அமுதமொழி – விளம்பி – மார்கழி – 6 (2018)

பாடல்

என்ன மயக்கம் இதுபுதுமை
      இதையா ருடனே யான்உரைப்பேன்
   எடுக்க முடியா வினைச் சுமையை
      ஏழைத் தலைமீ தெடுத்தேற்றி

மன்னிப் பிறக்க இடமும் இன்றி
      வாகாய் நடக்க வழியும் இன்றி
   மயக்கக் கொடுவேல் முனைக்கானில்
      வனவே டர்கள்செந் நாயுடனே

என்னை மறிக்கக் கொடுமையுடன்
      எழுந்தே உழுவை பாய்ந்திடவும்
   இதிலே மயங்கி அலைந்திடவிட்(டு)
      எங்கே ஒளித்தாய் ஈஸ்வரியே

வண்ண மயிலே எனக்குரைத்த
      வசன மதுபொய் யானதென்னோ
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, அழகிய மயில் போன்றவளே! புதுமையானது இந்த மயக்கம்; எனக்கு ஏற்பட்ட இந்த மயக்க அனுபவித்தினை யாரிடம் பகிர்வேன்? எடுத்து சுமக்க இயலாததும்,  தாங்கிக் கொள்ள இயலாததும்  ஆன வினைச் சுமையை என் தலை மேல் ஏற்றி, அந்த வினை பற்றி தொடர்வதால் இந்த மண்ணில் பிறக்க இடமும் இன்றி, விதிக்கப்பட்ட நெறி முறைகளுடன் வாகாய் நடக்க வழியும் இன்றி,  புவியாகிய இந்தக் காட்டில்  வன வேடர்கள் மயக்கத்தினைத் தரும் கொடிய வேலினைக் ஏந்தி, செந்நாய்கள் என்னை தடுக்கவும், கொடுமை உடைய புலி என் மீது பாய இருக்கின்ற நிலையில்  மயக்கம் தந்து இதிலே என்னை அலையவிட்டு எங்கே ஒளிந்தாய் ஈஸ்வரியே, இந்த நிலை எனக்கு ஏற்படலாமா?  எனக்கு நீ உரைத்த தேன் போன்ற இனிய சொல் பொய்யாகிவிட்டதா?

விளக்க உரை

  • உழுவை – புலி, கடல்மீன் வகை, நன்னீர் மீன் வகை; தும்பிலி என்ற கடல்மீன், பெருமை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 21 (2018)

பாடல்

காவே இலங்கும் பொன்னிநதிக்
      கரையே இலங்கும் மயிலைநகர்
   கங்கை முதலாம் புனிதநதி
      கருதிப் பணியும் மூதூரே

பாவே இலங்குங் கவிவாணர்
      பகரும் மறையே தாகமங்கள்
   பயிலும் வீதிக் கமுகிளநீர்
      பாயும் வாழை குருந்தேறும்

ஆவே இலங்கு வயல்சூழும்
      அதிலே நானா விருஷமுடன்
   அமுத ரசமாய்க் கனிபழுக்கும்
      அருகிற் பறவை யினஞ்சூழும்

மாவே இலங்கும் அநுதினமும்
      மருவுங் கயிலை நிகரான
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, நீ வீற்றிருக்கும் இந்த மயிலாபுரி எனும் திருத்தலமானது, சோலைகள் நிறைந்து விளங்குவதும், பொன்னி நதி மற்றும் காவிரி எனப்படுவதும் ஆன நதிக்கரையில் உள்ளதும், கங்கை முதலான புண்ணிய நதிகள் தம் பாவங்களைப் போக்க துலா மாதத்தில் நீராடுவதும், பாக்களை பலவிதமாக இயற்றக் கூடிய கவிகளால் நல்வாழ்வு வாழ்பவனும், சொல்லி உணர்த்தும் படியான வேதங்களும், வேதாகமங்களும் ஓதியும் பயிற்றுவிக்கும் படியான வீதிகளை உடையதும், பாக்கு மரங்கள், இளநீரைத் தரும் தென்னை மரங்கள், நீர் வரத்து மிகையான ஆன  வாழை குருத்துக்களால் நிரம்பியதும், அவற்றுடன் கூடிய வயல் சூழ்ந்ததும், அதில் பலவிதமான மரங்களும், அவற்றில்  அமுதம் போன்ற கனிகளைக் கொண்டதும், அருகினில் பறவை இனங்கள் வாழ்வதும், திருமகளால் நித்தமும் ஒளிர்விடுதலும், கயிலைக்கு நிகரானதுமானதும் ஆகும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 7 (2018)

பாடல்

சடத்தை எடுத்து மயல்நிகழ்த்திக்
      திகைப்பில் உயிரும் அகப்படவும்
   தேசா சார அதிமோகத்
      திருக்கில் மனமும் உருக்கமுடன்

கடந்தை எனதென் றபிமானக்
      கருமா மயிலா ருடன்ஆசைக்
   காத லதனில் உயிர்மறந்து
      கலங்கி தியங்கி அலைவேனோ

நடத்தை அறியாப் பரிபாக
      னாக்கி உன்றன் இருபதத்தை
   நம்ப மனத்தில் உறுதியொன்றாய்
      நாட்டி எனையோ ராளாக்கி

மடத்தை அரிய வலிந்தழைப்பாய்
      மதிவாள் நுதலே மலைமகளே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

பளபளத்து ஒளிவீசும் நிலாக் கீற்று போன்ற நெற்றியை உடைய மலைமகளே, மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, சடலத்தை எடுக்கச் செய்து, அதில் மயக்கத்தை சேர்த்து, அதனால் ஏற்பட்ட திகைப்பினால் உயிர் அகப்படுமாறு செய்தும்,  இசையில் அடிப்படையில் பாடப்படுவதான் பண் சேருமாறு மோகிக்குமாறு செய்தும், அதில் மனதை கொட்டுவதும், பெரிதானதுமான குளவியில் ஒன்றானதுமானதும் ஆன கரந்தை போன்ற கருங்கூந்தலை உடைய பெண்களுடன் ஆசை கொண்டு காதலால் உயிர் மறந்து கலந்து அவர்களுடன் ஒன்று சேர்ந்து அலைவேனோ! நன்னடத்தை, தீய நடத்தை என பிரித்துப் பார்க்க இயலாத பக்குவம் உடையவனாக்கி, உன்னுடைய இரண்டு பதத்தை நம்பும்படியாக மனதில் உறுதியை நாட்டி என்னை ஒரு ஆளாக்கி, உன்னுடைய இருப்பிடத்தை அறிய வலிந்து என்னை அழைப்பாய்.

விளக்க உரை

  • பரிபாகம் – சமைக்கை, பக்குவம், முதிர்வு

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 30 (2018)

பாடல்

 

பறந்த பறவை நாற்காலாய்ப்
      படரும் விலங்கும் ஊர்வனவும்
   பாணி தனில்வாழ் சீவர்களும்
      பாரில் நிலையாத் தாபரமும்

பிறந்த மனிதர் தேவரொடு
      பிசகா தெடுத்த செனனமதில்
   பெற்ற தாயார் எத்தனையோ
      பிறவி மனையார் புதல்வர்களும்

நிறைந்த கோடா கோடிஇதில்
      நிலையா னதுவும் ஒன்றறியேன்
   நீயே தாயென் றநுதினமும்
      நெறியே அருளிப் பிறவியினி

மறந்து விடவும் உனதுபய
      வனச மலர்த்தாள் ஈந்தருள்வாய்
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, பறவைகள், நான்கு கால்கள் உடைய விலங்குகள், ஊர்ந்து செல்லும் விலங்குகள், பூமியில் நிலைத்து வாழும் தன்மை கொண்ட சீவன் உடையவர்கள், மனிதர்கள், தேவர்கள் என தவறாமல் பலப்பல பிறப்பு எடுத்த பிறப்புகளில் பெற்ற தாய்களின் எண்ணிக்கை, மனைவிகள் மற்றும் புதல்வர்களின் எண்ணிக்கை கோடானு கோடிக்கு சமமாகும்; இவ்வாறன பிறவிகளில் நிலையானது என்று எதையும் அறியவில்லை; நீயே எனது தாய் என்ற நெறியை நித்தமும் எனக்கு அருளி, இனி பிறவாமை எனும் நிலையை அடைய உனது இரு தாமரை மலர் போன்ற திருவடிகளை தந்து அருள்வாய்.

விளக்க உரை

  • ‘முன்னம் எத்தனை சென்மமோ’ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 23 (2018)

 

பாடல்

எண்ண அடங்கா தெனதுசென்மம்
      ஏட்டில் எழுதி முடியாது
   இடிப்பார் நீண்ட மரம்போலும்
      எமனார் பதியில் அடைந்துடைந்து

பெண்ணின் மயக்கம் வினைமயக்கம்
      பிறவி மயக்கம் தொலையாது
   பித்தர் சாலப் புலையருடன்
      பேய்கொண் டடிமை அலைவேனோ

வண்ணக் கலையே கதிமுதலே
      வனசப் பதியே அதிமதுர
   வனமே கனமே யோகியர்கள்
      மனமேய் குடியே வாரிதியே

மண்ணிற் ககன முடிநடுவுள்
      வாதா டியபே ரொளிவிளக்கே
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே,  ஒளிரும் வண்ணங்கள் உடைய முழு நிலவைப் போன்றவளே,  அனாதி காலம் தொட்டு தஞ்சம் அடைந்தவர்களைக் காப்பவளே, இனிமை நிறைந்த முக்கனிகளில் பலா போன்றவளே, அழகிய மணம் பொருந்திய சோலை போன்றவளே, போற்றுதலுக்கு உரியவளே, கடல் போன்று பரந்து யோகியர்கள் உள்ளத்தில் குடியிருப்பவளே, ஈசனிடம் வாதாடி வாதாடிய பேரொளி விளக்கே, வினைகள் பற்றி எடுத்த எனது பிறவிகள் எண்ணில் அடங்காது; அவைகளை ஏட்டிலும் எழுத முடியாத அளவு மிக நீண்டதானது.; நீண்ட மரம் போல வெட்டப்பட்டு எமனுடைய உலகமாகிய எமலோகத்தை அடைந்து பெண்ணிடத்தில் மயக்கம், வினை பற்றி நின்றதனால் அது பற்றி விளைந்ததாகிய வினைமயக்கம், இப்பிறவி பற்றியதால் ஏற்பட்ட பிறவி மயக்கம் ஆகியவைகள் தொலையாது, பித்தர்களுடனும்,  சண்டாளன் எனப்படும் புலையருடனும் பேய் பிடித்தவர்களை அலைவது போல் அலைவேனோ?

விளக்க உரை

  • வாரிதி – கடல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 16 (2018)

பாடல்

பேயேன் ஊமை விழிக்குருடு
      பேணுஞ் செவிடு கால்முடமாய்ப்
   பிள்ளை எனவே ஈன்றவர்க்குப்
      பிரிய விடவும் மனமாமோ

நாயேன் செய்யும் வினைமுழுதும்
      நலமாய்ப் பஞ்சுப் பொறிஎனவே
நகர்த்திச் சிவத்துள் எனதுளத்தை
      ஞானப் பதியுள் சேர்த்தருள்வாய்

ஆயே அமலை அருட்கடலே
      அகிலா தார முடிவிளக்கே
அணங்கே இணங்கும் அடியவர்கட்(கு)
      அமுத ஞானம் அருளரசே

மாயே செகமோ கனமான
      வடிவே முடிவே மலைமகளே
மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, அன்னை போன்றவளே, அருட்கடல் போன்றவளே, மலமற்று இருப்பதால் குற்றமற்றவளாக இருப்பவளே, அழகிய தெய்வ வடிவமாக ஆனவளே, உன்னை வணங்கும் அடியவர்களுக்கு அமுத ஞானத்தினை அருளும் அரசே, மாயையின் வடிவானவளே, இந்த செகத்தினை விட கனமான தன்மை கொண்டவளே, மலையரசன் மகளே, பிள்ளையைப் பெற்ற தாய்க்கு, பேய்த் தன்மை உடையவன் ஆயினும், பேசாத ஊமைத் தன்மை உடையவன் ஆயினும், காட்சி காண இயலா குருடன் ஆயினும், ஒலி கேட்க இயலா தன்மை இல்லாத செவிட்டுத் தன்மை உடையவன் ஆயினும், ஊனத்தை உரைப்பதாகிய கால் முடம் போன்ற தன்மை கொண்டவன் என்றாலும் குறையைப் பற்றி  நின்று அக்குழந்தையை பிரிய மனம் வருமோ(வராது); (அதுபோல்) நாய்த் தன்மை உடைய  யாம் செய்யும் வினைகளை பஞ்சுப் பொதியில் வைத்த தீப்பொறி போல் முழுவதும் அழித்து எம்மை ஞானவடிவாகிய சிவத்துள் சேர்த்து அருள்வாயாக.

விளக்க உரை

  • அன்னையைப் போற்றி தன் வினைகளை அழிக்க வேண்டுதல்
  • ‘பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்’ எனும் அபிராமி அந்தாதி பாடல் வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • அணங்கு  – அழகு; வடிவு, தெய்வம்; தெய்வமகள்; தெய்வத்திற்கு ஒப்பான மாதர், வருத்திக் கொல்லும் தெய்வமகள்; தீண்டி வருத்தும் தெய்வப்பெண், வருத்தம்; நோய்; மையல்நோய், அச்சம், வெறியாட்டு, பத்திரகாளி, தேவர்க்காடும் கூத்து, விருப்பம், மயக்க நோய், கொலை, கொல்லிப்பாவை, பெண்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 9 (2018)

பாடல்

தந்தை தாயார் சுற்றத்தார்
      சகல வாழ்வும் உனதருளே
   தமியேன் செய்யும் வினைஉனது
      சடலம் உனது உயிர் உனது

சிந்தைக் கிசைந்த அடிமை என்று
      செகத்தில் எவர்க்குந் தெரியாதா
   சிந்தா மணியே எனக்குவருஞ்
      செயலே உனது செயல்அலவோ

சொந்த அடிமை கிடந்தலையச்
      சும்மா இருந்தால் உனைவிடுமோ
  சோதி வதன மணிவிளக்கே
      துவாத சாந்தப் பெருவெளியே

மைந்தன் எனவந் தாண்டருள்வாய்
      வனச வதனி நவசரணி
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயாகிய நீ, தந்தை, தாயார், உறவினர்கள் எனும் சுற்றத்தார் மற்றும் சகல வாழ்வும் உனது அருளால் ஏற்பட்டது; பிராப்தம் ஆகிய என்னுடைய தனித்த நிகழ்கால வினைகளும் உன்னுடைய அருளால் உண்டாக்கப்பட்டது; சடலம் உன்னுடையது; உயிர் உன்னுடையது; நான், உனது சிந்தையில் ஏற்படும் எண்ணங்களை மாறுபாடு இல்லாமல் செய்யும் உனது அடிமை என்று இந்த உலகினில் அனைவர்க்கும் தெரியும்; விரும்பிய அனைத்தும் கொடுக்கவல்லதான தெய்வமணி எனப்படும்  சிந்தா மணியே! வினைக்கு உட்பட்டு எனக்கு வரும் செயல்கள் அனைத்தும் உன்னுடைய சிந்தையின் செயல்கள்; உனக்கு சொந்தமான அடிமை இவ்வுலகில் கிடந்து அலையும் போது நீ சும்மா இருந்தால் அது உன்னை விடுமா? (விடாது); உடலின் உச்சி ஆகியாகிய தலையில் பெரிய இடமானதும், பிரகாசிக்கின்றதும் ஆன மணி விளக்கே! என்னை மைந்தனாக பாவித்து எனை வந்து ஆண்டு அருளவேண்டும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 19 (2018)

 

பாடல்

வன்னம் ஒன்றாய் இரண்டாகி
     வளர்ந்தோ ரைந்தாய் எட்டாகி
   வானாய் வானின் வளிக்கனலாய்
     வனமாய்ப் பாராய் வகைஐந்தாய்

பன்னும் மறையோர் நான்காகிப்
      பரந்த சாத்ர முடன் ஆறாய்ப்
   பதினெண் புராண ஆகமங்கள்
      பரிந்தோ ரிருபத் தெட்டாகி

உன்னி நெடுமால் அயனாலும்
     உலகை வகுக்கக் காப்பாற்ற
   உடனே சங்கா ரித்திடவும்
     உமை ளோடுதன் கெள்வனுமாய்

மன்னி நிதமும் ஆட்டிவைத்த
     மதலாய் இமவானுடை மகளாய்
   மயிலா புரியில் வளரீசன்
     வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயாகிய நீ ஓம் எனும் பிரணவ எழுத்தால் ஒன்றாகி, சிவ சக்தி ஐக்கிய வடிவம் படி இரண்டாகி, வளர்ந்து பஞ்சாட்சரங்களாகி, எட்டெழுத்தாகிய சிவத்தை அறியாமல் *, ஆகாயமாகி, வானில் தோன்றும் சூரியனாகி, காடு ஆகி, உலகமாகவும் அதில் காணப்படும் பொருளாகவும் ஆகி , வகை ஆகிய  ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் எனவும் ஆகி, போற்றுதலுக்கு உரிய மறை நான்காகி, பரந்து  ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகி, பதினெண் புராணங்களாகி, காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம், தீப்தம், சூக்ஷ்மம், சகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம், விஜயம், நிச்வாசம், ஸ்வாயம்பு, அநலம் (ஆக்னேயம்), வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோக்கீதம், லளிதம், ஸித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேச்வரம், கிரணம், வாதுளம் எனும் ஆகமங்கள் இருபத்தி எட்டாகி, தியானப் பொருளான திருமாலாகவும், ப்ரம்மாவாகவும் உலகை படைத்து, காத்திடவும் அழித்தல் பொருட்டு தன் தலைவனுடன் உமையாகி நித்தமும் நிலைபெற்று தங்கும் இமவான் மகளாய் இருக்கிறாய்.

விளக்க உரை

  • * எட்டினோடிரண்டும் அறியேனையே –   எட்டு என்னும் எண் தமிழில் ‘அ’ என்றும், ‘இரண்டு’ என்னும் எண், ‘உ’ என்றும் குறிக்கப்படும். அகரம் சிவனைக் குறிக்கும்; உகரம் சத்தியைக் குறிக்கும். சிவம் சத்திகளை அறியாத என்னை என்பதாகவும்  விளக்கம் பெறும் ( எட்டினோடு இரண்டும்  –  பத்து –  அஃதாவது, ய – உயிர் என்றும் பொருள் கூறுதல் உண்டு; அதாவது ஆன்மா இயல்பை அறியாதவன் )

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 12 (2018)

பாடல்

 

மெய்யிற் படர்ந்த அருட்கடலே
        விளையும் ஞான முளரியினில்
     விரிவாய்ப் பொருந்தும் பரநிதியே
        வினைகளை அகற்றும் பதம்உடையாய்

உய்யுந் தவத்தோர் மேலோர்கள்
        உறுதி யுடனே மகிழ்பதியே
     ஒன்றாம் யோக முடிவதனில்
        ஒளியாய் வெளியாய் உதித்தவளே

செய்ய கமலத் தயன்மனைவி
        தினமும் பணியுந் திருவருளே
     தேகா தேகக் கோடியெலாஞ்
        சிறந்து நிறைந்த சின்மயமே

வையத் தடங்கா அருள்மலையே
        வருண அருண ஒளிமணியே
     மயிலா புரியில் வளரீசன்
        வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, நீ உண்மையாக விளங்கும் மெய் அன்பர்களிடத்தில் பரந்து இருக்கும் அருட்கடலாகவும், ஞானத்தின் வடிவாக தோன்றும் ஞானத்தாமரையில் விரிவாய்ப் பொருந்தும் பரநிதியாகவும், தன்னை வழிபடுவர்களின் அடியார்களின் வினைகளை அகற்றும் திருவடிகளை உடையவளாகவும், பிறவிப் பிணி நீக்கம் கைவரப் பெற்ற தவத்தோர்களும், உயர்ந்தவர்களான வானோர்களும் உறுதியுடன் மகிழ்கின்ற பதிப்பொருளாகவும், யோக நிலையில், இறைவனோடு ஒன்றிய சிவசக்தி ரூபமான வடிவத்தில் ஒளி வடிவமாகவும், துவாத சாந்த பெருவெளியாகவும் தோன்றி காணப்படுபவளாகவும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மாவின் சக்தியாகிய சரஸ்வதியால் தினமும் வழிபாடு செய்யப்படுபவளாகவும், உடலோடு கூடியனவாகவும், கூடாதனவாகவும் ஆகிய உயிர் வர்க்கங்களின் வகைகளாகிய முட்டையில் தோன்றுவன ஆகிய அண்டசம், வியர்வையில் தோன்றுவன ஆகிய சுவேதசம், வித்து வேர் முதலியவைகளில் தோன்றுவன ஆகிய உற்பிசம், கருப்பையில் தோன்றுவன ஆகிய சராயுசம் ஆகியவற்றின் * அறிவுக்கு அறிவாய் விளங்கும் ஞான சொரூபமாக விளங்குபவளாகவும், வையகத்தில் இருப்பவர்களால் அளவிட முடியா அருள் மலையாகவும் (வையகத்தினை விட பெரிய அளவிலான அருள் மலையாக எனவும் கொள்ளலாம்) துவாதசாதித்தருளுபவர்களில் ஒருவனாகவும், சூரியனின் ஒளி வடிவமாகவும் செந்திறம் கொண்ட துவாதசாதித்தருளுபவர்களில் ஒருவனாகவும், பல நிறம் கொண்ட சூரியனின் ஒளி வடிவமாகவும் விளங்குகிறாய்.

விளக்க உரை

  • அடுத்து வரிகளில் வரும் ‘விளையும் ஞான முளரியினில்’ என்பதனை முன்வைத்து உடலில் தோன்றிய அருட்கடலே என்னும் கருத்து விலக்கப்பட்டுள்ளது.
  • மேலோர் – மேலிடத்தோர், உயர்ந்தோர், முன்னோர், வானோர்
  • *84 லட்சம் யோனிபேதம்(வடிவ வேறுபாடு)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 5 (2018)

 

பாடல்

தீரா மயக்கப் பிணிநோயைத்
        தீர்க்கும் மருந்தே அருமருந்தே
     தேவா திகளும் அறியாத
        கிருஷ்ணன் ஆதி சகோதரியே

ஆரா திப்பார் பூசிபார்
        அமைதுன் நாம மதைநினைப்பார்
     அடுத்தோர் இன்ப சுகமனைத்தும்
        அடையும் எனவே மறைவிளம்ப

நேரா யிருந்து களிப்பவளே
        நித்யா னந்த சுகப்பொருளே
     நெறியே குறியே எனைஆளும்
        நிமலி அமலை சுகத்தாளே

வாரா கினியே துட்டர்டர்
        மனத்தை அழிக்குஞ் சினத்தாளே
     மயிலா புரியில் வளரீசன்
        வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, வினை பற்றி மயக்கம் தருவதாகிய பிறவிப் பிணி நோயை தீர்க்கும் மருந்து போன்றவளே, தேவாமிர்தம் போன்றவளே, தேவர்களாலும் அறிய முடியாத கிருஷ்ணனின் சகோதரி ஆனவளே, உன்னை ஆராதிப்பவர்களும், உன்னை பக்தியுடன் பூசிப்பவர்களும், உனது திருநாமத்தை நினைப்பவர்களும் இன்ப சுகம் அனைத்தும் பெறுவார்கள் என்று முடிவாகிய வேதம் உரைப்பதற்கு ஏற்ப இருப்பவளே, அவ்வாறு அடியார்கள் பெறப்படும் இன்பத்தை நேரே இருந்து களிப்பவளே, நிலை பெற்ற சுகப் பொருளாகவும் ஆனவளே, முறையாகவும், அதன் வழி நிற்பவளாகி அதன் அடையாளமாகவும், குற்றம் அற்றவளாகி எனை ஆளக் கூடியவளாகவும், மிக்க பேரின்பம் வழங்கக் கூடியவளாகவும், வாராகினி தேவியாகவும், துன்பத்தைத் தரும் துட்டர்களின் மனதினை கோபத்தால் அழிப்பவளாகவும் இருக்கிறாய்.

விளக்க உரை

  • முன்னர் மருந்து என்ற சொல் பயன்படுத்தப்படுள்ளதால் அருமையான மருந்து எனும் பொருள் விலக்கப்பட்டுள்ளது.
  • தேவர்களாலும் அறிய முடியாதவள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது ‘அறியா கிருஷ்ணன்’ எனும் பதம் கொண்டு ‘தேவர்களாலும் அறிய முடியாத கிருஷ்ணனின்’  என்று  விளக்கம் தரப்பட்டுள்ளது.

 

அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 22 (2018)

பாடல்

கண்ணா ரமுதே உனைஎனது
        கண்தான் களிக்க மொழிகுழறக்
     கதிக்க உயிரும் உடல்புளகங்
        காணும் பருவம் பெறுவேனோ

விண்ணா ரமுதே சிவபுரத்தில்
        விளைந்த கனியே தேன்கடலே
     வீசிப் படந்த கமலமதில்
        வீற்றே யிருக்கும் விழிச்சுடரே

பெண்ணா னதுவே ஆண்வடிவே
        பேணும் அலியே பிறங்கொலியே
     பேதை நாயேன் இதமதிற்
        பிரியா திருக்குந் தவக்கொழுந்தே

மண்ணா டியவன் இடப்பாகம்
        வளருங் கொடியே மடமயிலே
     மயிலா புரியில் வளரீசன்
        வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, மண்ணில் நடனம் இடும் கூத்தனின் வாம பாகமாகிய இடப்பக்கத்தில் வளரும் கொடியே, அழகிய மயில் போன்றவளே, விண்ணில் இருக்கும் தேவர்களுக்கு அமுதம் போன்றவளே, சிவ புரத்தில் விளைந்த கனியே, தேன் கடல் போன்று இனிமையானவளே, பரந்து விரிந்த தாமரை போன்ற முகத்தில் இருக்கும் கண்ணின் மணி போன்றவளே, பெண் வடிவம் கொண்டும், ஆண் வடிவம் கொண்டும், போற்றுதலுக்கும் அலங்கரிக்கப்பட்டதுமான அலி வடிவம் கொண்டும், அரகர  எனும் முழக்கத்திற்கு முழுமை சேர்ப்பவளே, அறிவற்றவனாகியும், இழிவான பிறவி எனும்படியான நாய் போன்றவனாகிய என் இதயத்தில் இருந்து பிரியாது இருக்கும் தவக் கொழுந்தே, கண்ணுக்கு விருந்தாகும் அமுதம் போன்றவளே, உனை எனது கண் கொண்டு இன்புற , மொழி தடுமாறி மகிழ்ச்சியில் உயிரிலும் உடலிலும் மயிர் சிலிப்பு உண்டாகுமாறு பரவசம் அடைவேனோ?

விளக்க உரை

  • பேணுதல் – போற்றுதல், உபசரித்தல், ஒத்தல், மதித்தல், விரும்புதல், பாதுகாத்தல், வழிபடுதல், பொருட்படுத்துதல், ஓம்புதல், அலங்கரித்தல், கருதுதல், குறித்தல், உட்கொள்ளுதல், அறிதல்

அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்.)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 15 (2018)

பாடல்

அழியச் சனை அலைமுழுது
       அலையும் மனத்தை நிலைநிறுத்தி
   ஆறாதார அடிநடுவுள் அருணா
       சலத்தின் வேரினுள்ளே

சுழியைத் திறந்து வாயுவதாற்
       கூழ்ரே சகபூ ரகத்தாலுந்
   தோன்றுங் கும்ப காதியுடன்
       சோதி படரும் ஞானவெளி

விழியுந் திறக்கும் மதிக்குழப்பு
       மிகுந்து சுரக்கும் நவக்கிரக
  வெளியா மேலே வெளிபடர்ந்து
       விம்மித் தனையாய்ந் திருக்கஅருள்

வழியைப் பொருத நாயடியேன்
       மனதா மரையுள் நீவருவாய்
  மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, பிறவிகள் தோறும் எதிலும் நிலைபெறாமல் அலைவதை மட்டுமே கொண்டிருக்கும் மனதை நிலைநிறுத்தி, மூலாதாரம், சுவாதிடானம், மணிபூரகம், அநாசுதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியவற்றின் அடியிலும், நடுவிலும், சுழுமுனை நாடிகளின் உச்சியிலும், சுழுமுனை நாடிகளின் வேராக இருக்கும் இடகலை, பிங்கலை நாடிகளின் வழியாக செல்லும் சுழுமுனை நாடியின் அடியைத் திறந்து வாயுவைத் திறந்து வெளியிடுவதாகிய  நிறைத்தலும், வெளியிடச் செய்தலும், அதனால் உண்டாகும் சோதியாகிய ஞானவெளியில் விழிதிறந்து, ஞானம் அளிக்கும் கண் திறந்து, அமுத தாரகை மிகுந்து சுரக்கும்  ஒன்பது துவாரங்கள் உடையதாய், ஒன்பது கிரகங்களின் ஆட்சிக்கு உட்பட்ட பூமி ஆகிய உடலைக் கடந்து  துவாத சாந்த பெருவெளியை அடைய வழி பெற இயலாத நாய் போன்றவனாகிய என் மனத் தாமரையுள் நீ  வந்து அருள்புரிவாயாக.

விளக்க உரை

  • யோக சித்தி அருள வேண்டுதல் குறித்தது இப்பாடல்.

 

அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.

குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குரு அருள்.

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 8 (2018)

பாடல்

எங்கும் நிறைந்த அருள்மணியே
        ஏக மணியே ஒளிர்மணியே
   இறையோ னிடத்தில் நடனமிடும்
        இமைய மணியே நவமணியே

கங்குல் பகலும் கண்டவெளிக்
        கலைநான் குடைய திருமணியே
   கண்ணின் மணியே பொன்மணியே
        கமலா சனத்தில் வளர்மணியே

தங்கும் அடியார் இதயமதில்
        தழைத்த மணியே தவமணியே
   தரணிக் கொளியாய் இரவுபகல்
        தானே வளர்ந்த தளிர்மணியே

மங்குங் கருத்தை நிலைநிறுத்தி
        வதன வெளியில் படர்மணியே
   மயிலா புரியில் வளரீசன்
        வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

பிரபஞ்சம் எங்கும் நிறைந்து அருளைப் பொழியும் அருள் மணியாகவும், உருத்திராக்கம் என்றும் கண்டமணி என்றும் பொருளாகி கழுத்தில் கட்டி இருக்கும் ஏகமணியாக இருப்பவளும் (நீலகண்ட வடிவம்) ஆக்கினை அடிப்படையாகக் கொண்டு ஒளிரும் மணியாகவும், இறைவனிடத்தில் நடனமிடும் இமைய மணியாகவும்,  சைலபுத்ரீ, பிரம்மசாரிணி, சந்திரகண்டா, கூஷ்மாந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காலராத்ரி, மகா கவுரி, சித்திதாத்ரீஎன்ற அம்பாளின் பல்வேறு வடிவங்களாக இருப்பவளாகவும், இரவு, பகல் ஆகி ஆகாச வெளியில் பிரபஞ்ச சக்தியான 32 கலையில், உடல் கலை 28 போக மீதமிருக்கும் பயன்பாடு இல்லாத கலையாகிய நான்கு கலையையும் சேர்த்துக் கொண்டு பிறவா நிலை அருளும் திருமணியாகவும், காட்சியினை அருளும் கண்ணின் மணியாகவும், பொன்னால் ஆன அணிகலன் கொண்டவளாகவும், தாமரை மலரில் வீற்றிருந்து சூரியனின் ஒளிக்கிரணங்களைக் கொண்டவளாகவும், உன்னை மனதில் கொண்ட அடியார்களது இதயத்தில் உயர்ந்த பொன்னால் திறம்பட  அமைத்துக்  கட்டப்பட்ட மணி போன்றவளாகவும், இரவு பகல் என்று இல்லாமல் தானே வளரும் சுய ஒளி விளக்காகி என்றும் இளமையாகிய மணியாகவும், மாயைக்கு உட்பட்டு மனம் அதன் வழியில் செல்லாமல் அதை நிலை நிறுத்தி முக்கோணத்தின் மேற்கோண்ட வெளியில் படரும் மணியாகவும், மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.

விளக்க உரை

  • 1ஆக்கினை
  • 2சிவசக்தி நடன சொரூபக் காட்சி
  • 3கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து,புட்பராகம், வைடூரியம், வைரம் ஆகிய ஒன்பது வகை மணிகள் என்று பொருந்தாமையால் இவ்விளக்கம் விலக்கப்படுகிறது.
  • 4விளக்கு சுடர்விட்டப் பிறகு சுடர் குறையும்; அது குறையாமல் இருப்பவள் என்பதால் தளிர்மணி என்ற சொற்சொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • 5ஸ்ரீசக்ரவழிபாடு முறை கண்டு அறிக
  • கங்குல் – இரவு, இருள், எல்லை, பரணி நட்சத்திரம்

அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.

குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குரு அருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 25 (2018)

பாடல்

பஞ்சா பரணி1 நவபூர்ணி2
        பரணா பரணி தவசரணி
     பரமேஸ் வரியே ஈஸ்வரியே
        பஞ்சா ஷரத்தி பங்கயத்தி3

எண்சாண் உடம்பில் தொண்ணூற்றா
       றிசைந்த தத்வா திகமுகமே
     இறையோ னிடத்தில் நடனமிடும்
       இமையோர்க் கரசே ஏகவெளிக்

கஞ்சா சனத்தின் நிலையாளே4
        கருணா லயத்துள் உறைபவே
     கன்னற் சிலையும் ஐங்கணையும்
        கரத்தில் சிறந்த பரைத்திருவே

அஞ்சா ணவங்கள் அகன்றடியார்
        மனதில் உறையும் அருட்கடலே
     மயிலா புரியில் வளரீசன்
        வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

சஞ்சலமும், சலனமும், குழப்பமும் பின்னிப் பிணைந்து இருக்கும் மனித வாழ்க்கையை புறந்தள்ளி வெற்றி அடையச் செய்பவளாகவும், வளர்பிறை ஏகாதசி திதிக்கும் தேய்பிறை பஞ்சமி திதிக்கும் அதிதேவதை ஆகியவளும் ஐந்து திருமுகம் கொண்டவளும் ஆன ஸ்ரீ நீலபதாகா நித்யா எனும் தேவி ஆனவளும், ஒன்பது எனும் எண்ணிக்கையை குறிக்கும் நவ வகையான சக்தியாக ஆகி பூரணமாக இருப்பவளும், தவ வாழ்வினை நிறைவு செய்யும் பாதத் தாமரைகளை உடையவளும், உலக உயிர்களை காப்பதற்காக காவல் மேடையில் வீற்றிருப்பவளும், பரமேஸ்வரின் வாம பாகமாக இருக்கும் பரமேஸ்வரியாக இருப்பவளும், ஈஸ்வரனின் அங்கமாக இருக்கும் ஈஸ்வரியாக இருப்பவளும், பஞ்சாட்சரமாக இருப்பவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், எண்சாண் உடம்பில் இருக்கும் தொண்ணூற்று ஆறு தத்துவங்களும் ஒன்றாக இணைந்து புலப்படுத்தும் ஏக தத்துவ முகம் உடையவளாகவும், இறைவன் இடத்தில் நடனம் இடும் இமைக்காதவர்கள் எனும் பெயர் பெற்ற தேவர்களுக்கு தலைவியாகவும் இருப்பவளேஅண்ட வெளி ஆகிய ஆகாயத்தில் கைத்தாளம் இட்டு நிலையாக இருப்பவளும், அருள், கருணை ஆகியவற்றை எப்பொழுதும் கொண்டு அதில் உறைபவளும், கரும்பு வில்லையும், மன்மதனுக்குரிய ஐந்து அம்புகளாகிய தாமரை மலர், அசோக மலர், குவளை மலர், மாம்பூ, முல்லை மலர் ஆகியவற்றை கொண்டவளும், அன்னமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம்,  மனோமயகோசம்,  ஆனந்தமய கோசம் என்பதை நீங்கிய அடியார்கள் மனதில் உறையும் அருள் கடவுளாகவும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • 1ஐந்து முகங்களுக்கும் ஐந்து ஆபரணங்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
  • 2நவ சக்தி பீடங்களில் வசிப்பவள் என்றும் பொருள் கொள்ளலாம்.
  • 3தாமரை போன்ற ஆயுதம் கொண்டவள்  என்றும் கூறலாம்.
  • 4கஞ்சம் என்பது கைத்தாளம் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.

 

 

அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.

குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குரு அருள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 18 (2018)

பாடல்

தேனே பாலே சருக்கரையே
      தெவிட்டா அமுதே கற்கண்டே
   சீனி யுடன்முப் பழச்சாற்றில்
      சிறந்த ரசமே செம்பொன்மலை

மானே மடலே மடக்கொடியே
     வளர்ந்த வனமே திருவதன
   மயிலே குயிலே அன்பரெல்லாம்
     வாரிச் சொரியும் மணிநிதியே

ஊனே என்றன் உயிர்க்குயிரே
     உள்ளும் புறம்பும் உறுமொழியே
  ஒளிசேர் கனகக் கற்பகமே
     உதித்த சுடரே திருப்பரமே

வானே வானின் வளிக்கனலே
     வனமே பூவே வரைமகளே
  மயிலா புரியில் வளரீசன்
     வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

தேனாகவும், பாலாகவும், இனிப்பான சர்க்கரையாகவும், செறிவு உடைய அமுதமாகவும், கற்கண்டாகவும், மா, பலா மற்றும் வாழை இவற்றை சர்க்கரையுடன் பழச் சாற்றில் சேர்த்து செய்த ரசமாகவும், செம்பொன்மலை போன்றவளாகவும், மான் போன்றவளாகவும், வாழை மடல் போன்றவளாகவும், கொடி போன்றவளாகவும், வனத்தில் வசிப்பவளாகவும், மயில் போன்ற வதனம் உடையவளாகவும், குயில் போன்ற குரல் உடையவளாகவும், அன்பர்களுக்கு எல்லாச் செல்வங்களையும் வாரிச் சொரிபவளாகவும், இந்த ஊனைப் படைத்தவளாகவும், அதனுள் உறையும் உயிருக்கு உயிராகி விளங்குபவளாகவும், அகத்திலும் புறத்திலும் ஒன்றான மொழியினை உடையவளாகவும், ஒளி வீசக்கூடிய தங்க நிறமான கற்பத்தினை போன்றவளாகவும், அக இருளை நீக்கும் ஒளி வடிவமாகவும், உணவாகவும், ஆகாயமாக இருப்பவளாகவும், வானில் தோன்றும் கனல் காற்றாக இருப்பவளாகவும், வனத்தில் இருப்பவளாகவும் *, இமவான் மகளாகவும், மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • * வனத்தில் இருப்பவளும் – வன தேவதைகள் சூழ இருப்பவளும் என்றும் கொள்ளலாம்.

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 11 (2018)

 

பாடல்

பண்டு மறையின் முடிவினுள்ளே
     பழுத்த பழமே அருட்பழமே
   பரிபா கத்துப் பத்தர்நெஞ்சில்
     படர்ந்த பழமே நவமுடிமேல்

என்றுங் கனிந்த திருப்பழமே
     இமையோர் தேடித் தேடியுமே
   எட்டாப் பழமே காசினியில்
     எவர்தாம் தனையே உணர்ந்தோர்கள்

கண்டு புசிக்கும் பதிப்பழமே
     கருணைப் பழமே சிவப்பழமே
   கயிலா யத்தில் அரன்முடிமேல்
     கனிந்த பழமே கதிப்பழமே

மன்றுள் மணக்கும் அடியவர்க்கும்
     மாயோ கியர்க்கும் உதவிநிற்கும்
   மயிலா புரியில் வளரீசன்
     வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

காலத்தால் முற்பட்ட மறையின் முடிவாக இருந்து அதன் விளைவாக பழுத்த பழமாகவும், அடியவர்களுக்கு அருளை வழங்கும் அருட்பழமாகவும், முதிர்ச்சி உடைய பக்தர்கள் நெஞ்சில் படர்ந்த பழமாகவும், புதுமையாக சூடப்பட்ட முடி மேல் என்றும் கனிந்திருக்கும் மேன்மை பொருந்திய பழமாகவும், இமைத்தலை செய்யா தேவர்கள் தேடித் தேடியும் காண இயலாமல் அவர்களுக்கு  எட்டாத பழமாகவும், தன்னைத் தானே உணர்ந்தவர்கள் கண்டு புசிக்கும் பழமாகவும், பக்தர்களுக்கு வேண்டியதை அருளுவதால் கருணைப் பழமாகவும்! சிவ சக்தி ரூபமாக் இருப்பதால் சிவப் பழமாகவும், கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவன் முடிமேல் இருக்கும் கனிந்த பழமாகவும், அருளை வாரி வழங்கி நல் கதிக்கு அழைத்துச் செல்வதால் கதிப்பழமாகவும், சிதம்பரத்துள் உள்ள கனகசபை தனில் மணம்வீசிக் கொண்டிருக்கும்  அடியவர்களுக்கும், மாபெரும் யோகியர்களுக்கும் உதவி நிற்கக் கூடிய அருள் பொழியும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் ஆகிறாய்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • அருட்பழமாக அன்னையை கண்டு வியத்தல் பற்றியது இப்பாடல்
  • ‘பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் கண்டாரு மில்லை’ எனும் மாணிக்கவாசகரின் திருவாசக வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • ‘இம்மணியா லிழைத்துநவ முடிசூட்டி யிச்சிங்க விளவெ றன்ன’  எனும் திருவிளையாடற் புராண வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது. சில இடங்களில் ‘நவமணியால்’ இழைத்தது எனவும் பொருள் விளக்கப்படுகிறது.
  • ‘நவமுடிமேல் என்றுங் கனிந்த திருப்பழமே’ என்றும் ‘கயிலா யத்தில் அரன்முடிமேல் கனிந்த பழமே’  என்பதும் ஒன்று போலவே தோன்றும். பொருள் விளக்கத்தில் அதன் தன்மையை அழுத்தி கூறுமிடத்து அவ்வாறு இருமுறை கூறுதல் மரபு. அன்றியும் அம்மையைக் கண்டதும் தன்நிலை மறந்து புத்தி பேதலித்து இருந்த அவர் வாழ்வியல் முறை வைத்தும் இரு முறை வந்திருக்கலாம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 29 (2018)

பாடல்

உச்சிக் கிளியே அருட்கிளியே
      உணர்வுக் குணர்வாய் உயிர்க்குயிராய்
   உதித்த கிளியே பரவெளியில்
     ஒளிவான் பழத்தை உன்னிவரும்

நற்சொற் கிளியே கதம்பவன
      நகரில் வாழும் பரைக்கிளியே
   ஞானக் கிளியே மறைவனத்தில்
      நடனக் கிளியே சிவக்கிளியே

பச்சைக் கிளியே அன்பர்மதி
      படரும் ஆவி ஓடையினில்
   பரவுங் கிளியே நிதிக்கிளியே
      பவழக் கிளியே பதிக்கிளியே

வச்ரக் கிளியே நவபீட
      வாசற் கிளியே அருள் அமையும்
   மயிலா புரியில் வளரீசன்
      வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

பேச்சுத் திறமை, ஐஸ்வரியம், ஆத்ம ஞானம் ஆகியவற்றின் குறியீடாக விளங்கும் கிளி போன்றவளே, அருளை வழங்கும் அருள்கிளியே, அடியவர்களின் உணர்வுக்கு உணர்வாகவும், அவர்களின் உயிருக்கு உயிராகவும் தோன்றிய கிளியே, நமசிவய எனும் எழுத்துக்களாகி ஆகாயத்தில் விளக்கும் ஒளிவடிவமான பழத்தை த்யானித்து இனிய மொழி பேசும் கிளியே, தன்னுடைய பரிவார தேவதைகளுடன் பரதேவதையாக இருக்கும் சிந்தாமணிக் க்ரகம் எனும் திருக்கோயிலைச் சுற்றி இருக்கும் மணித்வீபம் என்று அழைக்கப்பெறும் தீவாகிய கதம்பவனத்தில் வாழும் சிவசக்தி வடிவமான கிளியே, மாயையை விலக்கை ஞானத்தை அருளும் ஞானக் கிளியே, வேதங்களால் சூழ்ந்த வனம் எனப்படும் மறைவனத்தில் நடனம் ஆடும் கிளியே, சிவக்கிளியே, அடியார்களின் எண்ணங்களில் படர்ந்து அவர்களின் உயிர் செல்லும் வழியில் செல்லும் கிளியே, வேண்டும் வரங்களை வேண்டியவாறு அருளும் நிதிக் கிளியே, பவழக் கிளியே, சிவசக்தி வடிவமாக இறைவனோடு இருக்கும் பதிக்கிளியே, யோகத்தில் ஒன்றாக இருக்கும் வச்சிரம் போன்று இருக்கும் வச்ரக் கிளியே,(நீ) நவ கோணங்களின் பீடத்தின் வாசலில் வீற்றிருந்து அருள் பொழியும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனபடும் அபயாம்பிகை தாயானவள் ஆவாய்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • அம்மையை கிளி வடிவில் போற்றிப் பாடியது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 22 (2018)

பாடல்

அஞ்சு முகத்தி நவமுகத்தி
          ஆறு முகத்தி சதுர்முகத்தி
     அலையில் துயிலும் மால்முகத்தி
          அருண முகத்தி அம்பரத்தி
பஞ்சா ஷரத்தி பரிபுரத்தி
          பாசாங் குசத்தி நடுவனத்தி
     பதுமா சனத்தி சிவபுரத்தி
          பாரத் தனத்தி திருகுணத்தி
கஞ்ச முகத்தி கற்பகத்தி
          கருணா கரத்தி தவகுணத்தி
     கயிலா சனத்தி நவகுணத்தி
          காந்தள் மலர்போல் சதுர்கரத்தி
மஞ்சு நிறத்தி பரம்பரத்தி
          மதுரச் சிவத்தி மங்களத்தி
     மயிலா புரியில் வளரீசன்
           வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனபடும் அபயாம்பிகை தாயானவள், ஈசனைப் போல் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் மகேஷ்வரியாகி ஐந்து முகம் கொண்டவள்; வாமை, சேட்டை, ரௌத்திரி, காளி, பலவிகரணி, பலபிரமதனி, சர்வபூததமனி, சக்தி, மனோன்மணி ஆகிய ஒன்பது நவ சக்தியானவள்; கௌமாரி வடிவத்துடன் ஆறு முகம் கொண்டவள்; பிராமி நிலையில் நான்கு முகம் கொண்டவள்; அலையில் துயிலும் திருமால் போன்று வைஷ்ணவியானவள்; உதயகாலத்து சூரியனைப்போல் செந்நிறமும், ஆகாய வடிவமாகவும் இருப்பவள்; வெண் மேகம் போன்ற நிறத்தினை உடையவள்; ஒன்றுக்குஒன்றுமேலாக இருந்து முக்தி தர வல்லவள்; அவினாபாவசத்தி ஆகிய சிவத்தில் இருந்து பிரியா ஆற்றல் கொண்ட சிவரூபம் கொண்டவள்; மங்கள வடிவமானவள்; பஞ்சாட்ரத்தின் பொருளாக விளங்குபவள்; கால்களில் பரிபுரம் எனும் சிலம்பு அணிந்தவள்; தன் திருக்கரங்களில்  பாசத்தினை வைத்து இருப்பவள்; அகிலத்திற்கு நடு நாயமாக இருக்கும் இமயமலையை இருப்பிடமாக கொண்டவள்; தாமரை மலர்  மீது அமர்ந்து இருப்பவள்; சிவபுரத்தினை ஆட்சி செய்பவள்; உலகிற்கு அன்னையாக இருப்பதால் கனத்த தனத்தை உடையவள்; சத்துவம், இராசதம், தாமதம் எனும் மூவகைக் குணங்கள் கொண்ட பல்வேறு தேவி வடிவங்களாகி இருப்பவள்; தாமரை போன்ற முகம் கொண்டவள்; கற்பக விருட்சமாக இருப்பவள்; கருணை எனும் அபத்தினை திருக்கரத்தில் கொண்டவள்; தவ குணம் உடையவள்; கயிலாசனத்தில் வீற்றிருப்பவள்; அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம் ஆகிய ஒன்பது குணங்கள் கொண்டவள்; காந்தள் மலர் போல் நான்கு கரம் கொண்டவள்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • அம்மையின் எழில் வடிவம் உரை செய்தது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 1 (2018)

பாடல்

பாதாம் புயத்திற் சிறுசதங்கைப்
     பணியுஞ் சிலம்புங் கிண்கிணியும்
   படர்பா டகமுந் தண்டையுடன்
     படியுங் கொலுசுந் தழைத்தருளும்

பீதாம் பரமுந் துவள் இடையும்
     பிரியா தரைஞாண் மாலைகளும்
   பெருகுந் தரள நவமணியும்
     புனையுங் குயமும் இருபுறமும்

போதா ரமுத வசனமொழி
     புகலும் வாயும் கயல்விழியும்
   புண்ட ரீகத் திருநுதலும்
     பொன்போற் சடையும் மதிமுகமும்

வாதா டியபே ரின்பரச
     வதனக் கொடியே உனை அடுத்தேன்
   மயிலா புரியில் வளரீசன்
     வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயே! பாதங்களில் சிறிய சதங்கை, அந்த பாதங்களை பணிந்து வணங்குவதான சிலம்பு, கிங்கிணி, காலிலே படந்து இருப்பது போன்ற மணி ஓசை எழுப்பும் பாடகம், தண்டை, அதில் படிந்திருப்பது போல் தோற்றம் ஏற்படுத்தும் கொலுசு, துவள்வது போன்ற இடையில் பட்டு, பெருமாள் அணிந்திருக்கக்கூடியது போன்ற பீதாம்பரம், விட்டுப் பிரியாத அரைஞாண் மாலைகள், இரு புயங்கள், அவற்றுடன் ஒட்டி இருக்கும் மார்பினில் கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், வைரம் இவற்றுடன் முத்துக்கள் பதிக்கப்பட்டதான ஒன்பது வகை மணிகள் கூடிய மாலையை அணிந்து, மீன்களை ஒத்த கண்கள் கொண்டவளாகி, தாமரை மலர் போன்ற நெற்றி, பொன் போன்ற பிரகாசம் உடைய கூந்தல், சந்திரனை ஒத்த முகம் கொண்டு ஐயனோடு வாதாடுவதில்  பேரன்பு கொண்டவளாகி அடியார்களுக்கு பேரின்ப ரசத்தினை வழங்கும் கொடியைப் போன்றவளாகி இருக்கிறாய்! நீ ஏற்றதால் உன்னிடத்தில் பொருந்தி நின்றேன்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • பாதாதி கேச தரிசனம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 25 (2018)

பாடல்

அபயாம்பிகை சதகம் அன்பாய் உரைக்க
உபய சரணம் உதவும் – சபைநடுவுள்
ஆடுகின்ற ஐயன்முதல் அன்பாய் பெற்ற ஒரு
கோடுமுகத் தானை குறித்து

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

அஞ்சொல் நாயகி எனும் அபயாம்பிகையின் பெயரில் இயற்றப்படும் இந்த அபயாம்பிகை சதகம் எனும் நூறு பாடல்களை அன்புடன் உரைக்க அம்பலத்தில் ஆடும் ஐயன் அன்பாய் பெற்ற முதல் புத்திரரும், ஒரு தந்தத்தை முகத்தில் கொண்டவருமான வினாயக பெருமானின் இரண்டு திருவடிகளை சரணடைய அவன் அருள் செய்வான்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் உரைக்க விநாயகரிடம் அருள் வேண்டி நின்ற திறம் பற்றியது இப்பாடல்.
  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • உபயம் – இரண்டு

 

அபயாம்பிகைஎத்தனை முறை சென்று தரிசித்தாலும் ஒவ்வொரு முறையும் தன்னை தன்னில் இருந்து வெளிப்படுத்தும் பாங்கு அலாதியானது. அழகு, வசீகரம், மோனம், முழுமை, எழில், மந்தஹாசம் என எத்தனைப் பொருள் கொண்டு விவரித்தாலும் அத்தனையும் மீறியதான அருட் சக்தி.

சாக்த வழிபாடு செய்யாத சித்தர்கள் இல்லை. சொல் குற்றம், பொருள் குற்றம் அனைத்தும் வினையால் ஏற்படுவது. அத்தகைய குற்றங்களை களைந்து முழுமையான படைப்பாக ஆக்க சிறப்புடையதும், எல்லாவற்றையும் அருளுக்கூடியவருமான, சாக்த வழிபாட்டிலும் சிறந்தவரான என் குரு நாதரை மனதில் கொண்டு அவரது திருவடிகளைப் பற்றி இந்த பாடல்களுக்கு விளக்கம் எழுத இருக்கிறேன்.

இயன்ற அளவில் வெள்ளிக்கிழமை அன்று இடம் பெறுமாறு எண்ணம் கொண்டு இருக்கிறேன்.

குரு அருளும் திருவருளும் நம்மைக் காக்கட்டும்.

சமூக ஊடகங்கள்