 • இண்டு – கொடி வகை, தொட்டாற் சுருங்கி, செடிவகை, புலிதொடக்கி.
 • கொண்டான் – கொண்ட சிவபிரான்.

திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – இண்டு

புகைப்படம் : தினகரன்

தோற்றமும் தன்மையும்

 • வேலிகளில் தானாகவே வளரும் ஏறுகொடியினம்.
 • சிறகு போன்று இருக்கும் இலைகள் கூட்டமைப்பு
 • செடி முழுவதும் வளைந்த கூர்மையான முட்கள் நிறைந்தது
 • காலையில் பூக்கும் தன்மை கொண்ட இதன் பூக்கள் சிறிய அளவில் வேப்பம்பூவைப்போல் வெண்மையான நிறத்தில் பூக்கும்.
 • வெள்ளை நிற தண்டுப்பகுதியில் பட்டையான காய்கள் காய்த்திருக்கும்.

மருத்துவ குணங்கள்

 • இருமல் நோய், மூச்சுவாங்குதல், முக்கு நீரேற்றம், மண்டைக்குடைச்சல், முகத்தில் எற்படும் வலி, சூதக வாயு, ஈளை, சூலை ஆகிய நோய்களை நீக்கும்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 14 (2020)


பாடல்

அந்தா மரைப்போ தலர்ந்தவடி
அரக்கனையும் ஆற்ற லழித்தவடி
முந்தாகி முன்னே முளைத்தவடி
முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தியடி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
பவளத் தடவரையே போல்வானடி
வெந்தார் சுடலைநீ றாடும்மடி
வீரட்டங் காதல் விமலன்னடி

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – திருவடி சிறப்புகளைக் கூறும் பாடல்.

பதவுரை

அதிகை வீரட்டத்தை தலத்தில் எழுந்து அருளும் தூயோனும், சகல உயிர்கள் இடத்திலும் அவைகள் காத்து ரட்சிக்கப்படுவதன் பொருட்டு பந்தம் கொண்டு அருளுதலை செய்ய மெல்லிய விரல்களை உடைய பார்வதியின் பாகன் ஆனவனும், பெரியதான பவள மலை போன்றவனும், சுடுகாட்டில் எரிக்கப்பட்டவருடைய சாம்பலில் தோய்ந்து  இருப்பவனாகிய எம் பெருமானுடைய திருவடிகள் அன்றைய தினத்தில் மலர்ந்த தாமரைப் மலர்கள் போன்றவை; தன் வலிமையை ஆணவமாகக் கொண்டு இமயமலையை பெயர்த்து எடுத்த இராவணனுடைய ஆற்றலையும் போக்கியவை; ஏனைய பொருள்களும், உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே இருப்பவை; ஒலியினை எழுப்பி எரியக்கூடிய கழலை உடைய எம்முடைய மூர்த்தி நீண்ட வளர்ந்த வடிவினை கொண்டவை.

விளக்க உரை

 • போது அலர்ந்த, அரக்கனையும் (உம்மை உயர்வு சிறப்பு) – முறையே மென்மையும் வன்மையும் அருளிய திறம் கூறல்
 • முந்தாகி – முதற்காலமாய் நின்று(சிவதத்துவ நிலை)
 • நான்காவது தொடர் (முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தி) – அரியும் அயனும் அடியும் முடியும் தேட நின்ற சதாசிவ தத்துவ நிலை
 • ஐந்தாவது தொடர் உருவத் திருமேனி கொண்டு உலகத்தைத் தொழிற்படுத்தி நிற்கும் ஈசுவரத் தத்துவ நிலை
 • வெந்தாரது நீறு – இதனால் எஞ்ஞான்றும் அழிவின்றி நிற்றலையும், அனைத்தும் அழிந்தபின் மீளத் தோற்றுதற்கு முதலாதலையும் உணர்த்தியது
 • முந்தாகி – உலகிற்குக் காரணமாய்த் தனக்கு ஒரு காரணமின்றி நிற்றல்
 • பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி – பந்தினை விளையாடும் மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகன் என்ற விளக்கம் சில இடங்களில் காணப்படுகிறது; இது பொருந்தாமையால் இந்த விளக்கம் விலக்கப்படுகிறது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 10 (2020)


பாடல்

செய்யப்பா யிப்படியே பூஜைகொண்டு
திறமாகச் செய்யவல்லோ பலத்தைக்கேளு
மெய்யப்பா அவனுடைய பிதிர்களெல்லாம்
மிகக்கோடி நரகசென்ம மல்லவல்ல
பொய்யப்பா செல்லவில்லை தேர்ந்துபாரு
புலத்தியனே உந்தனுக்க்குக் கருவைச்சொன்னேன்
வையப்பா பூஜையிலே என்னைவைத்து
மவுனமாய் சிவனைவைத்து நோக்குநீயே

அகஸ்தியர் சிவலிங்க பூஜா விதி

கருத்து – சிவபூஜை முறைகளைக் கூறி, அதை செய்வதால் அவர்கள் முன்னோர்கள் நரக ஜன்மத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

இவ்வாறு உரைத்த படி திறமையாக சிவ பூஜை செய்வதன்  பலன்களைக் கேட்பாயாக; கோடி ஜன்மங்களாக நரக ஜன்மத்தில் அழுந்தி இருக்கும் அவனுடைய முன்னோர்கள் இந்த சிவ பூஜை செய்வதால் விலக்கப்படுவார்கள்; இதை பொய்யாக உரைக்கவில்லை; இதை பயிற்சி செய்து பார்ப்பாயாக; புலத்தியனை உந்தனுக்கு இவ்வாறான சிவபூஜை செய்வதன் கருவைச் சொன்னேன்; இந்த பூஜை முறையில் என்னை வைத்து சிவனைவைத்து மௌனமாக அந்த சிவத்தை நோக்குவாயாக.

விளக்க உரை

 • திறம் – திறமை, புலமை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 8 (2020)


பாடல்

பத்தியால் யானுனைப் …… பலகாலும்
     பற்றியே மாதிருப் …… புகழ்பாடி
முத்தனா மாறெனைப் …… பெருவாழ்வின்
     முத்தியே சேர்வதற் …… கருள்வாயே
உத்தமா தானசற் …… குணர்நேயா
     ஒப்பிலா மாமணிக் …… கிரிவாசா
வித்தகா ஞானசத் …… திநிபாதா
     வெற்றிவே லாயுதப் …… பெருமாளே

திருப்புகழ் – அருணகிரிநாதர்

கருத்து – முருகனின் பெருமைகளை உரைத்து, தன்னை முக்தி அடைய வழிகாட்டும்படி வேண்டும் பாடல்.

பதவுரை

உத்தமமான குணங்களைப் கொண்டுள்ளவனும், சத்துவகுணம் உடையவர்களால் விரும்பப்படுபவனும், பேரறிவாளனாக இருப்பவனும், உயிர்களுக்கு திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனாக இருப்பவனும், எக்காலத்திலும் வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளாக இருப்பவனும் ஆகி எவராலும் ஒப்புமை செய்ய இல்லாத பெருமை பொருந்தியதும் ஆன ரத்னகிரியில் வாழ்பவனே! உன்னிடத்தில் கொண்டுள்ள பக்தியினால்  யான் உன்னை பல காலமாக உன்னைப் பற்றிக்கொண்டு, உயர்ந்ததும், சிறப்புகளை உடையதுமான உன்னுடை திருப்புகழைப் பாடி, பாசங்கள் நீங்கப்பெற்றதும், பேரின்பம் தருவதுமான முக்தி  அடையும் வழியில் செலுத்தி, அதில் சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக.

விளக்க உரை

 • முத்தன் – முத்திபெற்றவன், இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன்[சிவபிரான்], திருமால், வைரவன், அருகன், புத்தன்
 • ரத்னாசலம், சிவாயம், மணிக்கிரி என்பன ரத்தினகிரியின் பிற பெயர்கள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை-2 (2020)


பாடல்

பாறு தாங்கிய காட ரோபடு
   தலைய ரோமலைப் பாவையோர்
கூறு தாங்கிய குழக ரோகுழைக்
   காத ரோகுறுங் கோட்டிள
ஏறு தாங்கிய கொடிய ரோசுடு
   பொடிய ரோஇலங் கும்பிறை
ஆறு தாங்கிய சடைய ரோநமக்
   கடிக ளாகிய அடிகளே

ஏழாம் திருமுறை – தேவாரம் –  சுந்தரர்

கருத்து – சிவன் சிறப்புகளை சொல்லும் பாடல்.

பதவுரை

நமக்குத் தலைவராய் உள்ளவர் பருந்துகளைச் சுமக்கும் முதுகாட்டில் அழிந்த தலையை ஏந்தியவரோ? மலைமகளது ஒருபாகத்தைச் சுமக்கும் அழகரோ? குழைய அணிந்த திருச்செவியினை உடையவரோ? சிறிய இடைவெளி கொண்ட கொம்பினை உடைய இளமையான இடபத்தைக் கொண்டுள்ள கொடியை உடையவரோ? சுடப்பட்ட திருநீற்றை அணிந்தவரோ? விளங்குகின்ற பிறையோடு கூடிய ஆற்றைச்(கங்கை) சுமந்த சடையை உடையவரோ? சொல்லுமின்.

விளக்க உரை

 • பாறு – விலங்குகளின் பிணங்களைத் தின்று வாழும் பறவையினம், பிணந்திண்ணி கழுகு, எலும்புண்ணிப் பாறு
 • ஆணவம் கொண்ட தலையை உடையவரது அழிவு தலையின் மேல் ஏற்றி உரைக்கப்பட்டது
 • குறுங்கோடு – இளைய ஏறாகல் / இளைய காளை
 • தலைவர் – நமக்குத் தலைவராய் உள்ள தலைவர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை-1 (2020)


பாடல்

இந்தனந்தில் அங்கி எரிஉறுநீர் தேனிரதங்
கந்தமலர்ப் போதுவான் காலொளிகண் – சந்ததமும்
அத்துவித மாவதுபோல் ஆன்மாவும் ஈசனுமாய்
முத்தியிலே நிற்கும் முறை

சிவஞானபோதம்

கருத்து – முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் இருப்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

முக்தி நிலையில் ஆன்மா வேறு, ஈசன் வேறு என்று இரு பொருள்களாக இல்லாமல் அத்துவைத நிலை எனும் பிரிக்க இயலாத நிலையில் ஒன்றி விறகில் தீ இருப்பது போலவும், சுடுநீரில் வெப்பம் போலவும், தேனில் தித்திப்பு போலவும், வாசனை உடைய மலர்களில் மணம் போலவும், ஆகாயத்தில் காற்று போலவும், கண்ணில் ஒளி போலவும் நிற்பான்.

விளக்க உரை

 • இந்தனம் – விறகு
 • அங்கி – ஆடை, மேலாடை, நெருப்பு, அக்கினி
 • ஆன்மாவுக்கு ஈசனுடன் அத்துவித கலப்பு ஏற்பட்டு விடுவதால் அது எல்லையற்ற இன்பத்தினை பெற்று விடுவதால் அதன் பின் வேறு நிலைக்குச் செல்லும் அனுபவம் / நிலை தேவைப்படாமல் போகிறது. ஆகவே அவ்வித ஆன்மாக்கள் சுத்தாத்வித சித்தாந்த பரமுக்தி, சாயுச்சிய பரமுக்தி என்றெல்லாம் அழைக்கப்படும் இரண்டற கலத்தல் நிலைக்குச் செல்கின்றன.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 27 (2020)


பாடல்

சொல்லன்றிப் பொருளு மன்றிச் சூழ்ந்ததோ ருருவமன்றி
அல்லன்றிப் பகலு மன்றி அகண்டபூ ரணமதாகி
நல்லின்பச் சிவமதாகி நாட்டிரண் டற்று நிற்போர்
செல்லுநற் சிந்தை யோராஞ் சித்தராய் வாழுவாரே

முதுமொழி ஞானம் – அகத்தியர்

கருத்து – இருமைகளை விலக்கி, தியான நிலையில் சித்ததன்மையுடன் வாழ்பவர்களைப் பற்றி கூறும் பாடல்.

பதவுரை

சொல்லக் கூடிய சொல்லாகவும், அதன் பொருளாகவும் இன்றி சூழ்ந்திருக்கும் உருவமாகவும் இன்றி, உலக வாழ்வின் அல்லல் ஏதுவுமின்றி, ஒளியினால் ஏற்படுவதாகிய பகல் ஏதுவும் இன்றி அகண்ட பூரணமாகி , நல் இன்பத்தினை தருவதாகிய சிவமாகி  அதை நாடி இரு வினைகளை ஆகிய நல் வினை, தீவினை ஆகியவற்றை அழித்து நிற்பவர்களது சிந்தை எப்பொழுதும் நல்வழியில் சென்று சித்தராய் வாழ்வார்கள்.

விளக்க உரை

 • உருவமன்றி, அல்லன்றி , பகலன்றி – அருவமன்றி, இன்பமன்றி, இரவின்றி எனும் இருமைகள் மறை பொருள்கள். இருமைகள் விலகி சித்த தன்மையுடன் வாழ்வர் என்பது மறை பொருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 26 (2020)


பாடல்

தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன
   தன்பிறவியுறவு கோடி
தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன
   தாரணியையாண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன
   சீடர்கள் இருந்துமென்ன
சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்
   செய்தென்ன நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை
   ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ!
இதுவெல்லாம் சந்தை உறவென்று தான்
   உந்தனிருபாதம் பிடித்தேன்
யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக்
   கண்பார்வையது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே
   எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

சிறுமணவை முனிசாமி

கருத்து – உறவுகள் எதுவும் நிலையானது அல்ல என்று கூறி ஈசனிடத்தில் வேண்டி அவரின் திருப்பாதங்களைப் பிடித்ததைக் கூறும் பாடல்.

பதவுரை

ஈசனாகவும், சிவகாகியின் நேசத்திற்கு உரியவனாகவும், என்னை ஈன்ற தில்லையில் வாழும் நடராஜனாகவும் இருப்பவனே, ஈசனாகவும், சிவகாகியின் நேசத்திற்கு உரியவனாகவும், என்னை ஈன்ற தில்லையில் வாழும் நடராஜனாகவும் இருப்பவனே! யாரிடத்தில் உன்னுடைய மனம் இருந்தாலும் என் மீது விடும் கடைக்கண் பார்வை போதும்; தாயாருடன் இருந்தாலும் ,தந்தையாருடன் இருந்தாலும், தன் பிறவியுடன் கூடிய உறவு இருந்தாலும், மலை போல் குவிந்திருக்கும் கோடிக் கணக்கான செல்வங்களும் இருந்தாலும், மிகப் பெரிதான பெயர் எடுத்து இருந்தாலும், தரணி எனும் இப்புவியினை ஆளும் அரசன் என்று பெயர் கொண்டு இருந்தாலும், மக்களைப் பெற்று இருந்தாலும், வழிகாட்டுதலுக்கு உரிய குருவாக இருந்தாலும், தன் வழியினை தொடரும் சீடர்கள் இருந்தாலும், பலவிதமான சித்துகள் கற்று இருந்தாலும், தினம் தினம் விரதங்கள் செய்து இருந்தாலும், புண்ணிய நதிகளில் நித்தமும் நீராடி மூழ்கி இருந்தாலும் அவைகள் எல்லாம் பயன் தராது; இவை எல்லாம் மக்கள் கூடிப் பிரியும் சந்தை போன்ற உறவு தான் என்பதை உணர்ந்து கொண்டு உன்னுடைய இரு திருப்பாதங்களைப் பிடித்தேன்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 23 (2020)


பாடல்

நீடு பாவ புண்ணி யங்க ளால்நிரய வானகம்
கூடு வோர்கள் இன்றுநின்று கூட்டு வோர்கள் இன்மையின்
ஓடு மாக ணைத்தி றத்தின் உற்றவா றுரைத்தியேல்
வீடு மாகணைக்கு நாடும் வில்லி போல வேண்டுமே

திருநெறி 2 – சிவஞானசித்தியார் – பரபக்கம் – நிகண்டவாதி மதம்

கருத்து – வினைகளை அனுபவிக்கசெய்ய ஒரு கர்த்தா இருக்க வேண்டும் என்பதை அறுதியிட்டு கூறும் பாடல்.

பதவுரை

ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்களை அறிந்து நின்று அவற்றின் பலாபலன்களை செலுத்துவிக்க ஒரு கர்த்தா இல்லையென்று நீ சொன்னால், மிக்க பாவங்களால் ஆன நரகங்களையும் மிக்க புண்ணியங்களால் ஆன சுவர்க்கங்களில்  பொருந்திநின்று அதனைஅநுபவிப்பாரில்லை; விரைந்த செலுதப்பட்ட பெரிய அம்பு இலக்கில் படுதல் போல செய்யப்பட்ட புண்ணியபாவங்கள் செய்தவனிடத்தே விரையத் தாமே சென்று பற்றுமென்று நீ சொன்னால், அவ்வாறு விடப்பட்ட பெரியகணைக்கு இலக்கை சென்று அடையும்படி செய்வதற்கு ஒரு வில்லாளன் வேண்டும் எனக் கொண்டால் அந்த ஆன்மாக்கள் செய்த கன்மங்களை அநுபவிக்கும்படி கூட்டுவிக்க ஒரு கர்த்தா வேண்டும்.

விளக்க உரை

 • வில்லி – வில்லாளன், மன்மதன், வீரபத்திரன், அருச்சுனன், வேடன், வில்லிபுத்தூராழ்வார்.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பேணுதல்


வார்த்தை : பேணுதல்
பொருள்

 • போற்றுதல்
 • உபசரித்தல்
 • ஒத்தல்
 • மதித்தல்
 • விரும்புதல்
 • பாதுகாத்தல்
 • வழிபடுதல்
 • பொருட்படுத்துதல்
 • ஓம்புதல்
 • அலங்கரித்தல்
 • கருதுதல்
 • குறித்தல்
 • உட்கொள்ளுதல்
 • அறிதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

காணலாம் அவருடைய மூலங்கேளு
கனகரத்தின மானசிறு குழந்தைபோலத்
தோணலாம் புருவநடுக் கமலந்தன்னிற்
சுகமாகச் சொரூபநிலை கண்டாயானால்
*பேணலாம்* அவர்பதத்தைத் தியானஞ்செய்து
பெருமையுடன் மானதமாம் பூசைசெய்தால்
பூணலாஞ் சகலவரங் கைக்குள்ளாகும்
பொற்கமல வைரவனைத் தியானம்பண்ணே

அகத்தியர் சௌமியசாகரம் – வைரவத்தியானம்

இப்பொழுது அவருடைய மூலத்தை கேட்பாயாக. தங்கத்தில் பதிக்கப்பட்ட ரத்தினம் எவ்வாறு இருக்குமே அது போல சிறு குழந்தை போலத் தோன்றுவார். இரு புருவங்களுக்கு இடையில் இருக்கும் நெற்றிக் கண்ணில் சுகமாக அவருடைய சொருப நிலையை அறியலாம். அவருடைய திருவடியை அகவழிபாட்டின்படி மானச தியானம் செய்தால் சகல வரங்களும் கைவல்யமாகும். இவ்வாறு தங்க தாமரை போன்ற பாதங்களை உடைய வைரவனை தியானம் செய்வாயாக.

துக்கடா
வல்லெழுத்து மிகா இடங்கள்
அவை, எவை, இவை, யாவை என்னும் சொற்களின் பின்
அவை பெரியன
யாவை போயின

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 22 (2020)


பாடல்

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் தருங்கனி
ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – சுவாசத்தை யோக நெறியில் பயன்படுத்திக் கொள்ளாதவர், பிராரத்தை அனுபவித்து மறைகின்றவர் ஆகின்றனர் என்பதை எடுத்துக் காட்டும் பாடல்.

பதவுரை

கூவுகின்ற பறவைகள் இருக்கக்கூடியாதான நாவல் மரத்தினில் இருந்து தோன்றி உணவாய் அமைகின்ற உண்ணும் நிலையில் இருக்கும் நாவல் கனிகளில் சில பயன்படாத இடத்தில் உதிர்ந்தும், சில மரத்திற்கு அடியில் உதிர்ந்தும், சில புதர் முதலியவற்றில் விழுந்தும் பிறருக்கு பயன்படாதவாறும்  போய்விடுகின்றன; அந்த நாவல் மரத்தை உள்ளடக்கி அமைக்கப்பட்ட குடிலில் ஐவர் வாழ்கின்றனர்; வேறிடத்தில் வளர்ந்த பயிர் தருகின்ற நெல்லை உண்டு வாழ்கின்றனர். அந்தக் குடிலோ சில நாட்களில் வெந்து ஒழிவதாய் உள்ளது.

விளக்க உரை

 • நாவல் மரம் – சுவாச கோசம். நாவல் கனி பெரும் பாலும் சாலையோரங்களில் நிற்கும்; அந்த மரங்களில் இருந்து  உதிர்ந்து கிடப்பினும் வாழை, மா, பலா இவற்றின் கனிகளைப்போல மக்கள் ஆர்வமுடன் கொள்ளாமை பற்றி, `சுவாசமும் இயற்கையாய் அமைந்தும் அருமை அறியப்படாததாய் உள்ளது` எனும் பொருள் பற்றியது
 • அதினின்றும் உணவாகக் கிடைக்கும் கனி – உடலை நிலைபெறுத்துகின்ற சுவாசம். போகின்ற கனி –  வெளிச்செல்லும் காற்று (ரேசகம்)
 • புகுகின்ற கனி – உள்ளே வரும் காற்று(பூரகம்)
 • வித்து – வெளிப் புகுகின்ற காற்றை வெளியே விடாது தடுத்தால் பயன் விளைதல் பற்றியது
 • பொய் – அகமும் புறமும் செல்லும் காற்று வீணாவதைக் குறிக்கும்
 • பறவைகள் – சுவாச கோசத்தில் உள்ள நரம்பு
 • ஆகின்ற – வளர்கின்ற
 • பைங்கூழ் – பயிர்; முற்பிறவியில் ஆக்கிய வினை,பிராரத்த விளைவு என்பதை முன்வைத்து ‘போகின்ற பொய்’  – புகுகின்ற வித்தாவது ஆகாமியம்
 • ஐவர் – ஐம்பொறிகள்
 • கூரை – குடில்; தூல உடம்பு.
 • விருத்தி – பிழைப்பு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 21 (2020)


பாடல்

செய்யுந் தவஞ்சற்று மில்லாத நான்உன் திருவடிக்கே
கொய்யும் புதுமல ரிட்டுமெய் யன்பர் குழாத்துடனே
கையுஞ் சிரமிசைக் கூப்பிநின் றாடிக் கசிந்துருகி
உய்யும் படிக்கருள் செய்வதென் றோபுலி யூரத்தனே

தாயுமானவர்

கருத்து – புறப்பூசைகளையும், அவ்வாறு தான்  செய்யாத புறப்பூசைகளையும் குறிப்பிட்டு தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு தாயுமானவர் வேண்டும் பாடல்.

பதவுரை

தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் வீற்றிருந்து அருளும் தந்தையே, நின் திருவடிக்கு ஆளாகும்படி அதற்கு உரித்தான நல்ல தவம் சிறிதும் புரிந்திலேன்; நின்னுடைய திருவடிக்கு புதியதானதும், அன்றைய தினத்தில் தோன்றியதும் ஆன நாண்மலர் கொய்து, செந்தமிழால் போற்றி பாடி பாடும் மெய்யன்பர்களுடன் கூடிப் பூத்தூவி, கையினை உச்சந்தலை மேல வருமாறு கும்பிட்டு,  ஆடுதல் செய்து, கசிந்து உருகி உய்வதற்கு வேண்டுவனவும் செய்யவில்லை.  இவையெல்லாம் நின் திருவருளால் செய்து உய்யும்படிக்கு நீ அடியேனுக்கு அருள்புரிவது எந்நாளிலோ?

விளக்க உரை

 • அவ்வறு விரைந்து அருளவேண்டும் என்பது குறிப்பு.

சமூக ஊடகங்கள்
1 2 3 24