அமுதமொழி – விகாரி – ஆவணி – 31 (2019)


பாடல்

ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
ஏறட்டு, அதன்மேலே விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று, ‘சிவாயநம’ என்ன,
கூறு இட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  திருவைந்தெழுத்துச் செபத்திற்கு ஆவதொரு சிறப்புமுறையும் அதன் பயன் வீடுபேறு என்றும் கூறும் பாடல்

பதவுரை

மேற்கூறியதான திருவம்பல சக்கரத்தில் உள்ள ஐம்பத்தோர் எழுத்துக்களில் நாற்பத்தெட்டாம் எழுத்தான `ஸ்` என்பதுடன் ஆறாம் எழுத்தான `உ` என்பதையும் பதினான்காம் எழுத்தான `ஔ` என்பதையும் ஏறச்செய்து, `ஸு` எனும் எழுத்தை  `ஸௌ` என்றும் ஆக்கி, அவற்றின் இறுதியில் முறையே விந்துவையும் நாதத்தையும் சேர்த்து ஒலிக்கப் பண்ணிப் பின்பு, `சிவாயநம` என்று உச்சரித்தால் (அஃதாவது ஓம் ஸும் ஸௌ: சிவாயநம) என உச்சரித்தல்) மூன்று மலங்களும் விலகும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 30 (2019)


பாடல்

திக்கமர் நான்முகன் மாலண்ட மண்டலந் தேடிட
மிக்கமர் தீத்திர ளாயவர் வீழி மிழலையார்
சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்
நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து –  பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்

பதவுரை

திசைக்கு ஒன்றாக நான்கு திக்குகளையும் நோக்குகின்ற முகங்களையுடைய பிரமனும், திருமாலும் முறையே மேலுள்ள அண்டங்கள், கீழுள்ள அண்டங்கள் என முடி, அடி தேடி காணமுடியா வண்ணம், ஒன்றின் மேற்பட்டதாய் எழுந்து நிற்கும் தீப்பிழம்பாய் நின்றவர் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான்; அவர் சொக்கு எனப்படுவதான ஒருவகைத் திருக்கூத்து ஆடியும், பாடியும் பூதகணங்கள் சூழ விளங்கும் திகம்பரர் ஆவார். அப்படிப்பட்டவராகிய சிவபெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய என்பதை ஓதவல்லவர்கள் சிவபுண்ணியம் செய்தவர்கள் ஆவார்.

விளக்க உரை

 • திக்கு அமர் நான்முகன் – திக்கைப் போல் பொருந்திய நான்கு முகங்களையுடைய பிரமன்
 • சொக்கம் – ஒரு கூத்து .
 • நக்கர் – ஆடையில்லாதவர்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 28 (2019)


பாடல்

பண்டைநற் றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்
தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன் மார்க்கர்
கண்டநூ லோதி வீடு காதலிப் பவர்கட் கீசன்
புண்ட ரிகத்தாள் சேரும் பரிசினைப் புகல லுற்றாம்

திருநெறி 2 – சிவஞானசித்தியார் சுபக்கம் – அருணந்தி சிவாச்சாரியார்

கருத்து –  வைநயிகரருக்கு சிவபெருமானின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அடியும் முறையினை கூறும் பாடல்

பதவுரை

முன்பு செய்த நன்வினைகளால் தவம் பொருந்தி பரமனை பக்தி செய்யும் தொண்டராகவும் அவனை அன்பு கொண்டு வழிபடுபவராகவும் இருப்பவர்களான் சாமுசித்தர்களை தானே தூய நெறியில் இருந்து காத்து சிவகதி அளிப்பான்; ஞானிகளை பிரமாணம் என்று அறிந்து அவர்கள் காட்டிய முறையில் அவர்கள் உரைத்த நூல்களைக் கற்று முக்தி பெறவேண்டும் என்பவர்களான வைநயிகரருக்கு சிவபெருமானின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அடியும் முறையினை இங்கே வகுத்துக் கூறுகின்றோம்.

விளக்க உரை

 • தானே தூய கதியினில் தொகுப்பன் – விஞ்ஞானகலருக்கு அறிவு வடிவமாகவும், பிரளயகலருக்கு மான் மழு சதுர்புஜம் காலகண்டம் திருநேந்திரம் தாங்கி உருவ வடிவம் கொண்டும் வெளிப்பட்டு அருள் செய்வது போல் சாமுசித்தருக்கு அருள்புரிவன்.
 • ஸம்+சித்தம் – நன்றாக முடிவுபெற்றது
 • வைநயிகர் – விநயம் உடையவர்
 • மார்க்கர் – சன்மார்கர், ஞானிகள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 27 (2019)


பாடல்

பாரென்று விந்துவிலே பாலாசத்தி
     பரையினுட வம்மென்ன பகரப்போறேன்
சேரென்ற மொழியாட்கு வயதோ பத்து
     சூரியனுஞ் சந்திரனு மகா திலதத் தோடு
கோரென்ற ஏவிகொடிகழேனிக்காந்தி
     கூறியதா அத்தத்தில் குறிப்பைக்கேளு
ஆரென்ற அபயமொடு வரதமாகும்
     அழகான திருமுறையுஞ் செபவடமுந்தானே

போகர் கருக்கிடை நிகண்டு 500

கருத்து –  பாலாவின் திருவடிவம் பற்றி போகர் உரைத்தப்பாடல்

பதவுரை

சக்திதத்துவம் ஆனதும் புள்ளி வடிவில் உள்ளதும் ஆன பிந்துவில் உள்ள பாலா சத்தியை பற்றி கூறுகிறேன் கேள். சத்தி வடிவமான அவள் பத்து வயதை உடைய உருக்கொண்டவள், அவள் சூரிய சந்திரர்களை தோடாக அணிந்திருப்பவள்; அவளுடைய மேனி கோடி சூரிய ப்ராகசத்தினைக் கொண்டது; மனம்எனும் மாயைஜெயித்த கோதண்டம்ஏந்திய இராமனை போல் தூயநிலையில் அத்தன் சிவத்தை ஆராதாரத்தில் இருத்தி நேர்கொண்டநிலையில் ஆதியான நாயக நாயகி ஆனவளும் அழகான நெற்றிவகிட்டில் ஆன்மஜோதியான நெற்றிசுட்டியும் கொண்டு அனைத்து படைப்புக்கும் ஆதாரமானவளும் ஆதிமாதா எனப்படுபவளுமான அவள் கைகளில் திருமுறைகளும், செபமாலை ஆகியவற்றை கையில் ஏந்தியவளாகவும், அபய வரத முத்திரைக் கரங்களை உடையவளாகவும் இருப்பாள்; அவளை அவ்வண்ணமே சதா தியானிப்பவர்களுக்கு அவள் வடிவமே மந்திரமாய் காக்கும்.

விளக்க உரை

 • கோதண்டம் போல் நீ நின்றால் மந்திரம் மறைந்து அவள் திருநாமமே முக்தியளிக்கும் என்பது பொருள்

பதவுரை எழுத உதவி செய்த பெயர் வெளிட விரும்பாத சக்தி உபாசகருக்கு என நமஸ்காரங்கள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 26 (2019)


பாடல்

நாட்டமென்ற பூரணத்தைக் காண வென்றால்
     நன்மையுள்ள சற்குருவாற் காண வேண்டும்
ஓட்டமென்ற வோட்டமெல்லாம் வோடா தேநீ
     ஒருமனதாய் சுழிமுனையிலு கந்து நில்லு
ஆட்டமென்ற திருநடன மங்கே யுண்டு
     ஐம்பத்தோ ரெழுத்துமுத லெல்லா முண்டு
பாட்டைமிக பதத்தினா லென்ன வுண்டு
     பத்திமுத்தி வைராக்கிய மாகப் பாரே

அகஸ்தியர் சௌமிய சாகரம்

கருத்து –  திட சித்தமுடன் வைராக்கியம் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்தினால் திருநடனம் காணலாம் என்பதை கூறும் பாடல்

பதவுரை

சிறந்ததான நோக்கம் கொண்டு அதில் விருப்பம் கொண்டு பூரணமாகிய பரம்பொருளைக் காணவேண்டும் என்றால் நல்ல குருவின் துணை வேண்டும். அவ்வாறு இல்லாமல் எண்ணங்களை ஓட விடதே; அவ்வாறு அலைவதான மனதை விடுத்து ஒரு நிலைப்படுத்தி சுழிமுனையில் நிறுத்தி நீ நில்லு; அவ்வாறு நிற்பாயானால் சுழிமுனையில் திருநடனத்தை காணலாம்; மேலும் ஐம்பத்தொரு எழுத்துக்களையும் அதன் பொருளையும் பக்தியுடன் வைராக்கியமாக இருந்து பரம் பொருளைக் காணலாம்.

விளக்க உரை

 • ஐம்பத்தொரு எழுத்துக்கள் – சைவத்தின்படி சிதம்பர சக்கரம் எனப்படுவதும் திருவம்பலச்சக்கரத்தின் உயிர் நாடியாகவும் இந்த எழுத்துக்களே விளங்குகிறது எனவும் நமசிவாய எனும் ஐந்தெழுத்தாகவும், அதனுடன் சேர்ந்து அ உ ம என்று எட்டெழுத்தாகவும், அதுவே ஐம்பத்தோர் எண்களாய் விரிந்து இந்த உடலில் உள்ள உயிர் என்றும் சில இடங்களில் விளக்கப்பட்டு இருக்கின்றன.
 • யோக முறையில் (சாக்த வழிபாட்டின்படி எனவும் கொள்ளலாம்) பிரணாயாமத்தின் படி பத்து வகை வாயுக்களில் பிராணன் என்னும் மூச்சுக் காற்று வெளியே போகாதவாறு கட்டும் போது உடம்பிலுள்ள ஆறு ஆதாரங்களில் குண்டலி பொருந்தும் போது ஏற்படும் அதிர்வுகளை ஒலியாகக் கொண்டு, ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியவற்றில் முறையே 4 (சப்தங்கள் – வ ஸ ச ஷ), 6 (சப்தங்கள் – ஸ, ஹ, ம், ய, ர, ல) , 10 (சப்தங்கள் – டட, ணத, தத, தந, பப), 12(சப்தங்கள் – சங, கக, கக, டட, ஞஜ, ஜச), 16 (சப்தங்கள் -லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ, அம்ஔ, ஓஐ, ஏலூ), 3(சப்தங்கள் – ஹ, ள, இவற்றுடம் சேர்ந்த ஓங்காரமாக இருக்கலாம்) என 51 ஒலி அதிர்வுகள் உண்டாகும் எனவும் குறிப்பிடப்படும்.  ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவிபதி னாறு கலையதாய்க்
கந்தர வாகரம் கால்உடம் பாயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே

         எனும் திருமந்திரப்பாடலும் ஒப்பு நோக்கி உணர்க

 •  நாட்டம் – விருப்பம், நோக்கம், நிலைநிறுத்துகை, ஆராய்ச்சி, சந்தேகம், கண், பார்வை, சஞ்சாரம், சோதிட நூல், வாள், நாட்டுத்தலைமை

சித்தர் பாடல் என்பதாலும், குரு முகமாக உபதேசம் கொண்டே உணரப்படவேண்டும் என்பதாலும் பதவுரையில் பிழைகள் இருக்கலாம். குறை எனில் மானிட பிறப்பு சார்ந்தது; நிறை எனில் குருவருள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 25 (2019)


பாடல்

முன்னின் றருளும் முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து –  சிவன் உயிர்கட்கு அருள் செய்யும் திறம் கூறும் பாடல்

பதவுரை

அடியவன் ஆகிய எனக்கு என் கண்முன் நின்று முத்தியை அளித்தருளிய சிவன் எப்படிப்பட்டவன் எனில் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகள் நீங்கப் பெற்றார்க்கு அவைகள் நீக்கம் பெற்ற காலத்தில் தனது இயற்கை வடிவோடு வெளி நிற்றல், குருவாய் வந்து நோக்கல், தீண்டல், உரைத்தல் முதலியவைகளைச் செய்து கண்முன் நின்றே அருளை வழங்குவான்; வினையில்லாத நன்மை பொருந்திய அடியார்களுக்கு உயிர்க்கு உயிராய் இருந்தே அருளை வழங்குவான்;  யாவர்க்கும் அருள் வழங்கிய பின்னும் அந்த அருள் நிலையினின்றும் நீங்கி வழுவாதவாறு பாதுகாப்பான்; அதன் பயனாக முடிவில் பிறவியை நீக்கிவிடுவான்.

விளக்க உரை

 • முன்னின்று அருளுதல் – ஆகமங்கள் வரையறை செய்தபடி பிரளயாகலர், சகலர் ஆகியவர்க்கு அருளும் முறை (வினையில்லாத உயிரினத்தார் விஞ்ஞான கலர்); விஞ்ஞான கலர், பிரளயாகலர், சகலர் ஆகிய மூவகை உயிர்களுக்கும் மூவகையாக அருளுதலை நியமாக ஆகமங்கள் கூறும்
 • உலகு – உயிர்தொகுதி
 • நடுவுயிர் – உள்ளுயிர்
 • நன்னின்ற – அருள் பெறுதலுக்கு வினைகள் தடைகள் இருத்தலின் பொருட்டு வினைகள் முடிவுறும் காலத்தில் நன்மை விளையும் என்பதை விளித்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 23 (2019)


பாடல்

மூலம்

நாவணங் கியல்பா மஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகும்
கோவணம் பூதி சாதனங் கண்டாற் றொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங் கியல்பா மிராவணன் றிண்டோ ளிருபது நெரிதர வூன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே

பதப்பிரிப்பு

நாவணங்கு இயல்பாம் அஞ்செழுத்தோதி நல்லராய் நல் இயல்பு ஆகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற
ஏவணங்கு இயல்பாம் இராவணன் திண்தோள் இருபதும் நெரிதர ஊன்றி
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து –  பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்

பதவுரை

நாவினால் தொழக்கூடியதான இயல்பினை உடைய திருவைந்தெழுத்தை ஓதி, நல்லவராகவும், நல் இயல்புகளை அளிக்கும் பசுவிடம்  இருந்து பெறப்படுவதான விபூதி, உருத்திராக்கம் முதலிய சிவ சின்னங்கள் அணிந்தவர்களைக் கண்டால் வணங்கி மகிழ்பவருமான  குலச்சிறை நாயனார் வழிபாடு செய்யும் தலமும், இயல்பாகவே பகைவரது அம்புகள் பணிந்து அப்பால் செல்லும் பெருவலிமை படைத்த இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு தம் திருப்பாதவிரலை ஊன்றிப் பின் அவனைச் சிவ பக்தனாகும்படி செய்தருளிய திருச்சடைமுடியுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமும் ஆனது  திருஆலவாய் என்னும் திருத்தலம்.

விளக்க உரை

 • கோவணம் பூதி என்பதை கோவணம், விபூதி ஆகிய சிவச்சின்னங்களை அணிந்து என்று பல இடங்களில் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விபூதி தயாரிப்பில் பசுவிடம் இருந்து பெறப்படுவதான விபூதி முதன்மையானது என்பதால்(கோ+வணம்)  கோவணம்  எனும் பொருள் விலக்கப்பட்டுள்ளது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 22 (2019)


பாடல்

அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
அப்பா மகனேஎன் றார்கின்றான் – துப்பார்
சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
உடையான் உளத்தே உவந்து

திருஅருப்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்

கருத்துசிவபெருமான் தன்னிடத்தில் விருப்பமுடன் வந்ததை கூறும் பாடல்.

பதவுரை

செம்பவளம் போன்ற செம்மை கொண்டவரான சடையை உடையவனும், முக்கண் எனும் சிற்றம்பத்தினை உடையவனான சிவபெருமான் அவனுடைய தன்மைகள் கொண்டு அவனை உள்ளத்தில் உடையவனாகிய (என்) உள்ளத்தில் அப்பா என்று ஏதோ ஒரு காலத்தில் அழைக்கும் போது எனக்கு அன்பு செய்தலின் பொருட்டு  அந்த கணத்திலே அப்பா மகனே என்று என்னிடத்தில்  விருப்பமுடன் வந்தான்.

விளக்க உரை

 • துப்பார் – பயனர், உண்பவர், செம்பவளம் போன்ற செம்மை கொண்டவர்
 • உவத்தல் – மகிழ்தல், விரும்புதல், பிரியமாதல், அன்புசெய்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 21 (2019)


பாடல்

தாளும் மனமும் தலையும் குலையத் தரியவர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கட்கமும் சூலமும் ஏந்திவரும் துணையே

வாராகிமாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்துவாராகியை தொழுபவர்களுக்கு நவக்கிரகங்களாலும், பகைவர்களாலும் துன்பம் இல்லை என்பதை உணர்த்தும் பாடல்.

பதவுரை

வாராகியைப் போற்றி பணியும் அன்பர்களுக்கு நவக்கிரகங்களாலோ  பகைவராலோ பயமில்லை; அவள்  வெற்றி சங்கு ஒலிக்க வாளும், சூலமும் தாங்கியவர்களாக துணைக்கு வருகிறாள்; அவள் அருள் பெருங்கவசமாய் பக்தர்களைக் காத்து நிற்கும்; அவளிடத்தில் பக்தி இல்லாமல் மும்மலங்களில் ஒன்றான கர்வம் கொண்டு காலை முதலாகக் கொண்டு(கண்டம் எனக் கொள்வாரும் உண்டு),  தலை வரை குலையுமாறு செய்து திரிபவர்கள் அழியும் படிக்கு வரம் தர வேண்டும்.

விளக்க உரை

 • தாள் – காகிதம், பாதம்; கால், கால், மரமுதலியவற்றின் அடிப்பகுதி, பூ முதலியவற்றின் அடித்தண்டு, வைக்கோல், விளக்குத் தண்டு, படி, ஆதி, சட்டைக் கயிறு, வால்மீன் விசேடம், ஒற்றைக் காகிதம், தாழ்ப்பாள், கொய்யாக்கட்டை, முட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் திறவுகோல், தாடை, கண்டம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 20 (2019)


பாடல்

ஒட்டாது சுழற்காற்றுத் தீயுங்கூடி
ஒளிகோடி மதிகோடி ரவிதான்கோடி
கொட்டேது யிடிமுழக்க மேகநாதங்
கூறுவலம் புரிநாத மணியினோசை
விட்டேது காதடைக்குங் கண்ணும்புக்கும்
மேலேற்றத் தெரியாது விழியுங்காணோம்
மட்டேது நடனவொலி சிலம்பினோசை
மாட்டியே வாங்குமப்போ மயக்கந்தானே

அகத்தியர் தீட்சாவிதி 200

கருத்து –  தச தீட்சையில் பெறப்படும் தச நாதங்களின் தன்மைகளில் சிலவற்றை கூறியது.

பதவுரை

எதிலும் ஒட்டாமல் செல்லும் சுழற்காற்றும் தீயும் கூடியது போல் கோடி சூரியனும், கோடி சந்திரனும் கூடியது போல் கோடி இடி முழக்கங்கள் சேர்ந்து ஒலிப்பது போன்று வலம்புரி சங்கில் இருந்து மணியின் ஓசை போன்று காதில் ஒலிக்கும்; இருகண்களுக்கும் இடையில் புருவ மத்தியில் வாசி வழி மேல் ஏற்றத் தெரியாமல் விழிகளை காணாமல் இருப்பது போன்று விழி மூடிய நிலையில் நடனத்தில் ஒலிக்கக்கூடியதும் மயக்கம் தருவதும் ஆன  சிலம்பின் ஓசை கேட்கும்.

விளக்க உரை

 • வாசி மேலேறும் போது, சாதகன் , சாதனத்தில் அடங்கி இருக்கும் போது சுழிமுனை நாடியில் மேலேற மேலேற பத்து வித நாதங்கள் சாதகனுக்கு கேட்கும்.

தச நாதம் – 1. மணியோசை 2. கடல் அலையோசை 3. யானை பிளிறும் ஓசை 4. புல்லாங்குழலோசை 5. இடியோசை 6. வண்டின் ரீங்கார ஓசை 7. தும்பியின் முரலோசை 8. சங்கொலி 9. பேரிகை ஓசை 10. யாழிசை

மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே

எனும் திருமந்திரப்பாடலுடன் ஒப்பு நோக்கி உணர்க,

இது சித்தர் பாடல் என்பதாலும், தச தீட்சை என்பது ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலை அடைந்தவர்களால் மட்டுமே பெறக்கூடிய அனுபவம் என்பதால் பொருள் உணர்ந்து எழுத முயற்சித்து இருக்கிறேன். குறை எனில் மானிடப்பிறப்பு சார்ந்தது. நிறை எனில் குருவருள்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 18 (2019)


பாடல்

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர் 

கருத்து –  பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் எமனுடை துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்

பதவுரை

உள்ளத்தினில் அன்பு கொண்டு மனதால் நெகிழ்ந்து அதன் காரணமாக கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்தி நெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.

விளக்க உரை

 • காதல் – அன்பு
 • மல்கி – மிகுந்து
 • ஓதுதல் – சொல்லுதல், செபித்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 16 (2019)


பாடல்

களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிரும் உருக்கொண்ட தென்னே – அளறுதொறும்
பின்நாரை ஊர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்

பதினொன்றாம் திருமுறை – நம்பியாண்டார் நம்பிகள் – விநாயகர் இரட்டை மணிமாலை

கருத்துசிவனின் மகனான விநாயகர்  திருமேனி தன் சிறப்புக் கூறல்.

பதவுரை

சேற்றினை உடைய வயல்களை சார்ந்ததும், நிலை பெற்றதான நீர் நிலைகளில்  ஆரல் எனும் மீன் வகைகளை கொண்டதுமான திருநாரையூர் எனும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் திருநாரையூர்ச் சிவபெருமான் மகன் களிறு முகம் உடையவன் ஆனவனாகவும், அவனது காயம் ஆகிய திருமேனி செந்தீயைப்போல ஒளிவிடுகின்ற நிறத்தைக் கொண்டிருப்பது என்னே வியப்பு

விளக்க உரை

 • அளறு – சேறு
 • ஊர் ஆரலை – நாரை உண்கின்ற நீர் நிலை
 • ஆரல் – மீன் வகை
 • படுகர் – நீர் நிலை
 • மன் – நிலை பெற்ற

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 14 (2019)


பாடல்

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – பாதம், உந்தி, தோள் முகம் மற்றும் தலையை குறிக்கும் திருஐந்தெழுத்தை ஓதுவார் எமனுடை துன்பத்தில் இருந்து நீங்குவார் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

ஈசனையே எக்காலத்திலும் நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்ததும், பல வழிகளில் திரிந்து செல்லும் வஞ்சக தன்மை உடையதும் ஆன மனதை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்த செய்வதும் ஆன திருவைந்தெழுத்தே மனமானது உறங்கும் பொழுதும், மனம் உறங்காமல் விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருகி நாள்தோறும் நினைத்துப் போற்றுங்கள்.

விளக்க உரை

 • போழ்தின் என்ற சொல்லைத் துஞ்சல் என்பதோடு கூட்டித் துஞ்சும் பொழுதினும், துஞ்சுதல் இல்லாத போழ்தினும் என்றும் விளக்கம் பெறும்
 • நெஞ்சகம் – மனம்
 • நைந்து – உருகி
 • நெஞ்சக நைதல் – அன்பினால் குழைதல்
 • வஞ்சகம் – ஈசன் சிந்தனை விடுத்து சிந்தையை இடையே மாற்றி வினையைப் பிற இடங்களிள் செலுத்தி வஞ்சித்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 13 (2019)


பாடல்

படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே

வாராகிமாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்துமெய்ஞான கண்டு உணர்ந்தவர்களை வராகி கைவிடமாட்டாள் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

மெய்ஞானக் கல்வியைக் கற்று அறிந்தவர்களால் பெரிதும் போற்றி வழிபடத்தக்கதான பஞ்சமி தினத்துக்கு உரித்தானவளும், தன்னை பகைப்பவர்களை இரும்புத் தடி கொண்டு அடிக்கும் பேய் போன்றவர்களின் குருதியினைக் குடித்து அவர்களின் குடலினை தோளில் மாலையாக இட்டு அதில் மகிழ்வு கொண்டு நிலை பெற்று வாயில் முற்றத்தில் (சுடுகாடு எனவும் கொள்ளலாம்) இருப்பவளும், பதினான்கு உலகமும் நடுங்குமாறு செய்பவளும் ஆனவள் வாராகி ஆவாள்.

விளக்க உரை

 • குலாவுதல் – உலாவு, சஞ்சரித்தல், நட்பாடுதல், விளங்குதல், மகிழ்தல், நிலைபெறுதல், கொண்டாடுதல்
 • மன்றில் – வாயில்முற்றம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 11 (2019)


பாடல்

திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன்
திரள்தோள்இரு பஃதும்நெ ரித்தருளி
ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்
பரஞ்சோதிநின் நாமம் பயிலப்பெற்றேன்
அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான்
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர் 

கருத்து –  ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

வலிமை மிக்க தோள்கள் இருபதையும் நெரித்து பின் (அவன் கர்வம் அழிந்தப்பின்) அவனுக்கு அருளியவனே, நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த, முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே, மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ள்வர்களுக்கு தலைவனே, நான் முற்பிறவிகளில் செய்த நல்வினையின் காரணமாக உனது பெயரைப் பல காலமும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன்; இனி அடியேன், உலகியலில் இருந்தும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

விளக்க உரை

 • தேவர்க்குத் தேவர், காரணக் கடவுளர் – அயனும், மாலும்
 • நாமமாவது – திருவைந்தெழுத்து

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 9 (2019)


பாடல்

என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து –  திருநாவுக்கரசர், சோதி வடிவான ஈசன் தம்மிடம் எழுந்தருளியதை கூறும் பாடல்

பதவுரை

நெஞ்சமே! மின்னல்போல விளங்குகின்ற நீண்ட சடையை உடையவனும், மறை ஆகிய வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவனும், செம்மையான நெற்கதிர்கள் பொருந்திய வயல்கள் பொருந்தி வயல் உடைய திருச்சேறையுள் செந்நெறியில் நிலைபெற்ற ஒளிவடிவமானதான சோதியும் ஆகிய பெருமான் நம்மிடம் வந்து நிலையாக வந்து எழுந்தருள  எத்தகைய சிறந்த தவம் செய்தாய்.

விளக்க உரை

 • திருச்சேறை திருதலத்து தேவாரப்பாடல்
 • என்ன – எத்தகைய
 • வேத விழுப்பொருள் – வேதங்களில் கூறப்படும் சிறந்த பொருளாயிருப்பவன் .
 • மன்னு – நிலைத்து விளங்குகின்ற .
 • நம்பால் – நம்மிடத்து
 • வைக – நிலையாக வந்து எழுந்தருள

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 8 (2019)


பாடல்

எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்த மில்புக ழாரூ ரரனெறி
சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே

ஐந்தாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து –  திருவாரூர், அரநெறியை உள்ளத்தில் கொண்டு மறவாது உணர்தலும் தலையால் தொழலும் நல்ல தவம் உரையர்களுக்கு அன்றி மற்றவர்களுக்கு எய்தாது என்பதை விளக்கும் பாடல்

பதவுரை

நெஞ்சமே! ஆன்மாவைப் பிணித்துள்ள பாசத்தினை ஏற்படுத்துவதும் உலக் ஈடுபாட்டினை தருவதாகிய பந்தமும், முடிவில்லா புகழை உடையவனும், முக்தி பேற்றை அளிக்கும்  வீடுமாயிருக்கும் பரம்பொருளாகிய திருவாரூர்ப் பெருமானுக்கு உரியதான முடிவற்ற புகழ் வாய்ந்த திருவாரூர் அரநெறி சிந்தையினும், சிரத்தினும் தங்குதற்கு மேலாகிய தவங்கள் பலவற்றுள் எந்தத்தவத்தை நீ செய்தாய்?

விளக்க உரை

 • திருஆரூர் திருத்தலம் பற்றிய தேவாரப் பாடல்
 • எந்த மாதவம் செய்தனை – வியப்புமொழி
 • பந்தம் – முடிச்சு, கட்டு, பாசம், ஆன்மாவைப் பிணித்துள்ள பாசம், உறவு, சம்பந்தம், பற்று, பாவின் தளை, முறைமை, கட்டுப்பாடு, மயிர்முடி, சொத்தைப் பராதீனப்படுத்துகை, மதில், அழகு, கைவிளக்கு, தீவட்டி, தீத் திரள், உருண்டை, பொன், நூலிழை, பெருந்துருத்தி
 • அந்தமில் புகழ் – முடிவில்லாத புகழ்
 • ஆரூர் அரநெறி -ஆருர்த் திருக்கோயில்களில் பூங்கோயில் அரநெறி, பரவை யுண்மண்டளி என்பவற்றுள் ஒன்று
 • சிந்தை – உள்மனம் . நிலையான நினைப்பு உண்டாக்கும் அடி மனம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 7 (2019)


பாடல்

தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை அஞ்சுங் கொண்டு அன்பினால் அமர வாட்டி
வானிடை மதியஞ் சூடும் வலம்புரத் தடிகள் தம்மை
நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து –  ஈசனை வழிபட பூர்வ புண்ணியம் வேண்டும் என்பதைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

தேன் உடைய மலர்களை பறித்துக் கொண்டு வந்து திருவடிகளிலே பொருந்துமாறு அவற்றை அர்ப்பணித்து, அன்பு கொண்டு அவரை அமரச் செய்து கோ எனும் பசுவிடத்தில் இருந்து பெறப்படுவதாகிய பஞ்சகவ்வியத்தால் அடியார்கள் அபிடேகம் செய்ய அதை உவந்து ஏற்று வானில் உலவும் பிறையைச் சடையில் சூடிய வலம்புரத்துப் பெருமானை அடியேன் சரணமாக அடைந்து துதித்து நல்வினைப் பயனைப் பெற்றவன் ஆனேன்

விளக்க உரை

 • ஏத்தப்பெற்று – முற் பிறவிகளிற் செய்த நல்வினைகளின் பயனை இப் பிறவியில் பெற்றேன்
 • தேன் உடை மலர்கள் – வண்டுகள் உடைத்தமையால் மலர்ந்த பூக்கள்
 • திருந்து அடி – ஞானம் முதிர முதிரச் ஞான சிந்தை அற்றிருந்தும், திருத்துவது சிவனருள். திருந்துவது ஆன்மா
 • திருந்து அடி – ஞானம் முதிர முதிரச் ஞான சிந்தை அற்றிருந்தும், திருத்துவது சிவனருள். திருந்துவது ஆன்மா.
 • அன்பினால் அமர ஆட்டி – தம் அன்பாம் மஞ்சனநீர் ஆட்டி; இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி
 • நான் அடைந்து :- நான் கெட்டு அஃதாவது தற்போதம் அற்றுச் சொல்லுகின்ற அருளாளர்கள்  கூறும் ` நான் ` குற்றமாகாது  எனும் பொருளில்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 6 (2019)


பாடல்

ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

வாராகிமாலை – வீரை கவிராச பண்டிதர்

கருத்துவராகி அன்னையின் உருவத் தோற்றம் குறித்து கூறும் பாடல்.

பதவுரை

மலர்க்கொடி போன்றவளும், உடலுக்கு ஆற்றல் தரும் தெய்வம் ஆனவளும், ஐயும் கிலியும் எனும் பீஜ மந்திரங்கள் கொண்டு தொண்டர்களால் போற்றப்படுபவளும், அரியதான பச்சை நிற உடலும், கருணை மிகுந்ததான விழியும் கொண்டு, கைகளில் மலர்கள்,பிரம்பு, கபாலம், மற்றும் சூலம் ஆகியவை கொண்டவளான வராகி வழிபடும் அன்பர்கள் கண் முன்னே தோன்றும்படியாக இந்த உலகத்து உயிர்கள் துதிக்கும்படியாக வருவாள்.

விளக்க உரை

 • அரியபச்சை – மரகதம் ஒத்த பச்சை நிறம் கொண்டவள் எனவும் கொள்ளலாம். மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி எனும் அபிராமி அந்தாதி பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 5 (2019)


பாடல்

மூலம்

ஈனம் தரும்இதென்றெண்ணாமலே யிடும்பான் மெலிந்திங்
கூனம் தரும்இந்தச் செல்வருக் கிச்சையுரை உரைத்தேன்
வானம்தரும்உம் பருக்காய் அவுணரை மாட்டி நல்ல
தானம் தரும்அண்ண லேகாழி யாபதுத் தாரணனே

பதப்பிரிப்பு

ஈனம் தரும் இதென்று எண்ணாமலே யிடும்பான் மெலிந்திங்கு
ஊனம் தரும் இந்தச் செல்வருக்கிச்சையுரை உரைத்தேன்
வானம் தரும் உம் பருக்காய் அவுணரை மாட்டி நல்ல
தானம் தரும் அண்ணலே காழியாபதுத்தாரணனே

ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்

கருத்துஅசுரர்களிடம் இருந்து தேவர்களை காத்த நீ, குற்றம் கொண்ட என்னையும் காக்க வேண்டும் என்பதை குறிக்கும் பாடல்.

பதவுரை

வானில் இருந்து வேண்டியவற்றை வழங்கும் தேவர்களை காப்பதன்  பொருட்டு அசுரர்களை துன்பம் அடையச் செய்து அவர்களை துன்புறுத்தி தேவர்களுக்கு நல்ல சக்தியினையும், உறைவிடத்தையும் வழங்கும் இறைவனானவனும் காழிப் பதியில் உறைபவனும் ஆன  ஆபதுத்தாரணனே! இந்த உலக வாழ்வானது குறைவு பட்டது என்பதை அறியாமல் செருக்குள்ளவனாக திரிந்து, தர்மத்தின் வழி நில்லாமல் செல்வம் உடையவருக்கு அவர்கள் விரும்பிய உரைகளை உரைத்தேன்.

விளக்க உரை

 • என்னைக் காப்பாயாக என்பது மறைபொருள்.
 • ஈனம் – குறைபாடு, அங்கவீனம்; ஊனம், இழிவு, குறைபாடு என்பதைச் சுட்டும் பின்னொட்டு, சரிவு
 • இடும்பன் – செருக்குள்ளவன்
 • உம்பர் – விண்ணவர், தேவர்கள், சொர்க்கம், மேற்கூறப்படவை, மேலுள்ளவை
 • அவுணர் – அசுரர்
 • மாட்டுதல் – இணைத்தல், தொடுத்தல், செருகுதல், செலுத்துதல், உட்கொள்ளுதல்,
 • கற்றுவல்லனாதல், அடித்தல், விளக்கு முதலியன கொளுத்துதல், எரித்தல், கூடிய தாதல், வலிபெறுதல்
 • தானம் – இசைச்சுரம், சுரவிஸ்தார முறை, இடம், உறைவிடம், பதவி, கோயில், சுவர்க்கம், ஆசனம், எழுத்துப்பிறக்கும் இடம், எண்ணின் தானம், சாதகசக்கரத்திலுள்ள வீடு, ஆற்றலில் சமமாயிருக்கை, சக்தி, நன்கொடை, தசபாரமிதைகளுள் ஒன்றாகிய ஈகை, நால்வகை உபாயங்களுள் ஒன்றான கொடை, ஆகாரதானம், அபயதானம், சாஸ்திரதானம், ஒளஷததானம் என்ற நால்வகை அறச்செயல், இல்லறம், யானைமதம், வேள்வி, மகரவாழை, ஸ்நானம்

சமூக ஊடகங்கள்
1 2 3 77